search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளி"

    • அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டது தான் காரணம்.
    • அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் 8643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றில் 1500 பணியிடங்களுக்கு மட்டும் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்திருக்கிறது. அரசு பள்ளிகளை மேம்படுத்த குறைந்தது ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டியுள்ள நிலையில், வெறும் 1500 ஆசிரியர்களை மட்டும் நியமிப்பது கண்டிக்கத்தக்கது; இது அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பதிலாக சீரழித்துவிடும்.

    கல்வியிலும், மனித வளத்திலும் தமிழகம் சிறந்து விளங்குவதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டது தான் காரணம். அரசு பள்ளிகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்துக் கொண்டு தரமான கல்வியை வழங்க முடியாது. எனவே, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மன நிறைவோடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்.
    • பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழாவில், கலெக்டர் ச.உமா தலைமையில், பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் ஜெ.குமரகுருபரன், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், நாமக்கல் ராமலிங்கம் எம்.எல்.ஏ, நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆகியோர் இன்று 379 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    வடக்கிழக்கு பருவ மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் இயல்புநிலை திரும்ப அமைச்சர் பெருமக்கள் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் நிலையை எண்ணிக்கொண்டிருக்கும் இதே வேலையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் எடுத்த முடிவை நாமக்கல் மாவட்டத்தில் நிறைவேற்றுகிறோம் என்ற மன நிறைவோடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 379 ஆசிரியர்களுக்கு இன்றைய தினம் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் குடும்ப உறுப்பினர்களை பிரிந்து பள்ளிக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். பெற்ற பிள்ளைகளை விட்டு மற்ற பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றும் மகத்தான பணியை மேற்கொண்டு வருபவர்கள் நமது ஆசிரியர்கள்.

    ஆசிரியர்கள் இல்லை என்றால் இன்று மேடையில் நாங்கள் இல்லை. நீங்கள் இல்லை என்றால் சமுதாயத்தில் சிறந்து விளங்கிட இயலாது. இவ்வாறு மாணவர்களின் கனவுகளை நனவாக்கிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது.

    இன்றைய தினம் 379 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. 2-ஆம் கட்டத்தில் 964 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதியாக கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்லாது பங்கேற்றவர்களுக்கும் சான்று வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது. வெற்றி பெற்றவர்களும், பங்கேற்றவர்களும் தொடர்ந்து அடுத்த ஆண்டும் கனவு ஆசிரியர் விருது பெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இன்று நமது இனமான பேராசிரியர் அவர்களின் பிறந்த நாள். இச்சிறப்பு மிக்க நன்னாளில் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று அவரது பிறந்த நாளில் கனவு ஆசிரியர் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நான் முதல்வன் திட்டத்தையும், சென்ற ஆண்டு பிறந்த நாளின் போது பல்வேறு பள்ளிக்கல்வித்துறை திட்டங்களையும் அறிமுகப்படுத்தினோம்.

    அரசுப்பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை. நமது பெருமையின் அடையாளம் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ந.லதா, விவேகானந்தா கல்வி நிறுவன தாளாளர் மு.கருணாநிதி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சம்பவத்தன்று சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 7-ம் வகுப்பு படிக்கும் அண்ணனின் வகுப்பிற்கு சென்று அவரை அடித்ததாக கூறப்படுகிறது.
    • மாணவன் கதறி அழுத நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என வகுப்பு ஆசிரியர் மிரட்டியுள்ளார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புளியம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் 7 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 7-ம் வகுப்பு படிக்கும் அண்ணனின் வகுப்பிற்கு சென்று அவரை அடித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று பள்ளி யின் 7-ம் வகுப்பு ஆசிரியர் அன்புமணி 6-ம் வகுப்பிற்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவரின் சட்டையை கழற்ற வைத்து முதுகில் சரமாரியாக அடித்துள்ளார். மாணவன் கதறி அழுத நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார்.

    இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற மாணவரின் முதுகு வீங்கி இருந்ததை பார்த்த பெற்றோர் விசாரித்தபோது சிறுவன் நடந்தவற்றை கூறியுள்ளான். இதையடுத்து அவனை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர் ஆசிரியர் அன்புமணி மீது ஓமலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர் அன்புமணி மீது தாக்குதல் நடத்துவது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    • மாணவர்கள் மூலம் அகற்றம்
    • கனமழை பெய்ததன் காரணமாக தேங்கியது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள காவேரிப்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு உள்ள பழைய கட்டிடங்களை புதுப்பிப்ப தற்காக தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. நேற்று கனமழை பெய்ததன் காரணமாக பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்ற கட்டிடத்தின் மீது மழை நீர் தேங்கியது.

    இந்நிலையில் தலைமை ஆசிரியர் உத்தரவின் பேரில் கட்டிடத்தில் தேங்கிய மழை நீரை மாணவர்கள் அகற்றினர்.

    இது குறித்து தலைமை ஆசிரியரிடம் விசாரித்த போது:-

    கட்டிடத்தின் மேல் தளத்தில் மழைநீர் தேங்கினால் கட்டிடம் சேதமடைந்து விடும் இதனால் மழை நீரை அகற்றியதாக தெரிவித்தார்.

    பள்ளி கட்டடத்தின் மேல் தளத்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் மழை நீரை அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • கோவிந்தபுரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் பழனி திடீர் ஆய்வு மேற்கொண்டார்
    • பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கோவிந்தபுரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை மாவட்ட கலெக்டர் பழனி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது காலை 9.15 மணி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாடம் நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பழனி அதிரடி உத்தரவிட்டார்.

    • மாணவி, தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளிடம் அவர் தனித்தனியாக விசாரித்தார்.
    • தலைமை ஆசிரியை கூறுகையில் மாணவியின் தரப்பின் அவரது பெற்றோர் அளித்தள்ள புகார் பொய்யானது.

    கோவை:

    கோவை மாவட்டம் துடியலூர் அசோகபுரம் பகுதியில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த பள்ளியில் 7-ம்வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் மாவட்ட முதன்மை கல்லி அதிகாரியை நேரில் சந்தித்து அவரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார்.

    நான் சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவள். துடியலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 7-ம்வகுப்பு படித்து வருகிறேன். இந்த நிலையில் எங்கள் பள்ளி வகுப்பு ஆசிரியை என்னிடம் அடிக்கடி மதரீதியாக விரோதம் காட்டி வருகிறார்.

    மேலும் அவர் என்னை நேரில் வரவழைத்து அவரது செருப்பை துடைக்க சொல்லி வற்புறுத்தினார். இதற்கு நான் மறுத்து விட்டேன். எனவே ஆத்திரம் அடைந்த ஆசிரியை என்னை அவதூறாக பேசி தாக்க பாய்ந்தார். மேலும் என் தந்தை செய்யும் தொழில் குறித்து அவதூறாக பேசி ஏளனம் செய்தார்.

    இது என்னை வெகுவாக பாதித்தது. மேலும் எனது கல்வித்திறனும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே நான் இதுகுறித்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியையிடம் நேரடியாக புகார் அளித்தேன். ஆனாலும் அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே கோவை மாவட்ட கல்வித்துறை உயரதிகாரிகள் இதுதொடர்பாக நேரடி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    மாணவி புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி இன்று நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மாணவி, தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளிடம் அவர் தனித்தனியாக விசாரித்தார்.

    பள்ளி தலைமை ஆசிரியை கூறுகையில் மாணவியின் தரப்பின் அவரது பெற்றோர் அளித்தள்ள புகார் பொய்யானது. எதற்காக இந்த புகார் கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. புகாரில் குறிப்பிட்டது போன்று எந்த சம்பவங்களும் இங்கு நிகழவில்லை என்றார்.

    • நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயா தலைமை தாங்கினார்.
    • மாணவ - மாணவிகளின் பல்சுவை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மார்த்தாண்டம் :

    வில்லுண்ணிக்கோணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 44-வது ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி சிவகலா முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் சேம் பிரின்ஸ் குமார் அனைவரையும் வரவேற்றார். திருவட்டார் யூனியன் சேர்மன் ஜெகநாதன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுனு, முன்னாள் மாணவர் சோழராஜன் ஆகியோர் பேசினர். மாவட்ட பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.சிந்து குமார் பரிசு வழங்கினார்.தமிழ் ஆசிரியர் சிவகாமி நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியை லிஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவ - மாணவிகளின் பல்சுவை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • புதிய தொழில்நுட்பத்தில் “கிளாஸ் ஆன் வீல்ஸ்” என்ற பெயரில் குளிரூட்டப்பட்ட சொகுசு டிஜிட்டல் பேருந்து உருவாக்கி உள்ளனர்.
    • டிஜிட்டல் பஸ் ஆண்டுக்கு 5 ஆயிரம் குழந்தைகளுக்கு கணினி கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 2013-ம் ஆண்டு எம் நண்பர்கள் என்ற வாட்ஸ்அப் குழு தொடங்கப்பட்டது. இந்த குழு மூலம் பல ஆண்டுகளாக சமூக சேவை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாட்ஸ்அப் குழுவின் 10-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிராமப்புற குழந்தைகளுக்காக ஒரு புதிய தொழில்நுட்பத்தில் "கிளாஸ் ஆன் வீல்ஸ்" என்ற பெயரில் குளிரூட்டப்பட்ட சொகுசு டிஜிட்டல் பேருந்து உருவாக்கி உள்ளனர்.

    இந்த டிஜிட்டல் பேருந்து முழு கணினி வகுப்பறையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வகுப்பறைக்குள் 2 ஏ.சி. பொருத்தப்பட்டுள்ளது. 16 மாணவர்கள் ஒரே நேரத்தில் படிக்க 16 லேப்டாப் கம்ப்யூட்டர்கள், கீபேட், மவுஸ், சார்ஜர்கள், 16 சுழலும் நாற்காலிகள், 16 மடிப்பு மேஜைகள் உள்ளன. இதுதவிர ஆசிரியர்களுக்கு தனி கணினி, நாற்காலி, மேஜையும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் புரொஜெக்டர், விளக்கக்காட்சிக்கான டி.வி., மியூசிக் சிஸ்டம், மைக் சவுண்ட் சிஸ்டம், விளக்குகள், எல்இடி டிஜிட்டல் போர்டு ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன. வைபை, ஆன்லைன் கல்விக்கான இணையம் ஆகியவையும் இணைக்கப்பட்டு உள்ளன. மேலும் கலர் பிரிண்டர், ஜெராக்ஸ் மெஷின் மற்றும் ஸ்கேனர் ஆகியவையும் உள்ளன.

    மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைக்காக பேருந்து கதவு அருகே அதிநவீன பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 25 பேர் வரை அமரும் மல்டி ஸ்பெஷாலிட்டி வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த டிஜிட்டல் வகுப்பறைக்குள் நுழைய 3 நுழைவாயில்கள் உள்ளன. குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி. கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் பஸ் முழு வகுப்பறையாக மாற்றப்பட்டுள்ளது.

     

    மேலும் இந்த பேருந்தில் 6.8 கே.வி. திறன் கொண்ட அதிநவீன ஜெனரேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கை கழுவுவதற்கு பஸ்சுக்கு மேல் 200 லிட்டர் தண்ணீர் தொட்டி, வாஷ் பேசின், 40 லிட்டர் குடிநீர் வசதி, இரண்டு ஏசி அவுட் டோர் யூனிட்கள், பேட்டரி பாக்ஸ், கருவி பெட்டி ஆகியவை உள்ளன. இந்த டிஜிட்டல் பஸ் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு கணினி கல்வியை வழங்கும். இந்த பஸ் மூலம் ஒரு மாணவருக்கு குறைந்தபட்சம் 15 முதல் 20 மணிநேரம் பயிற்சி படிப்படியாக வழங்கப்படும். ஒரு நாளைக்கு நான்கு பள்ளிகளுக்குச் சென்று தலா ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை வகுப்பு நடத்தும். இதற்காகவே தனி பாடத்திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. பேருந்தில் இரண்டு கணினி ஆசிரியர்கள், அனுபவம் வாய்ந்த ஓட்டுநர் மற்றும் ஒரு நடத்துநர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அரசு விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை டிஜிட்டல் பஸ் இயக்கப்படும். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் செலவாகும்.

    இது குறித்து எம் பிரண்ட்ஸ் தலைவர் முகமது ஹனிப் கூறியதாவது:-

    வாட்ஸ்அப் குரூப் மூலம் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் இருந்து பல சமூக சேவைகளை செய்து வருகிறோம். கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுடன் போட்டி போட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்காக இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். டிஜிட்டல் பஸ் ஆண்டுக்கு 5 ஆயிரம் குழந்தைகளுக்கு கணினி கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

    • பள்ளி வளாகத்தில் மதுபாட்டில்கள் மற்றும் மனித கழிவுகள் கிடந்தது.
    • காலாண்டு தேர்வு விடுமுறையின் போதும் பள்ளி வளாகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடந்தது.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கிரி சமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 168 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    பள்ளியின் தலைமை ஆசிரியராக கண்ணம்மாள் என்பவர் உள்ளார். இந்த பள்ளியில் சுற்று சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் அடிக்கடி வந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

    தற்போது கடந்த 2 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று காலை வழக்கம்போல் பள்ளியை ஆசிரியர்கள் திறந்தனர்.

    பள்ளி வளாகத்தில் மதுபாட்டில்கள் மற்றும் மனித கழிவுகள் கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த பள்ளியில் தூய்மை பணியாளர் இல்லை. தற்காலிகமாக பணியாளர்களை அழைத்து தூய்மை பணி செய்து வருகிறோம். பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தரகோரி பலமுறை மனு அளித்துள்ளோம்.

    இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல் காலாண்டு தேர்வு விடுமுறையின் போதும் பள்ளி வளாகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுங்கரஅள்ளி நடுநிலைப் பள்ளியில் 152 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

    தீபாவளி விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளி திறக்கப்பட்டதும். பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி தனது அறையை திறந்தார்.

    அப்போது அறையில் இருந்த பிளாஸ்டிக் சேர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்குவதற்காக வைக்கப்பட்டு இருந்த அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் கடத்தூர் போலீசாருக்கும் தகவல் அளித்தார்.

    தகவலறிந்த கல்வித்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் மர்ம நபர்கள் சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளிக்குள் நுழைந்து, தலைமை ஆசிரியர் அறையின் ஜன்னலை திறந்து தீ வைத்து சென்றிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளிக்கு காம்பவுன்ட் சுவர் இல்லாததால் பல நேரங்களில் மர்ம நபர்கள் மது குடிப்பதற்காக பள்ளி கட்டிடப்பகுதியை பயன்படுத்தி வருகின்றதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அரசு பள்ளியில் அறிவியல் நிகழ்ச்சி நடந்தது.
    • முடிவில் ஆசிரியை அருவகம் நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை கிழக்கு ஒன்றியம் கருப்பாயூரணி எல்.கே.பி.நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் மஞ்சள் பை அறக்கட்டளை சார்பில் 'அறிவியல் களியாட்டம்' என்ற நிகழ்வில் எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்து காட்டுதல் நிகழ்வு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. அறிவியல் ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராஜ வடிவேல் வரவேற்றார். சென்னையில் இருந்து அறிவியல் ஆசான் அறிவரசன் வருகை புரிந்து செயற்கை ரத்தம் உருவாக்குதல், சினிமாக்களில் புகை உருவாக்கும் விதம், கார்களில் ஏர் பலூன் செயல்படும் விதம், நெருப்பு உருவாதல், பரப்பை பொறுத்து அழுத்தம் எவ்வாறு மாறுகிறது என்ற சோதனை, ஒளி உருவாதல், நுரை உருவாக்கும் சோதனை, புகை உருவாதல் போன்ற பல வகையான சோதனைகளை செய்து காண்பித்து அறிவியல் மனப்பான்மை குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளக்கினார். நிகழ்ச்சியில் விஞ்ஞானி ஆக்கம் சங்கர், மஞ்சப்பை அறக்கட்டளை நிறுவனர் கிருஷ்ணன், கல்வி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முகமது கனி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை அருவகம் நன்றி கூறினார்.

    • அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தினமும் மதியம் முட்டை கட்டாயமாக வழங்கப்பட்டு வருகிறது.
    • கடந்த 3 நாட்களாக மாணவ-மாணவிகளுக்கு முட்டை வழங்கப்படவில்லை.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி மாணவ-மாணவிகளின் பசியை போக்கும் வகையில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தினமும் மதியம் முட்டை கட்டாயமாக வழங்கப்பட்டு வருகிறது. இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகவும் இருந்து வருகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் வாரந்தோறும் 92 ஆயிரம் முட்டைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி மொடக்குறிச்சி தாலுகாவில் 126 பள்ளிகளும், கொடுமுடி தாலுகாவில் 90 பள்ளிகளும் வாரந்தோறும் முட்டை பெறுகின்றன.

    இதில் பல பள்ளிகளில் உள்ள மதிய உணவு மையங்களில் உள்ள சமையலர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கடந்த புதன்கிழமை மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகி போய் இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பிரச்சனையை எடுத்துக் கூறினர். அதனைத் தொடர்ந்து கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்பட்ட முட்டைகளும் அழுகிய நிலையில் காணப்பட்டன.

    இதனால் கடந்த 3 நாட்களாக மாணவ-மாணவிகளுக்கு முட்டை வழங்கப்படவில்லை. மொடக்குறிச்சி தாலுகாவில் உள்ள 27 பள்ளிகளில் ஆயிரத்து 348 முட்டைகளும், கொடுமுடி தாலுகாவில் 13 பள்ளிகளில் 767 முட்டைகளும் அழுகிய நிலையில் காணப்பட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. மேலும் இச்சம்பவம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    அவரது உத்தரவின் பேரில் முட்டைகளின் மாதிரிகளை துறையினர் சோதனைக்காக எடுத்துச் சென்றனர். பின்னர் முட்டையை சப்ளை செய்த நிறுவனத்திடம் நல்ல முட்டைகளை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×