search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா தேர்தல்"

    • கர்நாடக மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 20 கடைசி நாள்.
    • காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாராத்தை தொடங்கியுள்ளனர்.

    கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வாக்குப் பதிவு மே 10 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தை துவங்கியுள்ளனர்.

    அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் காரணமாக பல்வேறு தொகுதிகளில் விழா கோலம் பூண்டுள்ளது. தேர்தலை ஒட்டி இருகட்சி மட்டுமின்றி சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஷாமனூர் சிவசங்கரப்பா தேர்தலில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

     

    91 வயதான சிவசங்கரப்பா தேர்தலில் போட்டியிடுவது பற்றி கூறும் போது, "எனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும், கடவுள் அருளும் உள்ளது. வேறென்ன வேண்டும்? இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்து இருக்கிறார்.

    கர்நாடக மாநிலத்தின் தேவாங்கரெ தெற்கு தொகுதியில் போட்டியிடும் சிவசங்கரப்பா, இந்த தேர்தலில் போட்டியிடும் மூத்த வேட்பாளர் ஆவார். தேவாங்கரெ வடக்கு தொகுதியில் சிவசங்கரப்பாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எஸ்எஸ் மல்லிகார்ஜூன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வேட்பாளர் அன்பரசன் கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவராக உள்ளார்.
    • அ.தி.மு.க.வுக்கு 'சீட்' ஒதுக்காமல் பா.ஜ.க. கைவிரித்து விட்டது.

    கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. தங்கள் விருப்பத்தை கூட்டணி கட்சியான பாஜகவிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாஜக வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியான நிலையில், அதிமுகவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    இந்நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளாக அன்பரசன் போட்டியிட உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அன்பரசன் கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புலிகேசி நகர் தொகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். 

    அ.தி.மு.க.வுக்கு சீட் ஒதுக்காமல் பாஜக கைவிரித்து விட்டதால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. வரும் 20ம் தேதி நடக்கும் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கர்நாடக தேர்தல் மற்றும் கூட்டணி விவகாரம் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பாஜகவில் இருந்து விலகிய எச்.டி.தம்மையா, சிக்கமகளூரு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
    • மொத்தம் உளள் 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி இதுவரை மொத்தம் 216 வேட்பாளர்களை அறிவித்துள்ளது

    பெங்களூரு:

    கர்நாடகாவில் அடுத்த மாதம் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று நான்காவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 7 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்ளி-தர்பாத் மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த எச்.டி.தம்மையா, சிக்கமகளூரு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் பாஜக சார்பில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி போட்டியிடுகிறார். இதேபோல் முதல்வர் பசவராஜ் பொம்மை போட்டியிடும் ஷிகான் தொகுதியில் அவரை எதிர்த்து முகமது யூசுப்பை நிறுத்தி உள்ளது.

    தற்போதைய எம்எல்ஏ துர்கப்பா எஸ்.ஹூலகேரி, லிங்சுகர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். ஹரிஹர் தொகுதி எம்எல்ஏ ராமப்பாவுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த தொகுதியில் நந்தகவி ஸ்ரீனிவாஸ் போட்டியிடுகிறார். ஹூங்ளி தர்வாட் மேற்கு தொகுதியில் தீபக்சின்சோர், ஷரவணபெலகோலா தொகுதியில் கோபாலசுவாமி நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மொத்தம் உளள் 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி இதுவரை மொத்தம் 216 வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வேட்புமனு தாக்கலையொட்டி தேர்தல் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • இதுவரை இல்லாத வகையில் முதல் நாளிலேயே 4 மந்திரிகள் உள்பட மொத்தம் 221 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

    தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதா 212 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதி களுக்கும், ஜனதா ளம் (எஸ்) 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மீதமுள்ள வேட்பாளர்களை ஓரிரு நாளில் இந்த கட்சிகள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்புமனு தாக்கலையொட்டி தேர்தல் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 100 மீட்டர் தொலைவில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளனர்.

    முதல் நாளில் பீலகி தொகுதியில் தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி, தேர்தல் அதிகாரியிடம் தனது மனுவை தாக்கல் செய்தார். சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் சிக்பள்ளாப்பூர் தொகுதியிலும், கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் யஷ்வந்த புரா தொகுதியிலும், பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல் கதக் மாவட்டம் நரகுந்து தொகுதியிலும் மனுதாக்கல் செய்தனர்.

    மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே 221 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் ஆண்கள் 197 பேரும், பெண்கள் 24 பேரும் அடங்குவர். இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான ஆளும் பா.ஜனதாவை சேர்ந்த 27 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 26 பேரும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 10 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஒருவரும், ஜனதா தளம் (எஸ்) சார்பில் 12 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    பொதுவாக வேட்பு மனு தாக்கல் தொடங்கினாலும் முதல் நாளில் மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால் கர்நாடக தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில் முதல் நாளிலேயே 4 மந்திரிகள் உள்பட மொத்தம் 221 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கட்சிகளை சேர்ந்த 100 பேர் அடங்குவர்.

    எந்த கட்சியையும் சாராத 45 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் வேட்பாளர்கள் முதல் நாளிலேயே மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர். வரும் நாட்களில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) கர்நா டகத்தில் அரசு விடுமுறை ஆகும். அதனால் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை (சனிக்கிழமை) வழக்கம் போல் மனு தாக்கல் நடைபெறும்.

    20-ந் தேதி மதியம் 3 மணிக்கு மனுதாக்கல் நிறைவடைகிறது. மனுக்களை வாபஸ் பெற 24-ந் தேதி கடைசி நாள் ஆகும். போட்டியில் இருந்து விலகி கொள்ள விரும்பும் வேட்பாளர்கள் அன்றைய தினம் மதியம் 3 மணிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.

    மே மாதம் 10-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். வாக்குகள் எண்ணிக்கை 13-ந் தேதி நடக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • மூத்த தலைவர்கள் மற்றும் தற்போதைய எம்எல்ஏக்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
    • லக்ஷ்மன் சவடி மூன்று முறை அடானி தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.

    பெலகாவி:

    கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான பாஜக நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில், மூத்த தலைவர்கள் மற்றும் தற்போதைய எம்எல்ஏக்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    இந்நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் உள்ள முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மன் சவடி, பாஜகவில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

    லக்ஷ்மன் சவடி மூன்று முறை பெலகாவி மாவட்டம் அடானி தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். 2018ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குமட்டல்லியிடம் தோல்வியடைந்தார். வெற்றி பெற்ற குமத்தல்லி பாஜகவில் இணைந்தார். அவருக்கு மீண்டும் அடானி தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியிருக்கிறது.

    இதனால் அதிருப்தி அடைந்துள்ள சவடி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளார். அவர் காங்கிரசில் இணையலாம் என பேசப்படுகிறது.

    2019இல் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசை வீழ்த்தி, பாஜக ஆட்சியமைக்க உதவிய அதிருப்தி எம்எல்ஏக்களில் குமட்டல்லியும் ஒருவர்.

    • முதல்வர் பசவராஜ் பொம்மை தனது பாரம்பரிய தொகுதியான ஷிகான் தொகுதியில் களமிறங்குகிறார்.
    • கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரை எதிர்த்து அமைச்சர் அசோகா போட்டியிடுகிறார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை தொடங்கிய நிலையில், ஆளும் பாஜகவின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

    கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய எம்எல்ஏக்களில் பலருக்கு வாய்ப்பு கொடுக்காமல், புதுமுகங்களை களமிறக்குவதற்கு கட்சி தலைமை முடிவு செய்ததால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் பாஜக தேர்தல் குழு சந்தித்து வேட்பாளர்களை இறுதி செய்தது.

    இந்நிலையில், பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் முதற்கட்டமாக 189 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 52 பேர் புதுமுகங்கள், 8 பேர் பெண்கள். பல எம்எல்ஏக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. 32 வேட்பாளர்கள் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 30 பேர் பட்டியல் சமூகத்தையும், 16 பேர் பழங்குடியினர் சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.

    அமைச்சர் அசோகா தனது சொந்த தொகுதியான பத்மநாபநகர் மற்றும் கனகபுரா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

    முதல்வர் பசவராஜ் பொம்மை தனது பாரம்பரிய தொகுதியான ஷிகான் தொகுதியில் களமிறங்குகிறார். கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, தந்தையின் பாரம்பரிய தொகுதியான சிகாரிபுரா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

    பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, தனது பாரம்பரிய தொகுதியான சிக்மகளூர் தொகுதியிலும், மாநில அமைச்சர் சோமண்ணா, முன்னாள் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து வருணா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

    கர்நாடக தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 13ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது.

    • ஹூப்ளி தொகுதி எம்எல்ஏவான ஜெகதீஷ் ஷெட்டர், இதுவரை 6 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.
    • தேர்தலில் இருந்து ஒதுங்கும் பேச்சுக்கே இடமில்லை என ஜெகதீஷ் ஷெட்டர் திட்டவட்டமாக கூறினார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜக வேட்பாளர்களை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர்கள் தேர்வுக்காக அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தியும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போதைய எம்எல்ஏக்கள் பலருக்கு வாய்ப்பு வழங்க மறுப்பதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், பாஜக எம்எல்ஏவும் முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர், கட்சிக்கு எதிராக தேர்தலில் குதிக்க உள்ளார். மற்றவர்களுக்கு வழிவிடும்படி கட்சி தலைமை கேட்டுக் கொண்டதால் வருத்தம் அடைந்ததாகவும், தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்றும் ஏற்கனவே அவர் கூறியிருந்தார்.

    தற்போதைய ஹூப்ளி தொகுதி எம்எல்ஏவான ஜெகதீஷ் ஷெட்டர், இதுவரை 6 தேர்தல்களில் வெற்றிவாகை சூடி உள்ளார். 2018ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் நல்வாட் என்பவரைவிட 21000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    தனது முடிவு குறித்து செய்தியாளர்களிடம் ஜெகதீஷ் ஷெட்டர் பேசுகையில், 'கடந்த 6 தேர்தல்களில் நான் 21,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னுடைய மைனஸ் பாயின்ட் என்ன? கட்சியின் முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நான் ஏற்கனவே எனது தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிவிட்டேன். அதை மேலும் தீவிரப்படுத்துவேன். தேர்தலில் இருந்து ஒதுங்கும் பேச்சுக்கே இடமில்லை' என திட்டவட்டமாக கூறினார்.

    • பாஜக வேட்பாளர்கள் தேர்வுக்காக அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தியும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
    • வேட்பாளர் தேர்வில் தனது பெயர் இடம்பெறாது என ஈஸ்வரப்பா சூசகமாக தெரிவித்திருந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டு கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. ஆனால், ஆளும் பாஜக வேட்பாளர்களை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் அடுத்த வாரம் வியாழக்கிழமை முடிவடைய உள்ள நிலையில், பாஜக வேட்பாளர்கள் தேர்வுக்காக அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தியும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

    தற்போதைய எம்எல்ஏக்கள் பலருக்கு வாய்ப்பு வழங்க மறுப்பதாகவும், பாஜக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி பாஜக ஆட்சியமைக்க உதவி செய்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க தீர்மானித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா (வயது 74) தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். வேட்பாளர் தேர்வில் தனது பெயர் இடம்பெறாது என கடந்த மாதம் அவர் சூசகமாக தெரிவித்திருந்த நிலையில், இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதுதொடர்பாக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். 

    • தேசிய தலைநகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் பாஜக தலைமைத் தேர்தல் கமிட்டி (சிஇசி) கூட்டம் நடைபெற்றது.
    • கர்நாடக தேர்தலுக்கான ஒட்டுமொத்த பட்டியல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்.

    கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ம் தேதி முடிவடைகிறது.

    மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார்.

    இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலையே அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்று அறிவிக்கப்பட உள்ளது.

    ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வருகின்றன.

    ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. காங்கிரஸ் கட்சி 124 தொகுதிகளுக்கான தனது முதல் மற்றும் 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    பா.ஜ.க. வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்ற பாஜக தலைமைத் தேர்தல் கமிட்டி கூட்டம் முடிந்ததும் கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஓரிரு நாட்களில் கட்சி அறிவிக்கும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

    தேசிய தலைநகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் பாஜக தலைமைத் தேர்தல் கமிட்டி (சிஇசி) கூட்டம் நடைபெற்றது. பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், "கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஓரிரு நாளில் கட்சி அறிவிக்கும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை" கூறினார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கர்நாடக தேர்தலுக்கான ஒட்டுமொத்த பட்டியல் குறித்து ஆலோசித்தோம். ஒருவேளை நாளை மீண்டும் கூட்டம் நடத்தலாம். பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படும். நான் ஷிகாவ்ன் தொகுதியில் போட்டியிடுகிறேன்" என்றார்.

    • காங்கிரஸ் கட்சி 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை முடுக்கிவிட்டுள்ளது.
    • மாநிலத்தில் அடிப்படை மற்றும் அரசியல் குறித்த தெளிவு காங்கிரசுக்கு இல்லை என பொம்மை விமர்சனம்

    சிவமோகா:

    கர்நாடக சட்டசபைத் தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜகவை தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வரும் காங்கிரஸ் கட்சி, மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை முடுக்கிவிட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

    இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சிவமோகாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் நியமித்துள்ள வேட்பாளர்களில் 60 வேட்பாளர்கள் பொருத்தமான வேட்பாளர்கள் இல்லை. எனவே, எங்கள் கட்சியில் இருந்து தலைவர்களை இழுக்க முயற்சிக்கின்றனர். நான் ஏற்கனவே கூறியபடி, டிகே சிவக்குமார் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும்போது எங்கள் எம்எல்ஏக்களை தொடர்புகொண்டு, சீட் கொடுப்பதாக கூறி கட்சியில் இணையும்படி கேட்டிருக்கிறார். மாநிலத்தில் அடிப்படை மற்றும் அரசியல் குறித்த தெளிவும் காங்கிரசுக்கு இல்லை. எனவே, கடந்த தேர்தலை விட இந்த முறை அவர்கள் (காங்கிரஸ்) மோசமான தோல்வியை சந்திப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாஜக எம்எல்ஏக்களுக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்ததாகவும், காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காத தொகுதிகளில் அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக கூறியதாகவும் பசவராஜ் பொம்மை சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் 2019ல் பாஜக தலைவர்கள்தான் தங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை இழுத்ததாக டி.கே.சிவக்குமார் பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் தொகுதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை
    • ஓபிஎஸ் அணி நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறி தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆளுங்கட்சியான பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக, இந்த தேர்தலில் போட்டியிட விரும்புகிறது. கர்நாடகா தேர்தலில் சில இடங்களில் போட்டியிட அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவுடன் ஓபிஎஸ் அணியினர் சந்தித்தனர். ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி எடியூரப்பாவை சந்தித்து சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். எடியூரப்பாவிடம் தற்போதைய அரசியல் சூழலை எடுத்து கூறியதுடன், கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் தொகுதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்துள்ளார். இதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் கர்நாடக பாஜக தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போதைய நிலையில், அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அணியினர் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், ஓபிஎஸ் அணி நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறி தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கர்நாடகா சென்று பாஜக தலைவர்களை சந்திப்பதற்குள், ஓபிஎஸ் அணியினர் முந்திக்கொண்டனர். இதன்மூலம் அதிமுக விவகாரம் கர்நாடக தேர்தலிலும் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது.

    • தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • இன்று இரண்டாம் கட்ட பட்டியலில் 41 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    கர்நாடகாவில் மே மாதம் 10-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தேர்தல் பணிகளும் முடுக்கி விடப்பட்டன.

    இந்நிலையில், 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. இதில் 41 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். 

    ×