search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi Sterlite"

    ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான விசாரணை குழு ஸ்டெர்லைட் ஆய்வுக்காக அடுத்த வாரம் சென்னை வரும் என தெரிய வந்துள்ளது. அவர்கள் உடனடியாக விசாரணையை ஆரம்பிக்க உள்ளனர். #Sterlite #SterliteCase
    சென்னை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக கூறி அதை மூட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    கடந்த மே மாதம் இது தொடர்பாக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 13 பேர் பலியானார்கள்.

    இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது. அதோடு அந்த ஆலையை மீண்டும் திறக்காமல் இருக்க சட்ட ரீதியிலான நடவடிக்கைகளிலும் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.



    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் மீண்டும் ஆலையை திறக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அந்த நிறுவனம் நாடி உள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலை பற்றி ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது. இதற்காக பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி வசீப்தார் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. ஆனால் அவர் தலைமை பொறுப்பேற்க மறுத்து விட்டார்.

    இதையடுத்து மேகாலய மாநில ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி தருண்அகர்வாலை ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை விசாரிக்கும் குழுவின் தலைவராக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இதுபற்றிய தகவலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசின் தலைமை செயலாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் ஆகியோருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுப்பி உள்ளது.

    இந்த நிலையில் தருண் அகர்வால் தலைமையிலான விசாரணை குழு அடுத்த வாரம் சென்னை வரும் என தெரிய வந்துள்ளது. அவர்கள் உடனடியாக விசாரணையை ஆரம்பிக்க உள்ளனர். அவர்களுக்கு சென்னை கலஸ் மகாலில் அலுவலகம் வசதி செய்து கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

    இந்த குழுவினர் தூத்துக்குடிக்கும் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களையும் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலை பற்றி விசாரிக்க உள்ளனர். அதோடு ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    நேரில் ஆய்வு செய்த பிறகு தருண்அகர்வால் தலைமையிலான குழு அறிக்கை தயாரித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யும். 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ள விசாரணை குழு நடவடிக்கைகளை ஏற்க இயலாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

    தமிழக அரசு தொடர்ந்துள்ள இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. தருண்அகர்வால் குழுவுக்கு சுப்ரீம்கோர்ட்டு தடை விதிக்குமா? என்பது அப்போது தெரிய வரும். #Sterlite #SterliteCase
    ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு தொண்டு நிறுவனங்களின் வதந்தியே காரணம் என்று அதன் தலைமை செயல் அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார். #Sterlite ##SterlitePlant
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி நடந்த போராட்டம் போர்க்களமாக மாறியது. இதில் 13 அப்பாவி பொது மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்த ஆலை மூடப்பட்டது.

    ஸ்டெர்லைட் ஆலை மூலம் தூத்துக்குடி பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விட்டது. காற்று மாசு அடைந்துள்ளது. இதனால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் வருகின்றன. புற்றுநோய் பரவுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது.

    இது உண்மைதான் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறினார்கள். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க நடவடிக்கைகள் தொடங்கின. இதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். 100-வது நாள் போராட்டத்தின்போது வன்முறை வெடித்து, துப்பாக்கி சூட்டில் முடிந்தது. இந்த போராட்டத்துக்கும், துப்பாக்கி சூட்டுக்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

    இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் தூத்துக்குடியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்களிடமும், மீனவர்களிடமும் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறோம். அவர்கள் அமைதியாகவே இருந்தனர்.

    வருடம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் அரைநாள் அந்த பகுதியை சேர்ந்தவர்களை அழைத்து இந்த ஆலையில் என்ன நடக்கிறது என்பதை காண்பித்தோம். எங்கள் ஆலை கதவு திறந்தே இருக்கிறது. இப்போது டாக்டர்கள், வக்கீல்கள், மாணவர்கள், பொதுமக்கள் நேரில் இங்கு வந்து பார்வையிடலாம்.

    ஆலையின் உற்பத்தி திறனை 8 லட்சம் டன்னாக உயர்த்துவதற்காக ஒப்புதல் பெற்று இருந்தோம். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஆலைக்கு எதிராக திடீர் போராட்டம் வெடித்தது.

    விடுமுறைக்காக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டன. மக்களை தூண்டிவிடும் விதமாக பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

    கிராம மக்களும், மீனவர்களும் அதுவரை அமைதியாகத்தான் இருந்தார்கள். ஆனால் சில தொண்டு நிறுவனங்கள், மக்களை தூண்டும் வகையில் தொடர்ந்து அவதூறான தகவல்களையும், வதந்திகளையும் பரப்பி மக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டனர்.


    இதனால்தான் போராட்டம் தீவிரம் அடைந்தது. போலீஸ் துப்பாக்கி சூடு நடந்து 13 பேர் உயிர் இழந்தனர். இதையடுத்து மே மாதம் 28-ந்தேதி ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    தமிழ்நாட்டில் புற்றுநோயின் தலைநகரம் தூத்துக்குடி என்று வதந்தி பரப்பப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த அனைத்து இறப்புகளுக்கும் ஸ்டெர்லைட் ஆலைதான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இது தவறானது என்று புள்ளி விவரங்கள் நிரூபித்துள்ளன.

    தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் 14-வது இடத்தில் உள்ளனர். பெண்கள் 25-வது இடத்தில்தான் இருக்கிறார்கள். இதைத் தான் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    தூத்துக்குடியில் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையங்கள் உள்ளன. இவை நிலக்கரியை எரிப்பதால் காற்று வெளிமண்டலத்தில் அதிக அளவில் சல்பர்டை ஆக்சைடு கலக்கிறது.

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகும் தூத்துக்குடி பகுதியில் காற்றில் கலக்கும் சல்பர்டை ஆக்சைடில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    ஸ்டெர்லைட் ஆலை பற்றி தவறான தகவல் பரப்பப்பட்டது என்பது அப்போது வெளியான புள்ளி விவரங் கள் மூலம் தெளிவாக தெரிய வந்துள்ளது. பொதுமக்களின் உணர்ச்சிகளை தூண்டி இந்த பிரச்சனையை பெரிதாக்கி இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Sterlite #SterlitePlant
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று 6 டேங்கர் லாரிகள் மூலம் 120 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டது. இன்று 2-வது நாளாக கந்த அமிலம் மற்றும் மற்ற ரசாயனங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்றது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது கடந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே மாதம் 28-ந் தேதி மூடப்பட்டது.

    இந்நிலையில் ஆலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த டேங்கில் இருந்து கந்தக அமிலம் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து கடந்த 18-ந் தேதி தொடங்கி 7 நாட்களாக 2,124 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக ஆலையில் இருக்கும் பாஸ்பாரிக் அமிலம், எரிவாயு (எல்.பி.ஜி.), டீசல், தாமிர தாது, ஜிப்சம், திரவ ஆக்சிஜன், திரவ நைட்ரஜன் உள்ளிட்ட ரசாயனங்களை முழுமையாக அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஆலையில் உயர்மட்ட குழுவினர் ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வு விவரம் அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து ஆலையில் உள்ள அனைத்து ரசாயனங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு அரசு உத்தரவிட்டது. இந்த ரசாயனங்களை அகற்றுவதற்காக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இதில் உதவி கலெக்டர் பிரசாந்த், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், மாசு கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் லிவிங்ஸ்டன் மற்றும் தீயணைப்பு துறை, தொழிற்சாலை பாதுகாப்பு அலுவலர், மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் நேற்று ஆலையில் மீண்டும் ஆய்வு செய்தனர். இதையடுத்து ரசாயனங்களை அகற்றும் பணிநேற்று மாலை தொடங்கப்பட்டது. ஆலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் ஜெனரேட்டர் மூலமே மின்வசதி செய்யப்பட்டு ரசாயனங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    முதற்கட்டமாக கந்தக அமிலம் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. 6 டேங்கர் லாரிகள் மூலம் 120 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டது. இன்று 2-வது நாளாக கந்த அமிலம் மற்றும் மற்ற ரசாயனங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்றது.

    டேங்கர் லாரிகள் கிடைக்காததால் காலையில் பணிகள் சற்று தாமதமானது. இதையடுத்து கூடுதலாக டேங்கர் லாரிகள் வரவழைக்கப்பட்டு ரசாயனங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. ஒரு மாதத்தில் இந்த பணிகள் முடிக்க நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வெளியேற்றப்படும் ரசாயனங்கள் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மூலம் அவர்களிடம் இருந்து ஏற்கனவே பொருட்களை வாங்கும் நிறுவனத்துக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், இதற்கான செலவுகளை ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.



    தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.#thoothukudiProtest #SterliteShutdown #Anbumaniramadoss
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

    ஓர் ஆலையை மூடுவது எளிதானது அல்ல. ஆலையை மூடி பிறப்பிக்கப்படும் அரசாணை என்பது விரிவான காரணங்களை பட்டியலிட்டிருக்கவேண்டும். ஒரு பத்தியில் அரசாணை பிறப்பிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது.

    ஸ்டெர்லைட் ஆலை வழக்குத் தொடர்ந்தால் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் ஆணை ரத்து செய்யப்படலாம். எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அது நிரந்தரமாக மூடப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும்.

    சுற்றுச்சூழலுக்கும், மக்கள் நலனுக்கும் தீங்கு என்பது ஸ்டெர்லைட் ஆலையுடன் முடிவடைந்து விடுவதல்ல.

    தூத்துக்குடி சிப்காட் வளாகம், கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட சிப்காட் வளாகங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, மக்களின் உயிரை பறிக்கும் தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன. அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய நிறுவனங்களை கொண்டு ஆய்வு நடத்தி, பாதிப்பை ஏற்படுத்தும் ஆலைகளை மூட தமிழக அரசு ஆணையிடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #thoothukudiProtest #SterliteShutdown #Anbumaniramadoss
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை சந்தேகத்தை எழுப்புகிறது என திருமாவளவன் கூறியுள்ளார். #thoothukudiProtest #thirumavalavan #SterliteShutdown
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தாலும் ஆதாரங்களோ, காரணங்களோ குறிப்பிடப்படாமல் அது வெளியிட்டுள்ள அரசாணை சந்தேகத்தை எழுப்புகிறது. ஆலையை மூடுவதற்கு வேறு எந்த விரிவான காரணமும் அரசாணையில் இல்லை. இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் எளிதாக தடை ஆணை பெற்றுவிடும். அதற்கு வழி வகுப்பதாகவே இந்த அரசாணை உள்ளது.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிவிப்பிலும் கூட விரிவான காரணங்களையோ, ஆலையை மூடுவதற்கான ஆதாரங்களையோ அளிக்கவில்லை. இந்தநிலையில் அதை அப்படியே ஏற்று ஒப்புதல் அளித்திருப்பது தமிழக அரசின் நோக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தான் தமிழக அரசின் நோக்கம் என்றால் அதற்கான விரிவான ஆதாரங்களைக் கொண்ட அரசாணையை வெளியிட்டிருக்க வேண்டும்.



    அப்படிச் செய்யாதது ஏன்? தமிழக அரசு தற்போது செய்திருப்பது போராட்டக்காரர்களையும் எதிர்க்கட்சிகளையும் திசை திருப்புவதற்காகவும், வழக்கம்போல ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நீதிமன்றத்தில் தடை ஆணை பெறுவதற்கு வசதி செய்வதற்காகவுமான தந்திரம் ஆகும். இதற்கு தமிழக அரசு உரிய விளக்கத்தை அளிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #thoothukudiProtest #thirumavalavan #SterliteShutdown
    தூத்துக்குடி போராட்டக்காரர்களுக்கு பிஸ்கட், குடிநீர் கொடுக்க சென்ற என்னை போலீசார் சுட்டனர் என்று காயமடைந்த பட்டதாரி வாலிபர் கூறினார்.#sterliteprotest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த தூத்துக்குடியை சேர்ந்த சந்தோஷ்ராஜ் கூறியதாவது:-

    நான் பி.காம். படித்துள்ளேன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக நான் உள்பட எனது கல்லூரி நண்பர்கள் என 200 பேர் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளும் பொதுமக்களுக்கு குடிநீர், பிஸ்கட் இலவசமாக வழங்க முடிவு செய்தோம்.

    அதன்படி அன்று நாங்கள் 50 மூட்டை தண்ணீர் பாக்கெட், பிஸ்கட்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றோம். ஆனால் அங்கு கலவரம் வெடித்ததால் நாங்கள் தப்பி ஓடினோம். அப்போது, போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் என் மீது குண்டு பாய்ந்து காயம் அடைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆட்டோ டிரைவர் மரியசெல்வன் மனைவி பொன்மாரி கூறியதாவது:-

    கடந்த 22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் அருகே நாங்கள் ஆட்டோவில் வந்துகொண்டு இருந்தோம். அப்போது, போலீசார் ஆட்டோவை வழிமறித்து என்னை தாக்க முயன்றனர். இதை எனது கணவர் தடுத்ததால் அவரை போலீசார் தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    போலீசார் மக்களை தீவிரவாதி என்று கூறுகிறார்கள். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வாகனத்திற்கு போலீசாரே தீவைத்து, கேமராக்களையும் உடைத்து உள்ளனர். பழியை எங்கள் மீது போடுகிறார்கள். பொதுமக்கள் யாரும் வாகனத்தை சேதப்படுத்தவில்லை. மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்த போலீசார் கடுமையாக போராடியவர்களை குறிபார்த்து சுட்டனர். எனவே அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். போலீசார் தான் தீவிரவாதிகள் போல் செயல்பட்டுள்ளனர். கலவரத்தின்போது, காணாமல்போனவர்களை கணக்கெடுத்து மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். வீடு வீடாக சென்று கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடி குரூஸ்புரத்தை சேர்ந்த எபுலின் விக்டோரியா (43) கூறுகையில், ‘நான் கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்தபோது போலீசார் துப்பாக்கியால் என்னை சுட்டனர். எனது இடது கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மறுபக்கம் வெளியேறியது. அந்த குண்டு எனது அருகில் நின்ற இளம்பெண்ணின் மீது பட்டது. இதில் அவர் இறந்துவிட்டார்.

    போராட்டத்தில் முன்னின்று ஆவேசமாக பேசியவர்களை போலீசார் குறிவைத்து சுட்டனர். எனவே போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். #sterliteprotest 
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் நேற்று 92-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அ.குமரெட்டியபுரம் மக்கள் நேற்று 92-வது நாளாக போராட்டம் நடத்தினர்.

    இதேபோன்று பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், மீளவிட்டான், சில்வர்புரம், பாளையாபுரம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட கிராம மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. நேற்று அ.குமரெட்டியபுரத்துக்கு வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து மக்களுடன் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோஷங்களை எழுப்பினார்.

    மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 13 இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 
    ×