search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TR Baalu"

    • மோடி ஆட்சியில் ஜனநாயகம் இல்லை.
    • எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை நிச்சயம் 100 சதவீதம் தொடரும்.

    புதுடெல்லி :

    பாராளுமன்றத்தில் நேற்று காலை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு வளாகத்துக்கு வெளியே விஜய் சவுக் பகுதிக்கு வந்தனர். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பாராளுமன்ற தி.மு.க. குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கூறியதாவது:-

    அதானி பிரச்சினையில் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கவேண்டும் என கடந்த 2 வாரங்களாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டு வருகிறார்கள். இதுகுறித்து பதில் இல்லை. பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பெரும்பான்மையாக இருப்பது பா.ஜனதா உறுப்பினர்கள்தான். இருந்தும் அதை அவர்கள் அமைக்க மறுக்கிறார்கள். தேர்தல் வர இருக்கும் நேரத்தில் உண்மை வெளியே தெரிந்துவிடும் என கூட்டுக்குழுவை அமைக்கவில்லை.

    இந்நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல ராகுல்காந்திக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. நாட்டில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. மோடி ஆட்சியில் ஜனநாயகம் இல்லை. ஜனநாயகம் மீண்டும் தழைத்து வரவேண்டுமானால் இந்தியாவில் உள்ள எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சிக்கு வரும் வாய்ப்பை தேடிக்கொள்ளவேண்டும். நாங்கள் தீர்ப்புக்கு எதிராகப் போராடவில்லை. பிரதமர் மோடிக்குத்தான் கண்டனம் தெரிவிக்கிறோம்.

    எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை நிச்சயம் 100 சதவீதம் தொடரும். ஏன்? என்று கேட்டீர்கள் என்றால், எல்லோருமே ஒத்த கருத்து உள்ளவர்களாக இருக்கிறார்கள். மாநிலக்கட்சிகள் இல்லாமல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது. ஆட்சியும் நடத்தமுடியாது. மாநிலக்கட்சிகளை சேர்த்து காங்கிரஸ் வழிநடத்தும் என்பதுதான் எங்கள் எண்ணம். மாநிலக் கட்சிகளின் உதவி தேவை என்று அவர்களே பலமுறை சொல்லி இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றியது.
    • கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 8-ந்தேதி திடீரென ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார்.

    புதுடெல்லி:

    தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றியது. பிறகு அது கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பல நாட்களாக இந்த மசோதா மீது கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குள் மேலும் பலர் சூதாட்டத்தில் பணத்தை இழந்து உயிரை மாய்த்தனர். எனவே மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

    இதற்கிடையே கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 8-ந்தேதி திடீரென ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார். மேலும் இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பியபோது கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பி இருந்தார்.

    அந்த கடிதத்தில், ஒரு மாநில அரசால், திறமையான விளையாட்டை ஒழுங்குப்படுத்த மட்டுமே முடியும். அதை முற்றிலும் தடை செய்ய முடியாது. இவ்விஷயத்தை ஏற்கனவே தெளிவுபடுத்திய பின்னும், மாநில அரசு அவசர சட்டத்தில் உள்ள அம்சங்களையே, சட்டமாக நிறைவேற்றி மீண்டும் அனுப்பி உள்ளது.

    இதைமீறி, இந்த சட்டத்தை நிறைவேற்றினால், இது உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக அமையும். இதற்கு பதிலாக, ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து பாராளுமன்றத்தில் நாளை விவாதிக்க கோரி தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருக்கு நோட்டீஸ் அளித்துள்ளார்.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து விவாதிக்க கோரி டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சட்டசபையில் நடந்த விஷயங்களை மனுவில் சுட்டிக்காட்டி உள்ளோம்.
    • வழக்கத்துக்கு மாறாக, மரபுகளுக்கு மாறாக தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார்.

    சென்னை:

    தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இதற்கு முன்பு இருந்த கவர்னர்கள், கவர்னர் உரையில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே படிப்பார்கள். ஆனால் கவர்னர் உரையில் உள்ள வரிகளை இப்போதைய கவர்னர் படிக்கவில்லை. பேராவை நீக்கினார். சில வரிகளை அவரே சேர்த்துக் கொண்டார். அப்படி சேர்த்தும், சில வரிகளை நீக்கியும் படித்தது தவறு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.

    கவர்னர் உரையில் எது அச்சிடப்பட்டுள்ளதோ? எதற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்துள்ளாரோ அது மட்டுமே அவை குறிப்பில் இடம்பெற வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தான் நடந்த உண்மைகள்.

    இதை விளக்கமாக குடியரசு தலைவரிடம் எடுத்து கூறியுள்ளோம். மிக மிக கூர்ந்து கவனித்த குடியரசு தலைவர் எங்கள் கடிதத்தை படித்து பார்த்தார். படித்து முடித்ததும் அவர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    சட்டசபையில் நடந்த விஷயங்களை மனுவில் சுட்டிக்காட்டி உள்ளோம். வழக்கத்துக்கு மாறாக, மரபுகளுக்கு மாறாக தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார்.

    கவர்னர் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளாமல் அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்டார் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளது.

    அந்த கடிதத்தின் உள்ளே என்ன இருக்கிறது என்பது எங்களுக்கு முழுமையாக தெரியாது. ஏனென்றால் இந்த கடிதத்தை தமிழக முதல்-அமைச்சர், ஜனாதிபதியிடம் கொடுக்க சொல்லி சீலிடப்பட்ட உறையில் எங்களிடம் கொடுக்கப்பட்டது.

    அது ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளே என்ன எழுதி இருக்கிறது என்பது எங்களுக்கு முழுமையாக தெரியாது.

    கேள்வி: நீங்கள் ஜனாதிபதியிடம் என்ன கருத்தை முன் வைத்தீர்கள்?

    பதில்: இதை மொத்தமாக படித்து பார்த்து சரி என்று என்ன தோன்றுகிறதோ? என்ன நடவடிக்கை எடுக்க விரும்புகிறீர்களோ அதை எடுங்கள் என்று கூறியுள்ளோம்.

    கேள்வி: அமித்ஷாவை சந்திக்கும் திட்டம் இருக்கிறதா?

    பதில்: ஜனாதிபதியை பார்க்கும் முன்பு அவரை சந்திக்க நேரம் கேட்டோம். ஆனால் நேரம் கிடைக்கவில்லை. ஜனாதிபதியை பார்ப்பது தான் எங்கள் நோக்கம். அவரை பார்த்து விட்டோம். எனவே அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியமில்லை.

    கேள்வி: ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறீர்களா?

    பதில்: இது அரசியலில் நெளிவு சுளிவாக, மிகவும் கவனமாக எடுக்கக்கூடிய முடிவுகள். ஜனாதிபதி என்ன முடிவு எடுப்பார் என்பதை நான் சொல்ல முடியாது.

    தேசிய கீதம் பாடும் முன்பு கவர்னர் எழுந்து போனதை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    கேள்வி: கவர்னர் ஏன் தொடர்ந்து தமிழக அரசுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார்?

    பதில்: அவரது நோக்கம் என்பது மொத்தமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சனாதன கொள்கைகளை புகுத்த வேண்டும் என்பது தான். இதை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. இது பெரியார், அண்ணா, கலைஞரின் தேசம். இதில் யாரும் புதிதாக ஒரு செடியை வளர்த்து விட முடியாது. 100 ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் இருந்து கொண்டு இருக்கிறது. அதற்கு மாறான கொள்கைகளை யாரும் திணிக்க முடியாது.

    கேள்வி: இந்த பிரச்சினை பாராளுமன்றத்தில் எழுப்பப்படுமா?

    பதில்: நிச்சயமாக தி.மு.க. சார்பில் இந்த பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எழுப்புவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.க்கு கலைஞர் விருது வழங்கப்படுகிறது. சம்பூர்ணம் சாமிநாதன் பெரியார் விருது பெறுகிறார். கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்.
    • புதுவை சி.பி.திருநாவுக்கரசுக்கு பாவேந்தர் விருதும், குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி ஆண்டு தோறும் தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா நடத்தப்படும். இதையொட்டி பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படும்.

    இந்த ஆண்டில் விருது பெறுவோர் பட்டியலை தி.மு.க. தலைமைக்கழகம் இன்று வெளியிட்டது.

    தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.க்கு கலைஞர் விருது வழங்கப்படுகிறது. சம்பூர்ணம் சாமிநாதன் பெரியார் விருது பெறுகிறார். கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்.

    புதுவை சி.பி.திருநாவுக்கரசுக்கு பாவேந்தர் விருதும், குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    இந்த விருதுகள் 15-ந்தேதி விருதுநகரில் நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் வழங்கப்படும்.

    பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு வரவில்லை என்று டி.ஆர்.பாலு நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    தி.மு.க. அமைப்பு செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் டி.ஆர்.பாலு கூறியதாவது:-

    மத்திய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை. அப்படி இருக்கும்போது பிரதமர் பதவி ஏற்பு விழாவில் நானும், ஆ.ராசாவும் பங்கேற்பதாக ஆதாரமற்ற தகவலை சொன்னால் எப்படி?.



    ஜனாதிபதி அல்லது பிரதமரிடம் இருந்து இதுவரை எந்தவொரு அழைப்பும் வரவில்லை. அழைப்பு வந்தால் விழாவில் பங்கேற்பது குறித்து தி.மு.க. தலைவர்தான் முடிவு செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவுக்கு பாராளுமன்ற திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் பதவி வழங்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 37 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார், ம.தி.மு.க.வை சேர்ந்த கணேசமூர்த்தி, ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் கட்சியை சேர்ந்த சின்ராஜ் ஆகிய 4 பேர் உள்பட மொத்தம் 23 பேர் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

    இதன் மூலம், பாராளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக தி.மு.க இடம் பிடித்துள்ளது. காங்கிரசுக்கு அடுத்த இடத்தில் தி.மு.க. இருப்பதால் பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் முக்கியத்துவம் கிடைக்கும் நிலை உள்ளது.

    இந்த நிலையில் தி.மு.க. சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள் கூட்டம் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். கூட்டத்தில் பாராளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

    இதுவரை, டெல்லி மேல் சபையில் தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவராக கனிமொழி செயல்பட்டார். தமிழக பிரச்சினைகளுக்கு அழுத்தமாக குரல் கொடுத்தார். இன்று நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டத்தில் பாராளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவராக கனிமொழி தேர்ந்து எடுக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.



    ஆனால் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு கட்சியின் மூத்த தலைவர். பாராளுமன்றத்தில் நீண்ட அனுபவம் உள்ளவர். எனவே டி.ஆர்.பாலுவுக்கு பாராளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் பதவி வழங்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    டி.ஆர்.பாலு பாராளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள் குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் கனிமொழிக்கு துணைத் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது ஆ.ராசாவும் இந்த போட்டியில் இருக்கிறார்.
    பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை தி.மு.க. வேட்பாளர் டிஆர் பாலு தோற்கடித்தார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

    நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 22,53,041, மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 13,88,666 வாக்குகள் பதிவானது.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு 4,91,220 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கம் 1,69,469 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேந்திரன் 53,027, அமமுக வேட்பாளர் தாம்பரம் நாராயணன் 25,804, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீதர் 80,058 வாக்குகள் பெற்றுள்ளனர். 
    திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். #TRBaalu #DMK
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி மறைந்த பிறகு கட்சியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. கட்சித் தலைவர் பதவி மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார். இதேபோல் முதன்மைச் செயலாளரான துரைமுருகன் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயல் தலைவர் பதவி ரத்து செய்யப்பட்டது.



    இந்நிலையில், கட்சியின் முதன்மைச் செயலாளராக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் சட்ட விதி 17, பிரிவு 3-ன் படி திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்டிருப்பதாக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். #TRBaalu #DMK
    ×