என் மலர்
நீங்கள் தேடியது "Cyber Crime"
- கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 55,982 சிம்கார்டுகளை முடக்கியுள்ளனர்.
- சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்த பல முயற்சிகளை எடுத்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் போலி சிம்கார்டுகள் மற்றும் மோசடியை தடுக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சைபர் கிரைம் போலீசார் தொலைத்தொடர்பு துறையின் முக அடையாளம் காணும் சாப்ட்வேர் மூலம் ஆய்வு செய்தனர்.
இதில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 55,982 சிம்கார்டுகளை முடக்கியுள்ளனர்.
ஒருவர் 403 சிம்கார்டுகளை வாங்கியுள்ளார். ஒரு பெண்ணுக்கு 34 கார்டுகள் உள்ளது. ஒரு சிறுவன் 5 கார்டுகள் வாங்கியது அம்பலமாகியுள்ளது. இந்த சிம் கார்டுகள் அனைத்தும் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 1100 சிம்கார்டு வியாபாரிகளை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
போலி சிம்கார்டுகளை வியாபாரிகள் எதற்காக விற்பனை செய்தனர் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் ஏ.டி.ஜி.பி சஞ்சய் குமார் கூறியதாவது:-
பல சிம்கார்டுகளை வாங்கியவர்களின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை அவர்களை விரைவில் கண்டுபிடித்து விடுவோம்.
யாருடைய சிம்கார்டுகள் முடக்கப்பட்டதோ அவர்கள் அவற்றைத் திரும்பப் பெறுவதற்கு அதிகாரிகளிடம் தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பித்து உண்மைத்தன்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
போலி சிம்கார்டுகள் வாங்கியவர்களின் விவரங்களை ஆராய்ந்து வருகிறோம். அவர்கள் கிரிமினல் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கண்டறிந்தால், அவர்களைக் கண்காணிக்க அந்தந்த போலீஸ் பிரிவுகளை எச்சரிப்போம்."
சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்த பல முயற்சிகளை எடுத்துள்ளது. ஹெல்ப்லைன் 1930 அல்லது நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்டல் (என்.சி.ஆர்.பி) மூலம் சந்தேக நபர்களின் வங்கி கணக்குகள் விரைவாக முடக்கப்பட்டு, மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்க விடாமல் தடுப்போம்.
2022-ம் ஆண்டில், போலி மோசடி அழைப்பு மூலம் பொதுமக்கள் ரூ.288 கோடியை இழந்துள்ளனர், அதில் ரூ.106 கோடி முடக்கப்பட்டுள்ளது, 2023-ம் ஆண்டில் முதல் 3 மாதங்களில், ரூ.67 கோடி பொதுமக்களிடமிருந்து போலி மோசடி கும்பல் அபேஸ் செய்துள்ளனர். அதில் ரூ.49 கோடி முடக்கப்பட்டுள்ளது.
1930 ஹெல்ப்லைன் 24 மணிநேரமும் வேலை செய்கிறது. சராசரியாக ஒரு நாளில் 600 அழைப்புகள் வருகிறது. இதில் 250 புகார் பதிவு செய்யப்படுகிறது.
பெரும்பாலான மோசடிகள் தகவல்களை திருடும் புதிய மென்பொருள் மூலம் நடந்துள்ளது.
இதுபோன்ற குற்றங்களில் தொடர்புடைய செல்போன் எண்கள் தொடர்ந்து செயல்படுவதால் சந்தேக நபர்கள் மக்களை எளிதில் ஏமாற்றி வருகின்றனர்.
1930 ஹெல்ப்லைனை விரிவுபடுத்த மாநில அரசு ரூ.9.28 கோடி அனுமதித்துள்ளது. பணியாளர்களின் எண்ணிக்கை 8-ல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஒரு வாட்ஸ் அப் குறுந்தகவல் வந்தது.
- உங்களது படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் 28 வயது பட்டதாரி பெண். இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைன் செயலி மூலம் ரூ.20 ஆயிரம் லோன் வாங்கி இருந்தார்.
பின்னர் அந்த லோனை அதே மாதத்தில் திருப்பி செலுத்தி விட்டார்.
இந்த நிலையில் இந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஒரு வாட்ஸ் அப் குறுந்தகவல் வந்தது.
அதில் என் வங்கி கணக்குக்கு பணம் செலுத்த வேண்டும்.
இல்லையென்றால் உங்களது படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தினார்.
இருந்தாலும் மீண்டும் அதே எண்ணில் இருந்து அந்த பெண்ணின் படத்தை மார்பிங் செய்து அனுப்பப்பட்டது.
இதனை அந்தப் பெண் பார்த்ததும் அந்த குறுந்தகவல் அழிக்கப்பட்டது. மீண்டும் தொடர்பு கொண்டு பணம் செலுத்த வேண்டும் என்று மர்ம நபர் மிரட்டல் விடுத்தார்.
இவ்வாறாக மர்ம நபர் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதும், அந்தப் பெண் பணம் அனுப்புவதாக இருந்தார்.
பல தவணைகளாக ரூ.16 லட்சத்து 31 ஆயிரத்து 340 பணத்தை அந்தப் பெண் செலுத்தியுள்ளார்.
தொடர்ந்து மிரட்டல் வரவே அந்தப் பெண் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராம்தாஸ் (பொ) வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கைதான வாலிபர் அரவிந்துக்கு 17 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
- ரூ.6500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை கே.கே.நகரை சேர்ந்த அரவிந்த் என்ற வாலிபர் தனது வலைதள பக்கத்தில் முதல்-அமைச்சர் பற்றியும், காவல்துறை பற்றியும் அவதூறான வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் முடிந்தால் தன்னை பிடியுங்கள் என்று போலீசுக்கு சவாலும் விட்டுள்ளார்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து கடந்த மாதம் 12-ந்தேதி அரவிந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. சென்னை சைபர் கிரைம் போலீஸ் தனிப்படையினர் இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையில் விசாரணை நடத்தி 48 நாட்களில் விசாரணையை விரைந்து முடித்தனர்.
இதையடுத்து கைதான வாலிபர் அரவிந்துக்கு 17 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது. ரூ.6500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 15 நாட்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தும் சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தியும் விசாரணையை போலீசார் துரிதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- கீழ்த்தரமான வகையில் நடந்துகொண்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனுவில் கூறி உள்ளார்.
- தன் மனைவி அந்த இணைப்பை துண்டித்து நம்பரை பிளாக் செய்ததாக பாஜக தலைவர் பேட்டி
சித்ரதுர்கா:
கர்நாடக மாநிலத்தின் மூத்த பாஜக எம்.எல்.ஏ. திப்பாரெட்டி (வயது 75). இவருக்கு அறிமுகம் இல்லாத பெண் ஒருவர் கடந்த மாதம் 31ம் தேதி வாட்ஸ்அப் வீடியோ காலில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த பெண் தனது ஆடைகளை அவிழ்க்கத் தொடங்கி உள்ளார். இதனால் பதறிப்போன திப்பாரெட்டி, இணைப்பை துண்டித்துள்ளார். அதன்பின்னர் அந்த பெண், திப்பாரெட்டிக்கு ஆபாசமான வீடியோவை அனுப்பி உள்ளார்.
இதையடுத்து திப்பாரெட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னிடம் கீழ்த்தரமான வகையில் நடந்துகொண்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனுவில் கூறி உள்ளார்.
பின்னர் இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எனக்கு முதல் அழைப்பு வந்தபோது, நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் அழைப்பு வந்தது. அப்போதுதான் அந்த பெண் தன் ஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்தார். உடனே போனை எனது மனைவியிடம் கொடுத்தேன். அவர் இணைப்பை துண்டித்து அந்த நம்பரை பிளாக் செய்தார். காவல்துறை ஆய்வாளரின் ஆலோசனையின் பேரில், காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தேன்" என்றார்.
- 5ஜி-க்கு மாற்றம் செய்ய கடவு சொல்லை கேட்டால் அதனை யாரிடமும் தெரியப்படுத்த வேண்டாம்.
- குற்றவாளிகள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவதற்கு வாய்ப்பு உள்ளது என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொது மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் உங்கள் சிம் கார்டை 4ஜி-ல் இருந்து 5ஜி-க்கு மாற்றம் செய்ய தங்களின் செல்போனுக்கு வந்துள்ள ஒரு நேர கடவு சொல்லை கூறுங்கள் என்று யாரும் கேட்டால் அதனை யாரிடமும் தெரியப்படுத்த வேண்டாம். அதன் மூலம் சைபர் கிரைம் குற்றவாளிகள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவதற்கு வாய்ப்பு உள்ளது என அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
இதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராஜ் மேற்பார்வையில் போலீசார் மாவட்டம் முழுவதும் சிம் கார்டு மாற்றம் உள்ளிட்ட சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
- சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு தகவல்களை மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி வழங்கினர்
திருமுருகன்பூண்டி :
திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., அறக்கட்டளை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக குற்றவியல் தடுப்பு முதன்மை காவலர் சொர்ணவள்ளி, குற்றவியல் தடுப்பு காவலர் சையத் ரபிக் சிக்கந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் இன்றைய வாழ்வியல் நடைமுறைக்கு தேவையான சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு தகவல்களை மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி வழங்கினர். நிகழ்ச்சியில் முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு, மேலாளர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- பல்வேறு வகையான மோசடிகளில் இழந்த பணம் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டது.
- மோசடி நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கி பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களில் ஆன்லைன் மோசடி மற்றும் பல்வேறு வகையான மோசடிகளில் இழந்த பணம் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டது.அவ்வகையில் கிரிப்டோ கரன்சி முதலீட்டில் ஜன்னத் என்பவர் 32 லட்சம் ரூபாய், ஊத்துக்குளியை சேர்ந்த பாலாஜி என்பவர் டிரேடிங்கில் 36 ஆயிரத்து 500 ரூபாய், பல்லடத்தை சேர்ந்த மோகன் என்பவர் விளம்பரத்தை பார்த்து பணம் செலுத்தி 7 ஆயிரத்து 999 ரூபாய் மற்றும் இணையவழி வேலைவாய்ப்பில் உடுமலையை சேர்ந்த விசாலி என்பவர் 5 ஆயிரத்து 100 ரூபாய் இழந்தனர்.
இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி 4 வழக்குகளில் மொபைல் போன் எண்களை கண்டறிந்து, மோசடி நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கி பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.