search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை ஆற்றின் இருபுறமும் சாலைகள் அமைத்து மணல் திருட்டை தடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
    X

    வைகை ஆற்றின் இருபுறமும் சாலைகள் அமைத்து மணல் திருட்டை தடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றின் இருபுறமும் சாலைகள் அமைத்து மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆறு மணல் வளம் மிகுந்த பகுதி ஆகும். பல ஆண்டுகள் முன்பே மணல் குவாரி அமைக்கப்பட்டதால் தற்போது மணல் வளம் மறைந்து ஆறு முழுவதும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் மணல் குவாரி அமைக்க நடவ டிக்கை எடுத்த போது பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பால் மணல் குவாரி அமைக்கப்படவில்லை.

    15 ஆண்டுகளுக்கு முன்பு பணி புரிந்த சிவகங்கை மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன் மானாமதுரையில் உள்ள வைகை ஆறு முழுவதையும் சீரமைத்து கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார்.

    அதன் பின்னர் எந்த கலெக்டரும் வைகை ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் தடுப்பனை அமைத்தும் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய ஏதுவாக ஆற்றங்கரைகளில் சாலை அமைக்க திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    ஆனால் தடுப்பணை மட்டும் தான் அமைக்கப்பட்டது. சாலை அமைக்கப்படவில்லை. மானாமதுரை வைகை ஆற்று தடுப்பு அணைக்கு பின்பு ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் திருப்புவனம் பகுதியில் இரு இடங்களில் அமைக்கப்பட்ட தடுப்பணைகளில் ஆற்றின் இரு கரைகளிலும் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் மானாமதுரையில் அமைக்கப்படவில்லை.

    தற்போது வைகை ஆற்று பகுதியில் தலைச்சுமையாக அதிக அளவு மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதையும் பொதுப்பணித்துறையால் தடுக்க முடியவில்லை.

    வைகை ஆறு முழுவதும் கருவேல மரங்களால் சூழப்பட்டதால் தனியாக செல்ல முடியவில்லை. பொதுமக்கள் நடை பயிற்சி செய்ய மைதானம் ஏதும் மானாமதுரையில் கிடையாது.

    அதனால் வைகை ஆறு பாலத்தை கடந்து 4 வழிச்சாலை மற்றும் புதிய புறவழிச்சாலையில் செல்லும் நிலை உள்ளது.

    கடந்த 26-ந் தேதி சாலை வழியே சென்ற அ.ம.மு.க. நிர்வாகி சரவணன் ஓட ஓட வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். வைகை ஆற்றுக்குள் செல்ல முடியாமல் கருவேல மரங்கள் இருந்ததால் தப்ப முடியாமல் இறந்தார்.

    இதே போல் வைகை ஆற்று புதிய பாலத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வழிப்பறி கொள்ளையும் அடிக்கடி நடைபெறுகிறது. இதையும் தடுக்க முடியவில்லை. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதியாக வைகை ஆறு மாறி வருகிறது.

    பொதுமக்கள் பாதுகாப்பாக நடைபயிற்சி செய்ய மானாமதுரை ரெயில் பாலத்தில் இருந்து புதிதாக அமைக்கப்பட்ட தடுப்பணை வரை ஆற்றின் இருகரைகளிலும் சாலை வசதி அமைக்க வேண்டும்.

    மணல் திருட்டு தடுக்கப்பட வேண்டும். புதிய புறவழி சாலை பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும். வைகை ஆறு முழுவதும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மானாமதுரை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×