search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைபர் கிரைம்"

    • சமூக வலைதளங்களில் பல்வேறு தவறான தகவல்களை பரப்பி வருவதாக காவல்துறை கவனத்திற்கு வந்துள்ளது.
    • வழக்கு தொடர்பாக ஆவணங்கள் ஆதாரங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் 84389 81930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் குடயால் விளை பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29).

    இளம்பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் சாட்டிங் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பெனடிக்ட் ஆன்றோ நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    பாதிரியார் தெரிவித்த வாக்குமூலம் மற்றும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்-டாப் செல்போனில் உள்ள தகவல்களை வைத்து இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2 வார காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில் பாதிரியாரின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து பாதிரியாரின் ஆபாச படங்கள் மற்றும் ஆபாச சாட்டிங் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே பாதிரியாரின் செல்போனை எடுத்து சென்றதாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவரை கைது செய்தால்தான் பாதிரியாரின் மேலும் ஒரு செல்போன் மீட்கப்படும். அந்த செல்போனில் ஏதாவது வழக்கு தொடர்பான ஆதாரங்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள னர்.

    இந்நிலையில் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தவறான தகவல்களை பரப்பி வருவதாக காவல்துறை கவனத்திற்கு வந்துள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்கள் ஆதாரங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் 84389 81930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். வழக்கை திசை திருப்பும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • யூடியூப் லிங்கை கிளிக் செய்ய வைத்து ஒரு கும்பல் புதுவித ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை பறித்து வருகிறது.
    • ஆன்லைன் மோசடியில் பொது மக்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

    சென்னை:

    ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடம் ஆன்லைன் மூலம் மோசடி செய்து பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது.

    இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் பகுதி நேர வேலை தருவதாக கூறி யூடியூப் லிங்கை கிளிக் செய்ய வைத்து ஒரு கும்பல் புதுவித ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை பறித்து வருகிறது.

    இதுதொடர்பாக சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீசார் கூறியதாவது:

    தற்போது ஆன்லைன் மூலம் புதிய வகை மோசடி நடந்து வருகிறது. பகுதி நேர வேலை தருவதாக வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்புவார்கள். என்ன வேலை என்று ரிப்ளை செய்தால் 'யூடியூப் வீடியோவை லைக் செய்வது' என்று பதில் அளிப்பார்கள்.

    அதன்படி அவர்களின் யூடியூப் வீடியோவை லைக் செய்தால் ரூ.50 முதல் ரூ.500 வரை உடனடியாக பணம் வரும். பின்னர் அவர்கள் நம்மை டெலிகிராம் குரூப்பில் இணைத்து விடுவார்கள். அதில் பகுதி நேர வேலை, முதலீடு என்று 2 வாய்ப்பு தருவார்கள். பகுதி நேர வேலையை தேர்வு செய்தால் ஒரு வேலையை கொடுப்பார்கள். அதற்கு மிக குறைந்த அளவு பணம் கட்ட வேண்டும். அதில் பல படிநிலைகள் இருக்கும்.

    முதல் 2 படிநிலைகள் எளிதாக இருக்கும். அதை செய்து முடித்தவுடன் முதலீடு செய்த பணம் போக 30 முதல் 60 சதவீதம் பணம் நமக்கு கமிஷனாக கிடைக்கும்.

    இப்படி ரூ.13 ஆயிரம் வரை பணத்தை திரும்ப நமக்கு தருவார்கள். அதற்கு அடுத்த படிநிலையில் முதலீடு செய்யும் தொகை ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என படிப்படியாக ரூ.5 லட்சம் வரை உயர்ந்து கொண்டே செல்லும்.

    நாம் அவர்கள் கொடுக்கும் பணியை முடித்துவிட்டால் நமக்கு கமிஷன் தொகை கிடைக்கும் என்று நினைத்திருப்போம். அதாவது நாம் ரூ.10 லட்சம் கட்டி இருந்தால் கமிஷன் தொகை 50 சதவீதத்தையும் சேர்த்து ரூ.15 லட்சம் நமக்கு கிடைக்க இருப்பதாக டிஸ்பிளேயில் காட்டும்.

    அதனால் ஆர்வத்துடன் ரூ.10 லட்சத்தை செலுத்தினால் அதன்பிறகு பணத்தை எடுக்க முடியாது. உங்கள் கணக்கு முடங்கிவிட்டது. பணத்தை எடுக்க வேண்டும் என்றால் உங்களுக்கு வர வேண்டிய ரூ.15 லட்சத்துக்கு 20 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். அதை செலுத்தினால் முழு பணமும் கிடைத்துவிடும் என்பார்கள்.

    இல்லாவிட்டால் நீங்கள் செய்த பணி தவறாகிவிட்டது. எனவே நீங்கள் இருக்கும் குழுவில் உள்ளவர்களுக்கு உங்கள் பணம் பகிர்ந்து அளிக்கப்பட்டுவிட்டது என்று கூறுவார்கள். இப்படி ஒவ்வொரு காரணமாக கூறி உங்களிடம் வெவ்வேறு வழிகளில் பணத்தை பறித்துக் கொண்டே இருப்பார்கள். அதன்பிறகு எந்த பணமும் நமக்கு வராது.

    நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் பகுதி நேர வேலை என்பதற்கு பதிலாக முதலீடு என்று தேர்வு செய்தால் நமது சேமிப்பு பணம் முழுவதையும் முதலீடு செய்ய வைத்து அதிக வட்டி தருவதாக கூறி நமது பணத்தை மோசடி செய்து விடுவார்கள்.

    எனவே, இதுபோன்ற ஆன்லைன் மோசடியில் பொது மக்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அதையும் மீறி நீங்கள் ஏமாற்றப்பட்டால் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • கைபேசியை மாணவிகள் கவனமுடன் கையாள வேண்டும்.

    கடலூர்:

    சிதம்பரம் நகர அனைத்து மகளிர் காவல் துறை சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தலைமை யாசிரியர் சிவகுரு தலைமை வகித்தார். அனைத்து மகளிர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பொன்மகரம் விழிப்புணர்வு உரையாற்றினார்.

    மேலும் கைபேசியை மாணவிகள் கவனமுடன் கையாள வேண்டும் என அறிவுரை வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர் திருபுரசுந்தரி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். பள்ளியில் மாணவிகளுக்கான ஆலோசனைக் குழு அமைக்கப் பட்டது. நிகழ்ச்சி அனுபவம் குறித்த வினா வுக்கு பதில் அளித்த மாண விக்கு பரிசு வழங்கப்பட்டது.

    • உலக நாதன் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
    • உலகநாதன் குறிப்பிட்ட அந்த செயலி மூலம் பிட்காயினில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு பூபாலன் நகரை சேர்ந்தவர் உலக நாதன் (வயது 49). மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

    தற்போது புதுவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். உலகநாதன் பிட்காயினில் முதலீடு செய்ய விரும்பினார். அதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் இணைய தள செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்தார். அதில் இருந்த செல்போன் எண்ணில் உலக நாதன் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது எதிர்முனையில் பேசிய நபர் தன்னை ஆன்லைன் வர்த்தக மேலாளர் மனோஜ் என்றும், பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும், இதில் முதலீடு செய்த பலர் கோடி கோடியாக சம்பாதித்துள்ளனர் என்று ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டார்.

    இதனை உண்மை என்று நம்பிய, உலகநாதன் குறிப்பிட்ட அந்த செயலி மூலம் பிட்காயினில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தார். அடுத்த சில நாட்களில் அந்த செயலியின் அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த உலகநாதன், மனோஜை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த உலகநாதன், இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து, மோசடி நபர் குறித்து விசாரித்து வருகிறார்.

    • நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு
    • அதிகாரிகள் உடனிருந்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார்.

    அப்போது கோப்புகளை பார்வையிட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஷ்வரய்யா (தலைமையிடம்), சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜாகுமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • கடந்த 2 ஆண்டுகளில் சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் பொதுமக்கள் ரூ.3.11 கோடியை இழந்ததாக போலீஸ் சூப்பிரண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
    • பணம் இரட்டிப்பாக வழங்கப்படுவதாக கூறும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த போலீஸ் குறைதீர்ப்பு முகாமில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமை தாங்கி பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.

    இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் க ள் உன்னிகிருஷ்ணன், பாஸ்கரன், ராமநாதபுரம் டி.எஸ்.பி, ஜெயச்சந்தின் மற்றும் உட்கோட்ட வாரியாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 41 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த முகாமில் மண்டபம் மறவர் தெருவைச் சேர்ந்த தில்லை ரேவதி ஆன்லைன் தகவலை நம்பி ரூ. 19 ஆயிரத்து 999-யை இழந்திருந்தார். அந்த பணத்தை போலீசார் மீட்டதற்கான சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, தில்லை ரேவதியிடம் வழங்கினார்.

    கடந்த அக்டோபர் முதல் இதுநாள் வரை போலீஸ் சூப்பிரண்டு குறைதீர்ப்பு முகாம், முதல்வரின் தனிப்பிரிவு மனு, டிஜிபி அலுவலக மனுக்கள் என 1415 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    இதில் 1259 மனுக்களுக்கு புகார்தாரர் க ளுக்கு திருப்திகரமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. 156 மனுக்கள், திருப்தி இல்லை என விசாரணையில் உள்ளது. தற்போது 41 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் போலியான தகவல்களை நம்பி பணத்தை இழந்த1274 பேர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.

    இதன்மூலம் பொது மக்கள் மொத்தம் ரூ.3.11 கோடி பணம் இழந்தனர். இதில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக குறிப்பிட்ட வங்கிகளில் 73 லட்சத்து 10 ஆயிரத்து 347 ரூபாய் போலீசாரால் முடக்கப்பட்டது.

    இதில் 15 லட்சத்து 91 ஆயிரத்து 660 ரூபாய் சம்பந்தப்பட்டவர் க ளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறும் போது, பொதுமக்கள் ஆன்லைனில் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பது, பரிசு பொருட்கள் விழுந்திருப்ப தாக கூறுவது, ஆன்லைனில் முதலீடு செய்வது, பணம் இரட்டிப்பாக வழங்கப்படுவதாக கூறும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.

    • செல்போன் பயன்பாட்டினால் மாணவர்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
    • தீங்கு ஏற்பட்டால் யாரை அணுக வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10, 11 மற்றும் 12 ம்வகுப்பு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவல்லி, சப்-இன்ஸ்பெக்டர் சையத் ரபிக் சிக்கந்தர் ஆகியோர் செல்போன் பயன்பாட்டினால் மாணவர்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும், அவற்றிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    அப்படி தீங்கு ஏற்பட்டால் யாரை அணுக வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் ஜெயந்திமாலா, செயலாளர் விவேகானந்தன், முதல்வர் ராஜ்குமார், நிர்வாக அலுவலர் சாருலதா, துணை முதல்வர் சித்ரா தேவி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.  

    • பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஒரு வாட்ஸ் அப் குறுந்தகவல் வந்தது.
    • உங்களது படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் 28 வயது பட்டதாரி பெண். இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைன் செயலி மூலம் ரூ.20 ஆயிரம் லோன் வாங்கி இருந்தார்.

    பின்னர் அந்த லோனை அதே மாதத்தில் திருப்பி செலுத்தி விட்டார்.

    இந்த நிலையில் இந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஒரு வாட்ஸ் அப் குறுந்தகவல் வந்தது.

    அதில் என் வங்கி கணக்குக்கு பணம் செலுத்த வேண்டும்.

    இல்லையென்றால் உங்களது படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தினார்.

    இருந்தாலும் மீண்டும் அதே எண்ணில் இருந்து அந்த பெண்ணின் படத்தை மார்பிங் செய்து அனுப்பப்பட்டது.

    இதனை அந்தப் பெண் பார்த்ததும் அந்த குறுந்தகவல் அழிக்கப்பட்டது. மீண்டும் தொடர்பு கொண்டு பணம் செலுத்த வேண்டும் என்று மர்ம நபர் மிரட்டல் விடுத்தார்.

    இவ்வாறாக மர்ம நபர் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதும், அந்தப் பெண் பணம் அனுப்புவதாக இருந்தார்.

    பல தவணைகளாக ரூ.16 லட்சத்து 31 ஆயிரத்து 340 பணத்தை அந்தப் பெண் செலுத்தியுள்ளார்.

    தொடர்ந்து மிரட்டல் வரவே அந்தப் பெண் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராம்தாஸ் (பொ) வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கைதான வாலிபர் அரவிந்துக்கு 17 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
    • ரூ.6500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கே.கே.நகரை சேர்ந்த அரவிந்த் என்ற வாலிபர் தனது வலைதள பக்கத்தில் முதல்-அமைச்சர் பற்றியும், காவல்துறை பற்றியும் அவதூறான வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் முடிந்தால் தன்னை பிடியுங்கள் என்று போலீசுக்கு சவாலும் விட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து கடந்த மாதம் 12-ந்தேதி அரவிந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதுதொடர்பான வழக்கு விசாரணை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. சென்னை சைபர் கிரைம் போலீஸ் தனிப்படையினர் இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையில் விசாரணை நடத்தி 48 நாட்களில் விசாரணையை விரைந்து முடித்தனர்.

    இதையடுத்து கைதான வாலிபர் அரவிந்துக்கு 17 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது. ரூ.6500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 15 நாட்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தும் சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தியும் விசாரணையை போலீசார் துரிதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூக பணித்துறை சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
    • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பண மோசடி, ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

    திருச்சி:

    திருச்சியை அடுத்த நவலூர் குட்டப்பட்டு பகுதியில், பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப் பணித்துறை மாணவர்களால் மக்கள் நலனுக்காக சமீப காலமாக அதிகரித்து வரும் 'சைபர் கிரைம்' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊர் பொதுமக்களிடையே நடத்தப்பட்டது.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பண மோசடி, ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவும், அது தொடர்பாக பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியை ஊர் தலைவர் எஸ்.ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் ஊர் துணை தலைவர் எஸ்.கலையரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து கவுன்சிலர், பட்டையார், மணியார், வார்டு உறுப்பினர்கள், சைபர் கிரைம் காவல் நிலையத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சங்கர் ஆகியோர் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.

    இதனைத் தொடர்ந்து பிஷப் கல்லூரி மாணவர்களான ஜாஸ்மின் சிந்தியா, ஜோஸ்வா சாமுவேல், ஜெயவர்ஷினி, சுதர்ஷனன் ஆகியோர் நிகழ்ச்சியினை நடத்தினர். நிகழ்ச்சியை சமூக பணித்துறை மாணவர் சுதர்ஷனன் தொகுத்து வழங்கினார்.

    முடிவில் ஜாஸ்மின் சிந்தியா நன்றி கூறினார். இணையதள குற்றங்கள் குறித்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஆசிரிய ஆலோசகரான சாம்சன் வாழ்த்துரை வழங்கினார்.

    மேலும், இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    • கீழ்த்தரமான வகையில் நடந்துகொண்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனுவில் கூறி உள்ளார்.
    • தன் மனைவி அந்த இணைப்பை துண்டித்து நம்பரை பிளாக் செய்ததாக பாஜக தலைவர் பேட்டி

    சித்ரதுர்கா:

    கர்நாடக மாநிலத்தின் மூத்த பாஜக எம்.எல்.ஏ.  திப்பாரெட்டி (வயது 75). இவருக்கு அறிமுகம் இல்லாத பெண் ஒருவர் கடந்த மாதம் 31ம் தேதி வாட்ஸ்அப் வீடியோ காலில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த பெண் தனது ஆடைகளை அவிழ்க்கத் தொடங்கி உள்ளார். இதனால் பதறிப்போன திப்பாரெட்டி, இணைப்பை துண்டித்துள்ளார். அதன்பின்னர் அந்த பெண், திப்பாரெட்டிக்கு ஆபாசமான வீடியோவை அனுப்பி உள்ளார்.

    இதையடுத்து திப்பாரெட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னிடம் கீழ்த்தரமான வகையில் நடந்துகொண்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனுவில் கூறி உள்ளார்.

    பின்னர் இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எனக்கு முதல் அழைப்பு வந்தபோது, நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் அழைப்பு வந்தது. அப்போதுதான் அந்த பெண் தன் ஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்தார். உடனே போனை எனது மனைவியிடம் கொடுத்தேன். அவர் இணைப்பை துண்டித்து அந்த நம்பரை பிளாக் செய்தார். காவல்துறை ஆய்வாளரின் ஆலோசனையின் பேரில், காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தேன்" என்றார்.

    • மர்ம நபர்கள் ஓ.டி.பி.யை வைத்து வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ்.
    • 6 நாளில் சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்டு கொடுத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கடந்த 17-ந் தேதி வந்த செல்போன் குறுந்தகவலில் ஆன்லைன் மூலம் கிரெடிட் கார்டு ரிவார்டு பாய்ன்ட்ஸ் கிலைம் செய்து தருகிறோம்.

    அதற்கு உங்களது மொபைலில் ஒரு ஓ.டி.பி. வரும் அதனை எங்களுக்கு தெரிவியுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    அதன்படி அந்த நபர் ஓ.டி.பி.யை தெரிவித்தார்.

    உடனே மர்ம நபர்கள் ஓ.டி.பி.யை பெற்று கொண்டு அவரது 3 வங்கி கணக்கில் இருந்து ரூ.69947 பணத்தை அபேஸ் செய்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார்.

    இது குறித்து அவர் தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து துரித நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி மோசடி செய்த நபரின் வங்கிக் கணக்கை உடனடியாக முடக்கி ரூ. 19883ஐ முதல் கட்டமாக மீட்டு புகார்தாரரின் வங்கி கணக்கிற்கு திரும்ப வரவு வைத்தனர்.

    இந்த நிலையில் அவரை அழைத்து இன்று தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில்

    ரூ.19883 பணத்தை சைபர் கிரைம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.

    மீதமுள்ள பணத்தை மீட்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 6 நாளில் சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்டு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    ×