search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thoothukudi shooting"

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு சரத்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #ThoothukudiFiring #SterliteProtest #sarathkumar
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும், காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை பார்க்கவும் ச.ம.க. தலைவர் சரத்குமார் இன்று தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். பின்பு அவர் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் வீடுகளுக்கும் சென்றார்.

    அங்கு பலியானவர்களின் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். அவர்களிடம் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று குண்டு காயம்பட்டு சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அப்போது பொதுமக்கள் சரத்குமாரிடம் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீசார் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறினர். அவற்றை சரத்குமார் பொறுமையுடன் கேட்டார். அப்போது சரத்குமாருடன் ச.ம.க மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர். #ThoothukudiFiring #SterliteProtest #sarathkumar
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் எஞ்சிய 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தாலும் பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே, 7 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதனை, அடுத்து மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அரசு அனுமதி கோரியிருந்தது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என வழக்கறிஞர் சங்கரச்சுப்பு வாதிட்டார். இதனை அடுத்து, மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர். 

    பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர். #SterliteProtest #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி கடந்த 22-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    அப்போது ஏற்பட்ட வன்முறையில் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் அமைதியாக போராட்டத்துக்கு திரண்டு சென்றவர்கள் மீது போலீசார் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், துணை தாசில்தார் உத்தரவிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதன் பின்னணி என்ன என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கேள்விகள் எழுப்பின.

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம், திரேஸ்புரம், அரசு மருத்துவமனை பகுதி ஆகிய 3 இடங்களில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த‌ சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணையை இன்று தொடங்கினார்கள். இந்த விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் குமார் நேரடி மேற்பார்வையில் நெல்லை சி.பி.சி.ஐ.டி துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20 சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்கள் நடத்துகின்றனர்.

    இதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்றே தூத்துக்குடி வந்தனர். தூத்துக்குடியில் இதற்காக பிரத்யேக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு காட்சிகளை வைத்து விசாரணை தொடங்கியுள்ளார்கள்.



    மேலும் துப்பாக்கி சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 3 வழக்கு விபரங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலமாக பெற்றனர்.

    துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கினை பதிவு செய்த போலீஸ் அதிகாரி, அதன் விசாரணை அதிகாரி, புகார் கொடுத்தவர்கள் மற்றும் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதிகொடுத்த அதிகாரிகள், துப்பாக்கி சூட்டின் போது பலியானவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் ஆகிய அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தவுள்ளனர். பல்வேறு கட்டங்களாக இந்த விசாரணை நடைபெறவுள்ளது. துப்பாக்கி சூடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடங்கியிருப்பது மற்ற போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #SterliteProtest #ThoothukudiShooting
    தூத்துக்குடி சூப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரடி விசாரணை நடத்துகிறது. உண்மை கண்டறியும் குழுவை உடனே அனுப்புகிறது. #Thoothukudifiring #NHRC
    புதுடெல்லி:

    தமிழகத்தை சேர்ந்த வக்கீல் ஏ.ராஜராஜன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன், டெல்லி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடந்த போது போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் பலியாகினர். மிகவும் கவலை அளிக்கக்கூடிய இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிடுமாறு கோரிக்கை வைத்தோம். ஆனால் தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிடாமல் தமிழக அரசிடமும், டி.ஜி.பி.யிடமும் அறிக்கை கேட்டு உள்ளது.

    இந்த சம்பவத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் விரைந்து செயல்படாவிட்டால் மேலும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடரும். போலீசார் தங்களின் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக இருக்கும் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிட்டு துப்பாக்கி சூடு நடந்த இடங்களை கள ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த வழக்கில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை கடந்த மே 25-ந்தேதியன்று விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ராஜீவ் சக்தேர் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

    அந்த தீர்ப்பில், வழக்குதாரரின் கோரிக்கையை தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 29-ந்தேதி தேசிய மனித உரிமை ஆணையத்தில் வழக்குதாரர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கலாம்; அன்றைய தினமே வழக்குதாரர் தாக்கல் வழக்கு பற்றி தேசிய மனித உரிமை ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    அதைத்தொடர்ந்து வழக்குதாரர் ஏ.ராஜராஜன் மற்றும் வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஆஜரானார்கள்.

    அவர்களின் வழக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-



    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து, விசாரணை நடத்தி, இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வு உரிமை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக கருத்து தெரிவித்து உள்ளது.

    இந்த நிலையில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தேசிய யூனியன் துணைத்தலைவர் ஏ.ராஜராஜன் தாக்கல் செய்துள்ள கோரிக்கையின் அடிப்படையிலும், டெல்லி ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை தொடர்ந்தும் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து களத்தில் நேரடி விசாரணை நடத்துவதற்கு தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் குழுவை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    மூத்த போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மூன்று துணை சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்களை கொண்டு உண்மை கண்டறியும் குழுவை தேசிய மனித உரிமை ஆணையத்தின் டைரக்டர் ஜெனரல் (புலனாய்வு) அமைக்க வேண்டும். இந்த குழு உடனடியாக தூத்துக்குடிக்கு சென்று, கடந்த 22-ந்தேதி அன்று நடைபெற்ற துப்பாக்கி சூடு குறித்து களத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

    அந்த விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு 2 வாரங்களுக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    கடந்த 23-ந்தேதி தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி ஆகியோருக்கு இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த நிலைத்தகவல் அறிக்கையை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பிறப்பித்துள்ள முந்தைய உத்தரவில் இருந்து, தற்போது பிறப்பித்து உள்ள இந்த உத்தரவு தனித்து வெளியிடப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #Thoothukudifiring #NHRC
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான செல்வசேகரின் தாய் சகோதரிகளை சந்தித்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆறுதல் கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறை, துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். பலரும் காயமடைந்தனர்.

    அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக துணை முதல்லமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். வன்முறை சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கும் சென்று பார்வையிட்டார். காயமடைந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையையும் அவர் வழங்கினார்.

    இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (29-ந்தேதி) தூத்துக்குடி வந்தார். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்த அவர் விமான நிலையத்தில் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.

    துப்பாக்கி சூடு மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். இதையடுத்து அவர் துப்பாக்கி சூட்டில் பலியான‌ சாயர்புரம் அருகே உள்ள பேய்க்குளத்தை சேர்ந்த செல்வசேகர் (40) வீட்டுக்கு சென்றார். அங்கு செல்வ சேகரின் தாய் மாசானம் அம்மாள் மற்றும் செல்வசேகரின் சகோதரிகள் 2 பேரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அப்போது மாசானம் அம்மாள் தனது குடும்பம் வறுமையில் இருப்பதாகவும், தனது மகள்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கவர்னரிடம் கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை கேட்டு கொண்ட கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    அதன்பிறகு அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களிடம் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விவரங்களையும் கேட்டறிந்தார். கவர்னர் வருகையை யொட்டி தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். 
    துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நெல்லை மாவட்ட மீனவ கிராமமான உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல் உள்பட10 மீனவ கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரம் கடலுக்கு செல்லவில்லை. #SterliteProtest
    திசையன்விளை:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி தொடர் போராட்டம் நடத்தி வந்தவர்கள் போராட்டத்தின் 100-வது நாளான கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்க சென்றனர்.

    இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேரி பலியாகினர். இதை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் சேர்ந்த 7 ஆயிரம் சாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 4-வது நாளாக தொடர்ந்து இன்றும் அவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் நெல்லை மாவட்ட மீனவ கிராமமான உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல் உள்பட10 மீனவ கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரம் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடற்கரையில் 2 ஆயிரம் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உவரி கடற்கரையில் மட்டும் 200 நாட்டு படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. #SterliteProtest
    குமரி மாவட்டத்தில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த துணைநின்ற மாவட்ட கலெக்டர், மற்றும் துப்பாக்கியால் சுட்ட காவல்துறையினருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.#SterliteProtest
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என குமரி மாவட்ட அனைத்து சமூக அமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு அளிக்கப்பட்டது.

    குமரி மாவட்ட அனைத்து சமூக அமைப்பு சார்பில், கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில், குமரி மாவட்ட திருவருட்பேரவை பொதுச்செயலாளர் ஜேம்ஸ் ஆர்.டேனியல் உள்பட பலர் தூத்துக்குடி பிரச்சினை தொடர்பாக, குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுப்புகையினால் சுற்றுச்சூழல் மாசுபட்டு புற்றுநோய் போன்ற பல்வேறு உயிர்கொல்லும் நோய்களினால் பாதிக்கப்பட்டு உயிர்களை பலி கொடுத்து வரும் மக்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தின் 100-வது நாளில் நீதி கேட்டு பேரணியாகச் சென்ற வேளையில் காவல்துறை அத்துமீறி, வன்முறைத் தாக்குதல் நடத்தி எந்தவித முன் எச்சரிக்கையும் இன்றி துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் இறந்தனர். சுமார் 100 பேர் படுகாயம் அடைந்தனர்.

    காவல்துறையின் இந்த வன்முறைத் தாக்குதல் மனிதநேயமுள்ள யாராலும் ஏற்றுக்கொள்ள இயலாதது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

    கொல்லப்பட்டவர்கள், காயம் அடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சமூக நீதி அடிப்படையில் தகுந்த இழப்பீட்டு தொகை மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கிட வேண்டும். வேறு பல மாநிலங்களில் இயங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு தமிழக மக்களின் எதிர்ப்புகளையும் மீறி தூத்துக்குடி மாவட்டத்தில் கால் பதித்திருக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படவேண்டும்.

    துப்பாக்கிச் சூடு நடத்துவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் முரட்டுத்தனமாக துப்பாக்கி சூடு நடத்த துணைநின்ற மாவட்ட கலெக்டர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் துப்பாக்கியால் சுட்ட காவல்துறை வீரர்கள் கோர்ட்டில் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். காணாமல் போன மக்களைக் கண்டறிந்து அவர்களை மீட்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ், குமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவை ராஜ், குமரி மாவட்ட திருவருட்பேரவை ஒருங்கிணைப்பாளர் மரியவின்சென்ட், மரியவிக்டர், பங்கிராஸ், ஸ்டீபன், அகமது உசேன் ஆகியோர் உடன் சென்றனர். #SterliteProtest
    ×