search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட 16 வயது சிறுமி பலி- மாத்திரை வழங்கிய மருந்து கடைக்கு சீல்
    X

    மருந்து கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த காட்சி.

    கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட 16 வயது சிறுமி பலி- மாத்திரை வழங்கிய மருந்து கடைக்கு 'சீல்'

    • 16 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர், அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளை நாடியுள்ளனர்.
    • மருந்து கடைக்கு சென்று மாத்திரையை வாங்கி சிறுமிக்கு கொடுத்துள்ளனர். முதலில் உரிமையாளர்கள் மாத்திரை கொடுத்ததை ஒப்புக்கொள்ளவில்லை.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள முத்தணம்பாளையம் தேவநகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த 20-ந்தேதி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதனைத்தொடர்ந்து சிறுமிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சிறுமி இறந்ததற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் அறிக்கையை பார்த்தனர். அப்போது சிறுமி கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டுள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் வீரபாண்டி போலீசார் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருந்ததாகவும், இதனால் அவரது வாழ்க்கை வீணாகி விடும் என்பதால் கருவை கலைக்க கோவில்வழி முத்தணம்பாளையம் சாலையில் உள்ள மருந்து கடையில் ரூ.1000க்கு மாத்திரை வாங்கி கொடுத்ததாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து போலீசார் இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் துணை இயக்குனர் (குடும்ப நலம்) கவுரி, மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன், தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு மற்றும் இணை இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் ஹரிகோபாலகிருஷ்ணன் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் ராமசாமி ஆகியோர் சம்பந்தப்பட்ட மருந்து கடைக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது மருந்து கடையை அதே பகுதியை சேர்ந்த மகேஷ் (40), கவிதா (35) தம்பதி நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் செட்டிபாளையம் பகுதியில் மற்றொரு மருந்து கடையும் நடத்தி வந்துள்ளனர். தொடர்ந்து மருந்து கடையில் ஆய்வு செய்த போது, அங்கு காலாவதியான மருந்துகள் மற்றும் மாதிரி மருந்துகள் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கோவில்வழி முத்தணம்பாளையம் சாலையில் உள்ள மருந்து கடைக்கு சீல் வைத்தனர். இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கும், மருத்துவத்துறை அதிகாரிகளுக்கும் பரிந்துரை செய்துள்ளனர்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    16 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர், அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளை நாடியுள்ளனர். ஆனால் அவர்கள் கருவை கலைக்க மறுத்துள்ளனர். தொடர்ந்து மருந்து கடைக்கு சென்று மாத்திரையை வாங்கி சிறுமிக்கு கொடுத்துள்ளனர். முதலில் உரிமையாளர்கள் மாத்திரை கொடுத்ததை ஒப்புக்கொள்ளவில்லை. இதன் பின்னர் சிறுமியின் பெற்றோர் தெரிவித்த தகவலை கூறிய பின்னரே ஒப்புக்கொண்டனர். மாத்திரை சாப்பிட்டதும் சிறுமிக்கு வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்துள்ளார். மருந்து கடை வைத்திருப்பவர்களுக்கு பலமுறை இது போன்ற மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என தெரிவித்து வருகிறோம். ஆனாலும் இதுபோன்று சிலர் விற்பனை செய்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகள் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்படும். இதுபோன்ற மாத்திரை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×