search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் ஊழல் புகாரில் ஆதாரம் இல்லை - ஐகோட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தகவல்
    X

    எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் ஊழல் புகாரில் ஆதாரம் இல்லை - ஐகோட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தகவல்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் ஊழல் புகாரில் ஆதாரம் இல்லை என்று ஐகோட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. #EdappadiPalaniswami #Highcourt

    சென்னை:

    தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும் இந்த முறைகேட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறவினர்களுக்கு தொடர்பு உள்ளது என்றும் தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.

    இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா விசாரித்து வருகிறார். கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சரின் நெருங்கிய உறவினர்கள் யாருக்கும் வழங்கப்படவில்லை.

    முதல்-அமைச்சரின் (மகனின் மனைவி) மருமகளின் சகோதரியின் கணவருடைய சகோதரருக்குத்தான் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒப்பந்தங்கள் சந்தை மதிப்புடன் ஒப்பிடும் போது நியாயமான விலைப் புள்ளிகளுடன் தான் வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

    மேலும் அவர் தன் வாதத்தில், ‘மனுதாரர் கூறுவது போல ஒரு கிமீ தூரமுடைய சாலையை ரூ. 2.20 கோடிக்கு போட முடியும் என்பதை ஏற்க முடியாது. ஏனெனில் இது இடத்திற்கு இடம் மாறுபடும். அந்தப்பகுதியின் மண் தரம் மற்றும் மூலப்பொருட்களின் சந்தை மதிப்பு விலைகளைப் பொறுத்து இது மாறுபடும். சில இடங்களில் மத்திய அரசின் கீழ் போடப்பட்ட சாலைகளுக்கு ரூ. 30 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது’ என்றும் வாதிட்டார்.

     


    இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் ரகசிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    பின்னர் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ‘நெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலேயே முகாந்திரம் இல்லை என்பதால் மேற்கொண்டு விசாரணை நடத்த தேவையில்லை’ என்று கூறினார்.

    அதற்கு நீதிபதி, ‘நெடுஞ்சாலை துறை முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அப்போது லஞ்ச ஒழிப்பு துறை யார் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், ‘லஞ்ச ஒழிப்பு துறையானது தன்னிச்சையாக செயல்படக் கூடிய அமைப்பு. தங்களுடைய விசாரணை விவரங்களை கூட லஞ்ச ஒழிப்பு துறை டி.ஜி.பி.யிடம் தெரிவிக்க தேவையில்லை’ என்றார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘லஞ்ச ஒழிப்பு துறையின் இயக்குனரை யார் நியமிக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, அரசு தான் நியமிக்கிறது என்று அட்வகேட் ஜெனரல் பதில் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #EdappadiPalaniswami #Highcourt

    Next Story
    ×