search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - தேசிய மனித உரிமை ஆணையம் நேரடி விசாரணை
    X

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - தேசிய மனித உரிமை ஆணையம் நேரடி விசாரணை

    தூத்துக்குடி சூப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரடி விசாரணை நடத்துகிறது. உண்மை கண்டறியும் குழுவை உடனே அனுப்புகிறது. #Thoothukudifiring #NHRC
    புதுடெல்லி:

    தமிழகத்தை சேர்ந்த வக்கீல் ஏ.ராஜராஜன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன், டெல்லி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடந்த போது போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் பலியாகினர். மிகவும் கவலை அளிக்கக்கூடிய இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிடுமாறு கோரிக்கை வைத்தோம். ஆனால் தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிடாமல் தமிழக அரசிடமும், டி.ஜி.பி.யிடமும் அறிக்கை கேட்டு உள்ளது.

    இந்த சம்பவத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் விரைந்து செயல்படாவிட்டால் மேலும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடரும். போலீசார் தங்களின் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக இருக்கும் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிட்டு துப்பாக்கி சூடு நடந்த இடங்களை கள ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த வழக்கில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை கடந்த மே 25-ந்தேதியன்று விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ராஜீவ் சக்தேர் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

    அந்த தீர்ப்பில், வழக்குதாரரின் கோரிக்கையை தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 29-ந்தேதி தேசிய மனித உரிமை ஆணையத்தில் வழக்குதாரர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கலாம்; அன்றைய தினமே வழக்குதாரர் தாக்கல் வழக்கு பற்றி தேசிய மனித உரிமை ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    அதைத்தொடர்ந்து வழக்குதாரர் ஏ.ராஜராஜன் மற்றும் வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஆஜரானார்கள்.

    அவர்களின் வழக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-



    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து, விசாரணை நடத்தி, இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வு உரிமை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக கருத்து தெரிவித்து உள்ளது.

    இந்த நிலையில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தேசிய யூனியன் துணைத்தலைவர் ஏ.ராஜராஜன் தாக்கல் செய்துள்ள கோரிக்கையின் அடிப்படையிலும், டெல்லி ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை தொடர்ந்தும் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து களத்தில் நேரடி விசாரணை நடத்துவதற்கு தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் குழுவை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    மூத்த போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மூன்று துணை சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்களை கொண்டு உண்மை கண்டறியும் குழுவை தேசிய மனித உரிமை ஆணையத்தின் டைரக்டர் ஜெனரல் (புலனாய்வு) அமைக்க வேண்டும். இந்த குழு உடனடியாக தூத்துக்குடிக்கு சென்று, கடந்த 22-ந்தேதி அன்று நடைபெற்ற துப்பாக்கி சூடு குறித்து களத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

    அந்த விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு 2 வாரங்களுக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    கடந்த 23-ந்தேதி தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி ஆகியோருக்கு இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த நிலைத்தகவல் அறிக்கையை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பிறப்பித்துள்ள முந்தைய உத்தரவில் இருந்து, தற்போது பிறப்பித்து உள்ள இந்த உத்தரவு தனித்து வெளியிடப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #Thoothukudifiring #NHRC
    Next Story
    ×