search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tender"

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் ஊழல் புகாரில் ஆதாரம் இல்லை என்று ஐகோட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. #EdappadiPalaniswami #Highcourt

    சென்னை:

    தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும் இந்த முறைகேட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறவினர்களுக்கு தொடர்பு உள்ளது என்றும் தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.

    இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா விசாரித்து வருகிறார். கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சரின் நெருங்கிய உறவினர்கள் யாருக்கும் வழங்கப்படவில்லை.

    முதல்-அமைச்சரின் (மகனின் மனைவி) மருமகளின் சகோதரியின் கணவருடைய சகோதரருக்குத்தான் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒப்பந்தங்கள் சந்தை மதிப்புடன் ஒப்பிடும் போது நியாயமான விலைப் புள்ளிகளுடன் தான் வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

    மேலும் அவர் தன் வாதத்தில், ‘மனுதாரர் கூறுவது போல ஒரு கிமீ தூரமுடைய சாலையை ரூ. 2.20 கோடிக்கு போட முடியும் என்பதை ஏற்க முடியாது. ஏனெனில் இது இடத்திற்கு இடம் மாறுபடும். அந்தப்பகுதியின் மண் தரம் மற்றும் மூலப்பொருட்களின் சந்தை மதிப்பு விலைகளைப் பொறுத்து இது மாறுபடும். சில இடங்களில் மத்திய அரசின் கீழ் போடப்பட்ட சாலைகளுக்கு ரூ. 30 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது’ என்றும் வாதிட்டார்.

     


    இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் ரகசிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    பின்னர் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ‘நெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலேயே முகாந்திரம் இல்லை என்பதால் மேற்கொண்டு விசாரணை நடத்த தேவையில்லை’ என்று கூறினார்.

    அதற்கு நீதிபதி, ‘நெடுஞ்சாலை துறை முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அப்போது லஞ்ச ஒழிப்பு துறை யார் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், ‘லஞ்ச ஒழிப்பு துறையானது தன்னிச்சையாக செயல்படக் கூடிய அமைப்பு. தங்களுடைய விசாரணை விவரங்களை கூட லஞ்ச ஒழிப்பு துறை டி.ஜி.பி.யிடம் தெரிவிக்க தேவையில்லை’ என்றார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘லஞ்ச ஒழிப்பு துறையின் இயக்குனரை யார் நியமிக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, அரசு தான் நியமிக்கிறது என்று அட்வகேட் ஜெனரல் பதில் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #EdappadiPalaniswami #Highcourt

    ‘ஆன்-லைன்’ மூலம் இல்லாமல் டெண்டர்கள் நேரடியாக பெறப்படுவதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ‘ஆன்-லைன்’ டெண்டருக்கு பதில், தன் சொந்த மாவட்டமான சேலம் உள்ளிட்ட பல்வேறு நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டார அலுவலகங்களில், டெண்டர்களை நேரடியாகவே பெற்றுக்கொள்ளும் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நெடுஞ்சாலைத்துறையில் இணையவழி டெண்டர் இருப்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை என்ற முதல்-அமைச்சர் இப்போது, ஆன்-லைனை தவிர்த்து விட்டு, டெண்டர்களை நேரடியாக பெறுவது அதிர்ச்சி அளிக்கிறது.

    தமிழக நெடுஞ்சாலைகள் துறையில் உள்ள சென்னை பராமரிப்பு மற்றும் கட்டுமான வட்டார அலுவலகத்தில் ரூ.70 கோடிக்கு மேல் உள்ள 3.9.2018-ம் தேதியிட்ட டெண்டரும், இதே வட்டார அலுவலகத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமான 21.8.2018-ம் தேதியிட்ட டெண்டரும், சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை வட்டார அலுவலகத்தில் ரூ.140 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 20.8.2018-ம் தேதியிட்ட டெண்டரும் ஆன்-லைனில் பெறப்படாமல் நேரடியாக டெண்டர் படிவங்கள் கொடுக்கப்பட்டு, அவை பூர்த்தி செய்யப்பட்ட பிறகு நேரடியாகவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் பெறப்படுகிறது.

    உலக வங்கியின் ஊழல் எதிர்ப்பு விதிகளை கடைப்பிடிக்காவிட்டால், தமிழகத்திற்கு கிடைக்கும் நிதி உதவியே கிடைக்காமல் போய் விடும் என்பது தெரிந்தும், தனது உறவினர்களுக்காக பொது வாழ்வில் நேர்மையைத் தொலைத்து விட்டு தடுமாறும் ஒரு முதல்-அமைச்சரின் அவல நிலைமை, தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான தலைகுனிவு.


    ஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது, ஊழல் வழக்கு விசாரணையை லஞ்ச ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை நடத்தி வருகிறது. அந்த விசாரணையில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி, தி.மு.க. தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. இப்படியொரு சூழலில் கூட இன்னும் தன் பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத்துறையில், ரூ.310 கோடிக்கும் மேற்பட்ட டெண்டர்களை ஆன்-லைனுக்குப் பதில் நேரடியாகப் பெற்றுக்கொண்டு தங்களுக்கு கப்பம் கட்டும் நிறுவனத்திற்கோ, தன் உறவினர்களின் நிறுவனங்களுக்கோ டெண்டர்களை கொடுப்பதற்கான ஊழல் சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார் முதல்-அமைச்சர் என்பது சகித்துக் கொள்ள முடியாத சாபக்கேடு.

    டெண்டர்களை நேரடியாக பெறுவது, ஊழல் செய்வதற்குத்தான் வழி வகுக்கும் என்பதால், நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர்களை நேரடியாக பெறும் முறையை உடனடியாக கைவிட்டு, இணைய வழி மூலமே டெண்டர்களை பெற வேண்டும்.

    இப்போது வெளியிடப்பட்டுள்ள சேலம் மற்றும் சென்னை வட்டார அலுவலகங்களின் ரூ.310 கோடி மதிப்புள்ள டெண்டர் அறிவிக்கைகளையும் ரத்து செய்து விட்டு, இணைய வழியிலேயே டெண்டர்கள் பெறப்படும் என்ற அறிவிப்பினை உடனடியாக வெளியிட வேண்டும்.

    அதற்கு மாறாக இந்த டெண்டர் ஊழல்களை ஊக்குவிக்க அதிகாரிகள் துணைபோவார்கள் என்றால், அவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் சட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயமான நிலை ஏற்பட்டே தீரும் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #MKStalin #EdappadiPalaniswami
    தமிழகத்தில் 10 நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்ட டெண்டருக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. #SmartCity #MadrasHC
    சென்னை:

    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தமிழகத்தில் இருந்து 10 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டடன. இந்த திட்டத்தின் ஒரு அங்கமாக 10 நகரங்களில் மின்னணு நிர்வாகம், மொபைல் ஆப் வடிவமைப்பு ஆகிய பணிகளுக்காக தமிழக அரசு டெண்டர் விட்டு அதில் எல் அண்டு டி நிறுவனம் தேர்வாகியிருந்தது.

    சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த டெண்டர் வெளிப்படையாக நடக்கவில்லை எனக்கோரி ஏஸ்டெக் மிஷனரி என்ற நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி மகாதேவன், டெண்டரின் மேல் நடவடிக்கைக்கு தடை விதித்து வழக்கை செப்டம்பர் 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 
    கடர் நீரை குடிநீராக்கும் டெண்டரை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
    சென்னை:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் சுமார் ரூ.1,259 கோடி செலவில் தினமும் 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் கடந்த ஆண்டு சர்வதேச அளவில் ஒப்பந்த புள்ளிகள் கோரியது.

    இந்த டெண்டருக்கு விண்ணப்பித்த 5 நிறுவனங்களை தேர்வு செய்து ராஞ்சியில் உள்ள ஆய்வு நிறுவனத்திற்கு ஆய்வுக்காக குடிநீர் வாரியம் அனுப்பியது.

    இந்த ஆய்வு நிறுவனம் 5 நிறுவனங்களின் ஒப்பந்த புள்ளிகளையும் நிராகரிக்க பரிந்துரைத்துள்ளது. இருப்பினும் இரு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு நிறுவனத்தை சட்ட விரோதமாக தேர்வு செய்ய சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறி சிங்க் எலக்ட்ரிகல் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்த போது டெண்டரில் பங்கேற்காத இந்த நிறுவனம் வழக்கு தொடர எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று சென்னை பெருநகர குடிநீர் வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #HighCourt
    8 வழி பசுமைச்சாலை பணியில் முதல்-அமைச்சரின் உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் கிளம்பி உள்ளது பற்றி முதல்வர் தான் விளக்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ponradhakrishnan

    நாகர்கோவில்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்ததற்கு தமிழக அரசை பாராட்டுகிறேன். இந்த விழாவையொட்டி நடிப்புத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர்கள், துணை நடிகர்களுக்கு சிவாஜி பெயரில் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி மக்கள் இதனை வெளிப்படுத்தி உள்ளனர். மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தை திசை திருப்பியதாக தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகள் தமிழகத்தில் செயல்படுவதாக நான் பலமுறை குற்றம் சாட்டி வருகிறேன். இப்போது அது வெளிவந்துள்ளது.

    இந்த அமைப்பை தடை செய்வதோடு மட்டுமல்ல, வேருடன் அகற்ற வேண்டும். இதுபோல பல அமைப்புகள் உள்ளன. அவற்றையும் களையெடுக்க வேண்டும். தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் பலியானதற்கு தி.மு.க.வும் காரணம். சட்டசபையில் அவர்கள் இதுபற்றி பேசவில்லை. ஆளும் கட்சியை தி.மு.க. கேள்வி கேட்பது இல்லை, வெளிநடப்பு மட்டுமே செய்கிறார்கள்.

    உள்ளாட்சி தேர்தல் ஏன் நடத்தவில்லை என்று சட்டசபையில் தி.மு.க. கேள்வி எழுப்பவில்லை. இதன் மூலம் இருகட்சிகளுக்கும் மறைமுக கூட்டணி இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    டெல்லியில் 16 வழிச்சாலை அமைக்கப்பட்டபோது எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. ஆனால் தமிழகத்தில் வளர்ச்சித்திட்டங்களை அறிவிக்கும்போது எதிர்ப்புகள் வருகிறது. இதை அன்னிய சக்திகள் தூண்டி விடுகிறார்கள். மக்களுக்கு நன்மை எது, தீமை எது என்பது தெரியவேண்டும். முன்னேற்றம் வரவேண்டுமானால் சிலவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழகம் முன்னேறும். வேலைவாய்ப்பு பெருகும். இங்குள்ள இளைஞர்கள் வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்வது தவிர்க்கப்படும்.

    தமிழகத்தில் அமைய உள்ள 8 வழி பசுமைச்சாலை திட்டத்தால் நல்ல பலன் கிடைக்கும். தமிழகம் முன்னேற்றம் அடையும். இச்சாலை பணியை மேற்கொள்ள முதல்-அமைச்சரின் உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் கிளம்பி உள்ளது. இதுபற்றி முதல்-அமைச்சர் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெறும். அப்போது ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் பலன்களை மக்கள் உணர்வார்கள்.

    குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைந்தால் மாவட்டம் வளர்ச்சி பெறும். துறைமுகத்துக்காக மக்களுக்கு சொந்தமான ஒரு அடி நிலம் கூட எடுக்கவில்லை. அப்படியிருந்தும் ஏன் எதிர்க்கிறார்கள்? என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பா.ஜ.க. மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், முன்னாள் நகரசபை தலைவி மீனாதேவ் ஆகியோர் உடனிருந்தனர்.  #ponradhakrishnan 

    ×