search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து சமய அறநிலையத்துறை"

    • பக்தர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போதும், விதிமீறல்கள் நடக்கும்போதும் தான் இந்து சமய அறநிலையத்துறை தலையிடுகிறது.
    • சிதம்பரம் கோவில் தீட்சிதர்களிடம் துறை ஒப்படைக்கும்போது வைப்பு நிதியாக ரூ.3.5 கோடியாக இருந்தது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆணையர் அலுவலகத்தில் துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணிமுன்னேற்றம் குறித்த சீராய்வுக்கூட்டம் நடை பெற்றது.

    பின்னர் அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 2 ஆண்டுகளில் 812 கோவில்களில் குடமுழுக்குகள் நடை பெற்றுள்ளதோடு, ரூ.4,754 கோடி மதிப்பீட்டிலான 5,060 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

    சிதம்பரம் கோவிலை பொறுத்தவரை தீட்சிதர்கள் தாக்குதல் நடத்தியது அத்துமீறல் இல்லையா? கொரோனா காலத்திற்கு பின்பும் கனக சபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி மறுத்த நிலையில் உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய நிலையிலே அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    பின்னரும் கனசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது அத்துமீறல் இல்லையா? இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி தான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. எதிலும் சட்ட மீறல் இல்லை. அது தீட்சிதர்களிடம் தான் உள்ளது. சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் விஷயத்தில் எந்த விளைவுகளையும் சந்திக்க அரசு தயங்காது, எங்கள் இயக்கமும் தயங்காது. பக்தர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போதும், விதிமீறல்கள் நடக்கும்போதும் தான் இந்து சமய அறநிலையத்துறை தலையிடுகிறது.

    சிதம்பரம் கோவில் தீட்சிதர்களிடம் துறை ஒப்படைக்கும்போது வைப்பு நிதியாக ரூ.3.5 கோடியாக இருந்தது. தற்போது எவ்வளவு நிதி உள்ளது என்பதனை கூற தீட்சிதர்கள் மறுக்கிறார்கள். கோவிலுக்கு சொந்தமான நிலங்களின் மூலம் கிடைக்கும் வருவாயை வசூலிக்க தனி வட்டாட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ரூ.6.36 லட்சம் வருவாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கட்டளைகள் மற்றும் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு எழுதிவைத்தி ருக்கின்ற இடங்களில் இருந்து வருகின்ற வருமானங்களும் கோவிலுக்கு செலுத்தப்படுகின்றன. இந்த வருவாயில் இருந்துதான் அந்த கோயிலின் மின்சார கட்டணம் செலுத்தப்படுகிறது.

    சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் பணிகள், நடவடிக்கைகள் நியாயப்படி செல்லுகின்ற பொழுது அதில் இந்து சமய அறநிலைத்துறை தலையிடுவதற்கு ஒன்றுமே இல்லை. அவர்களின் செயல்கள், பணிகள் அனைத்தும் அத்து மீறுகின்றபோதும், அடாவடித்தனங்கள் நிகழ்கின்ற போதும், பக்தர்களை துன்புறுத்து கின்றபோதும் நாங்கள் தலையிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இந்த நிலை தொடர்ந்தால் திருக்கோயிலை துறை மீட்பது குறித்து பரீசிலிக்கப்படும்.

    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் திருப்பணிகளை மேற்கொண்டு குட முழுக்குகளை நடத்திட மாதந்தோறும் இருமுறை மாநில அளவிலான வல்லுநர் குழு கூடி அனுமதி வழங்கி வருகிறது. அப்படி வழங்கப்பட்ட அனுமதிகளின் அடிப்படையில் பணிகளை துரிதப்படுத்துவதற்கு மாதந்தோறும் சீராய்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திட அறங்காவலர் குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அக்கோயிலுக்கு மாற்று மலைப்பாதை, திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளை மேம்படுத்துதல் தொடர்பா கவும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

    அதேபோல திருச்செந்தூர் கோவில் எச்.சி.எல் நிறுவனத்தின் மூலம் ரூ.200 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடை பெற்று வருகின்றன. திருக்கோயில் நிதி ரூ.100 கோடியில் பணிகளை மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அப்பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமய அறநிலைய துறையினர் சரிவர கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
    • அது குறித்து கேட்டால். கேள்வி கேட்கும் நபர்களை சிலர் கூட்டாக சேர்ந்து அடித்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே எலவடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள புற்று மாரியம்மன் கோவில் கடந்த 10 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மாரியம்மன் கோவிலுக்கு உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் வேண்டுதலின் பெயரில் சாமிக்கு தங்க நகைகள் நன்கொடையாக பல ஆண்டுகளாக செலுத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.இந்தக் கோவிலை இந்து சமய அறநிலைய துறையினர் சரிவர கண்டு கொள்ளாமல் இருப்பதால் இந்த கோவி லுக்கு அறங்காவலர்கள் போன்று செயல்படும் சிலர் அந்த கோவிலுக்கு வந்து சேர்ந்த தங்கத்திலான தாலி, தாலிக்கொடி, ஒட்டியானம் போன்ற நகைகளை வெளியில் எடுத்துச் சென்று விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ரூ.9 லட்சத்திற்கு கோவில் நகைகள் விற்கப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.

    இப்படி இந்த கோவில் நிர்வாகத்தில் சிலர் தலையிட்டு முறைகேடு செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதைக் கண்ட சிலர் அது குறித்து கேட்டால். கேள்வி கேட்கும் நபர்களை சிலர் கூட்டாக சேர்ந்து அடித்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. அந்த நபர்கள் கோவில் உண்டியலில் சேரும் ரொக்க பணம் மற்றும் கோவில் நிலம் ஆகியவற்றையும் முறைகேடாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றால் அவர்கள் இது குறித்து கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக சிலர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து சின்னசேலம் வட்ட இந்து சமய அறநிலைய த்துறையினரிடம் கேட்டபோது சின்னசேலம் வட்டத்தில் 145 கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது அவைகளை கண்காணித்து நிர்வகிக்க சிரமமாக உள்ளது என கூறி வருகின்றனர். எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி நிர்வாகம் தலையிட்டு எலவடி கிராமத்தில் புற்று மாரியம்மன் கோவிலில் நடைபெறும் முறைகேடுகளை கண்டுபிடித்து கோவில் உடைமைகளை மீண்டும் கோவிலுக்கே வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • 100-க்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்ற பேரணி, கோவிலின் பிரதான வாயிலில் தொடங்கி நகரின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்தது.
    • மாலையில் உலக நலனுக்காக திருமுறை பாராயணம் பாடுதல், அடியார்கள் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    சென்னை:

    சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் சார்பில் 251-வது உழவாரப்பணி மற்றும் விழிப்புணர்வு பேரணி திருப்போரூர் கந்தசாமி கோவிலில் நடைபெற்றது. 100-க்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்ற பேரணி, கோவிலின் பிரதான வாயிலில் தொடங்கி நகரின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்தது.

    அப்போது, ஆலயங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துணிப்பை இலவசமாக வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் கந்தசாமி கோவில் அருகில் உள்ள குளம் மட்டுமின்றி மலைக் கோவில் கைலாசநாதர் கோவில், சிதம்பர சுவாமிகள் திருமடம், விநாயகர் கோவில் உள்ளிட்ட இடங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாலையில் உலக நலனுக்காக திருமுறை பாராயணம் பாடுதல், அடியார்கள் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் தியாகராஜன் ஒத்துழைப்புடன், இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்ற தலைவர் ச.கணேசன் செய்திருந்தார்.

    • இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மண்டல அளவிலான சீராய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • ஒருகால பூஜைத்திட்ட கோவில்கள், மருத்துவ மையங்கள், நூலகங்கள், பணியாளர்களின் நலன் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.

    சென்னை:

    இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மண்டல அளவிலான சீராய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் 2021-2022 மற்றும் 2022-2023 சட்டமன்ற அறிவிப்புகளின்படி நடைபெற்று வரும் பணிகள், உபயதாரர் நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், திருக்குளங்கள் சீரமைப்பு, திருத்தேர் புனரமைப்பு, பெருந்திட்ட வளாக பணிகள், 1,000 ஆண்டுகள் பழமையான கோவில்களை தொன்மை மாறாமல் புனரமைத்தல், கோவில் நந்தவனங்களை பராமரித்தல், கோவில் யானைகள் பராமரிப்பு, அன்னதானத் திட்டம், பசுக்கள் காப்பகம் பராமரிப்பு, உலோக திருமேனி பாதுகாப்பு மையம் கட்டுமானப் பணிகள், திருத்தேர் கொட்டகை அமைத்தல், கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்தல், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து பாதுகாக்கும் பணிகள், கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கான வாடகை வசூல், சூரிய மின் விளக்குகள் பொருத்துதல், இடிதாங்கி அமைத்தல், அஞ்சல் வழி பிரசாதம் அனுப்புதல், ஒருகால பூஜைத்திட்ட கோவில்கள், மருத்துவ மையங்கள், நூலகங்கள், பணியாளர்களின் நலன் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.

    நிறைவாக அமைச்சர் சட்டமன்ற அறிவிப்புகளின்படி நிறைவேற்றப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடித்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் தங்களது நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

    • கோவிலுக்கு சொந்தமான 2122.10 ஏக்கர் நிலங்களுக்கு கோவில் பெயரிலேயே பட்டா பெறப்பட்டு உள்ளது.
    • வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலுக்குச் சொந்தமான இதர நிலங்களுக்கும் கோவில் பெயரிலேயே பட்டா பெறுவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்து சமய அறநிலையத்துறையின் நீண்ட கால சட்டப்பேராட்டங்களுக்கு பின்னர் வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அகஸ்தியம் பள்ளி கிராமத்தை சேர்ந்த 2,122.10 ஏக்கர் நிலம் தொடர்பாக கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கப்பெற்று உள்ளது.

    இத்தீர்ப்பின் அடிப்படையில் இந்த நிலங்களுக்கு பட்டா பெற நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் கோவில் செயல் அலுவலரால் விண்ணப்பிக்கப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு கோவிலுக்கு சொந்தமான 2122.10 ஏக்கர் நிலங்களுக்கு கோவில் பெயரிலேயே பட்டா பெறப்பட்டு உள்ளது.

    மேலும், வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலுக்குச் சொந்தமான இதர நிலங்களுக்கும் கோவில் பெயரிலேயே பட்டா பெறுவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஒட்டுமொத்தமாக, கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் எங்கிருந்தாலும் அவற்றை கண்டறிந்து கோவிலுக்கு ஒப்படைக்கும் பணிகளில் அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் உறுதுணையாய் செயலாற்றும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பக்தர்களின் விருப்பப்படி 48 முதுநிலை கோவில்களின் பிரசாதங்களை அவர்களின் இல்லங்களுக்கே அஞ்சல் துறையின் மூலம் அனுப்பி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    • இந்தியா முழுவதும் உள்ளவர்கள் கோவில் பிரசாதங்களை பெறுவதற்கு பிரசாதத்திற்குரிய கட்டணம் மற்றும் அஞ்சல் தொகை மட்டுமே வசூலிக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களின் தகவல்கள், சேவைகளை பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் 'திருக்கோவில்' என்ற பெயரில் செல்போன் செயலி உருவாக்கப்பட்டது.

    48 முதுநிலை கோவில்களின் பிரசாதங்கள் பக்தர்களின் வீடுகளுக்கு தபால் துறை மூலம் அனுப்பி வைக்கும் திட்டமும் தயாரிக்கப்பட்டது.

    இந்த 2 திட்டங்களையும் இந்து சமய அறநிலையத்தறை கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    'திருக்கோவில்' செயலியின் மூலம் கோவில்களின் தலபுராணம், தலவரலாறு, நடை திறந்திருக்கும் நேரம், பூஜைகள், பிரார்த்தனைகள், அதற்கான கட்டண விவரங்கள், முக்கிய திருவிழாக்கள், அனைத்து கோணங்களிலும் கோவில்களை கண்டுகளிக்கும் மெய்நிகர் காணொலி, திருவிழாக்களின் நேரலை, கோவில்களை சென்றடைவதற்கான கூகுள் வழிகாட்டி, பக்தர்களுக்கான சேவைகள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். அன்னதானம், திருப்பணி போன்ற நன்கொடைகளையும் இந்த செயலி மூலம் வழங்கலாம்.

    மேலும், தேவாரம், திருவாசகம், திருமுறைகள், நாலாயிர திவ்யபிரபந்தம் போன்றவை முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. இதனை பக்தர்கள் கேட்டு மனநிறைவு பெறலாம். இந்த செயலியில் முதற்கட்டமாக, பிரசித்தி பெற்ற 50 முதுநிலை கோவில்கள் இடம் பெற்றுள்ளன. படிப்படியாக மற்ற கோவில்களின் விவரங்களும் இணைக்கப்படும்.

    பக்தர்களின் விருப்பப்படி 48 முதுநிலை கோவில்களின் பிரசாதங்களை அவர்களின் இல்லங்களுக்கே அஞ்சல் துறையின் மூலம் அனுப்பி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவிலின் பிரசாதம் காஷ்மீரில் இருப்பவர்களுக்கு சென்றடைகின்ற ஒரு நல்ல சூழ்நிலையை செயல்படுத்தி இருக்கின்றோம்.

    இந்தியா முழுவதும் உள்ளவர்கள் கோவில் பிரசாதங்களை பெறுவதற்கு பிரசாதத்திற்குரிய கட்டணம் மற்றும் அஞ்சல் தொகை மட்டுமே வசூலிக்கப்படும். அடுத்த கட்டமாக, 3 மாத காலத்திற்குள் உலகம் முழுவதும் கோவில் பிரசாதங்களை அனுப்பி வைக்கும் நடைமுறை செயல்படுத்தப்படும்.

    திருச்செந்தூர் உள்பட அனைத்து கோவில்களிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை முழுமையாக தடுக்கின்ற முயற்சிகளை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து வருகிறது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தளவில் எங்களது ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றோம். கோர்ட்டுக்கு செல்வதாக அந்த கோவிலின் வக்கீல்கள் தெரிவித்துள்ளதால் அங்கு நம்முடைய நிலைப்பாட்டை எடுத்து சொல்லலாம் என்று காத்திருக்கிறோம்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தளவில் அங்கு என்னென்ன முறைகேடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவோ அவைகளையெல்லாம் சேகரித்துக் கொண்டு வருகிறோம். உரிய நேரத்தில் நிச்சயமாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் மணிவாசன், சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் இயக்குநர் (தலைமையிடம்) ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சித்தர் முத்துக்குமாரசுவாமி 300 ஆண்டுகளுக்கு முன் நவகண்டம் கொடுத்து ஜீவ சமாதி அடைந்த ஜீவ பிருந்தாவனம் உள்ளது.
    • செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, அமாவாசை, பவுர்ணமியன்று சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெற்று வருகிறது.

     அவினாசி :

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சேவூர் சித்தர் முத்துக்குமாரசாமி ஜீவ பிருந்தாவனத்தின் பராமரிப்பாளரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான காந்தி என்கிற வே.சுப்பிரமணியன் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- காஞ்சிபுரத்தை சேர்ந்த சித்தர் முத்துக்குமாரசுவாமி 300 ஆண்டுகளுக்கு முன் நவகண்டம் கொடுத்து ஜீவ சமாதி அடைந்த ஜீவ பிருந்தாவனம் சேவூர் வடக்கு வீதி முசாபுரி தோட்டத்தில் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஜீவசமாதியை புனரமைத்து அனைத்து சமுதாயத்தினரின் பங்களிப்போடு கிரானைட் தரைத் தளம், பிரதான மண்டபம், முன் மண்டபம், மின் வசதி, குடிநீர் வசதி ஆகிய வசதிகள் செய்யப்பட்டு, நெடுஞ்சாலை துறையின் அனுமதியோடு கம்பிவேலியும் அமைக்கப்பட்டது. தற்போது அனைத்தும் சமுதாயத்தினரும் நாள்தோறும் வழிபாடு, தியானம் செய்யும் அமைதியான இடமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, அமாவாசை, பவுர்ணமியன்று சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெற்று வருகிறது.

    ஜீவசமாதி அனைவருக்கும் அனைத்து குழுவினருக்கும் சொந்தமானது. இந்த ஜீவசமாதி இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அழகுநாச்சி அம்மன் கோவில் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டது. ஜீவ பிருந்தாவனத்தை, அழகு நாச்சியம்மன் திருக்கோவிலுக்கு உள்பட்டதாக சேர்க்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • முத்துக்குமார சுவாமி கோவிலுடன் இணைந்த சாமுண்டீஸ்வரி அறக்கட்டளைக்கு சொந்தமாக தம்புசெட்டி தெருவில் 2,652 சதுரடி கட்டிடம் அமைந்துள்ளது.
    • கட்டிடத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவமனை இயங்கி வந்தது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படியும், அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    அதன்படி இன்று (சனிக்கிழமை) சென்னை, கந்தக் கோட்டம் முத்துக்குமார சுவாமி கோவிலுடன் இணைந்த சாமுண்டீஸ்வரி அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பீட்டிலான கட்டிடம் மீட்கப்பட்டு கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டு உள்ளது.

    சென்னை, கந்தக்கோட் டம் முத்துக்குமார சுவாமி கோவிலுடன் இணைந்த சாமுண்டீஸ்வரி அறக்கட்டளைக்கு சொந்தமாக தம்புசெட்டி தெருவில் 2,652 சதுரடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவமனை இயங்கி வந்தது.

    மனிஷ் பி.ஷா என்பவர் இக்கட்டிடத்தை ஆக்கிர மிப்பு செய்து மருத்துவ பயன்பாட்டை சிதைத்து 12 நபர்களுக்கு உள்வாடகைக்கு விட்டு லாபம் அடைந்து வந்தார்.

    இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் மேல்முறையீட்டு உத்தரவின்படி, சென்னை மாவட்ட உதவி ஆணையர் எம். பாஸ்கரனால் காவல் துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் இன்று மேற்படி கட்டிடம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.10 கோடியாகும்.

    இந்நிகழ்வின்போது வட்டாட்சியர் (ஆலய நிர்வாகம்) திருவேங்கடம், கோவில் செயல் அலுவலர் நற்சோணை மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் நிரந்தர முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
    • திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் முடி காணிக்கைக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா என பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநில இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 610 கோவில்களில் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் நிரந்தர முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    அதன் அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்களும் மாதம் ரூ.20,000 வரை சம்பளம் பெறும் வகையில் முடி காணிக்கை கட்டணம் ரூ.25 ல் இருந்து 40 ரூபாயாக உயர்த்தி இந்து சமய அறநிலையத்துறை தலைமை செயலாளர் ஹரி ஜவஹர்லால் உத்தரவு பிறப்பித்து உள்ளார். முடி காணிக்கை மற்றும் முடி விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை கோவிலில் வேலை செய்யும் பூசாரிகள் மற்றும் முடி காணிக்கை செலுத்துபவர்களுக்கு பிரித்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக மொட்டை அடிக்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முடி காணிக்கைக்கு கட்டணம் வசூலிப்பது போல் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் கட்டணம் வசூலிக்கப்படுமா என பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    • வசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் புகார் கடிதமும் அனுப்பியுள்ளார்.
    • மக்கள் நலப்பணி வழங்குவதாக திட்டங்களை அறிவித்துள்ளது.

    திருப்பூர் :

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இந்திய ஜனாதிபதி, மத்திய கலாச்சாரம், பாரம்பரிய மற்றும் தொல்லியல்துறை அமைச்சகத்திற்கும் புகார் கடிதமும் அனுப்பியு ள்ளார் அதில் அவர் கூறியிரு ப்பதாவது:-

    இந்து சமய அறநிலை யதுறை தொடர்ச்சி யாக இந்து திருக்கோ யிலில் உள்ள தங்கத்தையும், சொத்து ககளையும், மக்கள் நலப்பணி வழங்குவதாக திட்டங்களை அறிவித்து ள்ளது இதற்கு சிவசேனா வரவேற்கிறது. ஆனால் அரசு சட்டசபையில் நிதி ஒதுக்க வேண்டுமே தவிர., "கடைத்தே ங்காய் எடுத்து வழிபிள்ளை யாருக்கு உடைப்பது" போல் இந்து சமய அறநிலைய துறை சொத்து க்களை தானமாக வழங்குவது கண்டனத்து க்குரியது மேலும் இந்து சமய அறநிலைய சொத்துக்கள், உடமைகளை திருக்கோயில் மேம்பாடுசெய்யவும்., புணரமைக்கவும்., மட்டுமே செலவு செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்

    அதேநேரத்தில் மத்திய கலாச்சாரம், பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் கிஷான் ரெட்டிக்கு தமிழக சிவசேனா கட்சி சார்பில் தொலைபேசி, வாட்ஸ்அப், இமெயில் மூலமாகவும் தொடர்பு கொண்டு இதுசம்பந்தமாக நடவடிக்க எடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

    • திருக்கோவில்கள் சார்பில் நடத்தப்படும் திருமணங்களுக்கான திட்டச் செலவினத் தொகையை ரூ. 50 ஆயிரமாக உயர்த்தி ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • கோவில்களின் சார்பில் 31 ஜோடிகளுக்கும், இதர இணை ஆணையர் மண்டலங்களில் 186 ஜோடிகளுக்கும் ஆக மொத்தம் 217 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    2022-2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், "ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 ஜோடிகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு கோவில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவினத்தைத் கோவில்களே ஏற்கும்" என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 4.12.2022 அன்று முதற்கட்டமாக திருவான்மியூரில் சென்னை மண்டலங்களை சேர்ந்த கோவில்களின் சார்பில் 31 ஜோடிகளுக்கும், இதர இணை ஆணையர் மண்டலங்களில் 186 ஜோடிகளுக்கும் ஆக மொத்தம் 217 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக, நேற்று 19 இணை ஆணையர் மண்டலங்களைச் சேர்ந்த கோவில்களின் சார்பில் 161 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்களுக்கு 4 கிராம் திருமாங்கல்யத்துடன் பட்டு வேட்டி, சட்டை மற்றும் பட்டுப் புடவை, சீர்வரிசைப் பொருட்களாக பீரோ, கட்டில், மெத்தை, தலையணைகள், பாய், கைக்கடிகாரங்கள், மிக்ஸி, சமையல் பாத்திரங்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மண்டல இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    2-ம் கட்டத்தில் வேலூர் மண்டலத்தில் 12 ஜோடி களுக்கும், சேலம் மண்ட லத்தில் 17 ஜோடிகளுக்கும், கோயம்புத்தூர் மண்ட லத்தில் 8 ஜோடிகளுக்கும், தஞ்சாவூர் மண்டலத்தில் 17 ஜோடிகளுக்கும், மயிலாடு துறை மண்டலத்தில் 3 ஜோடிகளுக்கும், விழுப்பு ரம் மண்டலத்தில் 4 ஜோடி களுக்கும், திருச்சி மண்ட லத்தில் 9 ஜோடிகளுக்கும், மதுரை மண்டலத்தில் 5 ஜோடிகளுக்கும், சிவகங்கை மண்டலத்தில் 12 ஜோடிகளுக்கும், திருநெல் வேலி மண்டலத்தில் 3 ஜோடிகளுக்கும், காஞ்சிபுரம் மண்டலத்தில் 8 ஜோடிகளுக்கும், ஈரோடு மண்டலத்தில் 2 ஜோடி களுக்கும், திருப்பூர் மண்ட லத்தில் 13 ஜோடிகளுக்கும், திருவண்ணாமலை மண்ட லத்தில் 13 ஜோடிகளுக்கும், கடலூர் மண்டலத்தில் 10 ஜோடிகளுக்கும், தூத்துக்குடி மண்டலத்தில் 9 ஜோடிகளுக்கும், திண்டுக்கல் மண்டலத்தில் 16 ஜோடி களுக்கும் ஆக மொத்தம் 161 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. இதுவரை முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் திருக்கோவில்களின் சார்பில் 378 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

    திருக்கோவில்கள் சார்பில் நடத்தப்படும் திருமணங்களுக்கான திட்டச் செலவினத் தொகையை ரூ. 50 ஆயிரமாக உயர்த்தி ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20,000லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்துள்ளது.
    • திட்ட விவரப்படி திருக்கோயில் நிதிமூலம் செலவினம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்குமாறு ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:

    இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20,000/-லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி நிர்ணயம் செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது.

    1. அரசாணையில் திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவினை ரூ.15,000லிருந்து ரூ.20,000 ஆக உயர்வு செய்தும், ஆண்டுதோறும் ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஏழை எளிய இணைகள் வீதம் 20 மண்டலங்களில் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணம் நடத்தவும் இதற்கு தேவைப்படும் மொத்த செலவின தொகை ரூ.1,00,00,000 திருக்கோயில் நிதி மூலம் மேற்கொள்ளவும் ஆணையிடப்பட்டது.

    2. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், 04.12.2022 அன்று சென்னை-1 மற்றும் சென்னை-2 இணை ஆணையர் மண்டலங்களைச் சேர்ந்த திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது என்றும், மேலும், மேற்படி 31 இணைகளையும் சேர்த்து 20 இணை ஆணையர் மண்டலங்களில் 217 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன என்றும், இந்நிலையில் சட்டமன்ற அறிவிப்பின்படி இன்னும் 283 இணைகளுக்கு திருக்கோயில் மூலம் இலவசத் திருமணம் ஏழை எளிய வைக்கப்படவுள்ளதென்றும், திருகோயில்கள் மூலம் இலவசத் திருமணம் நடத்துவதற்காக மேலே நடத்தி முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவான ரூ.20,000 தொகையினை ரூ.50,000ஆகஉயர்த்தி, கீழ்க்கண்ட திட்ட விவரப்படி திருக்கோயில் நிதிமூலம் செலவினம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்குமாறு ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    திட்ட விவரம்:

    திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம் : ரூ.20,000

    மணமகன் ஆடை:ரூ.1000

    மணமகள் ஆடை: ரூ.2000

    திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு : ரூ.2000

    மாலை, புஷ்பம் - ரூ.1000

    பீரோ : ரூ.7,800

    கட்டில்-1 : ரூ.7,500

    மெத்தை : ரூ.2,200

    தலையணை-2 : ரூ.190

    பாய்-1 : ரூ.180

    கைக்கடிகாரம்-2 : ரூ.1,000

    மிக்ஸி-1 : ரூ.1,490

    பூஜை பொருட்கள் + பாத்திரங்கள் வகையறா : ரூ.3,640

    கூடுதல் : ரூ.50,000

    3. இந்துசமயஅறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசிலனை செய்தது. பரிசீலனைக்குப் பின்னர் அதனை ஏற்று. திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டசெலவினத் தொகை இயன்ற வரையில் உபயதாரர்கள் நிதி மூலம் நிலையில் நிதிவசதிமிக்க திருக்கோயில்கள் மூலமே திருமணம் நடத்தி வைக்கப்படுவதாலும், திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20.000லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×