search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளி"

    • ஆசிரியை வகுப்பறைக்கு வருவதற்கு முன்பாக ஹேப்பி பர்த்டே மேடம் என பெயர் பலகையில் எழுதி வரவேற்பு அளித்தனர்.
    • ஆசிரியை மெய்மறந்து குத்து பாட்டுக்கு ஏற்றார்போல் நடனம் ஆடினார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் உள்ள அரசு பள்ளியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஆசிரியை வேலை செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் மாணவர்கள் ஆசிரியையின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகளை செய்தனர்.

    காலை ஆசிரியை வகுப்பறைக்கு வருவதற்கு முன்பாக ஹேப்பி பர்த்டே மேடம் என பெயர் பலகையில் எழுதி வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் வகுப்பறையில் பிறந்தநாள் கேக் வெட்டி ஆசிரியைக்கு ஊட்டினர். தங்களது செல்போனில் இந்தி படத்தில் இருந்து குத்துபாட்டை ஒலி பரப்பினர்.

    அப்போது ஆசிரியை மெய்மறந்து குத்து பாட்டுக்கு ஏற்றார்போல் நடனம் ஆடினார். மாணவர் ஒருவர் ஆசிரியையின் சேலை முந்தானையை எடுத்து அவரது முகத்தை மூடியபடி நடனம் ஆடினார்.

    இந்த காட்சிகளை வகுப்பறையில் உள்ள மாணவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

    ஆசிரியையின் நடனத்தை பார்த்த பலரும் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடுவது தவறில்லை. ஆனால் வகுப்பறையில் நடனம் ஆடியதால் அவர் ஆசிரியையாக இருப்பதற்கு தகுதியற்றவர் எனவும், ஆசிரியை வகுப்பறையில் நடனம் ஆடியது தவறில்லை எனவும் பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். 

    • ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க தவமாய் கிடக்கிறார்கள்.
    • 6-ம் வகுப்பில் மொத்தம் உள்ள 600 இடங்களில் 500-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பின.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி உள்ளது. வருகிற 2024-25ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் முதல் வகுப்பு, 6-ம் வகுப்புகளில் அதிகளவில் சேர்த்து வருகின்றனர். 5 நாட்களில் 60 ஆயிரம் பேர் சேர்ந்து உள்ளனர்.

    இந்நிலையில் சென்னையில் அசோக் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க ஆர்வத்துடன் பெற்றோர் குவிகிறார்கள். இந்த பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவதால் எவ்வித செலவும் இல்லாமல் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்புகின்றனர்.

    குறிப்பாக 6-ம் வகுப்பில் சேர்க்க அலைமோதுகிறார்கள். விண்ணப்பம் கொடுக்க தொடங்கிய முதல் நாளில் பெற்றோர் குவியத் தொடங்கினர்.

    ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க தவமாய் கிடக்கிறார்கள். விண்ணப்ம் வாங் குவதற்கு நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

    6-ம் வகுப்பில் மொத்தம் உள்ள 600 இடங்களில் 500-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பின.

    இது குறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், அசோக் நகர் மேல் நிலை பள்ளியில் குறிப்பாக 6-ம் வகுப்பில் அதிக மாணவர் சேர்க்கை நடப்பது வழக்கம். அப் பகுதியில் உள்ள மெட்ரிக் குலேஷன், தனியார் பள்ளிகளில் படிப்பை பாதியில் விட்டு விட்டு மாணவர்கள் இங்கு சேருகின்றனர் என்றார்.

    இந்த பள்ளியில் 4500 மாணவர்கள் படித்து வருகின்றனர். 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவிகள் முழு அளவில் தேர்ச்சி பெறுவதால் பெற்றோர்கள் இந்த பள்ளியில் சேர்க்க ஆர்வமாக உள்ளனர்.

    அரசு பள்ளிகள் என்றாலே தரம் இருக்காது, கட்டமைப்பு வசதி இருக்காது என்ற பொதுவான பார்வைக்கு மத்தியில் அசோக்நகர் அரசு மகளிர் பள்ளி மட்டும் தனித்துவமாக விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் அலைந்து திரிகிறார்கள்.

    • சேலம் மற்றும் மதுரையில் அரசு பள்ளிகளில் சேர அதிகம் பேர் ஆர்வம் காட்டினார்கள்.
    • சென்னையை பொருத்தவரை 13,135 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்காக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர் சேர்க்கை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 1-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்மூலம் கடந்த 1-ந்தேதி முதல் அரசு பள்ளிகளில் 2024-2025-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக பள்ளிகளை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை மையமாக வைத்து இந்த பிரசார இயக்கம் நடத்தப்படுகிறது.

    இதன்மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் மட்டும் 3.31 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர். சேலம் மற்றும் மதுரையில் அரசு பள்ளிகளில் சேர அதிகம் பேர் ஆர்வம் காட்டினார்கள். இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் மட்டும் அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 19,242 மாணவர்கள் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர்.

    இதையடுத்து மதுரையில் 18,127 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். திண்டுக்கல்லில் 17,036 மாணவர்களும், திருவள்ளூரில் 15,207 மாணவர்களும், திருவண்ணாமலையில் 13,679 மாணவர்களும், திருப்பூரில் 13,204 மாணவர்களும் அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ந்துள்ளனர்.

    சென்னையை பொருத்தவரை 13,135 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். சென்னை மாதவரத்தில் 1,568 மாணவர்களும், சிந்தாதிரிப்பேட்டையில் 1,058 மாணவர்களும், ஆலந்தூரில் 1,220 மாணவர்களும், ராயபுரத்தில் 1,298 மாணவர்களும் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

    • நியூட்டன் விதி சார்ந்த கேள்விகளை கேட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நியூட்டனின் 3 விதிகளையும் படித்து காட்டினார்.
    • கலெக்டரே ஆசிரியராக மாறி பாடம் நடத்தியதால் மாணவ-மாணவிகளும் உற்சாகமாக பாடங்களை கவனித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட செல்லும் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் இருந்தால் உடனடியாக அங்கு சென்று மாணவ-மாணவிகளை சந்தித்து கலந்துரையாடுவது வழக்கம்.

    அதன்படி நேற்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பெருந்துறை பெரியவீரசங்கிலி ஊராட்சிக்கு சென்றார். கைக்கோளபாளையத்தில் உள்ள பெரியவீரசங்கிலி அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிய கழிவறை கட்டும் பணியை பார்வையிட்டார். அப்போது மாணவ-மாணவிகளை பார்த்ததும் உற்சாகம் அடைந்த கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழக்கம்போல அவர்களுடன் கலந்துரையாடினார்.

    மேலும் 10-ம் வகுப்பு அறைக்கு கலெக்டர் சென்றபோது, மாணவ-மாணவிகள் படித்துக்கொண்டு இருந்தனர். அங்கு ஒரு புத்தகத்தை வாங்கிய அவர், அவர்கள் படித்துக்கொண்டு இருந்த அறிவியல் பாடம் தொடர்பாக கேள்விகள் கேட்டார். மாணவ-மாணவிகளும் உற்சாகமாக பதில் அளித்தனர்.

    அப்போது நியூட்டன் விதி சார்ந்த கேள்விகளை கேட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நியூட்டனின் 3 விதிகளையும் படித்து காட்டினார். மேலும் சிறிது நேரம் பாடம் நடத்தினார். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதை மாணவ-மாணவிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு பாட்டில் எடுத்து அதை மேஜையில் உருட்டி செய்முறை விளக்கமும் அளித்தார். கலெக்டரே ஆசிரியராக மாறி பாடம் நடத்தியதால் மாணவ-மாணவிகளும் உற்சாகமாக பாடங்களை கவனித்தனர்.

    • நான் இங்கு படித்து தற்போது பொள்ளாச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளேன்.
    • நாங்கள் படிக்கும் காலத்தில் ஆசிரியரிடம் பிரம்பில் அடி வாங்கியது மறக்க முடியாத அனுபவம்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி கோட்டூர் மலையாண்டிபட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அதே பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் ஓன்றுகூடி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் ஒருவருக்கொருவர் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நடராஜன் பேசுகையில், எனக்கு தற்போது 88 வயது ஆகிறது. இந்த பள்ளியில் 1983-86ம் ஆண்டுவரை படித்த மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. அன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் மிகுந்த கண்டிப்புடன் மாணவர்களை வழிநடத்துவர். எங்களிடம் படித்து முடித்து உயர் பதவிகளை வகிக்கும் மாணவர்களை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது என கூறினர்.

    ஆசிரியர் செல்வி கூறுகையில், நான் இங்கு படித்து தற்போது பொள்ளாச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளேன். என்னுடன் இதே பள்ளியில் படித்த நண்பர்களை சந்திப்பது உற்சாகம் தருகிறது என தெரிவித்தார். நாங்கள் படிக்கும் காலத்தில் ஆசிரியரிடம் பிரம்பில் அடி வாங்கியது மறக்க முடியாத அனுபவம் என நினைவலைகளை பகிர்ந்து கொண்ட மயூரா சுப்பிரமணியம், முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கு வந்திருந்த அதே ஆசிரியரிடம் பிரம்பை கொடுத்து அடிக்கும்படி கூறினார். இதற்கு முதலில் மறுத்த ஆசிரியர் பின்னர் செல்லமாக பிரம்பால் ஒரு அடி கொடுத்தார். இது அங்கு வந்திருந்த முன்னாள் மாணவ-மாணவிகள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    • திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.
    • வாரத்தில் ஏதேனும் 2 நாட்கள் மாலையில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பிஸ்கெட் அல்லது கேக் வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மாலையில் சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    வருகிற 14-ந் தேதி இந்த திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.

    இது சம்பந்தமாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், சீருடை ஆகியவற்றை வழங்குகிறோம். நின்றுபோன இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தையும் தற்போது தொடங்கியுள்ளோம்.

    பிரதமர் இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளார்.

    அதன்படி பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய உணவினை வழங்க உள்ளோம். மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வருகிற 14-ந் தேதி தொடங்க உள்ளோம்.

    இந்த திட்டத்தை காட்டேரிக் குப்பம் அரசுப்பள்ளியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர்.

    இந்த திட்டத்தின்படி வாரத்தில் ஏதேனும் 2 நாட்கள் மாலையில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பிஸ்கெட் அல்லது கேக் வழங்கப்படும்.

    சுமார் 20 கிராம் எடையில் இருக்கும். பள்ளிக்கூடம் முடிந்து மாணவ-மாணவிகள் வீடுகளுக்கு செல்லும்போது சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

    இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 84 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெறுவர். இதன்மூலம் 4 மாதத்துக்கு அரசுக்கு ரூ.90 லட்சம் கூடுதல் செலவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கல்வியை நாம் மகிழ்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும்.
    • மாணவர்கள் படிக்கும் பழக்கத்தை வழக்கத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

    அன்னூர்:

    கோவை அன்னூரில் உளள முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்களால் கட்டப்பட்ட புதிய வகுப்பறை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழக தலைமை செயலாளரும், எழுத்தாளருமான இறையன்பு பங்கேற்று கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    சாமிகளுக்குள் சண்டையில்லை. மனிதர்களுக்குள் தான் சண்டை. மனிதன் வாழும் வரை மாணவர்கள் தான். வாழ்வின் கடைசி வரை மனிதர்கள் கற்றுக் கொண்டு தான் உள்ளனர்.

    மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது ஒரு கைத்திறணையும் கற்று கொள்ள வேண்டும். இதற்காக கைத்திறண் வகுப்பு மாணவர்களுக்கு எடுக்கப்படுகிறது. கல்வியை நாம் மகிழ்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும்.

    தரையில் அமர்ந்து படித்தால் தான் மாணவர்களின் உடலுக்கு நல்லது. வயதானவர்களுக்கு மூட்டு வலி வருவதற்கு முக்கிய காரணம் தரையில் அமர்வதை தவிர்ப்பதால் தான். இளைஞர்கள் வரை இந்த வலி வருகிறது.

    ஒரு பள்ளியின் சிறப்பு கட்டிடங்களால் உயர்ந்தது இல்லை. அதன்மூலம் சிறந்த மனிதர்களை உருவாக்குவதில் தான் உள்ளது. பாடப்புத்தகத்தில் உள்ள தை மட்டும் படிக்கும் ஒருவர் ஒருபோதும் காலப்போக்கை கற்று கொள்ள முடியாது.

    பள்ளியின் பாடப்புத்தகம் தவிர வேறு புத்தகங்களையும் படித்தால் தான் சிறந்த அறிவை பெற முடியும். மாணவர்கள் படிக்கும் பழக்கத்தை வழக்கத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

    எப்போதும் விழிப்புடன் இருப்பவர்கள் தான்வெற்றி பெறுவார்கள். இன்றைய சிறுவர்களிடம் அதிக புத்திசாலித்தனம் உள்ளது.

    அதற்கு காரணம் இன்றைய நிலையில் செல்போனில் அனைத்து தகவல்களையும் பெற முடிந்ததால் தான். அதனை நீங்கள் சரியான பணிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    அன்றைய மாணவர்களுக்கு நூலகம் இருந்தது. அன்று மாணவர்களின் மனதில் லட்சியத்தை விதைப்பதற்கு யாரும் இல்லை. படிப்பின் மூலம் எந்தெந்த பணிகள் கிடைக்கும் என்று கூட தெரியாது.

    சரியாக படிக்காத மாணவர்களை ஆசிரியர்கள் உதா சீனம் படுத்தாமல் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து படிப்பை கற்று கொடுக்க வேண்டும்.

    அப்போது தான் சராசரி மாணவர்கள் தானாக படிப்பார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தாங்கள் எவ்வளவு சிரமப்பட்டு பணம் சம்பாதிக்கிறோம் என்பதை கூற வேண்டும். அப்போது தான் அவர்களை மேன்மைபடுத்த முடியும். பள்ளியில் படிக்கும் போது செல்போனுக்கு அடிமையாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். மாணவர்கள் போதை வஸ்துகளை பயன்படுத்துவரிடம் இருந்து விலகி செல்லுங்கள். இதனால் மாணவர்கள் சிறந்த இடத்தை அடைய முடியும்.

    இவ்வாறு அவர் என பேசினார்.

    இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்.
    • 2 மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு சத்துணவு சமையலர் பணியில் உள்ளனர்.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே காவயல் என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதி அதிகளவில் தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்கள் தோட்ட தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக கடந்த 1982-ம் ஆண்டு 5 ஏக்கரில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று கட்டப்பட்டது. இந்த பள்ளியில் அந்த தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    முதலில் இங்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல, செல்ல இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கியது.

    குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் மற்றும் டேன்டீ தொழிலாளர்களின் இடம் பெயர்வு போன்ற காரணங்களால் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.

    இந்த பள்ளி கட்டிடம் ஓட்டுச்சாவடி மையமாக உள்ளதால் அரசு நிர்வாகம் இதனை மூடாமல் பெயர் அளவிற்கு செயல்படுத்தி வருகிறது. பள்ளியில் தற்போது 4 மற்றும் 3-ம் வகுப்புகளில் தலா ஒரு மாணவிகள் வீதம் 2 பேர் மட்டுமே படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த பள்ளிக்கு புதிததாக ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதுகுறி த்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த பள்ளியில் 2 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வகுப்பறை நன்றாகவே இருந்தது. ஆனால் கட்டிடத்தை இடித்து விட்டு ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்.

    2 மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு சத்துணவு சமையலர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு கல்வித்துறை சம்பளம் வழங்கி வருகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இந்த பள்ளி கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்தது. அதனால் அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

    • மாணவர் ரவுல் ஜானை அமெரிக்க மாணவர்கள் தொடர்பு கொள்கிறார்கள்.
    • மாணவர் ரவுல்ஜானின் இந்த படைப்பு அவர் தொடங்கிய யூ-டியூப் சேனலின் மூலமாக தெரிய தொடங்கியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியில் உள்ள எடப்பள்ளி அமர்தநகரை சேர்ந்த தம்பதி அஜூ ஜோசப்-ஷெபா ஆன். இவர்களது மகன் ரவுல் ஜான். எடப்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர் ரவுல் ஜான், எதிர்கால தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்களில் ஆர்வமாக இருந்தார். இதன் காரணமாக அவர் மீபோட் என்ற பெயரில் ரோபோ ஒன்றையும் தயாரித்து வைத்துள்ளார்.

    பல மரங்களை பயன்படுத்தி தனது வகுப்பு தோழன் சையத் உதவியுடன் அதனை உருவாக்கி இருக்கிறார். பல மாதங்களுக்கு பிறகு உருவாகியிருக்கும் அந்த ரோபோ, தொடக்கத்தில் கம்ப்யூட்டர் கேம் போன்றே வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்பு அதில் பல தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நாம் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் மாணவர் ரவுல்ஜான் உருவாக்கியிருக்கிறார்.

    மாணவர் ரவுல் ஜான் தயாரித்துள்ள அந்த ரோபோ, நாம் கேட்கும் கேள்வியின் தன்மைக்கு தகுந்தாற்போல் பதிலளிக்கும் வகையில் உள்ளது. அதாவது ஆத்திர மூட்டும் கேள்வியாக இருந்தால் அதே தொணியிலும், சந்தேகத்தின் அடிப்படையில் பணிவாக இருந்தால் அந்த தொணியிலும் பதில் கொடுக்கும்.

    மாணவர் ரவுல்ஜானின் இந்த படைப்பு அவர் தொடங்கிய யூ-டியூப் சேனலின் மூலமாக தெரிய தொடங்கியது. வெளி நாட்டில் உள்ள படிப்பு தளங்கள் கலந்துரையாடலின் போது ராவல் ஜானின் திறமையை அங்கீகரித்தது. இதன்மூலம் மாணவர் ரவுல் ஜானை அமெரிக்க மாணவர்கள் பலர் கூகுள் மீட் மூலம் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்.

    அதன் மூலமாக அமெரிக்க மாணவர்களுக்கு அவர் வகுப்பு எடுத்து வருகிறார். ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர்கள் வரை பங்கேற்று ரவுல் ஜானிடம் பல்வேறு கேள்விகளை கேட்கின்றனர். பெரும்பாலும் 2 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்கள் அவரிடம் யோசனைகளை கேட்கிறார்கள்.

    சில நேரங்களில் இரவு நேரத்திலும் மாணவர் ரவுல் ஜானை அமெரிக்க மாணவர்கள் தொடர்பு கொள்கிறார்கள். அப்போது அவர் தூங்கிவிட்டால் அவருக்கு பதிலாக அவர் தயாரித்துள்ள ரோபோ பதிலளிக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஆளில்லா விமானம் தயாரிப்பதே தனது அடுத்த இலக்கு என்று மாணவர் ரவுல் ஜான் தெரிவித்திருக்கிறார்.

    • நெல்லிக்குப்பம் சாலை காமராஜபுரத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
    • கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி உடன் இருந்தார்.

    வண்டலூர்:

    நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் நெல்லிக்குப்பம் சாலை காமராஜபுரத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. நேற்று சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு பயணம் மெற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென காமராஜபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வந்தார்.

    அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை குறித்து கேட்டறிந்து, உணவின் தரத்தை பரிசோதித்தார். அப்போது கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி உடன் இருந்தார்.

    • அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டது தான் காரணம்.
    • அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் 8643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றில் 1500 பணியிடங்களுக்கு மட்டும் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்திருக்கிறது. அரசு பள்ளிகளை மேம்படுத்த குறைந்தது ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டியுள்ள நிலையில், வெறும் 1500 ஆசிரியர்களை மட்டும் நியமிப்பது கண்டிக்கத்தக்கது; இது அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பதிலாக சீரழித்துவிடும்.

    கல்வியிலும், மனித வளத்திலும் தமிழகம் சிறந்து விளங்குவதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டது தான் காரணம். அரசு பள்ளிகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்துக் கொண்டு தரமான கல்வியை வழங்க முடியாது. எனவே, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மன நிறைவோடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்.
    • பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழாவில், கலெக்டர் ச.உமா தலைமையில், பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் ஜெ.குமரகுருபரன், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், நாமக்கல் ராமலிங்கம் எம்.எல்.ஏ, நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆகியோர் இன்று 379 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    வடக்கிழக்கு பருவ மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் இயல்புநிலை திரும்ப அமைச்சர் பெருமக்கள் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் நிலையை எண்ணிக்கொண்டிருக்கும் இதே வேலையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் எடுத்த முடிவை நாமக்கல் மாவட்டத்தில் நிறைவேற்றுகிறோம் என்ற மன நிறைவோடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 379 ஆசிரியர்களுக்கு இன்றைய தினம் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் குடும்ப உறுப்பினர்களை பிரிந்து பள்ளிக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். பெற்ற பிள்ளைகளை விட்டு மற்ற பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றும் மகத்தான பணியை மேற்கொண்டு வருபவர்கள் நமது ஆசிரியர்கள்.

    ஆசிரியர்கள் இல்லை என்றால் இன்று மேடையில் நாங்கள் இல்லை. நீங்கள் இல்லை என்றால் சமுதாயத்தில் சிறந்து விளங்கிட இயலாது. இவ்வாறு மாணவர்களின் கனவுகளை நனவாக்கிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது.

    இன்றைய தினம் 379 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. 2-ஆம் கட்டத்தில் 964 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதியாக கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்லாது பங்கேற்றவர்களுக்கும் சான்று வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது. வெற்றி பெற்றவர்களும், பங்கேற்றவர்களும் தொடர்ந்து அடுத்த ஆண்டும் கனவு ஆசிரியர் விருது பெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இன்று நமது இனமான பேராசிரியர் அவர்களின் பிறந்த நாள். இச்சிறப்பு மிக்க நன்னாளில் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று அவரது பிறந்த நாளில் கனவு ஆசிரியர் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நான் முதல்வன் திட்டத்தையும், சென்ற ஆண்டு பிறந்த நாளின் போது பல்வேறு பள்ளிக்கல்வித்துறை திட்டங்களையும் அறிமுகப்படுத்தினோம்.

    அரசுப்பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை. நமது பெருமையின் அடையாளம் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ந.லதா, விவேகானந்தா கல்வி நிறுவன தாளாளர் மு.கருணாநிதி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×