search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிகே சிவக்குமார்"

    • சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவிக்கு பனிப்போர் நீடித்து வருகிறது.
    • முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் நிலை உள்ளது. இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு போட்டா போட்டி எழுந்துள்ளது. ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா, தான் முதல்-மந்திரி ஆவேன் என கூறி வாக்கு சேகரித்தார்.

    அதுபோல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான டி.கே.சிவக்குமாரும், மண்டியா, மைசூரு மாவட்டங்களில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில், ஒக்கலிக சமுதாய மக்கள் தேவேகவுடாவை முதல்-மந்திரியாகவும், பிரதமராகவும் ஆக்கினீர்கள். அதுபோல் அவரது மகன் குமாரசாமியையும் முதல்-மந்திரி ஆக்கினீர்கள்.

    எனவே இந்த முறை என்னை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தார். இவ்வாறு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவிக்கு பனிப்போர் நீடித்து வருகிறது.

    ஆனால் காங்கிரஸ் மேலிடம், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கும் நபரை முதல்-மந்திரி ஆக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்ற கோஷமும் எழுந்துள்ளது.

    அதன்படி முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும், அடுத்த முதல்-மந்திரி அவர் தான் எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் சித்தாபுரா பகுதிகளில் விளம்பர பேனர்களை வைத்து, காங்கிரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதே வேளையில் ஏற்கனவே காங்கிரஸ் செயல் தலைவரும், லிங்காயத் சமுதாய தலைவருமான எம்.பி.பட்டீல் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் தானும் இருப்பதாக கூறியுள்ளார்.

    அதுபோல் 91 வயதான காங்கிரஸ் மூத்த தலைவருமான சாமனூர் சிவசங்கரப்பாவும் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தில் யார் இருப்பது என்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி இருந்தார்கள். பெங்களூருவில் உள்ள, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டில் இந்த ஆலோசனை நடந்தது. அதைத்தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கே வீட்டுக்கு டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் எம்.பி. சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது தனிப்பெரும்பான்மை காங்கிரசுக்கு கிடைத்தால் யாருக்கு முதல்-மந்திரி பதவி கொடுப்பது என்பது குறித்து மல்லிகார்ஜுன கார்கேவுடன், டி.கே.சிவக்குமார் ஆலோசித்ததாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்காக தான் அனுபவித்த சிரமங்கள் குறித்து மல்லிகார்ஜுன கார்கேவிடம் டி.கே.சிவக்குமார் கூறியதாகவும் தெரிகிறது. பின்பு சித்தராமையா வீட்டுக்கு, கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா சென்று ஆலோசனை நடத்தினார்கள்.

    • நமது எதிர்காலத்தை நாமே எழுதும் நாள்.
    • இளம் வாக்காளர்கள் அறிவாளிகள்.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று ராம்நகர் மாவட்டம் கனகபுராவில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எல்லா வாக்குச்சாவடிகள் அருகேயும் சமையல் கியாஸ் சிலிண்டரை வைத்து பூஜை செய்யுமாறு தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்ற நாங்கள் 5 முக்கியமான வாக்குறுதிகளை அளித்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் இந்த 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற உள்ளோம்.

    இன்று (நேற்று) கர்நாடகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நாள். நமது எதிர்காலத்தை நாமே எழுதும் நாள். காங்கிரசின் வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் அளிக்கும் நாள். புதிய வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஆர்வம் இருக்கும். மாநிலத்தில் இளம் வாக்காளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கர்நாடகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

    கர்நாடகத்தில் பா.ஜனதாவின் தவறான ஆட்சி நிர்வாகத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். இளம் வாக்காளர்கள் அறிவாளிகள். அவர்கள் இந்த பா.ஜனதா ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவார்கள். இளைஞர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை ராஜீவ்காந்தி தான் வழங்கினார். அதனால் இளம் வாக்காளர்கள் ஜனநாயகத்தை காக்க வேண்டும். கனகபுரா தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது வருகிற 13-ந் தேதி தெரியவரும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • இது கர்நாடகத்தின் சுயமரியாதையை காக்க நடைபெறும் தேர்தல்.
    • பா.ஜனதாவினர் மக்களை மிரட்டி ஓட்டு வாங்க முயற்சி செய்கிறார்கள்.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பா.ஜனதாவினர் மக்களை மிரட்டி ஓட்டு வாங்க முயற்சி செய்கிறார்கள். பா.ஜனதாவுக்கு வாக்களிக்காவிட்டால், திட்டங்களை ஒதுக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். இந்த நாடு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது. மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில் 41 சதவீதம் கர்நாடகத்தில் இருந்து செல்கிறது. இதில் நமக்கு மீண்டும் கிடைப்பது சொற்ப அளவில் தான்.

    பா.ஜனதாவினரின் மிரட்டலுக்கு கன்னடர்கள் பயப்பட மாட்டார்கள். இது கர்நாடகத்தின் சுயமரியாதையை காக்க நடைபெறும் தேர்தல். மேகதாது திட்டத்திற்கு இந்த பா.ஜனதா அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியது. இந்த திட்டத்திற்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அனைத்து அனுமதிகளையும் பெற்று கொடுத்திருக்க வேண்டும். அந்த வேலையை அவர் செய்யவில்லை.

    மகதாயி திட்ட பணிகளை இன்னும் தொடங்காமல் இருப்பது ஏன்?. மத்திய அரசுக்கு கர்நாடகம் தான் வருவாய் கொடுத்து உதவுகிறது. காங்கிரஸ் கட்சி 141 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது எங்களின் இலக்கு. அந்த இலக்கை நாங்கள் உறுதியாக எட்டுவோம். வருகிற 13-ந் தேதி நீங்கள் தேர்தல் முடிவை பாருங்கள். வருகிற 15-ந் தேதி காங்கிரஸ் ஆட்சி அமைப்போம். பா.ஜனதா குறித்து அவதூறாக வெளியான விளம்பரத்திற்கு விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் நோட்டிசு அனுப்பியது.

    அந்த நோட்டீசுக்கு பதில் அளித்துள்ளேன். இங்குள்ள பா.ஜனதாவினர் சரியான முறையில் ஆட்சி நடத்த முடியாமல், பாவம் பிரதமர் மோடியை வீதி வீதியாக அலைய விட்டனர்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • பிரசாரத்திற்கு புறப்பட்டுச் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
    • கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் இன்று பிற்பகல் தேர்தல் பிரசாரத்திற்காக முலாபகிலு பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது ஹெலிகாப்டர் மீது திடீரென கழுகு மோதியது. இதனால் ஹெலிகாப்டரின் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து ஹெலிகாப்டர் அவசரமாக பெங்களூரு எச்ஏஎல் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ஹெலிகாப்டரில் டி.கே.சிவக்குமாருடன் பயணித்த கேமராமேன் காயமடைந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோருடன் டி.கே.சிவக்குமாரும் கலந்துகொண்டார். பின்னர் பிரசாரத்திற்கு புறப்பட்டுச் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

    • நாங்கள் யாருக்கும் பணம் கொடுத்து கருத்து கணிப்பு நடத்தவில்லை.
    • தேசிய கட்சிகளுக்கு பண பலம் உள்ளது.

    பெங்களூரு :

    பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமாரசாமி முன்னிலையில் முன்னாள் மந்திரி ஆல்கோட் ஹனுமந்தப்பா ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    முன்னாள் மந்திரி ஆல்கோட் ஹனுமந்தப்பா மீண்டும் தனது சொந்த வீட்டிற்கு வந்துள்ளார். காங்கிரசில் அவரது சக்தியை பயன்படுத்தி கொள்ளவில்லை. நேற்று வரை அவரது உடல் காங்கிரசிலும், மனது ஜனதா தளம் (எஸ்) கட்சியிலும் இருந்தது. அவர் என்னுடன் தொடர்பில் தான் இருந்தார். காங்கிரஸ் அவருக்கு உரிய மரியாதை வழங்காததால், அவர் மீண்டும் இங்கு வந்துள்ளார். அவருக்கு மாநில அளவில் கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அவரை போல் இன்னும் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் எங்கள் கட்சிக்கு வரவுள்ளனர். துமகூருவில் 11 தொகுதிகளிலும் எங்கள் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

    தேசிய கட்சிகளுக்கு பண பலம் உள்ளது. எங்களுக்கு பண பலம் இல்லை. எங்கள் கட்சியின் வேட்பாளரை இழுக்க மந்திரி சோமண்ணா முயற்சி செய்துள்ளார். இதை நான் கண்டிக்கிறேன். நாங்கள் யாருக்கும் பணம் கொடுத்து கருத்து கணிப்பு நடத்தவில்லை. 150 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று ரத்தத்தில் எழுதி கொடுப்பதாக டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். பாவம் அவர் ரத்தத்தில் எழுதி கொடுக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அவரது உடலில் ரத்தம் குறைந்துவிடும்.

    அதே போல் ஜெகதீஷ் ஷெட்டரை தோற்கடிப்பதாக ரத்தத்தில் எழுதி கொடுப்பதாக எடியூரப்பா சொல்கிறார். யாரும் ரத்தத்தில் எழுதி கொடுக்க வேண்டாம். 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் சொல்கின்றன. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் என்பதை கூற வேண்டும்.

    நான் பஞ்சரத்னா யாத்திரை மூலம் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தேன். மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். அதனால் மக்களின் ஆதரவு எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    • கட்சிக்கு துரோகம் செய்தவருக்கு தோல்வி கொடுக்க வேண்டும்.
    • மே 13-ந்தேதியுடன் பா.ஜனதாவுக்கு இறுதிச்சடங்கு நடக்கும்.

    மைசூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல்கட்சி தலைவர்கள் சவால் விடுவதும், குற்றச்சாட்டுகளை கூறும் சம்பவங்களும் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் உப்பள்ளியில் நடந்த வீரசைவ-லிங்காயத் சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசுகையில், சிலர் பா.ஜனதாவில் அனைத்து பதவிகளையும், அதிகாரத்தையும் பெற்றுக்கொண்டு வேறு கட்சிக்கு சென்றுள்ளனர். பா.ஜனதாவுக்கு துரோகம் செய்துவிட்டு சென்ற ஜெகதீஷ் ஷெட்டரை வெற்றி பெற விடக்கூடாது. அவருக்கு நாம் யார் என்று பாடம் புகட்ட வேண்டும். இனி அவரது பெயரை நான் குறிப்பிட மாட்டேன். துரோகி என கூறுவேன். கட்சிக்கு துரோகம் செய்தவருக்கு தோல்வி கொடுக்க வேண்டும். நான் எனது ரத்தத்தில் எழுதி தருகிறேன், கர்நாடகத்தில் இந்த முறை பா.ஜனதா தனி மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வரும் என்று பேசினார்.

    இந்த நிலையில் நேற்று காலை மைசூருவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் எடியூரப்பாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து கூறியதாவது:-

    எடியூரப்பா இந்த முறை பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் ரத்ததால் எழுதி தருவதாக கூறியுள்ளார். அந்த கட்சி 40 சதவீத கமிஷன் பெற்றுள்ளது. இதனால் 40 சதவீத கமிஷன் போல் 40 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும். கர்நாடகத்தில் இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என நான் எனது ரத்தத்தில் எழுதி கொடுக்கிறேன்.

    இரட்டை என்ஜின் அரசு இட ஒதுக்கீடு விவகாரத்தில் மோசடி நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. பா.ஜனதா ஒரு துரோக கட்சி என்பது சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியும். தேர்தல் நேரத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் தேன் கூட்டில் கைவைத்து பா.ஜனதாவினர் ஏமாற்றியுள்ளனர்.

    அமித்ஷாவும், நீங்களும் இடஒதுக்கீடு விவகாரத்தில் உறுதியாக இருக்கிறீர்களா? அல்லது பொய் சொல்லி ஏமாற்றுகிறீர்களா?. லிங்காயத்துகளும், ஒக்கலிகர்களும் பிச்சைக்காரர்களா?. அந்த சமுதாயத்தினருக்கு தலா 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக நீங்கள் நாடகமாடுகிறீர்கள்.

    வருகிற மே 13-ந்தேதியுடன் பா.ஜனதாவுக்கு இறுதிச்சடங்கு நடக்கும். அனைவருக்கும் சம பங்கீடு கொடுப்போம். இதையே நாங்கள் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எலகங்கா தொகுதியில் இருந்து இன்று முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளேன்.
    • நடிகர் சுதீப் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார்.

    பெங்களூரு :

    பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    பா.ஜனதாவின் அணை உடைந்து, தண்ணீர் காலியாகி இருப்பதாக டி.கே.சிவக்குமார் கூறி இருக்கிறார். முதலில் காங்கிரஸ் குளத்தில் தண்ணீர் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் தண்ணீர் எப்படி பாய்ந்து ஓடும். முதலில் காங்கிரசில் என்ன நடக்கிறது என்பதை டி.கே.சிவக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும். பா.ஜனதா கட்சி பற்றி அவர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

    எங்கள் கட்சியின் மேலிடம் மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. கட்சிக்குள் எந்த பிரச்சினை வந்தாலும், அதனை சரிசெய்யும் சாமர்த்தியம் இருக்கிறது. எடியூரப்பா மற்றும் மத்திய மந்திரி ஷோபாவை கட்சியில் இருந்து ஒழிக்க சதி நடப்பதாக டி.கே.சிவக்குமார் கூறி இருப்பது வேடிக்கையாக உள்ளது. சித்தராமையாவை காங்கிரஸ் கட்சியினர் எப்படி முடக்கினார்கள் என்பது தெரியவில்லையா?.

    கடந்த சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா தோல்வி அடைய காங்கிரஸ் கட்சியே காரணம். தற்போது கூட வருணா தொகுதியில் சித்தராமையாவை தோற்கடிக்க டி.கே.சிவக்குமார், அக்கட்சியின் தலைவர்கள் முயற்சிக்கிறார்கள். இது இந்த நாட்டுக்கே தெரிந்த விஷயம். கடந்த 2013-ம் ஆண்டு லிங்காயத் சமூகத்தை அழிப்பதற்காக, தனி மத அங்கீகாரம் கொடுப்பதாக கூறினார்கள். தேர்தல் முடிவுகள் என்ன ஆனது என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்கு தெரியும்.

    டி.கே.சிவக்குமாரின் பேச்சு காரணமாக இந்த முறை லிங்காயத் சமூகத்தினர் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். லிங்காயத் சமூகத்தை பலப்படுத்தும் வேலையை காங்கிரசாரே செய்கின்றனர். அதுபற்றி பா.ஜனதா கவலைப்படவில்லை.

    சவதத்தி-எல்லம்மா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. யாருடைய வேட்பு மனுவை ஏற்க வேண்டும், யாருடைய வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையம், அதிகாரிகளின் பணியாகும். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் எதுவும் செய்ய சாத்தியமில்லை.

    டி.கே.சிவக்குமார், தனது வேட்பு மனு விவகாரத்தை 2 நாட்கள் கையில் எடுத்து அரசியல் செய்தார். நாளை முதல் (அதாவது இன்று) எலகங்கா தொகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்க உள்ளேன். நடிகர் சுதீப் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார். சுதீப் எங்கெல்லாம் பிரசாரம் செய்ய உள்ளார் என்ற தகவல்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார்.
    • சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா.

    பெங்களூரு :

    கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா. இருவரும் ஒரே கட்சியில் முக்கிய தலைவர்களாக இருந்தாலும், முதல்-மந்திரி பதவிக்காக 2 தலைவர்களும் மோதிக் கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியில் சித்தராமையா தலைமையில் ஒரு பிரிவினரும், டி.கே.சிவக்குமார் தலைமையில் மற்றொரு பிரிவினரும் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் யார் முதல்-மந்திரி ஆவார்கள்? என்பதில் தான் 2 தலைவர்களும் மோதிக் கொள்கிறார்கள். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் இடையே ஒற்றுமை இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.

    சமீபத்தில் கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட முதலில் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும், முதல்-மந்திரி யார்? என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், பெங்களூருவில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற சித்தராமையாவும், டி.கே.சிவக்குமார் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினார்கள். டி.கே.சிவக்குமார் தோள் மீது சித்தராமையா கைபோட்டு நிற்பது, சித்தராமையாவின் சட்டையில் டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் சின்னம் இருந்த பேட்ஜை மாட்டியது போன்ற புகைப்படங்கள் வெளியானது. சட்டசபை தேர்தலையொட்டி தாங்கள் 2 பேரும் ஒற்றுமையாக இருப்பது போல் இந்த புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டு இருப்பதாக பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.

    • டி.கே.சிவக்குமாருக்கு எதிராக பா.ஜனதாவினர் சதி செய்கிறார்கள்.
    • கடந்த 5 ஆண்டுகளில் டி.கே.சிவக்குமாரின் சொத்து மதிப்பு 68 சதவீதம் அதிகரித்துள்ளது.

    பெங்களூரு :

    மே 10-ந்தேதி நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. நேற்று வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் ஆகும். இதனால் தேர்தல் அலுவலகங்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்தனர்.

    இந்த நிலையில் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கடந்த 17-ந்தேதி மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் அந்த தொகுதியில் போட்டியிடும் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் ஆர்.அசோக்கின் சொந்த தொகுதியான பத்மநாபநகரில் அவரை எதிர்த்து டி.கே.சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. போட்டியிடுவார் என்று பேசப்பட்டது.

    கடைசி நாளான நேற்று அவர் அந்த தொகுதியில் மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக டி.கே.சுரேஷ் கனகபுரா தொகுதியில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் பத்மநாபநகரில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரகுநாத் நாயுடு மாற்றப்படாமல் போட்டியில் நீடிப்பது உறுதியாகியுள்ளது.

    கனகபுராவில் மனு தாக்கல் செய்தது குறித்து டி.கே.சுரேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "டி.கே.சிவக்குமாருக்கு எதிராக பா.ஜனதாவினர் சதி செய்கிறார்கள். இந்த சதியை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் முன்எச்சரிக்கையாக நான் கனகபுராவில் மனு தாக்கல் செய்துள்ளேன். வருமான வரித்துறை மூலம் எங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்கள்.

    வருமான வரித்துறை கடந்த 4, 5 நாட்களுக்கு முன்பு எங்களுக்கு நோட்டீசு அனுப்பி உடனே நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது. அதற்கு நாங்கள், தற்போது தேர்தல் நடைபெறவதால், அதில் நாங்கள் பரபரப்பாக இயங்கி வருகிறோம், அதனால் தேர்தலுக்கு பிறகு நேரில் ஆஜராவதாக தெரிவித்துள்ளோம்" என்றார்.

    இதற்கிடையே கனகபுரா தொகுதியில் டி.கே.சிவக்குமாரின் வேட்பு மனு தள்ளுபடி செய்ய வாய்ப்பு உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 17-ந்தேதி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரமும் தாக்கல் செய்துள்ளார். அதில் அவருக்கு ரூ.1,414 கோடி சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 68 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அவர் வருமான வரி கணக்கில் காட்டியுள்ள வருவாய்க்கும், தற்போது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள், டி.கே.சிவக்குமாரின் சொத்து விவரங்களையும், அவர் தாக்கல் செய்த வருவாய் விவரங்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதில் ஏதாவது வித்தியாசம் இருப்பது கண்டறியப்பட்டால், டி.கே.சிவக்குமாரின் வேட்புமனு தள்ளுபடி செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் கனகபுரா தொகுதியில் அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. நேற்று கடைசி நாளில் மனு தாக்கல் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கர்நாடக அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காங்கிரஸ் கட்சி 141 முதல் 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
    • எடியூரப்பாவின் கண்ணீரை துடைக்க பா.ஜனதாவால் முடியவில்லை.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் எங்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள். காங்கிரசின் ஒற்றுமை யாத்திரைக்கு நீங்கள் (தொழில் அதிபர்கள்) கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக என்னை அந்த அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதனால் பா.ஜனதா வருமான வரித்துறையை தவறாக பயன்படுத்தி காங்கிரசாரை மிரட்ட முயற்சி செய்கிறது. வருமான வரித்துறையினர் எவ்வளவு மிரட்டினாலும் நாங்கள் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி நல்லாட்சி நிர்வாகத்தை நடத்துவோம்.

    பா.ஜனதாவின் மோசமான ஆட்சி நிர்வாகத்தால் வெறுப்பில் உள்ள கர்நாடக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மே 10-ந் தேதி தேர்தல் நாள் மட்டுமல்ல, மாற்றத்தை ஏற்படுத்த கூடிய நாள். ஊழலை விரட்டியடிக்கும் நாள். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் நாள், வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நாள், படித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை கிடைக்கும் நாள் ஆகும்.

    காங்கிரஸ் கட்சி 141 முதல் 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே இந்த திட்டங்கள் குறித்து முடிவு எடுத்து அமல்படுத்துவோம். எங்கள் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பட்டீலை இழுக்க பா.ஜனதா கடந்த 3 மாதங்களாக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அவரிடம் நான் பேசியுள்ளேன்.

    எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கினர். அவரை பா.ஜனதா சரியான முறையில் நடத்தவில்லை. நாங்கள் லிங்காயத் சமூகத்திற்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்கிறோம். லிங்காயத் சமூகங்களின் மடாதிபதிளை பா.ஜனதா தவறாக பயன்படுத்த முடியாது. எடியூரப்பாவின் கண்ணீரை துடைக்க பா.ஜனதாவால் முடியவில்லை. எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் அனைவரும் பா.ஜனதாவை விட்டு விலகியுள்ளனர். பசவண்ணரின் கொள்கையே காங்கிரசின் கொள்கை.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • எம்.டி.பி. நாகராஜுக்கு ரூ.1,510 கோடி சொத்துகள் உள்ளன.
    • டி.கே.சிவக்குமாருக்கு ரூ.1,347 கோடி உள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தோ்தலையொட்டி தற்போது வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. நேற்று நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ் ஒசக்கோட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளார். இதில் அவரின் சொத்து மதிப்பு ரூ.1,510 கோடி என்று காட்டியுள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை இடைத்தேர்தலில் அவர் போட்டியிட்டார். அப்போது அவரது சொத்து மதிப்பு ரூ.1,015 கோடியாக இருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.495 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. அவரிடம் ரொக்கமாக ரூ.6.48 கோடி, அவரது மனைவியிடம் ரூ.34.29 லட்சமும், வங்கி டெபாசிட் அவரது சேமிப்பு கணக்கில் ரூ.29.12 கோடி, மனைவி பெயரில் ரூ.6.16 கோடி, நிலையான டெபாசிட் அவரது பெயரில் ரூ.33 கோடி, மனைவி பெயரில் 1.99 கோடி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அவர் ரூ.105.91 கோடியை பிறருக்கு கடன் வழங்கியுள்ளார். அவரது மனைவி ரூ.19.93 கோடி கடன் வழங்கி இருக்கிறார். அவரிடம் 993 கிராம் தங்க நகைகள், ரூ.98.93 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், 234 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளன. இந்த தங்க நகைகள், வைரம், வெள்ளி பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2.41 கோடி ஆகும்.

    அவரது மனைவியிடம் 2 கிலோ 879 கிராம் தங்க நகைகள், 26 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளன. அவரிடம் உள்ள தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூ.1.64 கோடி ஆகும். எம்.டி.பி.நாகராஜிடம் உள்ள அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.372.42 கோடி. அவரது மனைவியிடம் உள்ள அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.163.78 கோடி ஆகும்.

    எம்.டி.பி.நாகராஜிடம் உள்ள அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.798.38 கோடி ஆகும். அவரது மனைவியிடம் ரூ.274.97 கோடி சொத்துக்கள் உள்ளன. வங்கிகள் உள்ளிட்ட பிற நிதி நிறுவனங்களில் அவருக்கு ரூ.71 கோடியும், அவரது மனைவிக்கு ரூ.27.35 கோடியும் கடன் உள்ளது. எம்.டி.பி.நாகராஜ், அவரது மனைவியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,607 கோடி.

    இதில் அவர்களின் கடன்களை கழித்தால், சொத்து மதிப்பு ரூ.1,510 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் பிரமாண பத்திரத்தில் இடம் பெற்றுள்ளன.

    இதுபோல் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று கனகபுராவில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவுடன் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கும், அவரது மனைவிக்கும் சோ்த்து சுமார் ரூ.1,347 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அவரது மனைவி பெயரில் ரூ.133 கோடி சொத்துக்கள் உள்ளன. மீதமுள்ள சொத்துக்கள் டி.கே.சிவக்குமார் பெயரில் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ.840 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.507 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. டி.கே.சிவக்குமாருக்கு ரூ.226 கோடியும், அவரது மனைவிக்கு ரூ.34 கோடியும் கடன் உள்ளது.

    இவர்களைவிட பெங்களூரு சிக்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் டிக்கெட் கேட்டு வந்த கே.ஜி.எப். பாபு தற்போது தனது மனைவி சஜியா தரணத்தை சுயேச்சையாக களம் நிறுத்தி உள்ளார். அவரது மனைவி பெயரில் ரூ.1,662 கோடி சொத்து இருப்பதாக அவர் பிரமாண பத்திரத்தில் கணக்கு காட்டி இருக்கிறார். இதன்மூலம் அவர் கர்நாடகத்தில் பணக்கார வேட்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜனதா 65 முதல் 70 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்.
    • எனது வாழ்க்கை போராட்டத்தால் நிறைந்தது.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கனகபுரா தொகுதியில் என்னை எதிர்த்து மந்திரி ஆர்.அசோக் போட்டியிடுவதாக பா.ஜனதா அறிவித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். அவருக்கு நல்லது நடக்கட்டும். அரசியல் என்பது கால்பந்து விளையாட்டு அல்ல, அது சதுரங்க ஆட்டத்தை போன்றது. சதுரங்க விளையாட்டை யார் வேண்டுமானாலும் விளையாடட்டும். அரசியலில் போட்டி இருக்க வேண்டும்.

    அரசியலில் போராட்டம் என்பது எனக்கு புதிது அல்ல. 1985-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு எதிராக போட்டியிட்டேன். குமாரசாமிக்கு எதிராகவும் தேர்தல் களம் கண்டுள்ளேன். தற்போதும் போராடுகிறேன். எனது வாழ்க்கை போராட்டத்தால் நிறைந்தது. பத்மநாபநகரில் ஆர்.அசோக்கிற்கு எதிராக நாங்கள் பலவீனமான வேட்பாளரை நிறுத்தவில்லை.

    அவரது தொகுதியில் ஆர்.அசோக்கிற்கு எதிராக அதிருப்தி அதிகமாக உள்ளது. அங்கு முஸ்லிம் வாக்குகள் அதிகமாக உள்ளன. அதை கருத்தில் கொண்டு நாங்கள் நாயுடு சமூகத்தை சேர்ந்த ரகுநாத் நாயுடுவை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவர் வெற்றி பெறுவது உறுதி. தேர்தலில் காங்கிரஸ் கட்சி 141 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி.

    பா.ஜனதா 65 முதல் 70 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும். அதிருப்தியில் உள்ள பா.ஜனதாவினர் என்னை சந்தித்தது குறித்து விவரங்களை தற்போது வெளியிட மாட்டேன். பா.ஜனதாவில் இருந்து பலர் விலகி வருகிறார்கள். அவர்களை நாங்கள் தொடர்பு கொள்ளவில்லை.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    ×