search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருமானவரித்துறை கைப்பற்றிய ரூ.500 கோடி யாருடையது?- எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க.கேள்வி
    X

    வருமானவரித்துறை கைப்பற்றிய ரூ.500 கோடி யாருடையது?- எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க.கேள்வி

    • அ.தி.மு.க.வைத் தொடங்கியபோது அதற்கு டெல்லியில் மறைமுக எஜமானர்கள் இருந்தார்கள்.
    • இப்போது பழனிசாமி - பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு டெல்லிதான் நேரடி எஜமானர்கள்.

    சென்னை:

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தானே கூட்டி, தன்னையே தலைமையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பொதுக்குழுவில் பேசிய 'தற்காலிக அ.தி.மு.க. பொதுச்செயலாளர்' எடப்பாடி பழனிசாமி, தேவையில்லாமல் தி.மு.க.வை சுரண்டிப் பார்த்திருக்கிறார்.

    "பழைய பழனிச்சாமின்னு நினைச்சிக்கிட்டீங்களா.. நடக்காது ஸ்டாலின் அவர்களே" என்று மைக்கைக் கடித்தபடி பேசியிருக்கிறார்.

    அவர்களின் கட்சியில் வான(க)ரக் கூட்டம், ராயப்பேட்டை ரவுடிகள் கலவரம் என எதிரும் புதிருமாக கோஷ்டி மோதல்கள் நடத்திக்கொண்டு, தி.மு.க. மீது பாய்வது என்பது திசைத் திருப்புகிற வேலையன்றி, வேறு எதுவுமல்ல.

    அ.தி.மு.க.வைத் தொடங்கியபோது அதற்கு டெல்லியில் மறைமுக எஜமானர்கள் இருந்தார்கள். இப்போது பழனிசாமி - பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு டெல்லிதான் நேரடி எஜமானர்கள். அங்கே கயிறு இழுக்கப்படுவதற்கேற்ப இங்கே பொம்மைகள் ஆடிக் கொண்டிருக்கின்றன. ஆடும் பொம்மைகளுக்கு வெற்று வசனங்கள் எதற்கு?

    பழனிசாமி எதற்காகத் திடீரென பழைய பழனிசாமி பற்றி அவரே நினைவூட்டிக் கொள்கிறார்?

    பழைய பழனிசாமி கொலை வழக்குகளை எதிர்கொண்டார். புது பழனிசாமி கொடநாடு வழக்கை எதிர்கொள்கிறார்.

    பழைய பழனிசாமி ஜெயலலிதா - சசிகலா கால்களில் விழுந்து கிடந்தார். புது பழனிசாமி மோடி - அமித்ஷா கால்களில் விழுந்து கிடக்கிறார்.

    வழக்குகள் போட்டு தி.மு.க. பழி வாங்குகிறது என்று பொங்கிய பழனிசாமி, வருமான வரித்துறை - அமலாக்கத்துறை - சி.பி.ஐ என அவரது ஆட்சிக்காலத்திலேயே ஒன்றிய அரசின் துறைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக எப்போதாவது குரல் உயர்த்தியது உண்டா?

    இப்போதுகூட அவருடைய ஆட்சிக்காலத்து அமைச்சர்கள் முதல் ஒப்பந்தக்காரர்கள் வரை பலருக்கும் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியிருக்கிறதே?

    பொதுக்குழுவில் தி.மு.க.வை நோக்கிப் பொங்கிய பழனிசாமி, ஒன்றிய பா.ஜ.க. அரசு பழிவாங்குகிறது என்று பொங்க வேண்டாம், முணுமுணுக்கக்கூட தைரியம் உண்டா?

    தி.மு.க. குடும்ப அரசியல் நடத்துகிறது என்று வாய்கூசாமல் சொல்லிக்கொண்டு, தனது ஆட்சிக்காலம் முழுவதும் குடும்ப டெண்டர் அரசியல் நடத்தியவர்தான் பழனிசாமி. இதோ அண்மையில்கூட கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகளில் கணக்கில் வராத 500 கோடி ரூபாய் வருமானம் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சோதனைக்குள்ளான இந்த இருவரும் யார்?

    இப்போது நடவடிக்கை எடுத்தவர்களிடம் மோதுவதற்குத் திராணியில்லாத - பழனிசாமிக்கு தி.மு.க.வையும், அதன் தலைவரான இந்தியாவின் 'நம்பர் ஒன்' முதல்- அமைச்சரை நோக்கி கேள்வி எழுப்ப எந்த அருகதையும் இல்லை.

    துணிவிருந்தால் - நேர்மையிருந்தால் கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோரிடம் வருமானவரித்துறை கைப்பற்றிய 500 கோடி ரூபாய் வருமானம் பற்றியும் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன உறவு என்றும் பதில் சொல்லுங்கள் பழனிசாமி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×