search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaigai River"

    • மதுரை வைகை ஆற்றில் பேரிடர் மீட்பு குழு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
    • மதுரை மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம் கண்மாய், சரவண பொய்கை ஆகிய பகுதிகளிலும் நடந்தது.

    மதுரை

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான அணைகள் நிரம்பி உள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் கொள்ளளவு 71 அடி ஆகும். இதில் 70 அடிவரை தண்ணீர் நிரம்பி உள்ளது.

    வைகை அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் வைகை ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர், உபகரணங்களுடன் இன்று காலை மதுரைக்கு வந்தனர். அவர்கள் அரசினர் மீனாட்சி கல்லூரி அருகில் உள்ள வைகை ஆற்றுப்பகுதியில் ஒத்திகை நடத்தினர்.அவர்களுடன் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை அதிகாரிகளும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பேரிடர் தயார் நிலை, வெள்ளத்தை எதிர்கொள்ளுதல், பாதிக்கப்பட்டோருக்கு ரத்தப்போக்கை கட்டுப்படுத்துதல், தசைக்கட்டு காயங்கள், அடிப்படை உயிர் காக்கும் மருத்துவ சேவை, நோயாளிகளை தூக்குதல் -நகர்த்துதல், கயிறு மூலம் மீட்பு நடவடிக்கை, அவசர கால தயார் நிலை, ஆற்று வெள்ளத்தில் சிக்கியோருக்கு முதல் உதவி சிகிச்சை கொடுப்பது, மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பது ஆகியவை செயல் விளக்கமாக செய்து காண்பிக்கப் பட்டது.

    மதுரை மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம் கண்மாய், சரவண பொய்கை ஆகிய பகுதிகளிலும் பேரிடர் மீட்பு குழுவினரின் ஒத்திகை பயிற்சி நடத்தப்படுகிறது.

    • மானாமதுரை வைகை ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் சுவாமி, அம்பாள் உற்சவர் தனிபல்லக்கில் கொண்டு வரப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றுகரையில் பிரசித்தி பெற்ற ஆனந்த வல்லி சோமநாதஸ்வாமி கோவில் உள்ளது.

    மற்றொரு கரையில் வீர அழகர் கோவில் உள்ளது. 2 கோவில்களில் ஆடித்திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது.நேற்று ஆடிவிழாவில் முக்கிய விழாவான ஆடித்தபசுகாட்சி நடந்தது. பல ஆண்டுகளுக்கு பின்பு ஆடிவிழாவில் கோவில் முன்பு உள்ள வைகைஆற்றில் தண்ணீர் சென்றதால் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது.

    இதில் சுவாமி, அம்பாள் உற்சவர் தனிபல்லக்கில் கொண்டு வரப்பட்டது. மஞ்சள், பால், வைகை தீர்த்தமிட்டு அபிஷேகம், தீர்த்தவாரி, தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    இதேபோல் வீர அழகர்கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு சுந்தரபுரம் கடை வீதி வியாபாரிகள் சார்பில் நடந்த விழாவில் சுந்தரராஜபெருமாள் பூபல்லக்கில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றின் இருபுறமும் சாலைகள் அமைத்து மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆறு மணல் வளம் மிகுந்த பகுதி ஆகும். பல ஆண்டுகள் முன்பே மணல் குவாரி அமைக்கப்பட்டதால் தற்போது மணல் வளம் மறைந்து ஆறு முழுவதும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் மணல் குவாரி அமைக்க நடவ டிக்கை எடுத்த போது பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பால் மணல் குவாரி அமைக்கப்படவில்லை.

    15 ஆண்டுகளுக்கு முன்பு பணி புரிந்த சிவகங்கை மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன் மானாமதுரையில் உள்ள வைகை ஆறு முழுவதையும் சீரமைத்து கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார்.

    அதன் பின்னர் எந்த கலெக்டரும் வைகை ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் தடுப்பனை அமைத்தும் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய ஏதுவாக ஆற்றங்கரைகளில் சாலை அமைக்க திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    ஆனால் தடுப்பணை மட்டும் தான் அமைக்கப்பட்டது. சாலை அமைக்கப்படவில்லை. மானாமதுரை வைகை ஆற்று தடுப்பு அணைக்கு பின்பு ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் திருப்புவனம் பகுதியில் இரு இடங்களில் அமைக்கப்பட்ட தடுப்பணைகளில் ஆற்றின் இரு கரைகளிலும் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் மானாமதுரையில் அமைக்கப்படவில்லை.

    தற்போது வைகை ஆற்று பகுதியில் தலைச்சுமையாக அதிக அளவு மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதையும் பொதுப்பணித்துறையால் தடுக்க முடியவில்லை.

    வைகை ஆறு முழுவதும் கருவேல மரங்களால் சூழப்பட்டதால் தனியாக செல்ல முடியவில்லை. பொதுமக்கள் நடை பயிற்சி செய்ய மைதானம் ஏதும் மானாமதுரையில் கிடையாது.

    அதனால் வைகை ஆறு பாலத்தை கடந்து 4 வழிச்சாலை மற்றும் புதிய புறவழிச்சாலையில் செல்லும் நிலை உள்ளது.

    கடந்த 26-ந் தேதி சாலை வழியே சென்ற அ.ம.மு.க. நிர்வாகி சரவணன் ஓட ஓட வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். வைகை ஆற்றுக்குள் செல்ல முடியாமல் கருவேல மரங்கள் இருந்ததால் தப்ப முடியாமல் இறந்தார்.

    இதே போல் வைகை ஆற்று புதிய பாலத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வழிப்பறி கொள்ளையும் அடிக்கடி நடைபெறுகிறது. இதையும் தடுக்க முடியவில்லை. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதியாக வைகை ஆறு மாறி வருகிறது.

    பொதுமக்கள் பாதுகாப்பாக நடைபயிற்சி செய்ய மானாமதுரை ரெயில் பாலத்தில் இருந்து புதிதாக அமைக்கப்பட்ட தடுப்பணை வரை ஆற்றின் இருகரைகளிலும் சாலை வசதி அமைக்க வேண்டும்.

    மணல் திருட்டு தடுக்கப்பட வேண்டும். புதிய புறவழி சாலை பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும். வைகை ஆறு முழுவதும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மானாமதுரை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றில் மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மழை இல்லாததால் நீர்நிலைகள் வறண்டு போய் உள்ளன. இதனை பயன்படுத்தி கும்பல் தொடர்ந்து மணல் கடத்தி வருகின்றன.

    இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மணல் கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    தேனி மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் அதிகாரிகள் க.விலக்கு- கண்டமனூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது டிப்பர் லாரி நிற்காமல் வேகமாக சென்றது.

    லாரியை அதிகாரிகள் விரட்டி பிடித்தனர். அதிகாரிகளை கண்டதும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். சோதனையிட்டதில் வைகை ஆற்றில் இருந்து மணல் கடத்தியது தெரிய வந்தது. லாரியை பறிமுதல் செய்து க.விலக்கு போலீசில் ஒப்படைத்தனர்.

    மேலும் இது குறித்து முத்தனம்பட்டியை சேர்ந்த டிரைவர் செந்தில் (வயது36), உரிமையாளர் பவுன்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் வைகை ஆற்றில் மணல் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் வைகை ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் ஆற்றில் பல பகுதிகள் பள்ளங்களாக காட்சி அளிக்கிறது. எந்த வித வரைமுறையின்றி ஆற்று மணல் திருடப்பட்டு வருகிறது.

    பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் வைகை ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக கிராம நிர்வாக அதிகாரி இளங்கோவனுக்கு தகவல் கிடைத்தது.

    அவர் எமனேசுவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள சுடுகாடு ஆற்றுப்பகுதியில் மணல் திருடிக்கொண்டிருந்த எமனேசுவரத்தை சேர்ந்த பூதாகர், சங்கர் (வயது 32), அர்ச்சுணன் (27), மணி கண்டன் (34) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து பதிவு செய்யப்படாத 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மணல் திருட்டு தொடர்பாக இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இளையான்குடி பாசன கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது. #DMK
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுப.மதியரசன் தலைமையில் நடந்தது.

    பேரூர் செயலர் நஜிமுதீன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சென்ற ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வைகை தண்ணீர் இளையான்குடி பகுதியில் உள்ள பாசன கண்மாய்களுக்கு கிடைக்க தண்ணீர் திறக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அவைத்தலைவர் பெரியசாமி, துணைச் செயலர் மலைமேடு, நிர்வாகிகள் மூக்கையா, மலைச்சாமி, சேதுபதி துரை, சுந்தரம், அய்யனார், சிவனேசன், பழனிவேல், அஜய்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK
    வைகை ஆற்றில் நண்பர்களுடன் குளித்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

    மதுரை:

    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் நீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கடந்த வாரம் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டுச் சென்றது.

    தண்ணீர் வரத்து வந்ததையடுத்து மதுரை நகரில் இளைஞர்கள், மாணவர்கள் ஆபத்தை உணராமல் ஆற்றில் குளிக்கச் சென்றனர். இதில் நீச்சல் தெரியாமலும், ஆழமான பகுதிக்கு சிக்கியும் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தொடர்ந்து ஆபத்தான முறையில் ஆற்றில் பொதுமக்கள் இறங்குவதும், குளிப்பதும் நடந்து வருகிறது.

    மதுரை அவனியாபுரம், வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் நவீன் (10). மாணவனான இவன் நேற்று நண்பர்களுடன் அண்ணாநகர் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தான்.

    அப்போது நவீனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதில் தண்ணீரில் மூழ்கிய அவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நவீன் பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கழிவு நீர் கலப்பதை தடுத்து வைகை ஆற்றை பொக்கி‌ஷம் போல் பாதுகாக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். #AnbumaniRamadoss #VaigaiRiver

    மதுரை:

    வைகை ஆற்றை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மதுரையில் விழிப்புணர்வு பேரணி-பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது தெரிவித்ததாவது:-

    தமிழகத்தின் 4-வது மிகப்பெரிய நதி வைகை. ஆனால் இதனை தற்போது மதுரையின் கூவம் என்று சொல்கிறார்கள். இது மிகவும் வேதனையாக இருக்கிறது. சென்னையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கூவம் நதியில் குளித்தார்கள். குடிக்க நீர் எடுத்தார்கள். கோவிலில் அபிஷேகம் செய்தார்கள்.

    அதேபோல் வைகை ஆறும் புனிதமாகத்தான் இருந்தது. வைகை அணை நீர் சோழவந்தான் வரை நன்றாகவே வருகிறது. மதுரை மாநகராட்சிக்குள் வந்த பிறகுதான் கழிவு நீர் கலக்கிறது. அரசு ஆஸ்பதிரியில் இருந்து 5 லட்சம் லிட்டர் சுத்திரிகரிக்கப்படாத கழிவு நீர் வைகையில் கலக்கிறது.


    மதுரையில் 58 இடங்களில் 98 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வைகை ஆற்றில் கலக்கிறது. இது தவிர 200 தனியார் தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவு நீரும் கலக்கிறது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார் என கூறுகிறார்கள். ஆனால் அவர் சாக்கடையில் இறங்குகிறார் என்பது கசப்பான உண்மை. வரலாற்று சிறப்பு வாய்ந்த வைகை ஆற்றை சாக்கடையாக மாற்றி விட்டார்கள்.

    தமிழகத்தின் 4-வது மிகப்பெரிய நதி, 12 கிளைகள் ஒருங்கிணைந்த ஆறு, 6 அணைகளில் இருந்து வரும் நீர் 5 மாவட்டங்கள் வழியாக பாய்ந்து 4.17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதனை அரசாங்கம் பொக்கி‌ஷம்போல் பாதுகாக்க வேண்டும்.

    வைகையில் மணல் கொள்ளை நடக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு பாலத்திற்கு சமமாக மணல் இருந்ததாக வரலாறு கூறுகிறது.

    இந்தியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக வரலாறு காணாத வெள்ளம், அடுத்த 3 ஆண்டுகளில் கடும் வறட்சி என கால நிலை மாறப்போகிறது. அதற்கு தகுந்தாற்போல் நாம் தயாராக வேண்டும். வெள்ளம் காரணமாக வரும் தண்ணீரை வீணாக்க கூடாது. உபரிநீரை தேக்கி வைத்து பயன்படுத்த வேண்டும். கண்மாய் ஒரு தடவை நிரம்பினால் 3 ஆண்டுகளுக்கு அதை பயன்படுத்த முடியும். காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

    தமிழக அரசியல் சுத்தமாக இல்லை. அதனை சீர்திருத்த வேண்டியது எங்களின் கடமை என்று கருதுகிறோம். தமிழக அரசியலை பொறுத்தவரை நடிகர்கள் மட்டுமின்றி விளையாட்டு வீரர்கள் உள்பட யார் வேண்டுமானாலும் வரலாம். தி.மு.க.வில் நடப்பது உள்கட்சி பிரச்சினை. குடும்ப விவகாரம் அது பற்றி கருத்து கூறுவது நல்லதல்ல. தமிழகத்தில் இன்று நிர்வாகம் என்றால் கொள்ளை என்று அர்த்தம். தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகள் அறவே இல்லை.

    மத்திய அரசில் ஒரே நாடு, ஒரே தேர்தல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இது தேவையற்றது. பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும் என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராமநாதபுரத்துக்கு வைகை ஆற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விட அமைச்சர் மணிகண்டன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் கண்மாய்கள், ஊரணிகள், நீர்நிலைகள் வறண்டு விட்டன. மழை இல்லாததால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களும், நீர்நிலைகளும் கட்டாந்தரையாக காட்சி அளிக்கின்றன.

    குடிக்கக்கூட தண்ணீருக்காக கஷ்டப்பட்டு வரும் நிலை உள்ளது. நீர்நிலைகள் வறண்டதால் கால்நடைகளும், பறவைகளும் குடிக்க தண்ணீர் இல்லை.

    3 பக்கம் கடலால் சூழப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்படும் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் பெரும்பாலும் உப்புத் தண்ணீரே கிடைத்து வருகிறது.

    முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை தொகுதி களிலுள்ள ஆறுகள், கண்மாய், குளங்கள், வரத்து கால்வாய்களில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன. மண்மேடுகளால் தண்ணீர் செல்ல முடியாமலும், தேக்க முடியாமலும் மழைநீர் வீணாகி வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கலெக்டர் ஆயிரத்து 100 மில்லியன் கனஅடி தண்ணீர் வைகையில் இருந்து திறந்து விட வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    ராமநாதபுரத்திற்கு வைகை தண்ணீர் கிடைக்க அமைச்சர் மணிகண்டன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இது குறித்து அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை உணர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் வைகை அணையில் இருந்து 1800 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கை வைத்தேன்.

    எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தமிழக அரசு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வைகை அணையில் இருந்து ஆயிரத்து 800 மில்லியன் கனஅடி தண்ணீரை திறந்து விட பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அரசு ஆணை விரைவில் வெளியிடப்பட்டு ராமநாதபுரத்திற்கு விரைவில் வைகை தண்ணீர் வந்தடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் லாரிகள் மூலம் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் அதிக அளவு மணல் கொள்ளை நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும் அதிவேகமாக செல்லும் இந்த லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மணல் கடத்தி வந்த டிப்பர் லாரி மோதி பெண் ஒருவர் படுகாயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்த போதும் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விளாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் போலீசார் சோழவந்தான் பள்ளப்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

    அப்போது வேகமாக வந்த 2 டிப்பர் லாரிகளை மடக்கி சோதனையிட்டனர். அதில் வைகை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் மணல் கடத்திய மதுரை மாவட்டம் கணக்கன் குளத்தைச் சேர்ந்த இளையராஜா, எட்ராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நிலக்கோட்டை வைகை ஆற்றில் திருட்டு தனமாக மணல் அள்ளுவதை தடுப்பதற்காக போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
    கொடைரோடு:

    நிலக்கோட்டை அருகேயுள்ள அணைப்பட்டி வைகை ஆற்று பகுதியில் அனுமதியின்றி மணல்களை லாரி, டிராக்டர்கள் மூலம் ஏற்றி இரவு நேரத்தில் திருடி விற்பனைக்கு அனுப்பி வருவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    நீண்ட நாட்களாக தொடர்ந்து வைகை ஆற்றில் மணல் அள்ளி வருவதை தடுக்கவும் குடிநீர் ஆதாரமாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என பொதுமக்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர். நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை அடிக்கடி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    நிலக்கோட்டை வைகை ஆற்றில் மணல் கடத்தப்பட்டு வருவதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் போலீஸ் டி.ஐ.ஜி ஜோஷி நிர்மல்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோர் அனைப்பட்டி ஆற்று பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர்.

    அதன் பின்னர் போலீஸ் சோதனை சாவடி அமைக்க உத்தரவிட்டனர்.

    அதன்படி அணைப்பட்டி - குருவித்துரை செல்லும் சாலையிலும், வைகை ஆற்று பாலத்தில் அணைப்பட்டியிலும், சித்தர்கள் நத்தம் ஆகிய இடங்களில் போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த போலீஸ் சோதனை சாவடியில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 5-க்குமேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் மணல் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
    ×