என் மலர்
இந்தியா

தோழியுடன் பேசிக்கொண்டிருந்த இஸ்லாமிய இளைஞரை அடித்துக் கொன்ற 'கும்பல்' - தாய், சகோதரி மீதும் தாக்குதல்
- இந்த உணவகம் ஜாம்நர் காவல் நிலையத்திற்கு சில மீட்டர்கள் தொலைவில் தான் உள்ளது.
- திரும்பி வந்து பார்த்தபோது காயத்தால் கன்றிய அவர் மகனின் உயிரிழந்த உடலை மட்டுமே தந்தையால் காண முடிந்தது.
மகாராஷ்டிர மாநிலம் ஜாலகான் மாவட்டத்தின் ஜாம்நர் பகுதியை சேர்ந்தவர் சுலைமான் ரஹீம் கான் (21 வயது).
இவர் கடந்த திங்கள்கிழமை உள்ளூர் கபே ஒன்றில் மாற்று சமூகத்தை சேர்ந்த 17 வயது பெண்ணுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.
இந்த கபே ஜாம்நர் காவல் நிலையத்திற்கு சில மீட்டர்கள் தொலைவில் தான் உள்ளது.
இந்நிலையில் சுலைமானை நெருங்கிய 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை உணவகத்தில் இருந்து காருக்கு இழுத்துச் சென்று உள்ளே ஏற்றி, பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தி உள்ளது.
பின்னர் மயக்கமடைந்த அவரை அவரின் வீட்டு வாசலில் கொண்டு வந்து போட்டுள்ளது. அப்போது அந்த கும்பலை தடுக்க முயன்ற சுலைமானின் தாய், சகோதரியை அந்த கும்பல் தாக்கிவிட்டு சென்றுள்ளது.
சுலைமான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
போலீசார் கூற்றுப்படி, சுலைமானை அந்த கும்பல் கட்டைகள் மற்றும் இரும்பக் கம்பிகளால் தாக்கியதில் அவரின் உள்ளுறுப்புகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு முடித்த சுலைமான் போலீசில் சேர காத்திருந்தார். சம்பவத்தன்று அவரின் தந்தை போலீஸ் பணிக்கு விண்ணப்பிக்க சென்றிருக்கிறார்.
திரும்பி வந்து பார்த்தபோது காயத்தால் கன்றிய அவர் மகனின் உயிரிழந்த உடலை மட்டுமே அவரால் காண முடிந்தது. சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீசார் அந்த கும்பலை தீவிரத்துடன் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.






