என் மலர்
தமிழ்நாடு

தி.மு.க.வில் உழைத்தால் உரிய மரியாதை கிடைக்கும்- ஆர்.எஸ்.பாரதி
- வழக்கறிஞர்கள் உடனே தங்களுக்கு பொறுப்பு கிடைக்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது.
- கட்சி என்று வந்து விட்டால் பதவி வருதோ, இல்லையோ கடைசி வரை அந்த கட்சியில் இருப்பவன்தான் விசுவாசமான தொண்டன்.
சென்னை:
மறைந்த முன்னாள் தி.மு.க. எம்.பி. ஜின்னாவின் படத்திறப்பு விழா சென்னையில் தி.மு.க. சட்டத்துறை சார்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:-
தி.மு.க.வில் உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். நான், ஜின்னா போன்றவர்கள் கட்சியில் பொறுமையாக இருந்தோம். அவருக்கு மேல்-சபை எம்.பி. பதவி 68 வயதில் கிடைத்தது. எனக்கும் அதே போல பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.
வழக்கறிஞர்கள் உடனே தங்களுக்கு பொறுப்பு கிடைக்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது. ஜின்னா கடைசி வரை கட்சிக்காக பாடுபட்டு பொறுமையாக இருந்தார். நிச்சயம் ஒருநாள் பதவி உங்களை தேடி வரும். அதற்கு ஜின்னா ஒரு பாடமாகும்.
அவரைப் போலவே கட்சியில் உறுதியாக இருந்தால் உரிய மரியாதை கிடைக்கும். ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே லட்சியத்துடன் இருக்கும் தொண்டர்களுக்கு என்றைக்கும் மரியாதை உண்டு. கட்சியில் இருந்து எம்.ஜி.ஆர்., வைகோ போன்றவர்கள் விலகி சென்ற நெருக்கடியான காலத்தில் கட்சிக்கு உறுதுணையாக இருந்தோம். பாதை மாறவில்லை. எந்த பதவியையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைத்தோம்.
கட்சி என்று வந்து விட்டால் பதவி வருதோ, இல்லையோ கடைசி வரை அந்த கட்சியில் இருப்பவன்தான் விசுவாசமான தொண்டன். அதுபோல எல்லோரும் இருக்க வேண்டும். எங்களோடு ஆரம்ப காலத்தில் இருந்தவர்களில் சிலர்தான் தற்போது உள்ளோம். மற்றவர்கள் வந்தனர், சென்றனர்.
கட்சியை பிளவுப்படுத்த நினைத்தால் அதில் தோற்றுதான் போவார்கள். தொண்டர்கள் ஏமாற மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இரா.கிரிராஜன் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.