search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tasmac store"

    நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. திருச்சியிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்து இயங்கும் பார்கள் மற்றும் ஓட்டல் பார்கள் 15-ந்தேதி மூடப்படும் என கலெக்டர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

    கடலூர் அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் அடுத்த வசந்தராம்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் சூப்பர் வைசர் கோபால்சாமி மற்றும் விற்பனையாளர் பிரகாஷ் ஆகியோர் டாஸ்மாக் கடை யை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.

    இன்று காலை டாஸ்மாக் கடை பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்தது. உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் டாஸ்மாக் கடை ஊழியருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அவர்கள் வந்து பார்வையிட்டபோது டாஸ் மாக்கடையில் இருந்த ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் சுமார் 6,000 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 

    இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு முன்பு அமர்ந்து, கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் ஊட்டத்தூர் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறக்க முயற்சி செய்தனர். அப்போது ஊத்தங்கால் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் வீரமுத்து தலைமையில், எதிர்ப்பு தெரிவித்து கடைக்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். 

    அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினர் கடையை திறக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனையடுத்து இரு தரப்பினரையும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மாலையில் மீண்டும் டாஸ்மாக் கடையை திறந்ததால், ஊத்தங்கால் பொதுமக்கள் கடைக்கு முன்பு அமர்ந்து இரவு 10 மணி வரை தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். 

    இந் நிலையில் நேற்று காலை ஊத்தங்கால் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு முன்பு அமர்ந்து கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மற்றொரு தரப்பினர் கடையை திறக்க வேண்டும் எனக் கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து போலீசார் மற்றும் டாஸ்மாக் அலுவலர்கள் இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கடை திறக்கப்படாது என தெரிவித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து 2 நாளாக டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கடை திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
    சிங்கம்புணரி அருகே அரசினம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி அருகே அரசினம்பட்டி காட்டுப்பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடை உள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிங்கம்புணரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது டாஸ்மாக் கடை அருகே வெளிச்சம் தெரிவதை கண்ட போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் போலீசாரை கண்டதும் காரில் தப்பியோடியது. அவர்களை பிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் முயன்றார். இருப்பினும் தப்பிவிட்டனர். இதனையடுத்து போலீசார் டாஸ்மாக் கடையில் ஆய்வு செய்தனர். அப்போது கடையின் பின்புறம் சுவரில் துளையிட்டு இருப்பதும், மதுபாட்டில்கள் திருடப்பட்டு இருப்பதையும் பார்த்தனர். மேலும் மதுபாட்டில் பெட்டிகள் வெளியே அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. மேலும் திருட்டு கும்பல் கொண்டு வந்த ஆயுதங்களை விட்டுச் சென்றுள்ளனர்.

    மதுபாட்டில் திருட்டு குறித்து அறிந்த கடை மேற்பார்வையாளர், கடை பொறுப்பாளர் ராஜேஷ் மற்றும் மேலாளர் விஜயாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வந்த அவர்கள் கடையில் சோதனை மேற்கொண்டபோது ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின்பேரில் சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இதே கடையில் பூட்டை உடைத்து காலவதியான மதுபாட்டில்களை திருடப்பட்ட நிலையில், தற்போது 2–வது முறையாக சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை மர்ம ஆசாமிகள் திருடியுள்ளனர்.
    பொதுமக்கள் புதிதாக திறக்க இருந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் ஊட்டத்தூர் சாலையில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை கடந்த ஓராண்டுக்கு முன்பு பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஊத்தங்கால் அருகே டாஸ்மாக் கடை திறக்க முயற்சி செய்தனர். இதனால் கடை திறக்கும் பகுதியில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. 

    இந்நிலையில் ஊத்தங்கால் பகுதி பொதுமக்கள் புதிதாக திறக்க இருந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாடாலூர் கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் கடையை திறக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பாடாலூர் போலீசார் இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கடை திறப்பதை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. 

    இதையடுத்து டாஸ்மாக் கடை மீண்டும் மாலையில் திறந்ததால் ஊத்தங்கால் பகுதி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், உடனடியாக கடை மூடப்பட்டது. மேலும் ஊத்தங்கால் பகுதி பொதுமக்கள் கடை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
    அஞ்சுகிராமம் அருகே நேற்று இரவு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அஞ்சுகிராமம்:

    அஞ்சுகிராமம் அருகே உள்ள மருங்கூரில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. நேற்று வழக்கம்போல இந்த கடையை திறந்து மது விற்பனை நடந்தது. இரவு 10 மணி அளவில் கடை ஊழியர்கள் விற்பனை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றனர்.  

    நள்ளிரவு அந்த மதுக்கடையின் பூட்டை கொள்ளையர்கள் உடைத்து உள்ளனர். இந்த சத்தம் கேட்டதும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இதுபற்றி அஞ்சுகிராமம் போலீசுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அந்த மதுக்கடைக்கு விரைந்து சென்றனர். 

    போலீஸ் ஜீப் வரும் சத்தம் கேட்டதும் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அந்த மதுக்கடை கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அங்கிருந்து மதுபாட்டில்கள் உள்பட எந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட வில்லை என்பது தெரியவந்தது. கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். 
    ஈரோடு அருகே டாஸ்மாக் கடையில் வாலிபர் வாங்கிய மது பாட்டிலில் உடைந்த கண்ணாடி துண்டு இருந்தது குறித்து பிராந்தி நிறுவனம் மீது கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
    சென்னிமலை:

    சென்னிமலை மேற்கு ராஜ வீதியை சார்ந்தவர் தமிழ்செல்வன். இவர் சென்னிமலை அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள அம்மாபாளையம் டாஸ்மாக் கடைக்கு இரவு சென்றார்.

    100 ரூபாய் மதிப்புள்ள ஒரு குவார்ட்டர் வாங்கி அங்குள்ள பாரில் குடித்தார். பாதி குடித்த நிலையில் அந்த பாட்டிலுக்குள் பெரிய கண்ணாடி துண்டு கிடப்பதை அவர் பார்த்தார்.

    இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பாட்டிலின் வாய்பகுதியை விட கண்ணாடி துண்டு பெரியதாக இருந்ததால் பாட்டிலுக்குள் இருந்த கண்ணாடி துண்டு வெளியே வரவில்லை.

    சிறிய கண்ணாடி துண்டாக இருந்திருந்தால் அது பாட்டிலுக்குள் இருந்து வெளியே வந்து தமிழ்செல்வனின் வயிற்றுக்குள் சென்று குடலை கிழித்திருக்கும்.

    பாட்டில் தயாரிக்கும் போதே உள்ளே அந்த கண்ணாடி துண்டு பாட்டிலுக்குள் இருந்திருக்கலாம் என தெரிகிறது.

    ஒருவேளை கண்ணாடி துகள்கள் பாட்டிலுக்குள் இருந்திருக்குமோ? என்றும் அந்த துகள்கள் தனது வயிற்றுக்குள் சென்றிருக்குமோ? என்ற அச்சத்தில் தமிழ்செல்வன் வாந்தி எடுத்தார்.

    இதனையடுத்து அவரது நண்பர்கள் அவரை முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பாரில் மது அருந்த வந்தவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தமிழ்செல்வன் கூறும்போது, ‘‘இந்த விவகாரத்தில் சரியான அக்கறை இல்லாமல் பொறுப்பற்ற நிலையில் பிராந்தி தயாரிப்பு நிறுவனம் இருந்திருக்கிறது.எனவே இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன்’’ என்றார். #tamilnews
    திருவள்ளூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள பேரம்பாக்கத்தில் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி உள்ளது. சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    பொருளாதார ஆசிரியர் நியமிக்க வேண்டும், பள்ளிக்கு சுற்றுச்சுவர், கழிவறை வசதி மற்றும் பள்ளி அருகே உள்ள மதுக்கடையை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பிளஸ்-1, பிளஸ்-2 மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இந்த வீடியோ காட்சிகள் தற்போது பேஸ்புக், வாட்ஸ்- அப்பில் வேகமாக பரவி வருகிறது. வீடியோ காட்சி 6 நிமிடம் ஓடுகிறது.

    அதில் மாணவி ஒருவர் ஆவேசமாக பேசுகிறார். சில மாணவிகள் கோரிக்கை குறித்து அட்டையை ஏந்தி நிற்கிறார்கள். அருகில் 50-க் கும் மேற்படட மாணவிகள் கோ‌ஷம் எழுப்புகின்றனர்.

    மாணவிகளின் இந்த போராட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்ததாக தெரிகிறது. இதனை மாணவிகளே படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவவிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதுபற்றி கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருத்தணி அருகே அரசு பள்ளியில் இடமாறுதல் ஆன ஆசிரியர் பகவானை வெளியே விட மறுத்து மாணவ - மாணவிகள் பாசப் போராட்டம் நடத்திய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

    நெல்லிக்குப்பம் அருகே டாஸ்மாக் கடையை சேதப்படுத்திய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    கடலூர்:

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி அந்த கட்சி நிர்வாகிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே நடுவீரப்பட்டு டாஸ்மாக்கடைக்குள் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் தயாநிதி (வயது 36) தலைமையில் நிர்வாகிகள் தெய்வீகன், பாலசந்தர், சிரஞ்சீவி, விஜயபாரதி, மணிமாறன் ஆகியோர் புகுந்தனர். அங்கிருந்த ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

    மேலும் டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டி ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தயாநிதி உள்பட 6 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய தயாநிதி மீது நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் இவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால், இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் தயாநிதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் தண்டபாணி உத்தரவிட்டார். இதையடுத்து தயாநிதியை நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், குண்டர் சட்டத்தில் கைது செய்தார்.

    டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

    பண்ருட்டி:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கிலும், நெய்வேலியில் நடந்த கூட்டத்தில் இந்திய இறை யான்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    வேல்முருகனை விடுதலை செய்யக் கோரி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவம் நடை பெற்று வருகின்றன.

    கடந்த சிலநாட்களுக்கு முன்பு கடலூர் கம்மியம் பேட்டையில் உள்ள டாஸ் மாக்கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல்குண்டு வீசினர். அதுபோல் நெல்லிக்குப்பம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சி.என்.பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்து மது பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தினர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன் குப்பம் சந்தைதோப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக்கடை மீது மர்ம நபர்கள் பெட் ரோல்குண்டு வீசினர். இதில் கடையில் இருந்த ஊழியர் கண்ணன் என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் நேற்று மாலை திடீரென்று கடலூர் வந்தார்.

    அவர் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று ஐ.ஜி.ஸ்ரீதர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    அதன்பின்னர் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு சேதமடைந்த கம்மியம் பேட்டை, பணிக்கன்குப்பம் டாஸ்மாக்கடைகள் மற்றும் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் மர்ம நபர்களால் தீவைக்கப்பட்ட அரசு பஸ் சையும் ஐ.ஜி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதையடுத்து பணிக்கன் குப்பம் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    நேற்று இரவு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட இளைஞர் அணி தலைவர் அரங்கநாதன் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை மீது தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசி வருவதால் டாஸ் மாக்கடை ஊழியர்கள் அச்சமடைந்தள்ளனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பணிக்கன் குப்பம் சந்தை தோப்பு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக மணிவேல் (வயது 49) என்பவரும், உதவியாளராக பண்ருட்டி சத்திய மூர்த்திதெருவை சேர்ந்த கண்ணன் (39) என்பவரும் பணியாற்றி வருகிறார்கள்.

    நேற்று இரவு 2 பேரும் டாஸ்மாக் கடையில் மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். இரவு 9 மணி அளவில் மர்ம மனிதர்கள் சிலர் டாஸ்மாக் கடையின் பின் பக்கம் உள்ள ஜன்னல் வழியாக திடீரென்று பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கடையின் உள்ளே விழுந்த பெட்ரோல் குண்டு தீப்பிடித்து எரிந்தது. பெட்ரோல் குண்டு வெடித்ததில் கண்ணன் பலத்த தீக்காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    படுகாயம் அடைந்த கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக் கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    வடலூர் அருகே உள்ள கருங்குழியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் போலீஸ்காரர் ஒருவர் மட்டும் இருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் மர்ம மனிதர்கள் சிலர் வந்தனர். டாஸ்மாக்கடை முன்பு போலீஸ் இருப்பதை பார்த்ததும் தாங்கள் கொண்டுவந்திருந்த மண்எண்ணை பாட்டிலை டாஸ்மாக்கடை முன்பு வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்மியம்பேட்டை-செம் மண்டலம் இணைப்பு சாலையில் உள்ள டாஸ் மாக் கடையில் மர்ம மனிதர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். அதுபோல நடுவீரப்பட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம மனிதர்கள் புகுந்து டாஸ்மாக் கடையை அடித்து உடைத்து சூறையாடினார்கள். அங்கிருந்து மதுபாட்டில்களையும் உடைத்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை மீது தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசி வருவதால் டாஸ் மாக்கடை ஊழியர்கள் அச்சமடைந்தள்ளனர்.

    உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்த கட்சியை சேர்ந்தவர்கள் டாஸ்மாக்கடை மீது பெட்ரோல்குண்டு வீசியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே கம்மியம் பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் பெட் ரோல் குண்டு வீசியதில் சேத மடைந்தகடையை நேற்று இரவு டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையத்தில் சூறையாடப்பட்ட டாஸ்மாக் கடையையும் பார்வையிட்டார்.

    அதன்பின்பு அவர் கூறும்போது, கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் தொடர்ந்து பெட்ரோல்குண்டு வீசப்பட்டு வருகிறது. மேலும் ஒருசில வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகள், அரசு பணிமனை மற்றும் பஸ் நிலையங்களுக்கு போலீஸ்பாதுகாப்பு போடப்படும் என்றார். 

    பெண்கள் போராட்டம் எதிரொலியால் காஞ்சீபுரத்தில் மதுக்கடையை மூட கலெக்டர் உத்தரவிட்டதால் பொதுமக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களும், பொதுமக்களும் மதுக்கடையை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுவும் அளித்தனர். மேலும் மதுக்கடையை மூடும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து இருந்தனர்.

    இந்தநிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கடையினை அகற்ற மாவட்ட கலெக்டர் பொன்னையா அதிரடியாக உத்தரவிட்டார்.

    கலெக்டரின் இந்த அறிவிப்பினால் பொதுமக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் கலெக்டர் பொன்னையாவுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    ×