என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vaigai River"
- தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது.
- பெரியாறு 98.4, வைகை அணை 3.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் சாரல் மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் 4 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது.
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் போதிய அளவில் மழை இல்லாத காரணத்தால் வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்து வந்தது. மேலும் கடந்த சில நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதே நேரம் மாலை நேரங்களில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதியுற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வந்ததால் கிராமங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
தொடர் சாரல் மழையின் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் நேற்று இரவு வெள்ளிமலை வனப்பகுதியில் 4 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. அதன் காரணமாக இன்று காலை வைகை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வரும் நாட்களில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என அந்தந்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வைகை அணையில் இருந்து தற்போது திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர் மட்டம் குறைந்தது. ஆனால் தற்போது பெய்து வரும் மழை காரணமாகவும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பின் காரணமாகவும், மீண்டும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 51.90 அடியாக உள்ளது. வரத்து 1000 கன அடி. திறப்பு 869 கன அடி. இருப்பு 2250 மி.கன அடி.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.30 அடி. வரத்து 6264 கன அடி. திறப்பு 1178 கன அடி. இருப்பு 3281 மி.கன அடி.
பெரியாறு 98.4, வைகை அணை 3.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
- படுகாயம் அடைந்த இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
- மோதலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை உருவி எதிர்தரப்பினரை மிரட்டினர்.
மதுரை:
மதுரையில் சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடைபெற்றது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர்.
இதில் மதுரை ஆழ்வார் புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் சோனை (வயது 28) ஆகியோரும் கலந்துகொண்டனர். நண்பர்களான இவர்கள் இருவரும் மதுரை மதிச்சியம் பகுதியில் இஸ்திரி கடை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இவர்கள் இருவரையும் சரமாரியாக கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
படுகாயம் அடைந்த இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை, முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்னும் சந்தேகத்தில் மதிச்சியம் காவல் துறையினர் சிலரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடைபெற்றதால் கள்ளழகரை காண வந்த பக்தர்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய வைபவம் முடிந்ததும் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது இளைஞர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதுவே மோதலாக வெடித்தது. முதலில் அவர்கள் கைளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சூழலில் மோதலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை உருவி எதிர்தரப்பினரை மிரட்டினர். அதற்குள் அங்கிருந்த பக்தர்கள் திரண்டு அந்த வாலிபர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து 2 தரப்பினரும் கூட்டத்தில் பக்தர்களோடு கலந்து பிரிந்து சென்றனர்.
திருவிழாவில் இளைஞர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் அழகர், கருப்பசாமி உள்ளிட்ட வேடமிட்டு கள்ளழகருக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். கள்ளழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆளுயர திரி, அரிவாள், கத்தி போன்ற வடிவமைக்கப்பட்ட ஒப்பனைகளோடு தீர்த்த வாரியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இளைஞர்கள் நிஜ பட்டாக்கத்தியுடன் திருவிழா கூட்டத்தில் புகுந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த இடத்தில் வாலிபர் கொலை மற்றும் பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மழை கைகொடுத்தால் மட்டுமே கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணமுடியும்.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
வருசநாடு:
வைகை அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை, வருசநாடு, அரசரடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை முற்றிலும் ஓய்ந்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மூல வைகையாறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதியில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மூல வைகையாறு முற்றிலும் வறண்டு வருகிறது. குறைந்த அளவே தண்ணீர் வருவதால் பொதுமக்கள் மிகவும் கவலையடைந்து உள்ளனர். இதன் காரணமாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மழை கைகொடுத்தால் மட்டுமே கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணமுடியும். மூல வைகையாற்றில் நீர்வரத்து இல்லாததால் வைகை அணைக்கு 5 கனஅடி நீர் மட்டுமே வருகிறது.
அணையின் நீர்மட்டம் 64.52 அடியாக உள்ளது. பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4525 மி.கனஅடியாகும்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.20 அடியாக உள்ளது. 42 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 105 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 110.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
- பாசன நிலங்களுக்கு வினாடிக்கு 3000 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
- காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 65.62 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையின்நீர்மட்டம் கடந்த மாதம் 9-ந்தேதி 70.51 அடியை எட்டியது. இதனையடுத்து நவம்பர் 10-ந்தேதி முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக கால்வாய் வழியாக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நவம்பர் 23-ந்தேதி முதல் மதுரை , சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் டிசம்பர் 8-ந்தேதி நிறுத்தப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 62.86 அடியாக குறைந்தது. அதன்பிறகு நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாகவும், முல்லைபெரியாற்று அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் கடந்த 11-ந்தேதி அணையின் நீர்மட்டம் 65.18 அடியாக உயர்ந்தது.
இதனால் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக ஆற்றின் வழியாக விநாடிக்கு 1200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு நேற்று காலை 10 மணியுடன் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அணையிலிருந்து 669 கனஅடிமட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை முதல் ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன நிலங்களுக்கு வினாடிக்கு 3000 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வருகிற 21-ந்தேதி வரை வெளியேற்றப்படும். அதன்பிறகு வருகிற 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 5 நாட்களுக்கு மதுரை மாவட்டத்தின் வைகை பூர்வீக பாசன பகுதிகளுக்கு ஆற்றின் வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்பாசனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 65.62 அடியாக உள்ளது. நீர்வரத்து 1728 கனஅடி, திறப்பு 3669 கனஅடி, இருப்பு 4767 மி.கனஅடி.
முல்லைபெரியாறு அணையின்நீர்மட்டம் 135.25 அடியாக உள்ளது. வரத்து 644 கனஅடி, திறப்பு 1500 கனஅடி, மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.10 அடி, அணைக்கு வரும் 80 கனஅடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126 .41 அடி, நீர்வரத்து மற்றும் திறப்பு 70.44 கனஅடி.
- மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் ஆகாயத் தாமரை செடிகள் ஆக்கிரமிப்பால் விவசாயத்திற்கான தண்ணீர் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.
- வைகை ஆற்றை ஓட்டிய பிரதான சாலைகளிலும் தொடர்ந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை:
தேனி மாவட்டம் வைகை அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதோடு வைகை அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாய தேவைகளுக்காகவும், திருமங்கலம் ஒருபோக பாசன பகுதிகள் மற்றும் குடிநீர் தேவைக்காக நேற்று காலை 5899 கன அடி நீரானது திறக்கப்பட்ட நிலையில் மாலை 6ஆயிரம் கன அடிவரை நீர் திறக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று நீர் திறப்பு அளவு குறைக்கப்பட்டு 4969 கன அடி நீரானது குறைக்கப்பட்டுள்ள நிலையில் 2-வது நாளாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓட தொடங்கியுள்ளது.
மதுரை வைகையாற்றின் மையப் பகுதியான மதுரை யானைக்கல் தரைப்பாலம் அருகே உள்ள தடுப்பணை பகுதியில் ஆகாயத்தாமரை செடிகள் முழுவதுமாக சூழ்ந்துள்ளதால் வெள்ளநீர் வெளியேற முடியாமல் மெதுவாக செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பணையின் மற்றொரு புறம் ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதி முழுவதிலும் வெள்ள நீரானது கடல் போல இரு புறங்களிலும் ஓடி செல்கின்றன.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு விவசாய தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீர் விரைவாக செல்ல முடியாத அளவிற்கு மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் ஆகாயத் தாமரை செடிகள் ஆக்கிரமிப்பால் விவசாயத்திற்கான தண்ணீர் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.
விவசாய தேவைகளுக்காக தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை அளித்த நிலையிலும் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் இடையே நிலவும் அதிகாரவரம்பு பிரச்சனையால் ஆறு முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்துள்ளது.
மேலும் தடுப்பணை அருகே உள்ள பகுதிகளில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து உள்ளதால் வைகை ஆற்றை ஓட்டிய பிரதான சாலைகளிலும் தொடர்ந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றுப்பாதைகளான கோரிப்பாளையம், நெல்பேட்டை ஆகிய பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது.
மேலும் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஓடுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை பேரிடர் மீட்புத்துறையால் விடுக்கப்பட்ட நிலையிலும் வைகையாற்று பகுதிகளில் பொதுமக்கள் துணிதுவைப்பது, குளிப்பது, மீன்பிடிப்பது, கரையோரங்களில் வாகனங்களில் செல்வது போன்ற ஆபத்தை உணராமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வைகையாற்று பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் இல்லாத நிலையில், பொதுமக்கள் அலட்சியமாக சென்று வருவதால் காவல்துறையினரை தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
- திருவேடகம் வைகை ஆற்றில் ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது.
- சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் ஏடு எதிரேறிய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி பவுர்ணமி அன்று நடைபெறும். அதன்படி நேற்று இரவு ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது. இதற்காக வைகை ஆற்றில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பள்ளத்தில் நீர் நிரப்பப்பட்டு அதில் ஏடுகளை மிதக்கவிடப்பட்டது. அப்போது ஏடுகள் எதிரேறி வந்தன. பின்னர் பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் ஏடு எதிரேறிய வரலாற்றை ஓதுவார்கள் விளக்கினர். சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். திருவேடகம் ஏடகநாதர்-ஏலவார் குழலி அம்மன் கோவில் செயல் அலுவலர் சரவணன், பரம்பரை அறங்காவலர் சேவுகன்செட்டியார், கோவில் பணியாளர்கள் பிரதோஷ கமிட்டியினர் கலந்து கொண்டனர். சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- தேனூர் கிராமத்தில் கள்ளழகர் தோற்றத்தில் சுந்தரராஜ பெருமாள் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது.
- ஆற்றில் உள்ள மண்டகப்படியில் கள்ளழகர் தங்கினார்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் உள்ள சுந்தரராஜபெருமாள் (கள்ளழகர்) கோவிலில் வைகாசி பெருந்திருவிழா நடந்தது. இதையொட்டி இன்று காலை சுந்தரராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் கள்ளழகர் தோற்றத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு வீதிஉலா வந்தார்.
அப்போது வழி நெடுக கள்ளழகரை பக்தர்கள் வரவேற்று பூஜை செய்து செம்பில் சக்கரை தீபம் ஏற்றி வணங்கினார்கள். இதைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பூஜைகள் நடந்து வைகை ஆற்றில் உள்ள மண்டகப்படியில் கள்ளழகர் தங்கினார்.
இன்று மாலை ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதைத் தொடர்ந்து வெளியூர் கிராமப்பெண்கள் திரு விளக்கு பூஜை நடைபெறும்.இரவு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மாலை திருமஞ்சனமாகி, தேனூர் வைகை ஆற்றில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல் நடைபெற உள்ளது.
இதைத்தொடர்ந்து உள்ளூர் பெண்கள் திருவிளக்கு பூஜை நடை பெறுகிறது. 2 நாள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்க ளுக்கு புத்தாடை வழங்கப் படுகிறது. இரவு ராஜாங்க அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிக்க உள்ளார்.
இதையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். நாளை மறுநாள் அதிகாலை வைகை ஆற்றில் இருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் அலங்காரமாகி வீதி உலா நடக்கிறது. சுவாமி கோவில் வந்து சேருவார். பரம்பரை தர்மகர்த்தா நெடுஞ்செழிய பாண்டியன் பொருளாளர் கவுதமன் உள்பட நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- வைகை ஆற்றில் மூழ்கி பலியான 3 பேர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
- இந்தியாவை திரும்பிப் பார்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடத்தி காட்டுவார்.
மதுரை
மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் 3-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பார்வையற்றோ ருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை எஸ்.எஸ்.காலனியில் நடைபெற்றது.
அட்சய பாத்திர நிறுவனர் நெல்லை பாலு தலைமை தாங்கினார். நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இதில் மாநில அம்மா பேரவை துணைச் செயலா ளர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் ஆர்.பி.உதய குமார் பேசியதாவது:-
வைகை நதிக்கரையில் கள்ளழகர் ஆற்றிலே இறங்கி மக்களுக்கு அருளாசி வழங்கிய நிகழ்வு மதுரை யிலே சீரும் சிறப்போடும் நடைபெற்றது. இந்த நிகழ்விலே பல்வேறு பாது காப்பு நடவடிக்கைக ளையும் தாண்டி துரதிஷ்ட வசமாக 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த ஒரு சம்பவம் நடந்தது வருந்தத்தக்கது. இதில் ஒருவர் மூச்சுதிணறி உயிரிழந்துள்ளார். எனவே இவர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
2 ஆண்டுகளில் தி.மு.க. சாதனை செய்ததாக முதல் -அமைச்சர் ஸ்டாலின் பறைசாற்றி கொள்கிறார்.ஆனால் இதிலே நாம் ஆராய்ந்து பார்த்தால் இந்த 2 ஆண்டுகளிலே தி.மு.க. அரசு சாதித்ததை காட்டிலும் சரிக்கியது தான் அதிகம்.இன்றைய தி.மு.க. அரசு வெற்றி பெற்றது 30 சதவீதம் என்றால், தோல்வி பெற்றது 70 சதவீதமாக உள்ளது.
எம்.ஜி.ஆர். 5-வது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்திக் காட்டினார். அவருடைய வழியில் ஜெயலலிதா வெற்றி மாநாட்டை நடத்தினார். உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மதுரையில் நடைபெறும். உலக பிரசித்தி பெற்ற சித்தரை திருவிழா அதேபோன்று மதுரையிலே ஆகஸ்ட் 20-ந் தேதி நடை பெறும். அ.தி.மு.க. மாநாடு இந்தியாவை திரும்பிப் பார்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடத்தி காட்டுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மானாமதுரை வைகையாற்றில் இறங்கிய வீர அழகர்
- கோவிந்தா கோஷம் முழங்கி பக்தர்கள் பரவசமடைந்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி-சோம நாதர், வீர அழகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 10நாட்கள் சித்திரை திருவிழா நடை பெறும்.
மதுரையில் நடைபெறு வது போல இங்கும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று ஆனந்தவல்லி -சோமநாதர் கோவிலில் வைகையாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.
வீர அழகர்கோவிலில் உள்ள மண்டகபடியில் கள்ளழகர் திருக்கோலத் துடன் சுந்தரராஜபெருமாள் பூப்பல்லக்கில் எழுந்தரு ளினார். நள்ளிர வில் எதிர்சேவை நிகழ்ச்சி நடை பெற்றது.
இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை தியாக விநோத பெருமாள் கோவிலில் இருந்து வீர அழகர் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு அணிந்து அப்பன் பெருமாள் கோவில் மற்றும் ரதவீதிகளில் வலம் வந்து ஆனந்தவல்லி, சோம நாதர் கோவில் முன்புள்ள வைகையாற்றில் இறங்கினார். அப்போது பக்தர்கள் "கோவிந்தா... கோபாலா..." கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
திருவிழாவை காண வைகையாற்றங்கரை முழுவதும் பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் திருக்கண் சாத்தி வீர அழகரை வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வீர அழகர் கோவிலில் வருகிற 10-ந்தேதி வரை சித்திரை திருவிழா நடைபெறுகிறது.
- சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்.
- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள்கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும்.இங்கு சித்ரா பவுர்ணமி அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி வருகிறார்.அதன்படி இன்று அதிகாலை அதிர்வேட்டு முழங்க கோவிலில் இருந்து வெள்ளை குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார்.
வைகை பாலம் அருகில் உள்ள எம்.வி.எம். மருது மகால் முன்பு, பா.ஜ.க. விவசாயி மாநில துணைத் தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் ஆகியோர் கள்ளழகரை வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தண்ணீரை பீய்ச்சியடித்து கள்ளழகரை வரவேற்றனர்.
பேரூராட்சி மன்றதலைவர் ஜெயராமன், கவுன்சிலர் சத்யபிரகாஷ், நகரத் துணைச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி. பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சிவபாலன் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சோழவந்தான் பேரூராட்சி சார்பில் சுகாதாரப் பணி, குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று இரவு வைகை ஆற்றில் இருந்து கருட வாகனத்தில் சுவாமி புறப்பட்டு பேட்டை, முதலி யார்கோட்டை, சங்கங்கோட்டை ஆகிய பகுதி சென்று இரட்டை அக்ரஹாரத்தில் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்புள்ள மண்டகப்படிக்கு வந்து சேரும்.
யாதவர்கள் சங்கத்தின் சார்பில் விடிய, விடிய தசாவதாரம் நடைபெறும்.நாளை இரவு சனீஸ்வர்ன கோவில் முன்பு முதலியார் கோட்டை கிராமமக்கள் சார்பில் பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடைபெற்று கோவிலை வந்தடையும்.
- சித்திரை திருவிழாவுக்காக வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது.
- பக்தர்கள் வசதிக்காக தற்காலிக கழிவறை மற்றும் குளியலறை அமைக்க வேண்டும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரை திருவிழா தொடங்கவுள்ள நிலையில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது.
மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது.அதைத் தொடர்ந்து வீர அழகர் கோவிலில் சித்திரை திருவிழா ஆரம்பமாகிறது.
இந்த திருவிழாக்களின் போது மானாமதுரை நகர் பகுதியில் உள்ள வைகை ஆற்றுக்குள் பொழுது போக்கு அம்சங்களாக ராட்டினங்கள், திருவிழாக்கடைகள் அமைக்கப்படும். மானாமதுரை பகுதியை சேர்ந்த மக்கள் திருவிழாவை காண வைகை ஆற்றுக்குள் கூடுவார்கள்.
திருவிழாவிற்காக வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது. இதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் நகர் பகுதி வைகை ஆறு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. திருவிழாவின் போது பக்தர்கள் வசதிக்காக தற்காலிக கழிவறை மற்றும் குளியலறை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
- பெரிய கண்மாய்க்கு வைகை ஆற்று தண்ணீர் வந்தடைந்ததை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
- கடந்த 3-ந்தேதி கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் வானம் பார்த்த பகுதி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் போதிய பருவமழை இல்லாததால் நெல், மிளகாய், பருத்தி பயிர்கள் கருகி விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இந்த நிலையில் குடிநீர் தேவைக்காகவும், நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கவும் விரகனூர் அணையில் இருந்து கடந்த 3-ந்தேதி கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 5 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலை அபிராமம் பெரிய கண்மாயை வைகை ஆற்று தண்ணீர் வந்தடைந்தது.
இதையடுத்து விவசாய சங்க மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், சமூக ஆர்வலர் அருணாசலம் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் தண்ணீரை மலர்தூவி வரவேற்றனர். இதுகுறித்து விவசாய சங்க செயலாளர் முத்துராமலிங்கம் கூறியதாவது:-
அபிராமம் பகுதி வானம் பார்த்த பூமி ஆதலால் விவசாயம் பாதிப்படைந்து நெற் பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் விவசாயிகள் வைகை ஆறு மூலம் கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க கோரி தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையினருக்கும் மனு ெகாடுத்தும், பல கட்ட போராட்டங்களையும் நடத்தினோம்.
அப்போதே தண்ணீர் திறந்து இருந்தால் நெல் விவசாயம் பாதிப்படைந்து இருக்காது. தற்போது எங்களது கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் அபிராமம் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
நெல் விவசாயம் பாதிக்கப்பட்டாலும் குடிநீர் தேவைக்காகவும், நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்