search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிவாள் வெட்டு"

    • மர்ம கும்பல் இசக்கி முத்து வீட்டுக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டனர்.
    • ஏற்பட்ட மோதலில் இசக்கிமுத்து, சுதாகர், கபில்தேவ் ஆகியோருக்கு அரிவாள்வெட்டு விழுந்தது.

    போரூர்:

    தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் தனது நண்பர்களான சுதாகர், கபில்தேவ், அஜித் ஆகியோருடன் சென்னை எம்.ஜி.ஆர் நகர் அண்ணா வீதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி 'பிளக்ஸ் பேனர்' கடை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று இரவு மர்ம கும்பல் இசக்கி முத்து வீட்டுக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது ஏற்பட்ட மோதலில் இசக்கிமுத்து, சுதாகர், கபில்தேவ் ஆகியோருக்கு அரிவாள்வெட்டு விழுந்தது. அவர்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கஞ்சா புகைக்க அழைத்த தகராறில் இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

    • கணவனை அரிவாளால் வெட்டிய மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
    • ராமர் தன்னை தாக்கியதாக ராஜலட்சுமி போலீசில் புகார் செய்துள்ளார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் குறிஞ்சிபட்டியை சேர்ந்தவர் ராமர்(வயது43). இவரது மனைவி ராஜலட்சுமி. கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று வீட்டை சுத்தமாக பராமரிக்கவில்லை என மனைவியை, ராமர் கண்டித்துள்ளார். இதில் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராஜலட்சுமி அரிவாளால் ராமரை வெட்டினார்.

    காயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜலட்சுமியை தேடி வருகின்றனர்.

    இதேபோல் ராமர் தன்னை தாக்கியதாக ராஜலட்சுமி போலீசில் புகார் செய்துள்ளார். 

    • செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் 19 ஆகிய இருவரும் செந்தில்குமாரிடம் தகராறு செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை வளநாடு கொடும்பபட்டி பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 70).

    இவரது மகன்கள் ராமசாமி (56 ),சிவக்குமார் (42), செந்தில்குமார் ( 40).

    இதில் செந்தில்குமாரின் தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தின் மட்டைகள் அருகில் உள்ள அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது வீட்டில் விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் 19 ஆகிய இருவரும் செந்தில்குமாரிடம் தகராறு செய்தனர்.

    பின்னர் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த தென்னை மரத்தை அத்து மீறி வெட்டியுள்ளனர்.

    இதனைப் பார்த்த செந்தில்குமாரின் மூத்த சகோதரர்கள் ராமசாமி, சிவக்குமார், தாயார் நாகம்மாள் ஆகியோர் அவர்களை தட்டி கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து சிவக்குமார், ராமசாமி அவர்களின் தாயார் நாகம்மாள், மற்றும் தனம் (48) ஆகிய 4 பேரின் முகத்திலும் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கம்பியால் தாக்கி விட்டு தப்பி ஓடினர்.

    இதில் பலத்த காயமடைந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    தென்னை மட்டை விழுந்த அக்கப்போரில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த ஆண்டு சங்கர் கொலை செய்யப்பட்டார்.
    • மகேந்திரன் அரிவாளால் கோமதியை சரமாரியாக வெட்டினார்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் நொச்சி குளத்தை சேர்ந்தவர் சங்கர் மனைவி கோமதி (வயது 25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் சென்னை கிண்டியில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு சங்கர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கோமதி கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரது 2 குழந்தைகளில் ஒரு குழந்தையை சங்கரின் பெற்றோரும், மற்றொரு குழந்தையை கோமதியின் பெற்றோரும் அழைத்து சென்று வளர்த்து வருகின்றனர்.

    மேலும் குழந்தைகளை யார் பராமரிப்பது என்பது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளி வந்த கோமதி இன்று காலை தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து குழந்தையை என்னிடம் தந்து விடுங்கள் என கேட்டுள்ளார்.

    அப்போது அவருக்கும் அவரது தம்பி மகேந்திரன் (22) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மகேந்திரன் அரிவாளால் கோமதியை சரமாரியாக வெட்டினார். இதில் கோமதி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். உடனே மகேந்திரன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிவந்திபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று கோமதியை மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மில்லில் பரமத்திவேலூர் அருகே வடுகபாளையத்தை சேர்ந்த ராஜேந்தி ரன் கடந்த 5 ஆண்டாக வாடிக்கையாளராக உள்ளார்.
    • ஆத்திரமடைந்த ராஜேந்திரன் பிரேம்குமாரின் தலையில் அரிவாளால் வெட்டினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பாப்பிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (26). இவர் புல்லாகவுண்டம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் ஆயில் மில்லில் மேலாளராக உள்ளார். இந்த மில்லில் பரமத்திவேலூர் அருகே வடுகபாளையத்தை சேர்ந்த ராஜேந்தி ரன் கடந்த 5 ஆண்டாக வாடிக்கையாளராக உள்ளார். இதனால் மில்லில் வரவு, செலவு கணக்கு வைத்திருந்தார்.

    இந்நிலையில் ராஜேந்திரன் பாக்கி கணக்கில் ரூ.12 ஆயிரம் கடனாக எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து அறிந்த ராஜேந்திரன் ஆயில் மில்லுக்கு வந்து, தகாத வார்த்தைகளால் மேலாளர் பிரேம்குமாரை திட்டி உள்ளார்.

    அரிவாள் வெட்டு

    இந்த நிலையில் பணி முடித்துவிட்டு பிரேம்குமார் ராஜேந்திரனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் பிரேம்குமாரின் தலையில் அரிவாளால் வெட்டினார்.

    இதில் பலத்த காயமடைந்த பிரேம்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து பிரேம்குமார் வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சேகர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அமுதா அணிந்து இருந்து நகையை பறிக்க முயன்றனர்.
    • சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்ததும் வழிப்பறி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த பெரும்பேடு லிங்கப்பயன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி அமுதா. கணவன்-மனைவி இருவரும் இரவு பொன்னேரியில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    பொன்னேரி அடுத்த பெரும்பேடு மத்ராவேடு பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது 3 மர்மநபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.

    சேகர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அமுதா அணிந்து இருந்து நகையை பறிக்க முயன்றனர். இதனை சேகர் தடுக்க முயன்றார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் சேகரை அரிவாளால் வெட்டினர். இதில் அவரது காதில் வெட்டு விழுந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அமுதா அலறினார்.

    சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்ததும் வழிப்பறி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த சேகரை மீட்டு மேல் சிகிச்கைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரிய காவனம் பகுதியை சேர்ந்த ஜெயசாரதி என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகிறார்கள்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை சமாதானம் செய்து மீண்டும் குடும்ப நடத்த அழைத்து வந்தார்.
    • அழகுசின்னு ராஜதானி போலீசில் சரண் அடைந்தார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராயவேலூரை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது37). இவரது மனைவி அழகுசின்னு (31). இவர்களுக்கு பிளஸ்-2 மற்றும் 6-ம் வகுப்பு படிக்கும் 2 மகன்கள் உள்ளனர். கணவன் மனைவி 2 பேரும் கூலித்தொழில் செய்து வந்தனர்.

    சண்முகவேல் குடிபழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியை தாக்கி ரகளையில் ஈடுபட்டார். இதனால் வேதனையடைந்த அழகுசின்னு கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை சமாதானம் செய்து மீண்டும் குடும்ப நடத்த அழைத்து வந்தார். சில நாட்கள் அமைதியாக சென்ற நிலையில் மீண்டும் மது குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். பொறுத்து பொறுத்து பார்த்த அழகுசின்னு கணவரை திரும்பி தாக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அவர் அருகில் இருந்த அரிவாளை எடுத்து சண்முகவேலை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சண்முகவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் அழகுசின்னு ராஜதானி போலீசில் சரண் அடைந்தார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சண்முகவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். குடிபோதையில் தொல்லை கொடுத்த கணவரை மனைவியே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பலத்த காயம் அடைந்த தினேசுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.

    போரூர்:

    அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது38). ஆன்லைன் நிறுவன டெலிவரி ஊழியர். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரவுடி ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்தநிலையில் நேற்று இரவு அதே பகுதி 7-வது அவின்யூவில் தினேஷ் நடந்து சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த தினேசுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.

    • பெட்ரோல் நிரப்ப வந்த வாலிபர்களுக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • தப்பி ஓடிய வாலிபர்களை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துரத்தி சென்று 3 பேரில் ஒருவரை பிடித்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த வேடல் பகுதியில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்க்குக்கு நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்புவதாகவும், மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் வழங்குமாறும் கூறியுள்ளனர். பெட்ரோல் பங்க் ஊழியர் தங்களுக்கு பணம் வந்த பிறகே பெட்ரோல் நிரப்ப முடியும் என கூறியுள்ளார்.

    இதன் காரணமாக பெட்ரோல் நிரப்ப வந்த வாலிபர்களுக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர் வெங்கட் என்பவரின் தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். தப்பி ஓடிய வாலிபர்களை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துரத்தி சென்று 3 பேரில் ஒருவரை பிடித்தனர்.

    மேலும் அரிவாளால் வெட்டுப்பட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் வெங்கட்டை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் விரைந்து வந்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பிடித்து வைத்திருந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வையாவூர் கிராமத்தை சேர்ந்த கோபி (24) என்பதும், அவருடன் வையாவூரை சேர்ந்த ஸ்ரீராம், சிறுவாக்கத்தைச் சேர்ந்த ஜீவா ஆகிய 3 பேரும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த தாலுகா போலீசார் தப்பி ஓடிய வாலிபர்கள் ஸ்ரீராம் மற்றும் ஜீவாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • வேகமாக வந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் கவுன்சிலர் சித்ராவையும், அவரது கணவரையும் சரமாரியாக வெட்டியது.
    • ராஜா உள்ளிட்ட 5 பேரும் தப்பிச் சென்று விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி அருகே உள்ள அவ்வையார் நகர் 2-வது வீதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 47). இவரது மனைவி சித்ரா (44). தி.மு.க.வைச் சேர்ந்த இவர் மலுமிச்சம்பட்டி பஞ்சாயத்து கவுன்சிலராக உள்ளார். இவருக்கு மோகன் (24) என்ற மகன் உள்ளார்.

    நேற்று இரவு 9.30 மணிக்கு வீட்டில் சித்ரா, கணவர் ரவிக்குமார், மகன் மோகன் ஆகியோர் இருந்தனர். அவர்கள் சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக தயாராகிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது முகமூடி அணிந்தபடி வந்த 5 பேர் கும்பல் திடீரென வீட்டுக்குள் திபு, திபுவென புகுந்தனர். அவர்களை பார்த்து சித்ராவும், அவரது கணவரும் சத்தம் போட்டனர். நீங்கள் யார், எதற்காக வீட்டுக்குள் வருகிறீர்கள் என சத்தம் போட்டனர். அதற்குள் வேகமாக வந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் கவுன்சிலர் சித்ராவையும், அவரது கணவரையும் சரமாரியாக வெட்டியது. இதனை தடுப்பதற்காக மகன் மோகன் ஓடி வந்தார். அவரையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் 3 பேருக்கும் தலை, கை, கால் என உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. இதனால் 3 பேரும் சத்தம் போட்டனர்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்களை பார்த்ததும் முகமூடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. காயம் அடைந்து உயிருக்கு போராடிய தாய்-தந்தை, மகன் ஆகிய 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கவுன்சிலர் சித்ரா கடந்த 6 மாதத்துக்கு முன்பு 3.5 சென்ட் நிலம் வாங்கி இருந்தார். இந்த நிலத்தை மலுமிச்சம்பட்டி அம்பேத்கர் நகரில் பெட்டிக்கடை நடத்தி வரும் ராஜா (23) என்ற வாலிபர் புரோக்கராக செயல்பட்டு வாங்கிக் கொடுத்துள்ளார். இதற்காக புரோக்கர் ராஜாவுக்கு 2 சதவீத கமிஷன் பேசப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த கமிஷனை சித்ரா கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அடிக்கடி சித்ரா குடும்பத்தினரை சந்தித்து ராஜா தகராறு செய்துள்ளார்.

    இந்தநிலையில் தான் நேற்று இரவு ராஜா தனது ஆதரவாளர்கள் 4 பேரை அழைத்துக் கொண்டு முகமூடி அணிந்து சித்ரா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சித்ரா உள்பட குடும்பத்தினரை 3 பேரையும் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

    ராஜா உள்ளிட்ட 5 பேரும் தப்பிச் சென்று விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். நள்ளிரவில் தி.மு.க. பெண் கவுன்சிலர் ஒருவர் முகமூடி கும்பல் வெட்டப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • ஆத்திரம் அடைந்த 2 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்று அரிவாளை எடுத்து வந்தனர்.
    • வி.கே.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே உள்ள முதலியார்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டி(வயது 55). இவரது தங்கையின் மகன் ஆதிநாராயணன்(32).

    இவரும் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும், முத்துக்குட்டியின் மகளுக்கும் திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். மாமனார்-மருமகன் 2 பேருக்கும் குடிப்பழக்கம் இருந்துள்ளது. அவர்கள் 2 பேரும் நேற்று மது குடித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது.

    இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்று அரிவாளை எடுத்து வந்தனர். சிறிது நேரத்திலேயே ஒருவரையொருவர் அரிவாளால் மாறி மாறி வெட்டிக்கொண்டனர். உடனே அங்கிருந்த உறவினர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வி.கே.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் இருந்து வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்புமணி (வயது21). இவர் ஓசூரில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் விருதுநகர் மாவட்டம் சொக்கநாதபுதூரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (22) என்பவர் உடன் பணியாற்றி வருகிறார்.

    இதன்காரணமாக இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அன்புமணி கடந்த 28-ந் தேதி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதாக நிறுவனத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த செல்வகுமாருக்கும், அன்புமணிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அன்புமணியை அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து உடனே மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து அன்புமணி மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.

    ×