என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மழை இல்லாததால் முற்றிலும் வறண்ட மூல வைகை ஆறு
- மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.20 அடியாக உள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளி மலையில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. இதன் மூலம் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இது தவிர கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. மழைப்பொழிவு முற்றிலும் ஓய்ந்த நிலையில் மூல வைகை ஆற்றில் தண்ணீர் வரத்தின்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை பெய்தால் மட்டுமே விவசாயம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண முடியும். மூல வைகை ஆறு வறண்டுள்ளதால் வைகை அணைக்கு 25 கன அடி நீர் மட்டுமே வருகிறது. இதனால் 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 55.51 அடியாக சரிந்துள்ளது.
மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2802 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.20 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. 1593 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 36.70 அடியாக உள்ளது. 27 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.69 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணை நீர்மட்டம் 39.10 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. கூடலூர் 2.6, சண்முகாநதி 3.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.






