என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் முன்விரோதம் காரணமாக தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய நண்பர் கைது
- கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் இருந்து வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் குட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்புமணி (வயது21). இவர் ஓசூரில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் விருதுநகர் மாவட்டம் சொக்கநாதபுதூரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (22) என்பவர் உடன் பணியாற்றி வருகிறார்.
இதன்காரணமாக இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அன்புமணி கடந்த 28-ந் தேதி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதாக நிறுவனத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த செல்வகுமாருக்கும், அன்புமணிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அன்புமணியை அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து உடனே மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அன்புமணி மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.






