search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா தேர்தல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பதிவினை பாஜக தனது புகாருடன் இணைத்துள்ளது.
    • மாநிலத்தின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான அழைப்பு பிரிவினைவாத அழைப்புக்கு சமம்.

    கர்நாடக மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தின் ஹுப்ளியில் சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.

    சோனியா காந்தி பேசியதை குறித்து காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், "சோனியா காந்தி, 6.5 கோடி கன்னடர்களுக்கும் உறுதியான செய்தியை தெரிவித்திருக்கிறார். கர்நாடகாவின் நற்பெயர், இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு களங்கம் ஏற்படுத்த ஒருவரையும் காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சோனியா காந்தியின் இந்த கருத்து தேர்தல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரசுக்கு பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவின் இறையாண்மை என்று பேசியதன்மூலம் கர்நாடகாவை இந்தியாவிடம் இருந்து பிரிக்கவேண்டும் என்று காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர் குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில், காங்கிரஸ் மீதும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.

    'இந்திய யூனியனில் கர்நாடகா ஒரு முக்கியமான உறுப்பு மாநிலமாகும். இந்திய யூனியனின் எந்த ஓர் உறுப்பு மாநிலத்தின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான எந்த ஒரு அழைப்பும் பிரிவினைவாத அழைப்புக்கு சமம். அத்துடன், இது மோசமான பின்விளைவுகளுக்கும் வழிவகுக்கும்' என பாஜக தனது கடிதத்தில் கூறி உள்ளது.

    மேலும் இத்தகைய ட்வீட், தேசியவாதிகள், அமைதியை விரும்புபவர்கள், முற்போக்கான மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் செயல் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

    மேலும், சோனியா காந்தி பேச்சு தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பதிவினையும் பாஜக தனது புகாருடன் இணைத்துள்ளது.

    • கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • சட்டவிரோத குடியேறிகளை விரைவாக நாடு கடத்துவதை உறுதி செய்வோம் என பாஜக வாக்குறுதி

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக தேர்தல் பணியாற்றி வரும் பாஜக, இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

    அதில், கர்நாடக மாநிலத்தில் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கர்நாடகாவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அறிமுகப்படுத்துவதுடன், மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத குடியேறிகளையும் விரைவாக நாடு கடத்துவதை உறுதி செய்வோம் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 13ம் தேதி எண்ணப்படுகின்றன.

    • கார்கே தன்னை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசியது குறித்து பிரதமர் மோடி சமீபத்திய பிரசார கூட்டத்தில் பேசினார்.
    • கடந்த மூன்று ஆண்டுகளாக கர்நாடக மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதை சொல்ல வேண்டும்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கு பாஜக தலைவர்களும் பதில் கருத்துக்களை கூறி பிரசாரம் செய்கின்றனர். இதேபோல் கருத்து மோதல், வார்த்தை போருக்கும் பஞ்சம் இல்லை.

    அவ்வகையில், காங்கிரஸ் கட்சியினர் தன் மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைப்பது குறித்தும், தன்னை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு கார்கே பேசியது குறித்தும் பிரதமர் மோடி சமீபத்திய பிரசார கூட்டத்தில் பேசினார். காங்கிரஸ் கட்சி தன்னை ஒரு முறை இரு முறையல்ல 91 முறை அவமதித்துள்ளது என்றார். பிரதமரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

    தும்கூரு மாவட்டம் துருவகெரே நகரில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-

    நீங்கள் (மோடி) கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தீர்கள். ஆனால் கர்நாடகத்தைப் பற்றி பேசாமல், உங்களைப் பற்றியே பேசுகிறீர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக கர்நாடக மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதை சொல்ல வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்யப் போகிறீர்கள், இளைஞர்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊழலுக்கு எதிராக என்ன செய்யப் போகிறீர்கள்? என்பதைப் பற்றியும் நீங்கள் பிரசார கூட்டங்களில் பேச வேண்டும்.

    இந்த தேர்தல் உங்களைப் பற்றியது அல்ல, இது கர்நாடக மக்கள் மற்றும் மாநிலத்தின் எதிர்காலத்தைப் பற்றியது. காங்கிரஸ் உங்களை 91 முறை அவமதித்தது என்று சொல்கிறீர்கள், ஆனால் நீங்கள் கர்நாடகாவிற்கு என்ன செய்தீர்கள் என்பது பற்றி பேசவே இல்லை. உங்கள் அடுத்த பிரசாரத்தின்போது, நீங்கள் என்ன செய்தீர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்வீர்கள் என்பதைப் பற்றி பேசவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாம்பும் அதன் விஷமும் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
    • காங்கிரசின் மோசமான செயல்பாடுகளுக்கு வாக்குகள் மூலம் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என மோடி பேச்சு

    கோலார்:

    கர்நாடக மாநிலத்தில் வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பிரசாரத்தில் தலைவர்களுக்கிடையிலான வார்த்தைப் போருக்கும் பஞ்சம் இல்லை. சமீபத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசினார். இந்த விவகாரம் தொடர்ந்து பிரசாரத்தில் எதிரொலிக்கிறது. 

    இந்நிலையில், கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மல்லிகார்ஜூன கார்கேவின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார். பிரதமர் மோடி பேசியதாவது:-

    ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சி கடும் சிரமத்தை எதிர்கொள்கிறது. அதன் காரணமாகவே எனக்கு எதிரான வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என் மீதான தாக்குதலை அதிகரித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் இன்று மிரட்டல் விடுக்கின்றனர். எனக்கு கல்லறை தோண்டப்படும் என்று சொல்கிறார்கள்.

    இப்போது கர்நாடக தேர்தலில், பாம்பும் அதன் விஷமும் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. ஆனால் பாம்பு என்பது சங்கரரின் (சிவன்) கழுத்தை அலங்கரிக்கிறது. எனக்கு என் நாட்டு மக்கள் சிவனின் வடிவம். அதனால் மக்களின் கழுத்தை அலங்கரிக்கும் பாம்பாக நான் நன்றாக இருக்கிறேன்.

    மகான்களின் பூமியான கர்நாடக மாநில மக்கள் காங்கிரசின் மோசமான செயல்பாடுகளுக்கு வாக்குகள் மூலம் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். காங்கிரஸ் மீதான மக்களின் கோபம், மே 10ஆம் தேதி வாக்குகள் மூலம் எதிரொலிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
    • பா.ஜ.க.வை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது.

    ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பா.ஜ.க. தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடாக் மாவட்டம் ரான் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டுப் பேசினார். இது பா.ஜ.க.வினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. கார்கேவுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது கருத்துகள் யாரையாவது புண்படுத்தி இருந்தாலோ, மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருந்தாலோ அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    • காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்று நரேந்திர மோடி கூறுகிறார்.
    • முதல் நாளில் நான்கு வாக்குறுதிகளை அல்ல, ஐந்தாவது வாக்குறுதியும் அமல்படுத்தப்படும் என்றார் ராகுல் காந்தி.

    மங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை வழங்குகின்றன. அவ்வகையில் காங்கிரஸ் கட்சி இன்று ஐந்தாவது தேர்தல் வாக்குறுதியை வழங்கியிருக்கிறது. அதாவது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மங்களூருவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்று நரேந்திர மோடி கூறுகிறார். நாங்கள் உங்களுக்கு (மக்களுக்கு) ஏற்கனவே நான்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம். அவை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த முதல் நாளில், முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

    மோடி அவர்களே, நான்கு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது என்று சொன்னீர்கள். நான் அதில் மேலும் ஒன்றை சேர்க்கிறேன். முதல் நாளில் நான்கு வாக்குறுதிகளை அல்ல, ஐந்தாவது வாக்குறுதியும் அமல்படுத்தப்படும். கர்நாடகம் முழுவதும் பெண்கள் பொது போக்குவரத்து பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வார்கள்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

    அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000 மாதாந்திர உதவி, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம், 18 முதல் 25 வயது வரை உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும் என காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புதிய ஆழத்துக்கு சரிந்து கொண்டிருக்கிறது என பாஜக தலைவர் தெரிவித்தார்.
    • பாஜகவின் சித்தாந்தத்தை ஆதரித்தால் மரணம் நிச்சயம் என்று கார்கே கூறினார்.

    கடாக்:

    கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் மாநிலம் முழுவதும் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. ஆளுங்கட்சியான பாஜகவை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுக்கின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கடாக் மாவட்டம் ரான் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசினார். இது பாஜகவினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. கார்கேவுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

    கார்கே பேசியபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவை பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது டுவிட்டரில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

    'காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் மோடியை 'விஷப் பாம்பு' என்று அழைக்கிறார். இப்படி பேசியது எப்படி முடிந்தது என்பது நமக்குத் தெரியும். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புதிய ஆழத்துக்கு சரிந்து கொண்டிருக்கிறது. இந்த விரக்தியானது, கர்நாடகாவில் காங்கிரஸ் தோல்வி அடைவதை காட்டுகிறது' என அமித் மால்வியா குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, பாஜக பாம்பு போன்றது என்றும், அந்த கட்சியின் சித்தாந்தம் விஷம் போன்றது என்றும் தெரிவித்தார். அந்த சித்தாந்தத்தை ஆதரித்தால் மரணம் நிச்சயம் என்றும் அவர் கூறினார். நான் அவருக்கு (மோடி) எதிராக பேசவில்லை என்றும் கார்கே கூறினார்.

    • அதிகாரப்பூர்வ வேட்பாளரான டி. அன்பரசன் அவர்கள் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுள்ளார்
    • கர்நாடகாவில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் வருகிற 10-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ம் தேதி நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    இந்த நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அதிமுக விலகியதுடன். தனது வேட்பாளரை திரும்ப பெற்றுள்ளது.

    இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்களை இன்று (24.04.2023 - திங்கட் கிழமை), பாரதிய ஜனதா கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, கர்நாடக மாநிலத்தில் 10.05.2023 அன்று நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், (159) புலிகேசிநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கழக வேட்பாளர் டி.. அன்பரசன் அவர்களை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தலைமை பரிசீலனை செய்து, பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று, கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான டி. அன்பரசன் அவர்கள் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கர்நாடக மாநிலத்தில் கடந்த மார்ச் 29 ஆம் தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
    • தேர்தல் ஆணையம் சார்பில் ரூ. 253 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கர்நாடாக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பில்கி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் முருகேஷ் நிரானி மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    அமைச்சர் நிரானி சர்க்கரை ஆலை ஊழியர் குடியிருப்பில் இருந்து ரூ. 21 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள சில்வர் விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கர்நாடக தொழில்துறை அமைச்சரான முருகேஷ் நிரானி மீது காவல் துறையினர் இந்திய தண்டனை சட்டம் 171 H பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    "நாங்கள் முருகேஷ் நிரானி மீது வழக்குப் பதிவு செய்து இருக்கிறோம். குற்றவாளிகள் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் நிரானி சர்க்கரை ஆலை ஊழியர் குடியிருப்பில் வசிக்கின்றனர்." என்று முதோல் காவல் நிலைய காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

     

    போலீசாரிடம் இருந்து 28 கிலோ மதிப்புள்ள சில்வர் பொருட்களை பறிமுதல் செய்திருக்கிறோம் என்று மூத்த தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் முருகேஷ் நிரானி கருத்து தெரிவிக்கவில்லை.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த மார்ச் 29 ஆம் தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அன்று முதல் இதுவரை தேர்தல் ஆணையம் சார்பில் ரூ. 253 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கடந்த வெள்ளி கிழமை மட்டும் நிரானி சர்க்கரை ஆலையில் இருந்து ரூ. 1 கோடியே 82 லட்சம் ரொக்கம், ரூ. 37 லட்சத்து 64 ஆயிரம் மதிப்புள்ள இலவச பொருட்கள், ரூ. 45 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    முன்னதாக ரூ. 82 கோடியே 05 லட்சம் ரொக்கம், ரூ. 19 கோடியே 69 லட்சம் மதிப்பிலான இலவச பொருட்கள், ரூ. 56 கோடியே 67 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள், ரூ. 16 கோடியே 55 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள், ரூ. 73 கோடியே 8 லட்சம் மதிப்புள்ள 145.55 கிலோ தங்கம், ரூ. 4 கோடியே 28 லட்சம் மதிபபுள்ள 610 கிலோ சில்வர் பொருட்கள் தேர்தல் நடைபெற இருக்கும் கர்நாடக மாநிலத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  

    • 75 வயதான சித்தராமையா, இது தான் தனக்கு கடைசி தேர்தல் என்று தெரிவித்து இருந்தார்.
    • முதல்வர் பதவியை யார் பெறுவது என்ற விஷயத்தில் சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே போட்டி நிலவி வருகிறது.

    கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மோடி அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர், முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற முஸ்லீம்கள் உத்தியுடன் செயல்பட்டு வாக்களிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் பட்சத்தில் அது 2024 ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலின் போது, தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். மாநில நலன் சார்ந்த பிரச்சினைகளை சார்ந்து இந்த தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

     

    கர்நாடக சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக இருக்கும் 75 வயதான சித்தராமையா, இது தான் தனக்கு கடைசி தேர்தல் என்று தெரிவித்து இருந்தார். இந்த தேர்தலில் மாநிலத்தின் 90 சதவீத முஸ்லீம் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்று சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மாநிலத்தில் ஆளும்கட்சியாக இருக்கும் பாஜக மீது மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது என்று மேலும் தெரிவித்தார்.

    தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் பட்சத்தில் முதல்வர் பதவியை யார் பெறுவது என்ற விஷயத்தில் சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே போட்டி நிலவி வருகிறது. இதுபற்றி சித்தராமையா கூறும் போது, எனக்கும் அவருக்கும் இடையே எவ்வித போட்டியும் இல்லை. யார் வேண்டுமானாலும் அந்த பதவிக்கு போட்டியிடலாம் என்று தெரிவித்தார். 

    • கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கேஎஸ் ஈஸ்வரப்பா விருப்பம் தெரிவித்து இருந்தார்.
    • ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் மந்திரி கேஎஸ் ஈஸ்வரப்பா தொகுதியில் மாற்று வேட்பாளர் போட்டியிடுகிறார்.

    கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்று இருக்கிறது. போட்டியிடுவோர் இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான கேஎஸ் ஈஸ்வரப்பா போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். எனினும், இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு மாற்று வேட்பாளர் இவரது தொகுதியில் போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்து இருந்தது. பாஜக-வின் இந்த முடிவை அடுத்து கேஎஸ் ஈஸ்வரப்பா ஏமாற்றம் அடைந்து இருந்த போதிலும், கட்சியின் முடிவை ஏற்றுக் கொண்டார்.

     

    இந்த நிலையில், பிரதமர் மோடி கேஎஸ் ஈஸ்வரப்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையிலும், கட்சி முடிவை ஏற்றுக் கொண்டதற்காக ஈஸ்வரப்பாவை பிரதமர் மோடி பாராட்டினார். மேலும் கட்சி மீது அவர் வைத்திருக்கும் விசுவாசத்தை பாராட்டினார்.

    "கட்சி மீது நீங்கள் வைத்திருக்கும் பொறுப்பை வெளிப்படுத்திவீட்டீர்கள். உங்களை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இதனால் தான் உங்களிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்தேன்," என்று பிரதமர் மோடி கேஎஸ் ஈஸ்வரப்பாவிடம் தெரிவித்தார். அடுத்த முறை கர்நாடகா வரும் போது நிச்சயம் உங்களை சந்திக்கிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

    "உங்களை போன்றே தலைவர் என்னை போன்ற சாதாரண பணியாளருக்கு அழைப்பு மேற்கொள்வது எனக்கு பெருமையாக இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பாஜக வெற்றிக்குத் தேவையான அனைத்து பணிகளையும் கட்டாயம் மேற்கொள்வேன்," என்று முன்னாள் மந்திரி கேஎஸ் ஈஸ்வரப்பா பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.

    • காங்கிரஸ் கட்சி இன்று 5-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
    • மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி இதுவரை மொத்தம் 220 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவடைய உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று ஐந்தாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 4 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    பா.ஜ.க. முதல் மந்திரி பசவராஜ் பொம்மை போட்டியிடும் ஷிகோன் தொகுதியில் போட்டியிட யாசிர் அகமது கான் பதானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி இதுவரை மொத்தம் 220 வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அசோக் கெலாட் உள்பட 40 நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. சச்சின் பைலட் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

    ×