என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்லாமியர்"

    • ஏராளமான மக்கள் பன் வாங்கி சாப்பிட்டு, அவருக்குத் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
    • அமைச்சர் நாரா லோகேஷ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன்

    தெலங்கானாவின் புகழ்பெற்ற மேதாரம் ஜாத்ரா திருவிழாவில் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமியரான ஷேக் ஷா வாலி, சாலையோரம் கடை அமைத்து 'கோவா பன்' விற்று வந்துள்ளார்

    அங்கு வந்த சில யூடியூபர்கள் அவரிடம், அந்த பன் பாதுகாப்பானதுதான் என்பதை நிரூபிக்க வாலியை கோவா பன்-ஐ சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். அவரின் அடையாளத்தை சரிபார்க்க ஆதார் அட்டையைக் கேட்டு வற்புறுத்திய அவர்கள், அவரின் வியாபாரத்தை 'உணவு ஜிகாத்' என குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ கண்டனத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ஏராளமான மக்கள் வாலியின் கடைக்குச் சென்று பன் வாங்கி சாப்பிட்டு, அவருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்தச் சம்பவத்தைக் கண்டித்த ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், "அன்புச் சகோதரர் வாலி அவர்களே, உங்களுக்கு நேர்ந்த இந்த கசப்பான அனுபவத்திற்கு நான் மிகவும் வருந்துகிறேன். சகோதரத்துவத்திற்கும் பரஸ்பர மரியாதைக்கும் பெயர் போன நமது தெலுங்கு சமூகத்தில் இத்தகைய பிரிவினைவாதப் போக்கிற்கு இடமில்லை.

    நான் விரைவில் உங்களைச் சந்தித்து, உங்கள் கைகளால் அந்தப் புகழ்பெற்ற 'கோவா பன்'-ஐ ருசிப்பேன். நாம் அனைவரும் உங்கள் பக்கம் நிற்கிறோம்." என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாரா லோகேஷ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அப்துல் சத்தார் மாட்டுக்கறி உண்பவர்.
    • அதனால்தான் நாங்கள் கோமியம் தெளித்து சுத்திகரித்தோம்.

    மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் சில்லோட் பகுதியில் ரஹிமாபாத் கிராமம் அமைந்துள்ளது.

    இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவசேனாவை சேர்ந்த சில்லோட் தொகுதியின் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான அப்துல் சத்தார் ரஹிமாபாத் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

    அப்துல் சத்தாரின் வருகைக்கு பாஜக மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அவர் சென்ற பிறகு, கோவிலின் புனிதத்தைக் காப்பதாகக் கூறி அவர்கள் கோவில் வளாகம் முழுவதும் கோமியம் தெளித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சில்லோட் நகர பாஜக தலைவர் மனோஜ் மொரல்லு இது குறித்துக் கூறுகையில், "அப்துல் சத்தார் மாட்டுக்கறி உண்பவர் என்பதால், அவர் கோவிலுக்குள் வந்தது அதன் புனிதத்தைக் கெடுத்துவிட்டது.

    அவர் முஸ்லிம்களையும் இந்துக்களையும் ஏமாற்றி வருகிறார். சமீபத்தில் ஹஜ் பயணம் சென்று வந்தவர், இப்போது கோவிலுக்கு வந்து நாடகமாடுகிறார். அதனால்தான் நாங்கள் கோமியம் தெளித்து சுத்திகரித்தோம்." என்று கூறினார்.  

    • இந்த மறுவாழ்வு மையம் கன்னியாஸ்திரிகளால் நடத்தப்பட்டு வருகிறது.
    • தான் இறந்த பின், இந்து வழக்கப்படி இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என்று அப்பெண் கோரியுள்ளார்.

    கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்த இந்து பெண்ணுக்கு இந்து முறைப்படி இஸ்லாமியர் இறுதி சடங்கு செய்த சம்பவம் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருவனந்தபுரம் கடினம்குளம் மறுவாழ்வு மையத்தில் சத்தீஸ்கரை சேர்ந்த ராக்கி என்ற 44 வயது பெண் சிகிச்சை பெற்று வந்தார். இந்த மறுவாழ்வு மையம் கன்னியாஸ்திரிகளால் நடத்தப்பட்டு வருகிறது.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராக்கி, தான் இறந்த பின், இந்து வழக்கப்படி இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

    உயிரிழந்த பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இஸ்லாமியரான சஃபீர் தானே முன்வந்து இந்து முறைப்படி அப்பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார்.

    இந்து பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு இஸ்லாம் மதம் எனக்கு தடையாக இருக்கவில்லை என்று சஃபீர் தெரிவித்தார்.

    சஃபீரின் இச்செயலுக்கு உள்ளூர் ஜமாத் மற்றும் கிராமத்தினர் பாராட்டி வருகின்றனர்.

    • இந்த உணவகம் ஜாம்நர் காவல் நிலையத்திற்கு சில மீட்டர்கள் தொலைவில் தான் உள்ளது.
    • திரும்பி வந்து பார்த்தபோது காயத்தால் கன்றிய அவர் மகனின் உயிரிழந்த உடலை மட்டுமே தந்தையால் காண முடிந்தது.

    மகாராஷ்டிர மாநிலம் ஜாலகான் மாவட்டத்தின் ஜாம்நர் பகுதியை சேர்ந்தவர் சுலைமான் ரஹீம் கான் (21 வயது).

    இவர் கடந்த திங்கள்கிழமை உள்ளூர் கபே ஒன்றில் மாற்று சமூகத்தை சேர்ந்த 17 வயது பெண்ணுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.

    இந்த கபே ஜாம்நர் காவல் நிலையத்திற்கு சில மீட்டர்கள் தொலைவில் தான் உள்ளது.

    இந்நிலையில் சுலைமானை நெருங்கிய 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை உணவகத்தில் இருந்து காருக்கு இழுத்துச் சென்று உள்ளே ஏற்றி, பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தி உள்ளது.

    பின்னர் மயக்கமடைந்த அவரை அவரின் வீட்டு வாசலில் கொண்டு வந்து போட்டுள்ளது. அப்போது அந்த கும்பலை தடுக்க முயன்ற சுலைமானின் தாய், சகோதரியை அந்த கும்பல் தாக்கிவிட்டு சென்றுள்ளது.

    சுலைமான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

    போலீசார் கூற்றுப்படி, சுலைமானை அந்த கும்பல் கட்டைகள் மற்றும் இரும்பக் கம்பிகளால் தாக்கியதில் அவரின் உள்ளுறுப்புகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

    12 ஆம் வகுப்பு முடித்த சுலைமான் போலீசில் சேர காத்திருந்தார். சம்பவத்தன்று அவரின் தந்தை போலீஸ் பணிக்கு விண்ணப்பிக்க சென்றிருக்கிறார்.

    திரும்பி வந்து பார்த்தபோது காயத்தால் கன்றிய அவர் மகனின் உயிரிழந்த உடலை மட்டுமே அவரால் காண முடிந்தது. சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீசார் அந்த கும்பலை தீவிரத்துடன் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. 

    • விவசாயிகள் தற்கொலை விகிதத்திற்குப் பெயர் பெற்றதாக மகாராஷ்டிராவின் விதர்பா பகுதி உள்ளது.
    • பெண்கள் உயர்கல்வி கற்பதை சமூகம் எதிர்த்தது.

    அதிக விவசாயிகள் தற்கொலை விகிதத்திற்குப் பெயர் பெற்ற மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் உள்ள வறண்ட மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட யவத்மால் மாவட்டம், இப்போது கொண்டாட்டங்களில் ஈடுபட ஒரு காரணம் கிடைத்துள்ளது.

    அங்குள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரின் மகள், 2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 142வது இடத்தைப் பிடித்து அசாதாரண சாதனை படைத்துள்ளார்.

    அந்த புத்திசாலிப் பெண்ணின் பெயர் அதீப் அனாம். இதன் மூலம், அதீப் தனது மாநிலத்திலிருந்து மதிப்புமிக்க இந்திய நிர்வாகப் பணியில் சேர்ந்த முதல் முஸ்லிம் பெண்மணி ஆனார்.

    "பெண்கள் உயர்கல்வி கற்பதை சமூகம் எதிர்த்தது. அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் இலக்கில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் என் தந்தை என்னிடம் கூறினார்" என்று அதீப் அனாம் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். 

    • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக நர்க்கீஸ்கான் என்ற இஸ்லாமியர் நியமிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது.
    • இது தவறான தகவல் என்று நர்க்கீஸ்கான் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டார்.

    தஞ்சை மாவட்டம் ரெகுநாதபுரம் பிரசன்ன ராஜகோபாலசாமி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக நர்க்கீஸ்கான் என்ற இஸ்லாமியர் நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது.

    இது தவறான தகவல் என்று நர்க்கீஸ்கான் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டார். அதில், தான் ஒரு இஸ்லாமியர் இல்லை எனவும், தான் பிறக்கும் போது பிரசவம் பார்த்த மருத்துவர் நர்க்கீஸ்கான் பெயரை தாயார் தமக்கு சூட்டியதாகவும் அவர் விளக்கமளித்தார்.

    இந்நிலையில், இந்து கோயிலில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நர்க்கீஸ்கானை நியமித்துள்ளதாக தவறான தகவலைப் பதிவிட்ட விஸ்வ இந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சரவணகார்த்தியை போலீசார் கைது செய்துள்ளனர். கோயில் அறங்காவலர் நர்க்கீஸ்கான் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • சாஹூர் (ரம்ஜான் நோன்புக்கு முன் முஸ்லிம்கள் சாப்பிடும் அதிகாலை உணவு) சாப்பிட காத்துக்கொண்டு நின்றார்.
    • கட்டாவுடன் இருந்த மற்றொரு நபர் ஓடிவிட்டார்.

    உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர் ஒருவர் அதிகாலையில் வீட்டு வசாலில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    அலிகரின் ரோராவரில் உள்ள தெலிபாடாவில் வசிப்பவர் ஹரிஸ் என்ற கட்டா (25 வயது). வெள்ளிக்கிழமை இரவு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு தனது வீட்டுக்கு வந்த கட்டா அதிகாலை 3.15 மணியளவில் தனது வீட்டின் அருகே சேஹ்ரி (சஹுர்) (ரம்ஜான் நோன்புக்கு முன் முஸ்லிம்கள் சாப்பிடும் அதிகாலை உணவு) சாப்பிட காத்துகொண்டு நின்றார். மற்றொரு நபர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த கட்டாவை நோக்கி இரண்டு பைக்குகளில் வந்த நால்வர் வந்தனர்.

    அவர்களில் ஒருவன் கட்டா மீது துப்பாக்கிசூடு நடத்தினான். இதில் கட்டா சரிந்து கீழே விழுந்தார். கட்டாவுடன் இருந்த மற்றொரு நபர் ஓடிவிட்டார். தொடர்ந்து, பைக்கில் இருந்து இறங்கிய மற்றொருவன் கட்டா இறந்துவிட்டதை உறுதி செய்ய மேலும் பல முறை அவரை நோக்கி சுட்டான். பின் நால்வரும் பைக்கில் ஏறி தப்பினர். அவர்களை மற்றொரு நபர் துரத்திக்கொண்டு ஓடினார்.

    இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியது.  இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    • இன்ஸ்டாகிராமில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை விதைக்கும் வகையில் புகைப்படம் பதிவிட்டிருந்தார்.
    • ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் யாஸ் தயாள் இடம் பெற்றிருந்தார்.

    ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் யாஸ் தயாள் இடம் பெற்றிருந்தார். இவர் இன்ஸ்டாகிராமில் இஸ்லாமியர்களுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பும் வகையில் புகைப்படம் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் யாஷ் தயாளை கடுமையாக விமர்சித்தனர்.

    அந்த பதிவில் இஸ்லாமியர் ஆண்கள் இந்து பெண்களை குறிவைத்து திருமணம் செய்து அவர்களை கொலை செய்வது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் லவ் ஜிகாத் என்று வார்த்தையையும் பயன்படுத்தியுள்ளார். இது ரசிகர்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிய யாஷ் தயாள், மன்னிக்கவும். அந்தப் புகைப்படத்தை தவறுதலாக பதிவிட்டுவிட்டேன். வெறுப்பை பரப்ப வேண்டாம். அனைத்து மதம் மற்றும் சமூகம் மீதும் எனக்கு மரியாதை இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

     

    இஸ்லாமியர்களுக்கு எதிராக யாஷ் தயாள் வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விட்டுக் கொடுத்து குஜராத் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தவர் தான் இந்த யாஷ் தயாள். 

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடியையே மட்டுமே மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.
    • ரங்கசாமி பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவையில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2014 முதல் பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு நலத்திட்டங்களால் அனைத்துத் தரப்பினரும் பயனடைந்துள்ளனர். முத்ரா கடனுதவித் திட்டம், மருத்துவ காப்பீடுத் திட்டங்களால் கோடிக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர். மத்திய அரசின் திட்டங்களால் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அனைத்துத் தரப்பினரும் பயனடைந்து வருவதால் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வே அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராவார்.

    உலக அளவில் புகழ் பெற்ற தலைவராக அவர் உள்ளார். அவருக்கு நிகரான தலைவராக ராகுல்காந்தி இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடியையே மட்டுமே மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.

    அவரை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளில் அனைத்துக்கட்சித் தலைவர்களுமே தங்களை பிரதமராக எண்ணிக்கொள்கின்றனர்.

    புதுச்சேரியில் இலவச கியாஸ் இணைப்பு திட்டம், காப்பீடு திட்டங்களில் தலா 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். பா.ஜ.க.வுடன் இணைந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ஏராளமானோர் கோரிக்கை வைக்கின்றனர். தமிழகத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். நாட்டில் பலரும் கோரி வருகின்றனர்.

    எனவே அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. அந்த சட்டம் அனைவருக்கும் பொதுவானது.

    எனவே அச்சட்டம் குறித்து இஸ்லாமியர்கள் உட்பட யாரும் அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி ராம குருவாயூரப்பன் நகரில் மகா கணபதி திருக்கோவில் கட்டப்பட்டு வந்தது.
    • இஸ்லாமிய மக்கள் மகாகணபதி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூ, பழம், இனிப்புகள் உள்ளிட்ட சீர் வரிசைகள் அடங்கிய தட்டுக்களுடன் ஊர்வலமாக வந்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி ராம குருவாயூரப்பன் நகரில் மகா கணபதி திருக்கோவில் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் திருப்பணிகள் முடிவுற்று இன்று காலை மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

    இந்த நிலையில் அங்கு வசிக்கும் இஸ்லாமிய மக்கள் மகாகணபதி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூ, பழம், இனிப்புகள் உள்ளிட்ட சீர் வரிசைகள் அடங்கிய தட்டுக்களுடன் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலமாக வந்த இஸ்லாமிய மக்களை மகாகணபதி கோவில் முன்பு அவர்களை வரவேற்று பெண்கள் ஆரத்தி எடுத்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

    மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அங்கிருந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது :- பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். இந்து கோவில்களின் திருவிழாவின் போது இஸ்லாமியர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும், அதேபோல் இஸ்லாமியர்களின் மசூதி திறப்பு விழா மற்றும் பெரு நாட்களுக்கு இந்துக்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும் பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது.

    மதங்களை கடந்து மனித நேயத்தை தொடர்ந்து போற்றி வருகின்றோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது
    • ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு, பட்டாசு வழங்கப்பட்டது

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மொபைல் கடை நடத்தி வருபவர் ஹபிபுல்லா. சமூக ஆர்வலர்.

    இவர் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு தன்னால் முடிந்த உதவியும், சமூக வலைதளம் மூலம் நண்பர்கள் உதவியுடன் சாலையோரம் வசிக்கும் எளியவர்களுக்கு உணவு, உடை வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் ஹபிபுல்லா தீபாவ ளியை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி ஸ்ரீராக வேந்திரர் பிருந்தாவனத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு பட்டாசு வழங்கினார்.

    கோவில் நிறுவனர் ஜெகதீ சன் நகர்மன்ற உறுப்பினர் தேவி சீராளன், சமூக செயற்பாட்டாளர் சீராளன் கோவில் அர்ச்சகர் அச்சிதராவ் உள்ளிட்டோர் ஹபிபுல்லாவிற்கு தீபாவளி வாழ்த்துகளை கூறி ஸ்ரீராகவேந்திரர் படத்தை வழங்கினர்.

    • இஸ்லாமியத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மா நாளாக (சபை நாள்) அனுசரிக்கப்படுகிறது.
    • இதே நிலை தான் தமிழகத்திலும் உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி, வெள்ளிக்கிழமை ஆகும்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கேரளாவில் 26-ந்தேதியும் நடக்கிறது. இந்த 2 நாட்களும் வெள்ளிக்கிழமை என்பதால், இஸ்லாமிய மக்கள் வாக்களிக்க சிரமத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து நிலவி வருகிறது.

    இது தொடர்பாக இந்திய முஸ்லிம் லீக் கேரள மாநில பொதுச்செயலாளர் பி.எம்.ஏ.சலாம் கூறியதாவது:-

    கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆகும். இஸ்லாமியத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மா நாளாக (சபை நாள்) அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் முஸ்லிம்கள், நமாஸ் (பிரார்த்தனை) செய்ய மசூதிகளுக்கு செல்வார்கள். அந்த நாளில் வாக்குப்பதிவு வைத்திருப்பது இஸ்லாமிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இதே நிலை தான் தமிழகத்திலும் உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி, வெள்ளிக்கிழமை ஆகும்.

    இந்த நாள் இஸ்லாமிய நம்பிக்கையை பின்பற்றும் வாக்காளர்கள், தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இடையூறாக இருக்கும். இதுகுறித்து உடனடியாக தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இதனை மறுபரிசீலனை செய்ய அவர்கள் தயாராக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×