search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி பலி"

    • சிவரஞ்சனி தனது மகள்களுடன் பயன்பாடில்லாத கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.
    • சிவரஞ்சனி, தஷிகா ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே கூத்தினிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 40), விவசாயி. இவரது மனைவி சிவரஞ்சனி (28). இவர்களுக்கு நிவேதா (7), தஷிகா (5) மற்றும் ஹரிணி என்ற 4 மாத குழந்தை ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சிவரஞ்சனி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. நிவேதா அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை சிவரஞ்சனி தனது 3 மகள்களுடன் கூத்தினிப்பட்டி அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பயன்பாடில்லாத கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.

    அப்போது அவர்கள் 4 பேரும், தண்ணீரில் மூழ்கி உள்ளனர். இதையடுத்து அவர்கள் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிவரஞ்சனி மற்றும் அவரது மகள்கள் தஷிகா, நிவேதா ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிவேதா பரிதாபமாக உயிரிழந்தார். சிவரஞ்சனி, தஷிகா ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கல்குவாரி குட்டையில் இறங்கி 4 மாத குழந்தை ஹரிணியின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    • வீட்டில் உள்ள அனைவரும் சாம்பார் சாதம் சாப்பிட்டு விட்டு தூங்கினர்.
    • நள்ளிரவில் பிரியதர்ஷினிக்கு திடீர் என்று வாந்தி ஏற்பட்டது. மேலும் உடல் நிலை மோசமானது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னாங்காரனை கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ரேணு காதேவி. இவர்களது மகள் பிரியதர்ஷினி (வயது 8), மகன் தக்ஷி (5). பிரிய தர்ஷினி அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரேணுகாதேவி வீட்டில் சாம்பார் சாதம் தயார் செய்தார். பின்னர் வீட்டில் உள்ள அனைவரும் சாம்பார் சாதம் சாப்பிட்டு விட்டு தூங்கினர்.

    நள்ளிரவில் பிரியதர்ஷினிக்கு திடீர் என்று வாந்தி ஏற்பட்டது. மேலும் உடல் நிலை மோசமானது. இதையடுத்து பிரியதர்ஷினியை ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரியதர்ஷினிக்கு நேற்று அதிகாலை மீண்டும் வாந்தி ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவரை ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் சாப்பிட்ட சாம்பார் சாதம் உயிரை பறித்து இருப்பது தெரியவந்தது.

    வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே உணவு எப்படி சிறுமியின் உயிரை பறித்தது என்பது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 16 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர், அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளை நாடியுள்ளனர்.
    • மருந்து கடைக்கு சென்று மாத்திரையை வாங்கி சிறுமிக்கு கொடுத்துள்ளனர். முதலில் உரிமையாளர்கள் மாத்திரை கொடுத்ததை ஒப்புக்கொள்ளவில்லை.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள முத்தணம்பாளையம் தேவநகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த 20-ந்தேதி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதனைத்தொடர்ந்து சிறுமிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சிறுமி இறந்ததற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் அறிக்கையை பார்த்தனர். அப்போது சிறுமி கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டுள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் வீரபாண்டி போலீசார் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருந்ததாகவும், இதனால் அவரது வாழ்க்கை வீணாகி விடும் என்பதால் கருவை கலைக்க கோவில்வழி முத்தணம்பாளையம் சாலையில் உள்ள மருந்து கடையில் ரூ.1000க்கு மாத்திரை வாங்கி கொடுத்ததாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து போலீசார் இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் துணை இயக்குனர் (குடும்ப நலம்) கவுரி, மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன், தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு மற்றும் இணை இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் ஹரிகோபாலகிருஷ்ணன் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் ராமசாமி ஆகியோர் சம்பந்தப்பட்ட மருந்து கடைக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது மருந்து கடையை அதே பகுதியை சேர்ந்த மகேஷ் (40), கவிதா (35) தம்பதி நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் செட்டிபாளையம் பகுதியில் மற்றொரு மருந்து கடையும் நடத்தி வந்துள்ளனர். தொடர்ந்து மருந்து கடையில் ஆய்வு செய்த போது, அங்கு காலாவதியான மருந்துகள் மற்றும் மாதிரி மருந்துகள் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கோவில்வழி முத்தணம்பாளையம் சாலையில் உள்ள மருந்து கடைக்கு சீல் வைத்தனர். இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கும், மருத்துவத்துறை அதிகாரிகளுக்கும் பரிந்துரை செய்துள்ளனர்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    16 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர், அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளை நாடியுள்ளனர். ஆனால் அவர்கள் கருவை கலைக்க மறுத்துள்ளனர். தொடர்ந்து மருந்து கடைக்கு சென்று மாத்திரையை வாங்கி சிறுமிக்கு கொடுத்துள்ளனர். முதலில் உரிமையாளர்கள் மாத்திரை கொடுத்ததை ஒப்புக்கொள்ளவில்லை. இதன் பின்னர் சிறுமியின் பெற்றோர் தெரிவித்த தகவலை கூறிய பின்னரே ஒப்புக்கொண்டனர். மாத்திரை சாப்பிட்டதும் சிறுமிக்கு வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்துள்ளார். மருந்து கடை வைத்திருப்பவர்களுக்கு பலமுறை இது போன்ற மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என தெரிவித்து வருகிறோம். ஆனாலும் இதுபோன்று சிலர் விற்பனை செய்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகள் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்படும். இதுபோன்ற மாத்திரை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தண்ணீர் என நினைத்து சிறுமி ஸ்பிரிட் குடித்து இறந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அகல்யா(வயது9). இவருக்கு சிறுநீரக கோளாறு இருந்தது. இதற்காக மேல் சிகிச்சை பெற கடந்த சில நாட்களுக்கு முன்பு அகல்யா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிறுமியின் தாய் அவரை கவனித்து வந்தார்.

    இன்று காலை அகல்யாவுக்கு தாகம் எடுத்துள்ளது. அப்போது அருகில் இருந்த அவரது தாய் தண்ணீர் என நினைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஸ்பிரிட்டை (மருத்துவ தேவைக்காக வைக்கப்பட்டிருந்தது) அகல்யாவுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனை அருந்திய அகல்யாவுக்கு சிறிது நேரத்தில் உடல்நிலை மோசமானது. உடனே டாக்டர்கள் அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் அகல்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    தண்ணீர் என நினைத்து சிறுமி ஸ்பிரிட் குடித்து இறந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீரில் மூழ்கி சிறுமி நிரஞ்சனா பரிதாபமாக இறந்தார்.
    • திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருத்தணி:

    அரக்கோணம் அருகே உள்ள குருவராஜப்பேட்டை தங்கச்சாலை தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி நாகவல்லி. இவர்களது 3 வயது மகள் நிரஞ்சனா.

    இந்நிலையில் திருத்தணியை அடுத்த புஜ்ஜி ரெட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெறும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ரமேஷ் குடும்பத்துடன் பங்கேற்றார். மேலும் 2 குழந்தைகளுடன் நேற்று முன்தினம் மாலை புஜ்ஜிரெட்டிப்பள்ளி கிராமத்திற்கு சென்றார்.

    அங்கு சிறுமி நிரஞ்சனா விளையாடிக்கொண்டு இருந்தபோது பக்கத்து வீட்டில் மூடப்படாமல் இருந்த குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி சிறுமி நிரஞ்சனா பரிதாபமாக இறந்தார். சிறிது நேரம் கழித்து சிறுமி நிரஞ்சனாவை பெற்றோர் தேடியபோது அவள் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்து கிடப்பது தெரிந்தது. இதனால் உற்சாகத்தில் இருந்த உறவினர்கள் சோகமானார்கள்.

    இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவில் அகல் விளக்கில் இருந்து ஹேமாவதியின் சுடிதாரில் தீப்பற்றியது.
    • மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த நரசமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 47). இவரது மகள் ஹேமாவதி (15). இவர் கடந்த மே மாதம் 14-ந் தேதி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது கோவில் அகல் விளக்கில் இருந்து ஹேமாவதியின் சுடிதாரில் தீப்பற்றியது. இதனால் அவரது உடலின் பின்பகுதி மற்றும் கழுத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து சிறுமி ஹேமாவதியை தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

    இந்நிலையில் சிறுமி ஹேமாவதி நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி சிறுமி ஹேமாவதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரில் இருந்து சிறுமி இந்திரஜா வெளியே தலையை நீட்டியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் சேகரை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் போஜ்ஜா கூடேமை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு.

    இவரது மகள் இந்திரஜா (வயது 9). வெங்கடேஸ்வரலுவிடம் சேகர் என்பவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு அனந்தகிரியில் வெங்கடேஸ்வரலுவின் உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் திருமண மண்டபத்திற்கு சென்றனர்.

    பின்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் இரவு வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.

    காரில் இருந்து சிறுமி இந்திரஜா வெளியே தலையை நீட்டியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தார்.

    சிறுமி தலையை காருக்கு வெளியே நீட்டிக்கொண்டு இருப்பதை கவனிக்காத கார் டிரைவர் சேகர் திடீரென கார் கண்ணாடியை ஏற்றினார். இதில் சிறுமியின் கழுத்து இறுகி மூச்சு அடைத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த இந்திரஜாவின் பெற்றோர் சிறுமியின் உடலை பார்த்து கதறி துடித்தனர்.

    இதுகுறித்து அனந்தகிரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் சேகரை கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செல்போன் வெடித்ததற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
    • பழையனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார், முன்னாள் பஞ்சாயத்து கவுன்சிலர். இவரது மனைவி சவுமியா. இவர்களது ஒரே மகள் ஆதித்யஸ்ரீ (வயது 8)

    இவள், அந்தப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு வீட்டில் இருந்த ஆதித்யஸ்ரீ, தனது தந்தையின் செல்போனை எடுத்து, அதில் ஒரு வீடியோவை பார்த்துக்கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அந்த செல்போன் வெடித்தது. வீட்டில் வெடி வெடித்தது போன்ற சத்தம் கேட்டதால், பக்கத்து அறைகளில் இருந்த பெற்றோர் ஓடி வந்தனர். அங்கு ஆதித்யஸ்ரீ காயங்களுடன் கிடந்துள்ளார். செல்போன் வெடித்து சிதறி கிடந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அசோக்குமார், உடனடியாக ஆதித்யஸ்ரீயை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆதித்யஸ்ரீ இறந்துவிட்டதாக தெரிவித்தனர். செல்போன் வெடித்ததற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்து பழையனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை பலனின்றி நேற்று சிறுமி தேஜா ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள். மவுலீஸ்வரிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • பள்ளிபாளையம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அலமேடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30). இவர் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கோமதி (26). இந்த தம்பதிக்கு மவுலீஸ்வரி (6), தேஜா ஸ்ரீ (3) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். மவுலீஸ்வரி அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை அக்காள்-தங்கை இருவரும் தங்களது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது கோவிந்தராஜின் மோட்டார் சைக்கிளில் பெயிண்டு பாட்டில் ஒன்று இருந்தது.

    அதனை குளிர்பானம் என நினைத்து, சிறுமிகளான மவுலீஸ்வரி, தேஜா ஸ்ரீ ஆகியோர் அடுத்தடுத்து குடித்தனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்து பதறி போன பெற்றோர், சிறுமிகளை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சிறுமி தேஜா ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள். மவுலீஸ்வரிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பெயிண்டை குடித்து பலியான தேஜா ஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாராசந்த் பாண்டேவின் மகள் பத்மினி பெஹாரா விளையாடிக் கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சியில் ரூபி பிரிக்ஸ் சேம்பர் என்ற தனியார் செங்கல் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.

    இதில், ஒடிசா மாநிலம்,பலாங்கீர் மாவட்டம்,மால்பார கிராமத்தைச் சேர்ந்த தாராசந்த் பாண்டே என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கடந்த இரண்டு மாதங்களாக இங்கே வந்து தங்கி இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில்,நேற்று மாலை இங்குள்ள தண்ணீர் தொட்டியில் தாராசந்த் பாண்டேவின் மகள் பத்மினி பெஹாரா(வயது 4) விளையாடிக் கொண்டிருந்தார்.

    அப்பொழுது எதிர்பாராத விதமாக அவள் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து மூழ்கினாள். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் சோபாகினி பெஹாரா பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.எனவே,போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • வாழப்பாடியிலுள்ள மருத்துவர் செல்வாம்பாள் என்பவரது தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.
    • குழந்தையை பிரசவித்த பிறகு சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 18 வயது நிறையாத ஒரு சிறுமியும், இந்திரா நகரைச் சேர்ந்த இவரது உறவினரான ஒரு வாலிபரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், சிறுமி கர்ப்பமானார். இது பெற்றோருக்கு தெரியவந்ததால், தனது மகளின் வயிற்றில் வளரும் கருவை கலைத்துவிட்டு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து உள்ளனர்.

    வாழப்பாடியிலுள்ள மருத்துவர் செல்வாம்பாள் என்பவரது தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை நேற்று முன்தினம் இரவு அழைத்து சென்றுள்ளனர்.

    சிறுமியை பரிசோதித்த டாக்டர் செல்வாம்பாள், 7 மாதத்திற்கு மேல் கரு வளர்ந்து விட்டதால், கருவை கலைக்க முடியாது என்பதால், பிரசவ முறையில் சிகிச்சை அளித்து, சிறுமியின் வயிற்றில் இருந்த குறை மாத குழந்தையை பிரசவிக்க செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், குழந்தையை பிரசவித்த பிறகு சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் அவசர சிகிச்சை வாகனத்தில் வைத்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுமியை அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து வாழப்பாடி போலீசார் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் வளர்மதி, வாழப்பாடி அரசு தலைமை மருத்துவர் ஜெயசெல்வி, பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர், டாக்டர் செல்வாம்பாளிடம் விசாரணை நடத்தினர்.

    திருமணமாகாத சிறுமிக்கு பிரசவ சிகிச்சை அளித்த பெண் டாக்டர் செல்வம்பாள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வாழப்பாடி அரசு தலைமை மருத்துவர் ஜெயசெல்வி, வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். இவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார், டாக்டர் செல்வாம்பாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் குறை மாதத்தில் சிறுமியால் பிரசவிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் நெகிழித் தொட்டியில் உயிருடன் கிடந்த பெண் குழந்தை மீட்கப்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அங்கு இன்குபேட்டர் கருவியில் வைத்து சிகிச்சை அளித்து, குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு, பிரசவம் பார்த்த பெண் மருத்துவர் மீதும், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வாழப்பாடி டி.எஸ்.பி ஹரிசங்கரி, இன்ஸ்பெக்டர் உமாசங்கர், தனலட்சுமி ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

    • தண்ணீரில் இறங்கி குளித்த போது ரஹீமா எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டார்
    • குளத்திலிருந்து மீட்டு அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    கன்னியாகுமரி :


    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பருத்தி விளை பகுதியை சேர்ந்தவர் ஜலிலுல்லா. இவர் வெளி நாட்டில் சில வருடமாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ரஹீமா (வயது 9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அத்திக்கடை அருகே உள்ள சம்பக்குளத்திற்கு உறவினர்களுடன் குளிக்க சென்றார். அப்பொழுது தனது தாயார் சஹினா மற்றும் உறவினர்கள் தண்ணீரில் இறங்கி குளித்த போது ரஹீமா எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். திடீரென ரஹீமாவை காணவில்லை. உறவினர்கள் தேடிய நீரில் தத்தளிப்பதை கண்டனர். உடனே அவரை குளத்திலிருந்து மீட்டு அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ரஹீமா பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இச்சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. போலீசார் ரஹீமாவின் உடலை கைப் பற்றி மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×