search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்எஸ் பாரதி"

    • தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஆர்.எஸ்.பாரதியை நீக்க வேண்டும்.
    • நாடார் அமைப்பினர் போராட்டத்தையொட்டி தில்லை கங்கா நகர் 26-வது தெருவில் உள்ள ஆர்.எஸ். பாரதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    சென்னை:

    பெருந்தலைவர் காமராஜர் பற்றியும், நாடார் சமுதாய பெண்களை பற்றியும் இழிவாக பேசிய தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து நாடார் சங்கங்கள், அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.

    ஆலந்தூர் நாடார் சங்க திருமண மண்டபம் அருகில் நாடார் அமைப்பு நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டனர். தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்து ரமேஷ் நாடார் தலைமையில், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு நிறுவன தலைவர் மின்னல் ஸ்டீபன், நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் இ.எம். சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது.

    பா.ம.க. மாநில பொருளாளர் கவிஞர் திலக பாமா போராட்டத்தை தொடங்கி வைத்தார். நாடார் சங்கங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். 'கைது செய்... கைது செய்... ஆர்.எஸ்.பாரதியை கைது செய்...' என்று முழக்கமிட்டனர். போராட்டம் நடந்த இடத்துக்கு அருகில் ஆர்.எஸ். பாரதியின் வீடு உள்ளது.

    அதனை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடந்து செல்ல முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே அவர்கள் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    போராட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன தலைவர் போரூர் ஆனந்த ராஜ், செயலாளர் சந்திர சேகர பாண்டியன், தட்சண மாற நாடார் சங்கம் சென்னை கிளை சேர்மன் செல்வராஜ், தேசிய நாடார் கூட்டமைப்பு தலைவர் சிவராஜிராஜன், காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு தலைவர் பூமி நாதன்,

    அகில இந்திய நாடார் சக்தி தலைவர் விஜயா சந்திரன், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், காமராஜர் வம்ச பேரவை தலைவர் பெர்னட் ஜென்சன், மேடவாக்கம் நாடார் சங்க பொதுச்செயலாளர் முருகானந்தம், நாடார் பாதுகாப்பு பேரவை கவுரவ தலைவர் வி.எல்.சி. பிரேம்குமார், நாடார் சங்க தலைவர் சேகர், கோயம்பேடு நாடார் சங்க தலைவர் என்.ஆர்.பி. ஆதித்தன்.

    கீழ்கட்டளை நாடார் சங்க தலைவர் பால முருகன், பாண்டியநாடு நாடார் பேரவை தலைவர் சுருக்கு வேல்ராஜன், கலாம் காமராஜர், கக்கன் அறக்கட்டளை பொதுச்செயலாளர் வேல்முருகன், தமிழ்நாடு நாடார் சங்க பொதுச் செயலாளர் வீரகுமார், தலைமை நிலைய செயலாளர் பொன்ராஜ், நாடார் பாதுகாப்பு பேரவை செயலாளர் கோயம்பேடு சுரேஷ், பால்பாண்டியன்.

    ஆலந்தூர் ஸ்ரீதர், மார்க்கெட் ஞானபால், பத்மநாபன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை நிலைய செயலாளர் சிவக்குமார், உயர்மட்டக்குழு செயலாளர் உதயகுமார், தென்சென்னை மாவட்ட தலைவர் வைகுண்ட ராஜன், தென்மேற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் ராஜீ, கவிராஜ், கருணைதாசன், வக்கீல் ஆல்பின் மனோ உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் கூறும்போது, 'தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து நாடார் சமுதாயத்தை இழிவாக பேசி வருகிறார். நாடார் பெண்கள் மட்டுமின்றி தமிழ் பெண்களையும் இழிவுபடுத்துகிறார்.

    அவரை பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து போராட்டம் நடத்துவோம்' என்றார்.

    நாடார் அமைப்பினர் போராட்டத்தையொட்டி தில்லை கங்கா நகர் 26-வது தெருவில் உள்ள ஆர்.எஸ். பாரதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது.
    • அறிவுரையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கழகத் தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள், கழக முன்னோடிகள் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்ச்சிகளுக்கும் கழக நிர்வாகிகள், தோழர்கள் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது.

    பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும், மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைக்கக்கூடாது.

    இந்த அறிவுரையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆர்.எஸ்.பாரதி மீது பா.ஜனதா சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று புகார் செய்யப்பட்டது.
    • பாரதிய ஜனதா தொண்டர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது பா.ஜனதா சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று புகார் செய்யப்பட்டது.

    பா.ஜனதா வக்கீல் பிரிவு துணை தலைவரான ஜி.எஸ்.மணி அளித்துள்ள புகாரில், பாரதிய ஜனதா தொண்டர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வன்முறையை தூண்டி சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.பாரதி பேசிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்கெடுக்க ஆளும் தி.மு.க.வே முயற்சி செய்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க.வினர் உயிருடன் இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார் தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. சட்டமன்றத்தில் கொலை நடந்தாலும் வழக்கு தொடுக்க முடியாது என்று ஆளுநரை கொலை செய்வோம் என்று மிரட்டியது குறித்து மவுனம் காத்த முதல்வர் தற்போது பா.ஜ.க.வினரை கொலை செய்வோம் என்று மிரட்டியுள்ள ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய உத்தரவிட வேண்டும்.

    ஆளும் கட்சி என்ற ஆணவத்தில் இதுபோன்று வன்முறையை தூண்டி சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.பாரதி பேசிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதோடு இதேபோன்று கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதை முதலமைச்சர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது அரசு நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த முடியாத காரணத்தினால் தான். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்கெடுக்க ஆளும் தி.மு.க.வே முயற்சி செய்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பொய்யையே முதலீடாகக் கொண்டு அரசியல் நடத்தி வரும் அண்ணாமலை.
    • அண்ணாமலையைப் போன்றவர்கள் எத்தனை வேடம் போட்டு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அமைதிப் பூங்கா எனப் பெயர் பெற்ற தமிழ்நாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தொழில் முதலீடுகளிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்வதை, வெறுப்பரசியல் நடத்தும் பா.ஜ.க. நிர்வாகிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாள்தோறும் வதந்திகளைப் பரப்பி, தமிழ்நாட்டை வன்முறைக் காடாகமாற்றலாம் என மனப்பால் குடித்து வரு கிறார்கள்.

    கழகத் தலைவர், முதலமைச்சரின் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று, "இந்தியாவுக்கு நம் கழகத்தலைவர் அவர்கள் தான் வழிகாட்ட வேண்டும்" என்றும், "இந்தியாவை வழிநடத்தும் தலைமைத் தகுதி நம் கழகத் தலைவருக்கு இருக்கிறது" என்றும் உளமாரப் பாராட்டியதால் பா.ஜ.க.வினருக்கு அங்கமெல்லாம் எரியத் தொடங்கிவிட்டது. தமிழ் நாட்டின் முதலமைச்சருடைய பெருமைமிகு சிறந்த நிர்வாகத்திற்குக் களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே, தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, திட்டமிட்டுத் திரிக்கப்பட்ட வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பினர். அதன் மூலம் பதற்றத்தை உருவாக்கலாம் என்பதே அவர்களின் வஞ்சகத் திட்டம்.

    பா.ஜ.க. பரப்பியதெல்லாம் வதந்திதான் என்பது தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களிடமும் அம்பலமாகிவிட்டதால் அலறல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை. அதில் வழக்கம் போல திசைதிருப்பும் வேலையைக் காட்டியிருக்கிறார், பொய்யையே முதலீடாகக் கொண்டு அரசியல் நடத்தி வரும் அண்ணாமலை.

    திராவிட முன்னேற்றக் கழகம் இந்திக்கு எதிராக வெறுப்புப் பிரசாரம் செய்வதன் விளைவால்தான் வதந்திகூட உண்மைபோன்ற அச்சத்தை உருவாக்கிவிட்டது என்று மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட அண்ணாமலை நினைக்கிறார். தி.மு.க. எந்த மொழிக்கும் எதிரான இயக்கமல்ல. எங்கள் அன்னைத் தமிழ்நாட்டவர் மீது ஆதிக்க இந்தியைத் திணிக்காதே என்று எந்நாளும் உரிமைக்குரல் கொடுக்கின்ற இயக்கம்தான் தி.மு.க. அதற்காகத் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டு அன்னைத் தமிழுக்கு உயிர்க்கொடை ஈந்த தியாக மறவர்களைக் கொண்ட இயக்கம்.

    இந்தித் திணிப்புக்கு எதிரான தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு என்பது இந்தி பேசும் மக்கள் மீதான வெறுப்பாக ஒருபோதும் இருந்ததே இல்லை.

    இந்தி மட்டும்தான் தேசிய மொழி, ஆட்சிமொழி, அதைப் படித்தால் மட்டும் தான் வேலை என்கிற பா.ஜ.க.வின் மொழித் திணிப்பை அம்பலப்படுத்தி, இந்தியையே தாய்மொழியாகக் கொண்டவர்கள்கூட நமது தமிழ்நாட்டுக்குத்தான் வேலை தேடி வருகிறார்கள் என்பதுதான் தி.மு.க.வினரின் பரப்புரையே தவிர, எந்த ஒரு மொழி பேசுபவருக்கும் எதிரான பிரசாரம் அல்ல.

    சாதிப்பிரிவினை அரசியலால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் மீதான வன்முறைத் தாக்குதல்கள், சிறுபான்மை மக்களைப் பார்த்து 'பாகிஸ்தானுக்குப் போ" என பா.ஜ.க. நிர்வாகிகள் வெறுப்புணர்வுப் பிரசாரம், அவர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள் எனத் தொடர்ச்சியான வன்முறை-வெறுப்பரசியலை நடத்தி, இந்தியாவின் பன்முகத்தன் மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக இருப்பவர்கள் தேசபக்தி வேடம் போடும் அண்ணாமலையின் கட்சியினர்தான்.

    வெறுப்பையும் பகையையும் கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க.வின் மாநிலத் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அண்ணாமலை, "வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?" என்று கேட்பது வெட்கக் கேடு.

    ஆனால், பீகார் மாநில அரசின் சார்பில் வந்த குழுவினர், தமிழ்நாட்டில் எவ்வித அச்சமான சூழலும் இல்லை என்பதையும், வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்து, உண்மை நிலையைத் தெளிவான அறிக்கையாக அளித்துள்ளனர். உண்மைக்கு மாறாக, வதந்தியைத் தொடர்ந்து பரப்பும் உத்தரபிரதேச, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளை நோக்கி கேள்வி கேட்க வேண்டிய அண்ணாமலை, தமிழ்நாட்டின் முதலமைச்சர் நோக்கி அறிக்கை அம்பு விடுவது என்பது அரசியல் உள்நோக்கமின்றி வேறில்லை.

    வடமாநிலத் தொழிலாளர்கள் நலன் காப்பதில் தமிழ்நாடு அரசுக்குத் துணை நிற்போம் எனத் தெரிவித்த அண்ணாமலை, அந்த அறிக்கையில் உள்ள மையின் ஈரம் காய்வதற்குள், வன்ம அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது அவரது இரட்டை வேடத்தைத்தான் தோலுரித்துக் காட்டி உள்ளது.

    அண்ணாமலையைப் போன்றவர்கள் எத்தனை வேடம் போட்டு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். வதந்தி பரப்பி வன்முறைச் சூழலை உருவாக்க நினைத்தால் சட்ட ரீதியான நடவடிக்கையைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
    • குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கணக்கிடுகிறோம்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இந்திய தலைமை தேர்தல் கமிஷனருக்கு புகார் கடிதம் அனுப்பி இருந்தார்.

    அந்த கடிதத்தில் ஈரோடு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வெற்றி பெற வைக்க ஆளும் கட்சியான தி.மு.க. பண பலத்தை பயன்படுத்தி வருவதாகவும், இதுகுறித்து தி.மு.க. அமைச்சரும் காங்கிரஸ் வேட்பாளரும் பேசிய ஆடியோ தேர்தல் கமிட்டியில் சமர்பிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி இருந்தார்.

    பாரதிய ஜனதாவின் குற்றச்சாட்டு குறித்து தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கணக்கிடுகிறோம்.

    அவரது வெற்றியை தடுத்து நிறுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சதி செய்கிறது. இதற்கு முன்பு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தலை நிறுத்தியது போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் குறிக்கோளாக தெரிகிறது.

    அவ்வாறு தேர்தலை நிறுத்தினால் நாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம். அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.

    இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

    • உதயநிதி ஸ்டாலின் அரசியலிலே காலடி வைத்த நாள் முதல் வெற்றிக்கு மேல் வெற்றியை குவித்து வருகிறார்.
    • தொடர்ந்து எல்லா வெற்றியும் அவருக்கு கிடைக்கும். தமிழகத்துக்கு அது பயன்படும்.

    சென்னை:

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி வருமாறு:-

    தி.மு.க. மூத்த தலைவர்கள் முதல் கடைசி தொண்டர்கள் வரை எதிர்பார்த்த ஒரு நிகழ்வு இன்று நடைபெற்றது.

    உதயநிதியை அமைச்சராக நியமித்த கழக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கழக தோழர்கள் சார்பிலும், மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    தமிழகத்தின் தலை சிறந்த அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வருவார் என்கிற முழு நம்பிக்கை என்னைப் போன்றவர்களுக்கு இருக்கிறது.

    அவர் அரசியலிலே காலடி வைத்த நாள் முதல் வெற்றிக்கு மேல் வெற்றியை குவித்து வருகிறார். தொடர்ந்து எல்லா வெற்றியும் அவருக்கு கிடைக்கும். தமிழகத்துக்கு அது பயன்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வழக்கறிஞர்கள் உடனே தங்களுக்கு பொறுப்பு கிடைக்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது.
    • கட்சி என்று வந்து விட்டால் பதவி வருதோ, இல்லையோ கடைசி வரை அந்த கட்சியில் இருப்பவன்தான் விசுவாசமான தொண்டன்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் தி.மு.க. எம்.பி. ஜின்னாவின் படத்திறப்பு விழா சென்னையில் தி.மு.க. சட்டத்துறை சார்பில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:-

    தி.மு.க.வில் உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். நான், ஜின்னா போன்றவர்கள் கட்சியில் பொறுமையாக இருந்தோம். அவருக்கு மேல்-சபை எம்.பி. பதவி 68 வயதில் கிடைத்தது. எனக்கும் அதே போல பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.

    வழக்கறிஞர்கள் உடனே தங்களுக்கு பொறுப்பு கிடைக்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது. ஜின்னா கடைசி வரை கட்சிக்காக பாடுபட்டு பொறுமையாக இருந்தார். நிச்சயம் ஒருநாள் பதவி உங்களை தேடி வரும். அதற்கு ஜின்னா ஒரு பாடமாகும்.

    அவரைப் போலவே கட்சியில் உறுதியாக இருந்தால் உரிய மரியாதை கிடைக்கும். ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே லட்சியத்துடன் இருக்கும் தொண்டர்களுக்கு என்றைக்கும் மரியாதை உண்டு. கட்சியில் இருந்து எம்.ஜி.ஆர்., வைகோ போன்றவர்கள் விலகி சென்ற நெருக்கடியான காலத்தில் கட்சிக்கு உறுதுணையாக இருந்தோம். பாதை மாறவில்லை. எந்த பதவியையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைத்தோம்.

    கட்சி என்று வந்து விட்டால் பதவி வருதோ, இல்லையோ கடைசி வரை அந்த கட்சியில் இருப்பவன்தான் விசுவாசமான தொண்டன். அதுபோல எல்லோரும் இருக்க வேண்டும். எங்களோடு ஆரம்ப காலத்தில் இருந்தவர்களில் சிலர்தான் தற்போது உள்ளோம். மற்றவர்கள் வந்தனர், சென்றனர்.

    கட்சியை பிளவுப்படுத்த நினைத்தால் அதில் தோற்றுதான் போவார்கள். தொண்டர்கள் ஏமாற மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் இரா.கிரிராஜன் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவி பா.ஜ.க.காரர்களைப் போல பேசி வருகிறார்.
    • பெரும்பாலான அ.தி.மு.க.வினர் தி.மு.க.விற்கு வந்து கொண்டிருப்பதால் விரைவில் எடப்பாடி பழனிசாமியே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசியதாவது:-

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை மேற்கு வங்கம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் தங்கள் மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்ற தயாராகி வருகின்றனர். இந்தி பேசினால் மட்டுமே எதிர்காலம் என்ற பொய் பரப்புரையை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்தி பேசக்கூடிய மக்கள் தமிழகத்திற்கு அதிக அளவு வேலைக்கு வருகின்றனர். மேலும் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய சுந்தர் பிச்சை தி.மு.க. ஆட்சி காலத்தில் கல்வி கற்று ஆங்கிலம் தெரிந்ததால் தற்போது அதிக சம்பளம் வாங்கி வருகிறார்.

    தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவி பா.ஜ.க.காரர்களைப் போல பேசி வருகிறார். ஆளுநரை திரும்ப பெறக்கூடிய மனுவை குடியரசுத் தலைவரிடம் வழங்கி இருக்கிறோம். குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.

    சட்டமன்றத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரும்போது அதிலிருந்து தங்களை காத்துக்கொள்ள சபாநாயகர் மீது குறை கூறி அ.தி.மு.க. வெளிநடப்பு செய்துள்ளது. ஆனால் அவர்களை குறைக்கூற போவதில்லை. ஏனென்றால் பெரும்பாலான அ.தி.மு.க.வினர் தி.மு.க.விற்கு வந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் எடப்பாடி பழனிசாமியே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் பதவி கொடுத்தவர்களையே காட்டிக்கொடுத்த அவரை தி.மு.க. சேர்த்துக் கொள்ளாது. அ.தி.மு.க. எப்போது இருந்தாலும் தி.மு.க.விற்கு பங்காளிதான், ஆனால் பா.ஜ.க. தி.மு.க.விற்கு மட்டுமல்ல நம் இனத்திற்கே பகையாளி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜெயக்குமார், என்னை பற்றி அவதூறாக ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதற்கு விளக்கம் அளிப்பது எனது கடமை.
    • ஏறத்தாழ 12 ஆண்டுகள், அதற்குப் பிறகு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவால், எந்த ஒரு வழக்குகூட போட முடியவில்லை.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அமைச்சர் ஜெயக்குமார் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு தெம்பில்லாமல்-திராணியில்லாமல், என்னுடைய கேள்விகளுக்கு தொடர்பு இல்லாமல் "பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப்பாக்கு என்ன விலை?" என்ற பழமொழிக்கேற்பவும்-"பந்தை உதைப்பதற்கு பதிலாக, ஆளை உதைப்பதாக" சம்பந்தா சம்பந்தமில்லாமல்-பொறுப்பற்ற தன்மையில்-ஆதாரமில்லாமல்-வாய்க்கு வந்தபடி அறிக்கை என்ற பெயரில் உளறிக் கொட்டியிருக்கிறார்.

    தி.மு.க.வின் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும், நாங்கள் நீதிமன்றத்தின் மூலம் தவிடுபொடியாக்கிறோம் என்ற வரலாற்றை ஏனோ ஜெயக்குமார் மூடி மறைக்க முயற்சிக்கிறார்.

    கலைஞர் உள்ளிட்ட கழக முன்னோடிகள் மீதும், என் மீதும் போடப்பட்ட அத்தனை வழக்குகளிலும் நீதிமன்றங்களில் வாதாடி குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பை பெற்றிருக்கிறோம்.

    ஆனால், உங்கள் நிலை அப்படியா? அவரது தலைவியிலிருந்து அத்தனை பேரும் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத்தண்டனை பெற்றிருப்பதோடு, ஜெயக்குமார் போன்ற பலரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற உள்ளார்கள்.

    ஜெயக்குமார், என்னை பற்றி அவதூறாக ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதற்கு விளக்கம் அளிப்பது எனது கடமை.

    2001-ம் ஆண்டு வரை நான் நங்கநல்லூர் வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தபோது, என் மீது புகார் வந்ததாக கூறுகிறார். கடந்த கால வரலாற்றை ஜெயக்குமாருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 2001-ம் ஆண்டு இவரது தலைவி ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, நங்கநல்லூர் வீடு கட்டும் கூட்டுறவு சங்கம் மற்றும் நான்கு முறை நகராட்சித் தலைவராக இருந்த ஆலந்தூர் நகராட்சியில் கோப்புகளை துருவி துருவி தேடிப் பார்த்தார். இதற்கு காரணமே, ஜெயலலிதா மீது நான் டான்சி வழக்கு தொடுத்ததுதான்.

    நான் ஊழல் செய்ததாக எந்த அடிப்படை ஆதாரமும் கிடைக்காத காரணத்தால், சென்னை மாநகராட்சியின் மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்து வந்த துணைவியாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டுமென்று, அன்றைக்கு மாநகராட்சி ஆணையராக விஜயகுமார், முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவரது இல்லமான போயஸ் கார்டனுக்கு அழைத்து, நேரடியாகவே விஜயகுமாரிடத்தில், "எட்டாண்டு காலமாக, ஆர்.எஸ்.பாரதி என் தூக்கத்தை கலைத்தார். எனவே, அவருக்கும் அதே நிலை உருவாக்க வேண்டும்" என்று சொல்லி, விஜயகுமாருக்கு ஆணையிட்டதாக, விஜயகுமார் என்னை அழைத்து, ஜெயலலிதா சொன்ன செய்தியை என்னிடம் சொன்னார்.

    அப்பொழுது என்னுடன் இன்றைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியமும்-அன்றைய மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பெ.வீ.கல்யாணசுந்தரமும் உடனிருந்தனர்.

    நான் சிரித்துக்கொண்டே "என் தூக்கத்தை யாராலும் கலைக்க முடியாது" என்பதை அந்த அம்மையாரிடம் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். அதில் என்ன வேடிக்கை என்னவென்றால், எனது டாக்டர் மனைவிக்கு மாநகராட்சியின் சார்பில், "சிறந்த மருத்துவர்" என்ற அவார்டு கொடுத்த ஒரு வாரத்திற்குள், அவரை பணி நீக்கம் செய்து உத்தரவு அளிக்கப்பட்டது. அதற்காக நான் வருத்தப்படவில்லை.

    இப்பணி நீக்கம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வெற்றி பெற்றேன். இச்செய்தி உண்மையா, இல்லையா என்பதை ஜெயக்குமார் மாநகராட்சியிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    ஏறத்தாழ 12 ஆண்டுகள், அதற்குப் பிறகு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவால், எந்த ஒரு வழக்குகூட போட முடியவில்லை.

    அதைபோலத்தான், நங்கநல்லூர் வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்தலைவராக நான் இருந்தபோது, என்மீது எவ்வித கையாடல் வழக்கும் இல்லை. அப்படி இருந்திருந்தால், இவரது தலைவி ஜெயலலிதா என்னை விட்டு வைத்திருப்பாரா?

    எடப்பாடி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில், தி.மு.க. சார்பில் நான் தொடர்ந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். அதேபோல, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன் என்பதற்காக, என்னை பழிவாங்கும் நோக்கத்தோடு, என்னை அதிகாலையில் கைது செய்தனர்.

    ஆனால், தி.மு.க.வின் பலம் வாய்ந்த சட்டத்துறை வழக்கறிஞர்களின் வாதத்திறமையால், ஒரு மணி நேரத்தில் நான் வெளியே வந்துவிட்டேன். இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், எனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை, ரத்து செய்ய வேண்டும் என்று அரசின் பணத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடினர். ஆனால், அவைகள் எல்லாம் தவிடுபொடியாக்கப்பட்டு, என்மீது போடப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது என்ற உண்மையை ஜெயக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வருமானவரித்துறை தனிப்பட்ட நிறுவனங்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளுக்கெல்லாம் எந்த அரசியல் கட்சியாவது மத்திய அரசைக் கண்டித்து போர்க்குரல் எழுப்பி இருக்கிறதா?
    • தி.மு.க.வைச் சேர்ந்த ஒருசில அமைச்சர்கள் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, மத்திய அமலாக்கத்துறை விசாரணைக்காக சம்மன் அனுப்பி உள்ளது என்று செய்திகள் வந்துள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பாவது:-

    ஆளும் தி.மு.க.வில் மேலும் ஒருமுறை தனக்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என்று நம்பி ஏமாந்துபோன அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தேவையில்லாமல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

    தி.மு.க.வில் எங்கே ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாகிவிடுவாரோ என்ற பயத்தில், கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனை அவசர அவசரமாக மீண்டும் தங்களுடன் இணைத்துக் கொண்டதை தமிழக மக்கள் கைகொட்டி எள்ளி நகையாடுகிறார்கள்.

    வேலை இல்லாமல் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ். பாரதி கடந்த வாரத்தில் வருமானவரித் துறை தனிப்பட்ட இரண்டு தொழில் அதிபர்களின் நிறுவனங்களில் மேற்கொண்ட சோதனையைப் பற்றி குறிப்பிட்டு, இதற்காக மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கண்டிக்காதது ஏன்? என்று கேட்டிருக்கிறார்.

    வருமானவரித் துறை தனிப்பட்ட நிறுவனங்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளுக்கெல்லாம் எந்த அரசியல் கட்சியாவது மத்திய அரசைக் கண்டித்து போர்க்குரல் எழுப்பி இருக்கிறதா?

    தி.மு.க.வைச் சேர்ந்த ஒருசில அமைச்சர்கள் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, மத்திய அமலாக்கத்துறை விசாரணைக்காக சம்மன் அனுப்பி உள்ளது என்று செய்திகள் வந்துள்ளன. விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் வாய்தா வாங்கிக்கொண்டு, காலம் தாழ்த்தி வரும் அந்த அமைச்சர்களை பற்றி ஆர்.எஸ். பாரதி வாய் திறக்கத் தயாரா?

    சம்மன் அனுப்பிய மத்திய அமலாக்கத் துறையையும், மத்திய அரசையும் கண்டித்து திமுக வாய் திறந்திருக்கிறதா? இதே போல், பல தி.மு.க. அமைச்சர்கள் மீது நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள ஊழல் வழக்குகளையும் விரைந்து நடத்த ஆர்.எஸ். பாரதி இந்த அரசை கேட்டுக்கொள்வாரா?

    அன்னக் காவடிகளாக நாட்டிலே அலைந்து திரிந்த தி.மு.க.வைச் சார்ந்த பலர், இன்றைக்கு அரபு நாட்டு சுல்தான்கள் போல் வாழ்ந்து, வலம் வந்து கொண்டிருப்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். தான் திருடி பிறரை நம்பாள் என்பது போல் ஊழலிலேயே ஊறித் திளைத்த கட்சியைச் சார்ந்த ஒருவர், காமாலை கண்ணுடையவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியும் நபர் ஒருவர் பிதற்றுவதுபோல், தூய்மை உள்ளம் கொண்ட பரிசுத்தமான, மக்கள் சேவையை முன்னெடுக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை களங்கப்படுத்த முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

    ஆர்.எஸ். பாரதி வீட்டு வசதி கூட்டுறவு சங்கத்தின் பொறுப்பில் இருந்த போது, பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாகப் புகார்கள் வந்ததும், காவல் துறையால் விசாரிக்கப்பட்டதும் எல்லோரும் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பில் அடுத்த வீட்டில் எட்டிப் பார்க்கிறார். இந்தப் போக்கைக் கைவிடா விட்டால் இன்றைக்கு, தான் தப்பித்ததாக அவர் நினைத்துக் கொள்ளலாம். ஆனால், வீட்டு வசதி கூட்டுறவு சங்க ஊழல் பூமாரங்காக அவரது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருப்பதை மறந்துவிடக் கூடாது. உப்பைத் தின்ற பாரதியை, அ.தி.மு.க. தண்ணீர் குடிக்க வைக்கும் காலம் வரும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    25 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.பாரதி எப்படி இருந்தார்? இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்பது, அவரது அடுத்த வீட்டுக்காரர்களுக்கே நன்கு தெரியும். ஊருக்கு உபதேசம் செய்வதை விட்டுவிட்டு, அவரது கட்சியை சீர்திருத்தும் பணியில் பாரதி ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க.வைத் தொடங்கியபோது அதற்கு டெல்லியில் மறைமுக எஜமானர்கள் இருந்தார்கள்.
    • இப்போது பழனிசாமி - பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு டெல்லிதான் நேரடி எஜமானர்கள்.

    சென்னை:

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தானே கூட்டி, தன்னையே தலைமையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பொதுக்குழுவில் பேசிய 'தற்காலிக அ.தி.மு.க. பொதுச்செயலாளர்' எடப்பாடி பழனிசாமி, தேவையில்லாமல் தி.மு.க.வை சுரண்டிப் பார்த்திருக்கிறார்.

    "பழைய பழனிச்சாமின்னு நினைச்சிக்கிட்டீங்களா.. நடக்காது ஸ்டாலின் அவர்களே" என்று மைக்கைக் கடித்தபடி பேசியிருக்கிறார்.

    அவர்களின் கட்சியில் வான(க)ரக் கூட்டம், ராயப்பேட்டை ரவுடிகள் கலவரம் என எதிரும் புதிருமாக கோஷ்டி மோதல்கள் நடத்திக்கொண்டு, தி.மு.க. மீது பாய்வது என்பது திசைத் திருப்புகிற வேலையன்றி, வேறு எதுவுமல்ல.

    அ.தி.மு.க.வைத் தொடங்கியபோது அதற்கு டெல்லியில் மறைமுக எஜமானர்கள் இருந்தார்கள். இப்போது பழனிசாமி - பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு டெல்லிதான் நேரடி எஜமானர்கள். அங்கே கயிறு இழுக்கப்படுவதற்கேற்ப இங்கே பொம்மைகள் ஆடிக் கொண்டிருக்கின்றன. ஆடும் பொம்மைகளுக்கு வெற்று வசனங்கள் எதற்கு?

    பழனிசாமி எதற்காகத் திடீரென பழைய பழனிசாமி பற்றி அவரே நினைவூட்டிக் கொள்கிறார்?

    பழைய பழனிசாமி கொலை வழக்குகளை எதிர்கொண்டார். புது பழனிசாமி கொடநாடு வழக்கை எதிர்கொள்கிறார்.

    பழைய பழனிசாமி ஜெயலலிதா - சசிகலா கால்களில் விழுந்து கிடந்தார். புது பழனிசாமி மோடி - அமித்ஷா கால்களில் விழுந்து கிடக்கிறார்.

    வழக்குகள் போட்டு தி.மு.க. பழி வாங்குகிறது என்று பொங்கிய பழனிசாமி, வருமான வரித்துறை - அமலாக்கத்துறை - சி.பி.ஐ என அவரது ஆட்சிக்காலத்திலேயே ஒன்றிய அரசின் துறைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக எப்போதாவது குரல் உயர்த்தியது உண்டா?

    இப்போதுகூட அவருடைய ஆட்சிக்காலத்து அமைச்சர்கள் முதல் ஒப்பந்தக்காரர்கள் வரை பலருக்கும் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியிருக்கிறதே?

    பொதுக்குழுவில் தி.மு.க.வை நோக்கிப் பொங்கிய பழனிசாமி, ஒன்றிய பா.ஜ.க. அரசு பழிவாங்குகிறது என்று பொங்க வேண்டாம், முணுமுணுக்கக்கூட தைரியம் உண்டா?

    தி.மு.க. குடும்ப அரசியல் நடத்துகிறது என்று வாய்கூசாமல் சொல்லிக்கொண்டு, தனது ஆட்சிக்காலம் முழுவதும் குடும்ப டெண்டர் அரசியல் நடத்தியவர்தான் பழனிசாமி. இதோ அண்மையில்கூட கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகளில் கணக்கில் வராத 500 கோடி ரூபாய் வருமானம் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சோதனைக்குள்ளான இந்த இருவரும் யார்?

    இப்போது நடவடிக்கை எடுத்தவர்களிடம் மோதுவதற்குத் திராணியில்லாத - பழனிசாமிக்கு தி.மு.க.வையும், அதன் தலைவரான இந்தியாவின் 'நம்பர் ஒன்' முதல்- அமைச்சரை நோக்கி கேள்வி எழுப்ப எந்த அருகதையும் இல்லை.

    துணிவிருந்தால் - நேர்மையிருந்தால் கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோரிடம் வருமானவரித்துறை கைப்பற்றிய 500 கோடி ரூபாய் வருமானம் பற்றியும் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன உறவு என்றும் பதில் சொல்லுங்கள் பழனிசாமி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×