search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Womens Day"

    • கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி உமேஷ் யாதவ் - தன்யா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது.
    • குழந்தைக்கு குணார் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உமேஷ் யாதவ் விளையாடி வருகிறார். இவருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    கடந்த 2013-ம் ஆண்டு மே 29-ம் தேதி உமேஷ் யாதவ் - தன்யா வத்வாவுக்கு திருமணம் நடந்தது. கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி இந்த தம்பதியினருக்கு முதலாவதாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு குணார் என்று பெயர் சூட்டியுள்ளனர்.


    இந்த நிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்று உமேஷ் யாதவ் - தன்யா தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து உமேஷ் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


    மகளிர் தின நாளில் உமேஷ் யாதவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3- வது டெஸ்ட் போட்டியில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி பெண்களுக்கு தனது வாழத்துகளை தெரிவித்துள்ளார்.
    • இந்திய வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது என்றார்.

    உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி பெண்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது. பெண்களின் அதிகாரத்திற்காக அரசு தொடர்ந்து பணியாற்றும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வருகிற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம்.
    • இனியும் பல திட்டங்களை நாட்டிற்கே முன்னோடியாக நிறைவேற்ற உள்ளோம்.

    சென்னை:

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    "அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்" என்ற பாவேந்தரின் வரிகளால் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வருகிற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம்.

    பெண்ணுரிமை என்பதை வெறும் சொற்களால் அல்ல, நித்தமும் இத்தகைய எண்ணற்ற புரட்சித் திட்டங்களால் செய்து காட்டுவது தான் மாடல் என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளில் நிரூபித்திருக்கிறோம்.

    தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், பெண்ணினக் காவலர் கலைஞர் அவர்களும் பெருமை கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இனியும் பல திட்டங்களை நாட்டிற்கே முன்னோடியாக நிறைவேற்ற உள்ளோம்.

    'பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு, மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்போ' என்பதை நன்குணர்ந்து பெண்ணடிமைத்தனம் அகற்றுவோம். பெண்ணுரிமை காப்போம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி காண்போம்!

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • மாநகர ஆயுதப்படை வளாகத்தில் பெண் போலீசாருக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • முகாமில் பெண் போலீசாருக்கு மகப்பேறு தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகர ஆயுதப்படையில் உள்ள பெண் போலீசாருக்கு மகளிர் தினத்தை ஒட்டி சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமினை தலைமை இடத்து துணை போலீஸ் கமிஷனர் அனிதா மற்றும் துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

    முகாமில் பெண் போலீசாருக்கு உடல் பரிசோதனை, ரத்த அழுத்தம், மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள், ரத்தத்தில் சர்க்கரை அளவு, எடை மற்றும் உயரம், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு மகப்பேறு தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ராணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • அ.ம.மு.க. மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது.
    • நிகழ்ச்சியில் புதுச்சேரியில் உள்ள அனைத்து மகளிர் நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    அ.ம.மு.க. மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. மார்ச் 8-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறும் அ.ம.மு.க. மகளிர் தின விழாவில் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், மகளிர் அணி, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நிலையிலான மகளிர் நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

    • தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு 'பெண்களின் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு' எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
    • தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை அதிகாரி இசக்கி ராஜன் பெண்கள் பாதுகாப்பு குறித்து எடுத்துக்காட்டோடு எடுத்துரைத்தார்.

    கோவில்பட்டி:

    நேஷனல் பொறியியல் கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பாக தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு 'பெண்களின் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு' எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    தூத்துக்குடி மண்டல ஜூனியர் ஜேசி பயிற்சியாளர் எஸ்.ஜூஆனா கோல்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, பெண்கள் தம் செயல்களை கால நிர்ணயப்படி 'தேவை, தேவையற்றவை, முக்கியம், முக்கியமற்றவை" என 4 பிரிவுகளாக பிரித்து அதனை செயல்படுத்த வேண்டும் என்றும், பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது என்பதனையும், பெண்கள் முன்னேற்றமே வீட்டையும் நாட்டையும் மேன்மையடையச் செய்யும் என்பதையும் அழகாக எடுத்துரைத்தார்.

    தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை அதிகாரி இசக்கி ராஜன் பெண்கள் பாதுகாப்பு குறித்து எடுத்துக்காட்டோடு எடுத்துரைத்தார். மேலும், அவர் பேரிடர் மற்றும் ஆபத்து காலங்களில் பெரும் குரல் கொடுத்தும், அவசர கால உதவி எண் 112-ஐ பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    முன்னதாக, மாணவி செண்பகலட்சுமி வரவேற்றார், மாணவி எஸ்.சோபியா சிறப்பு விருந்துனரை அறிமுகம் செய்தார். மாணவி ஸ்வேதா நன்றி கூறினார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல், கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர்களின் ஆலோசனையின் படி தேசிய மாணவர் படை அதிகாரிகள் கேப்டன் என்.பி.பிரகாஷ், லெப்டினன்ட் ஜி.ஆர்.ஹேமலட்சுமி மற்றும் தேசிய மாணவர் படை மாணவ- மாணவிகள் செய்திருந்தனர்.

    நமது பண்பாடுகளில் பெண்மையை போற்றுதல் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்மையை போற்றி, பெண்களுக்கு அழகான, இயல்பான பாதுகாப்பை அளிப்போம்.
    பண்டைய காலம் முதல் இன்று வரை பண்பாடு நிறைந்த மூத்த இனம் எதுவெனில், அது நாம் பிறந்த தமிழர் இனம் தான். மேற்கத்திய கலாசார புழுதியில் சிக்கினாலும், பிறரைவிட தமிழர் பண்பாடு இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது. அதனை இன்றும் கிராமங்களில் பார்க்கலாம். நமது பண்பாடுகளில் பெண்மையை போற்றுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

    தாய் மண், தாய்மொழி, அன்னை பூமி என்று எதிலும் நம்மை ஈன்றெடுத்த தாய்க்கு முதலிடம் தருகிறோம். அதோடு தெய்வங்களிலும் பெண் தெய்வங்களை தான் பலரும் வணங்குகிறோம். பொதுவாக பெற்றெடுத்த தாயை, அம்மா என்று தான் அழைப்போம். பிறரிடம் கூறும்போது தான் எனது தாய் என்று கூறுவோம். அப்போதும் பெரும்பாலும் அம்மா என்றே குறிப்பிடுவோம்.

    தாய் எனும் உறவுமுறை சொல்லால், பெற்றெடுத்த தாயை அழைப்பதில்லை. ஆனால், தாயை தவிர பிற பெண்களை, தாய் என்று அழைக்கும் வழக்கம் நமது பண்பாட்டில் இருக் கிறது. தங்கையை உடன் பிறந்த அண்ணன், தாய் என்றும் அழைப்பதை கிராமங்களில் நாம் கேட்கலாம். தாயை போன்று தன் மீது அக்கறை கொண்டவள் என்பதால், தங்கையை அவ்வாறு அழைப்பார்கள்.

    மேலும் உடன் பிறந்த தங்கை மட்டுமின்றி, தன்னை விட வயது குறைந்த பிற பெண்களையும் தங்கை என்று குறிப்பிடுவோம். அதை கிராமங்களில் தங்கச்சி என்றும், தாய் என்றும் அழைப்பதை கேட்கலாம். நண்பரை பார்க்க வீட்டுக்கு சென்றால் கூட, நண்பரின் தங்கையை பெயரை சொல்லி அழைப்பது இல்லை. அது சிறுமிகளாக இருந்தாலும் தாயி, அண்ணன் இருக்கிறாரா? என்று தான் கேட்பார்கள். அதிலும் சிலர் நண்பரின் தங்கையாக இருந்தாலும் அந்த பெண்ணின் பெயரை கூட கேட்பதற்கு அக்கறை காட்டுவது இல்லை. ஒரே வார்த்தை, தாய் என்று குறிப்பிட்டு பேசி விடுவார்கள்.

    ஈன்ற தாயை கூட தாய் என்று அழைக்காத நிலையில், பிற பெண்களை ஏன்? தாய் என அழைக்க வேண்டும். அதிலும் வயது குறைந்த பெண்களையும் தாய் என்று அழைக்க வேண்டுமா? என்ற கேள்வி பலருக்கு எழலாம்.

    வயது குறைந்த பெண்களாக இருந்தாலும் தாய் என்று அழைக்கும் போதே மனம் கள்ளம், கபடம் எதுவுமின்றி தெளிவான நிலைக்கு வந்து விடும். அந்த வார்த்தைக்கு அத்தனை மந்திர சக்தி உண்டு. அதன் மூலம் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். அதேநேரம் ஆண்களுக்கும் மிகுந்த மரியாதை கிடைக்கிறது. அதனால் தாயை தவிர, பிற பெண்களை தாய் என்று அழைக்கும் வழக்கத்தை கற்றுக் கொடுத்துள்ளனர்.

    இதுதவிர வயதில் மூத்த பெண்களை அக்கா, சித்தி, அத்தை என தகுந்த உறவுமுறைகளை வைத்து அழைப்பார்கள். அதேபோல் பெண்கள் பெரும்பாலும் ஆண்களை, ‘அண்ணே’ என்ற உறவுமுறையுடன் தான் அழைப்பார்கள். அதில் சமவயது ஆணாக இருந்தாலும் சரி, ஒன்றிரண்டு வயது குறைந்த ஆணாக இருந்தாலும் அண்ணே என்று அழைக்க பெண்கள் தயங்குவது இல்லை.

    இதனால் ஆண்களும், பிற பெண்களை தாய் என்று அழைக்க தொடங்கி விடுவார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு என்பது ஆயுதங்களோடு கூடவே செல்வது அல்ல. அற்புதமான உறவு முறையை குறிக்கும் வார்த்தையை கூறி அழைப்பது தான் முதல் பாதுகாப்பு என்று முன்னோர்கள் கற்று கொடுத்துள்ளனர். இது இன்றும் கிராமங்களில் நாடித்துடிப்போடு இருந்து கொண்டி ருக்கிறது.

    அது நாகரிக வேகத்தில் சின்னா பின்னமாகி விடாமல் காப்பது நமது கடமை. அடுத்த தலைமுறையிடம் அந்த பண்பாட்டை கொண்டுபோய் சேர்ப்பது முக்கியம். இதற்கு பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை. ஆண் குழந்தைகளிடம், பெண் குழந்தைகளை எப்படி அழைக்க வேண்டும், அதற்கு எந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்போம். அதன்மூலம் பெண்மையை போற்றி, பெண்களுக்கு அழகான, இயல்பான பாதுகாப்பை அளிப்போம்.

    உயர் கல்வி, தனித்திறன், வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக பெண்கள் இடம்பெயர்வது பெரிய அளவில் நிகழ்கிறது. திருமணம்தான் பெண்கள் இடம்பெயர்வதில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
    உலக அளவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்திருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதிலும் 2006-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளில் 12 சதவீதம் குறைந்துள்ளது. சமூக பொருளாதார காரணிகளில் மாற்றம் நிகழும்போது பெண்களின் பங்களிப்பு மீண்டும் உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

    பொருத்தமற்ற வேலை, குடும்ப பொறுப்புகள், வீட்டை விட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சூழல்கள், குறைந்த வருமானம் போன்ற காரணங்களால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம் சராசரி அளவை விட 22 புள்ளிகள் குறைவாக உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பெண்கள் இடம் பெயர்வது முக்கிய காரணமாக இருக்கிறது. உயர் கல்வி, தனித்திறன், வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக பெண்கள் இடம்பெயர்வது பெரிய அளவில் நிகழ்கிறது.

    திருமணம்தான் பெண்கள் இடம்பெயர்வதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. 3.1 ஒரு சதவீத ஆண்களே திருமணத்திற்கு பிறகு இடம் பெயர்கிறார்கள். ஆனால் திருமணத்தால் இடம் பெயரும் பெண்களின் எண்ணிக்கையோ 71.2 சதவீதமாக இருக்கிறது. அதிலும் ஆண்கள் பணி சார்ந்து இடம் மாறும்போது மனைவியும் கட்டாயம் இடம்பெயர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. அங்கு சென்றபிறகு பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தாலும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இந்தியாவை பொறுத்தவரை திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் தேவை சார்ந்து இடம்பெயரும்போது கடும் எதிர்ப்பு எழுகிறது. அதேவேளையில் திருமணமான பெண்கள் சொந்த வீட்டில் இருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயரும்போது எதிர்ப்பு எழுவதில்லை.

    பெண்கள் தனியாக டிராவல் செய்யும்போது, எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    ஒருசில பெண்கள் துணிந்து தனியே வாழ முனைகிறார்கள். தனியாகப் பயணிக்கிறார்கள். அந்தப் பயணத்தின் வழியே வாழ்க்கையை அழகாக, ஆழமாகக் கற்றுக்கொள்கிறார்கள். பெண்கள் சோலோ டிராவல் செய்யும்போது, எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன?

    உலகம் முழுக்க தனியாகப் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாகச் சொல்கிறது ஆய்வு. ஆனால், ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் குறைந்த அளவிலேயே பயணம் செய்கிறார்களாம். இதற்குச் சமூகத்தில் பெண்களின் நிலை, அவர்களின் பாதுகாப்பு எனப் பல்வேறு காரணங்கள் தடைகளாக உள்ளன. குழுவாகப் பயணிப்பதில் இருக்கும் சுகத்தையும் தாண்டி, சோலோவாகப் பயணிப்பதில் அலாதி சுகம் கிடைப்பதாக பெரும்பாலான பெண்கள் உணர்கிறார்கள். தனியாக டிராவல் செய்ய நினைக்கும் பெண்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்படி ஃபிட்டாக வைத்துக்கொள்ளாமல் தயவுசெய்து தனியாக பயணம் செய்யாதீர்கள் என்பதே அவர்களின் அறிவுரையாக இருக்கிறது.

    முன்பெல்லாம் பயணம் செய்வது, காசு செலவு வைக்கும் வேலையாக இருந்தது. ஆனால், இப்போது, பயணம் செய்யும் முறை முற்றிலும் வேறு ஒரு கோணத்துக்கு வந்துவிட்டதால், மிகக் குறைந்த செலவிலேயே பல ஊர்களைச் சுற்றிப்பார்க்க முடிகிறது. அதற்குத் திட்டமிடல் ரொம்பவே முக்கியம். அதாவது, நீங்கள் போக விரும்பும் இடத்தை எவ்வாறு குறைந்த கட்டணத்தில் அடைய முடியும், தங்கும் வசதி என அனைத்தையும் திட்டமிட வேண்டும். நீங்கள் சைக்ளிஸ்ட்டாக இருந்தால் சைக்கிளையும் உடன் எடுத்துச் செல்லுங்கள். சைக்கிளில் ஊர் சுற்றிப் பார்க்கும் சுகமே அலாதியானதுதான்.

    பெண்களைப் பொறுத்தவரை குறைந்த விலை ஹோட்டல்கள் என்பதைவிட, பாதுகாப்பான ஹோட்டலா என்றுதான் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். அதனால் பணம் என்ற மதிப்புள்ள காகிதத்தை நம்பாமல், பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு பயணத்தை அனுபவியுங்கள்.

    தனியாகப் பயணிக்கும்போது, நீங்கள் பயணம் செய்யும் ரயிலிலோ, பேருந்திலோ உங்கள் அருகில் இருக்கும் பெண்களுடனோ, குடும்பத்துடனோ பேசி நட்புவைத்துக்கொள்ளுங்கள். அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள முயலுங்கள். அது ஒருவித பாதுகாப்பு உணர்வையும் உங்களுக்குள் ஏற்படுத்தும். `பயணத்துக்காகத் திட்டமிடும்போதே, ஆபத்து என்று அழைத்தால் உடனே வரும் நட்பையும் தேர்வுசெய்து, அவர்களிடம் பயண விவரங்களைத் தெரியப்படுத்திவிட்டு, அதன் பிறகு பயணிப்பது நல்லது. இது புலிகளின் காடல்ல, அன்பான இதயங்களும் அன்றாடம் பயணிக்கும் நாடு' என்பதை மனதில் நிறுத்துங்கள். அப்போதுதான் உங்களுக்குள் இருக்கும் தைரியம் தானாக ஊற்றெடுக்கும்.

    செல்லும் இடங்களிலும் நல்ல நல்ல மனிதர்கள் நம் கண்களுக்கு அகப்படுவார்கள். அவர்களின் உதவியையும் கேட்டுப் பெறுவதில் தவறில்லை. சுற்றுலா செல்லும் இடத்தில் இருக்கும் நண்பர்களின் நண்பர்களையும் தொடர்புகொள்ளும் வகையில் திட்டமிட்டு வைத்திருங்கள். அவசர காலத்தில் அது பயனுள்ளதாக இருக்கும்.

    யாரிடம் எது கேட்பதாக இருந்தாலும் தயக்கமின்றி தைரியமாகக் கேளுங்கள். யாரும் உங்களை எளிதில் அணுக முடியாதபடி கொஞ்சம் முரட்டுத்தனமாகவே இருங்கள் தப்பில்லை. பயணத்தில் பார்க்கும் மனிதர்களை முழுமையாக நம்பவேண்டும் என்கிற அவசியமில்லை. அவர்களின் மீது சந்தேகம் இருந்தால்தான், உங்கள் பாதுகாப்பின் மீது உங்களுக்குக் கவனம் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் பெப்பர் ஸ்ப்ரே, விசில், பாதுகாப்பு உபகரணங்களை உடன் எடுத்துச்செல்வது நல்லது. இவை தவிர எங்குச் செல்கிறீர்களோ அந்த இடத்தின் வரைபடத்தை (மேப்) வைத்துக்கொள்வது, இடம் தெரியாமல் திண்டாடுவது உள்ளிட்ட பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

    ×