search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sourav Ganguly"

    • கங்குலியின் பயோபிக் படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்க முன்வந்துள்ளார்.
    • கங்குலியின் ஆரம்ப நாட்களிலிருந்து அவர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த முக்கியச் சம்பவங்களை இந்தப் படம் கூறவிருக்கிறது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவராக இருந்தவர் சவுரவ் கங்குலி. இவரை தாதா என்றும் அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவார். இதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்று அர்த்தம் ஆகும். இந்திய கிரிக்கெட் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி.

    இவர் 1996-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகினார். அடுத்தடுத்து இரு சதங்களை அடித்து கவனத்தை ஈர்த்தவர். 2000-ம் ஆண்டில் இந்திய அணிக்குள் சூதாட்ட விவகாரம் தலைதூக்கிய போது கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார்.

    தனது திறமையாலும், தலைமைப் பண்பாலும் அணிக்குச் சிறந்த கேட்பனாக கங்குலி வலம் வந்தார். கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி 11 வெற்றிகளைப் பெற்றது.

    இந்த நிலையில், கங்குலியின் பயோபிக் படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்க முன்வந்துள்ளார். சமீபத்தில் கங்குலியை நேரில் சந்தித்து இதுகுறித்து அவர் பேசியதாக கூறப்படுகிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் இதில் நாயகனாக ரன்பீர் கபூர் நடிக்க கங்குலி விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த படம் கங்குலியின் ஆரம்ப நாட்களிலிருந்து அவர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த முக்கியச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

    • சுப்மன் கில் மற்றும் கேமரூன் கிரீன் ஆகிய இருவரை மட்டும் கங்குலி தனது டுவிட்டரில் பக்கத்தில் பாராட்டினார்.
    • ஒரு வார்த்தை கூட விராட் கோலி குறித்து குறிப்பிடாதது இந்திய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

    ஐபிஎல் 2023 தொடரின் லீக் சுற்று முடிந்து பிளே ஆப் சுற்று இன்று துவங்குகிறது. லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் இறுதி போட்டிக்கு செல்வதற்காக பிளே ஆப் சுற்றில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    இத்தொடரில் முதல் கோப்பை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வழக்கம் போல லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்தது.

    பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு தனி ஒருவனாக போராடிய விராட் கோலி சதமடித்தார். இதன் மூலம் பெங்களூரு அணி 197 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி சுப்மன் கில் அதிரடியால் வெற்றிவாகை சூடியது.

    சதமடித்த இருவரையும் அனைத்து ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டிய நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி மட்டும் சுப்மன் கில் மற்றும் ஹைதராபாத்துக்கு எதிராக சதமடித்த கேமரூன் கிரீன் ஆகிய இருவரை மட்டும் தனது டுவிட்டரில் பாராட்டினார். அதில் ஒரு வார்த்தை கூட விராட் கோலி குறித்து குறிப்பிடாதது இந்திய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 

    இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் டெல்லியின் இயக்குனராக பெவிலியனில் அமர்ந்திருந்த கங்குலியை விராட் கோலி முறைத்தார். இறுதியில் அந்த இருவரும் போட்டியின் முடிவில் கை கொடுத்துக் கொள்ளாமல் முகத்தை பார்க்காமல் சென்றது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. இருப்பினும் மீண்டும் டெல்லி - பெங்களூரு மோதிய போது அந்த இருவருமே கை கொடுத்துக் கொண்டதால் பிரச்சனை முடிந்ததாக அனைவரும் நினைத்தனர்.

    ஆனால் தற்போது ஒரே போட்டியில் சதமடித்தும் சுப்மன் கில்லை பாராட்டிய அவர் விராட் கோலி பற்றி எதுவுமே சொல்லாமல் புறக்கணித்துள்ளது இன்னும் அந்த பகைமையை மறக்கவில்லை என்பதை காட்டுவதாக ரசிகர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த 2 பேர் சதத்தை பார்த்த நீங்கள் கோலியின் சதத்தை பார்க்கவில்லையா எனவும் கேள்வி எழுப்பினர்.

    மேலும் அன்றைய நாளில் சதமடித்த 3 பேரையும் வாழ்த்திய சச்சினை பார்த்து கற்றுக் கொள்ளுமாறு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    • இதுவரை கங்குலிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.
    • சவுரவ் கங்குலி தற்போது டெல்லி அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார்.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. இதுவரை கங்குலிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்புக்கான கால அவகாசம் முடிவுக்கு வந்த நிலையில், கங்குலிக்கான பாதுகாப்பை இசட் பிரிவுக்கு உயர்த்த மேற்கு வங்காள அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில மூத்த அதிகாரி தெரிவித்தார். இசட் பிரிவு பாதுகாப்பின் படி சவுரவ் கங்குலிக்கு 8 முதல் 10 போலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள்.

    சவுரவ் கங்குலி தற்போது டெல்லி அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார். வரும் 21-ம் தேதி கங்குலி கொல்கத்தா வருகை தருகிறார். அதன்பிறகு அவருக்கு தினமும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

    • டெல்லி கேப்பிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • லக்னோ அணியுடன் நடந்த போட்டியின் போது விராட் கோலி ஒவ்வொருவரிடமும் வாக்குவாதம் செய்தார்.

    கடந்த ஏப்ரல் 15-ம் தேதி பெங்களூரு மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இதில், முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது.

    பின்னர், கடின இலக்கை துரத்திய இந்தப் போட்டியில் டெல்லி அணிக்கு ஒவ்வொரு விக்கெட் விழும் போது விராட் கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டார். அதுமட்டுமின்றி வெளியில் அமர்ந்திருக்கும் டெல்லி அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலியை கூட முறைத்துக் கொண்டார். கடைசியாக டெல்லி அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இதையடுத்து விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி இருவரும் கை கொடுக்காமல் சென்றனர். மேலும், விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்குலி அன்பாலோ செய்தார். இதையடுத்து ஐபிஎல் தொடரின் 50-வது போட்டியில் இரு அணிகளும் மோதின. இந்தப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

    பின்னர் கடின இலக்கை துரத்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆர்சிபி அணி தோல்வி அடைந்தால் தான் விராட் கோலி அமைதியை கடைபிடிக்கிறார். இல்லையென்றால், அவரது ஆக்ரோஷத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இவ்வளவு ஏன், லக்னோ அணியுடன் நடந்த போட்டியின் போது விராட் கோலி ஒவ்வொருவரிடமும் வாக்குவாதம் செய்த நிலையில் கடைசியாக கவுதம் காம்பீரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அவருக்கு போட்டியின் முழு சம்பளமும் அபராதமாக விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில், நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அமைதியை கடைபிடித்த விராட் கோலி மற்றும் டெல்லியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி இருவரும் சமாதானமாக சென்றுள்ளனர். ஒருவருக்கொருவர் கை கொடுத்துக் கொண்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்தப் போட்டியில் தோல்வியை தழுவிய ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு 51 சதவிகிதத்திலிருந்து 34 சதவிகிதமாக குறைந்துள்ளது.

    • துணைக்கேப்டன் பதவி நீக்கம் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.
    • இதேபோன்று பலவீரர்கள் இந்த நிலையை சந்தித்திருக்கிறார்கள்.

    இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பாடர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தாலும் இந்த தொடரில் அதிகமாக பேசப்படும் விஷயமாக இருப்பது இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல் ராகுலின் பேட்டிங் குறித்துதான்.

    ஏனெனில் ஏற்கனவே முதல் இரண்டு போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு மூன்றாவது போட்டியிலும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று பலரும் கூறி வருகின்றனர். கே.எல் ராகுல் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

    இந்நிலையில் இந்தியாவில் விளையாடும் போதே உங்களால் ரன்னடிக்க முடியவில்லை என்றால் வேறு என்ன செய்ய முடியும் என்று காட்டமான கருத்தினை கங்குலி வெளிப்படுத்தி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    உங்களால் இந்தியாவிலேயே ரன்களை குவிக்க முடியவில்லை என்றால் நிச்சயம் உங்கள் மீது விமர்சனம் எழத்தான் செய்யும். கே.எல் ராகுல் மட்டும் இந்த நிலையை சந்திக்கவில்லை.

    இதேபோன்று பலவீரர்கள் இந்த நிலையை சந்தித்திருக்கிறார்கள். துணைக்கேப்டன் பதவி நீக்கம் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். தேர்வு குழுவினர் தொடர்ச்சியாக அவரை கவனித்து வந்து தான் இந்த முடிவை எடுத்து இருப்பார்கள். இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அவரது திறனை பார்த்து வருவதாலேயே அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்கி வருகிறார் என்று கங்குலி வெளிப்படையாகவே கூறியது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 3 வருடங்களில் தரமான பந்து வீச்சு கூட்டணிக்கு எதிராக அவர் இன்னும் சதமடிக்கவில்லை.
    • வங்கதேசத்துக்கு எதிராக அடித்த சதத்தை விட தரமான பந்து வீச்சை கொண்டு சதம் அடிக்க வேண்டும் என கங்குலி கூறினார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நாளை முதல் நாக்பூரில் துவங்குகிறது. வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது.

    முன்னதாக கடந்த 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைப்பதற்கு செடேஸ்வர் புஜாரா முக்கிய காரணமாக திகழ்ந்தார் என்றே சொல்லலாம். இருப்பினும் 2020/21 தொடரில் பார்மை இழந்து தடுமாறிய அவர் சதமடிக்க முடியாமல் தடுமாறினார். இதனால் அவரை கடந்த பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தேர்வுக்குழு அதிரடியாக நீக்கியது.

    இந்நிலையில் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 வருடங்கள் கழித்து ஒரு வழியாக சதமடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.

    வங்கதேசத்துக்கு எதிராக அடித்த சதத்தை விட தரமான பந்து வீச்சை கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் சதமடித்து தன்னுடைய தரத்தை நிரூபிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    அவர் தன்னுடைய 100-வது டெஸ்ட் போட்டியை டெல்லியில் விளையாடுவது மிகப்பெரிய சாதனையாகும். அதன் வாயிலாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டியில் விளையாடிய 13வது இந்தியர் என்ற சாதனையும் படைப்பார். அதற்கு அவர் தகுதியானவர்.

    ஆனால் இந்த தொடரில் அவர் தன்னுடைய தரத்திற்கேற்றார் போல் செயல்பட வேண்டும்.

    ஏனெனில் கடந்த 3 வருடங்களில் தரமான பந்து வீச்சு கூட்டணிக்கு எதிராக அவர் இன்னும் சதமடிக்கவில்லை. எனவே அவருக்கு அப்படி ஒரு சதம் தற்போது தேவைப்படுகிறது. அதனால் இது அவருக்கு மிகப்பெரிய தொடராக அமையும்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    • 2019-ம் ஆண்டு முதல் பிசிசிஐ தலைவர் பதவியை முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வகித்து வந்தார்.
    • பிசிசிஐ புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தலைவர் பதவியை 2019-ம் ஆண்டு முதல் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வகித்து வந்தார். அவரது பதவி பறிக்கப்பட்டது. அவர் ஐ.சி.சி. என்னும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என கூறப்பட்டது.

    அவரை அந்த பதவிக்கு போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குரல் கொடுத்தார்.

    இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் கடந்த வாரம் வலியுறுத்தினார்.

    இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்திருந்த ரோஜர் பின்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஆனாலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம், ஐ.சி.சி. தேர்தல் பற்றி விவாதிக்காமல் முடிந்துள்ளது.

    இதனால் சவுரவ் கங்குலி, ஐ.சி.சி.யின் தலைவர் பதவியில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மத்திய பா.ஜ.க. அரசை கடுமையாக சாடி உள்ளார்.

    இதையொட்டி கொல்கத்தாவில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஐ.சி.சி.க்கு ஏன் சவுரவ் கங்குலி அனுப்பப்படவில்லை? இது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ள யாரோ ஒருவரின் நலனுக்காகத்தான். (இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா உள்ளார்.)

    நான் பா.ஜ.க. தலைவர்கள் பலரோடு பேசி விட்டேன். ஆனால் அவர் அனுமதிக்கப்படவில்லை. அவரது வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

    இது வெட்கக்கேடானது. அரசியல் பழிவாங்கும் செயல் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கங்குலி பா.ஜ.க.வில் சேர மறுத்ததால்தான் அவர் ஐ.சி.சி. தலைவர் பதவியில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு வரும் 20-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்.
    • கங்குலியை ஐசிசி தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    கொல்கத்தா:

    கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது:

    கங்குலி மிக பிரபலமான நபர். இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். சவுரவ் கங்குலி மேற்கு வங்காளத்தின் பெருமை மட்டும் கிடையாது. அவர் இந்தியாவின் பெருமையும் கூட. அவர் ஏன் இவ்வளவு நியாயமற்ற முறையில் ஒதுக்கப்பட்டார்.

    கங்குலி மீது கவனம் செலுத்தி அவரை ஐ.சி.சி. தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்க வேண்டும் என்று நான் பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

    ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு வரும் 20-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிட்டால் பி.சி.சி.ஐ. ஆதரவுடன் கங்குலி எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

    • கங்குலி 2-வது முறையாக கிரிக்கெட் வாரிய தலைவராக விரும்பினார் என்று தகவல்கள் வெளியானது.
    • கங்குலிக்கு போதுமான ஆதரவு இல்லை என்றும் கூறப்பட்டது.

    முன்னாள் கேப்டன் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருக்கிறார். அவரது பதவி காலம் அடுத்த வாரம் முடிகிறது. கங்குலிக்கு விருப்பம் இருந்த போதிலும் 2-வது முறையாக அவருக்கு பதவி வழங்க மறுக்கப்பட்டது.

    அதே நேரத்தில் ஜெய்ஷா கிரிக்கெட் வாரிய செயலாளர் பதவியில் மேலும் 3 ஆண்டு நீடிக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார்.

    கங்குலிக்கு பதிலாக ரோஜர் பின்னி பி.சி.சி.ஐ. தலைவராவது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரோஜர் பின்னி கிரிக்கெட் வாரிய தலைவராவதை வரவேற்கிறேன். உலக கோப்பையை வென்ற (1983) அணியில் இடம்பெற்ற சக வீரர் அந்த பொறுப்பை ஏற்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    அவர் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தார். ரோஜர் பின்னி பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை ஏற்க எல்லா தகுதியும் இருக்கிறது. அவர் ஒரு உலக கோப்பையை வென்றவர்.

    நேர்மையான அவர் நல்ல குணாதியசங்களை பெற்றவர். மைதானத்தில் உள்ள வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக ரோஜர் பின்னியிடம் வலியுறுத்துவோம்.

    கங்குலி 2-வது முறையாக கிரிக்கெட் வாரிய தலைவராக விரும்பினார் என்று தகவல்கள் வெளியானது. அவருக்கு போதுமான ஆதரவு இல்லை என்றும் கூறப்பட்டது. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை.

    இன்றைக்கு நான் எதையாவது செய்கிறேன் என்றால் இன்னும் 3 ஆண்டுக்கு நான் அதையே செய்வேன் என்பது கிடையாது. புதியவர்கள் வருவார்கள், பொறுப்பேற்பார்கள். இதுவும் ஒரு விதத்தில் ஆரோக்கியமானது.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

    • வாழ்க்கையில் நான் எதைச் செய்திருந்தாலும், இந்தியாவுக்காக விளையாடியது தான் என்னுடைய சிறந்த நாட்கள்..
    • நான் பிசிசிஐயின் தலைவராக இருந்தேன். இனி இதைவிட மேலும் பெரிய விஷயங்களைச் செய்வேன். அதே போல் நீங்கள் ஒரே நாளில் அம்பானியாகவோ அல்லது நரேந்திர மோடியாகவோ மாறிவிட முடியாது.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு சவுரவ் கங்குலியும், செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் தேர்வானார்கள். இவர்களது பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து இந்தப் பதவிகளுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் நடத்தப்பட உள்ளது.

    இதில் புதிய தலைவராக 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணியின் ஹீரோ ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். ஒருபக்கம் ஜெய் ஷாவுக்கு இரண்டாவது முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதே போல் கங்குலிக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது அரசியல் சர்ச்சையாக உருவெடுத்து இருந்தது.

    அதே நேரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-ன் தலைவர் பதவிக்கான தேர்தலும் விரைவில் வரவுள்ளது. எனவே இந்தியாவின் சார்பில் சவுரவ் கங்குலியை அந்த பதவிக்கான தேர்தலில் நிற்கவைக்க முடிவெடுத்துள்ளதால் அவர் பிசிசிஐ தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இந்த சர்ச்சைகள் குறித்து விளக்கம் அளிக்காமல் இருந்த சவுரவ் கங்குலி தற்போது இது குறித்து மனம் திறந்துள்ளார்.

    இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிசிசிஐ தலைவர் பதவி குறித்து கங்குலி பரபரப்பாக பேசியதாவது:-

    பிசிசிஐ-யில் நான் நீண்ட காலமாக நிர்வாகியாக இருந்தேன். இனி அதிலிருந்து விலகி வேறு ஒரு புதிய பாதையில் செல்ல இருக்கிறேன். நீங்கள் எப்போதும் வீரராகவும், நிர்வாகியாகவும் இருக்க முடியாது. ஆனால் இரண்டு பணிகளையும் செய்தது நன்றாக இருந்தது.

    வாழ்க்கையில் நான் எதைச் செய்திருந்தாலும், இந்தியாவுக்காக விளையாடியது தான் என்னுடைய சிறந்த நாட்கள். நான் பிசிசிஐயின் தலைவராக இருந்தேன். இனி இதைவிட மேலும் பெரிய விஷயங்களைச் செய்வேன். அதே போல் நீங்கள் ஒரே நாளில் அம்பானியாகவோ அல்லது நரேந்திர மோடியாகவோ மாறிவிட முடியாது.

    அது போன்ற உயரத்திற்கு செல்வதற்கு நீங்கள் வருட கணக்கில் உழைக்க வேண்டும். ராகுல் டிராவிட் ஒரு நாள் அணியில் இருந்து கிட்டத்தட்ட நீக்கப்பட்ட போது நான் அவருக்கு ஆதரவாக நின்றேன். விளையாட்டை பொறுத்தவரை நான் அடித்த ரன்களையும் கடந்து , பலர் மற்ற விஷயங்களையும் நினைவில் கொள்கிறார்கள். உங்கள் அணியினருக்காக நீங்கள் ஒரு தலைவராக என்ன செய்கிறீர்கள் என்பது மிக முக்கியம்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    • கங்குலி பாஜகவில் சேருவார் என்ற தகவலை மக்கள் மத்தியில் பரப்ப பாஜக முயன்றது.
    • கங்குலி வீட்டிற்கு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரவு உணவு சாப்பிட்டார்.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தலைவர் பதவிக்கு 2வது முறையாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியிடவில்லை. எனினும் செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா 2வது முறையாக போட்டியிடுகிறார். கங்குலிக்கு பதில், பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகின.

    இந்நிலையில் பாஜகவில் கங்குலி சேராததால், 2வது முறையாக அவருக்கு பிசிசிஐ தலைவர் பதவியை வழங்காமல் அவரை அக்கட்சி அவமானப் படுத்துவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இது குறித்து பேசிய திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாகவே, கங்குலி பாஜகவில் சேருவார் என்ற தகவலை மக்கள் மத்தியில் பரப்ப பாஜக முயன்றது என்றார்.

    கடந்த மே மாதம் கங்குலி வீட்டிற்கு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரவு உணவு சாப்பிட்டதை திரிணாமுல் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. ஆனால் கங்குலி பாஜகவில் சேராதததால் அவரை அக்கட்சி அரசியல் ரீதியாக அவமானப்படுத்த முயற்சிப்பது வெளிப்படையாக தெரிகிறது என்றும் குணால் கோஷ் கூறினார்.

    ஜெய்ஷா இரண்டாவது முறையாக பிசிசிஐ செயலாளராக ஆகும் போது கங்குலி ஏன் பிசிசிஐ தலைவராக 2வது முறையாக வர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் திரிணாமுல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ள பாஜக, கொல்கத்தா இளவரசரை, ஒருபோதும் கட்சியில் சேர்க்க முயற்சிக்கவில்லை என்று கூறியுள்ளது.

    • கொல்கத்தாவில் துர்கா பூஜையையொட்டி அங்குள்ள மண்டபத்தில் லார்ட்ஸ் மைதான பெவிலியன் மாதிரியை வடிவமைத்துள்ளனர்.
    • சவுரவ் கங்குலி லார்ட்ஸ் பால்கனியில் நின்றபடி பனியனை கழற்றி சுழற்றியதும் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாகும்.

    புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள பால்கனியில் நின்றபடி வீரர்கள் போட்டியை ரசிப்பதையும், மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையும் கவுரவமாக நினைப்பார்கள்.

    2002-ம் ஆண்டு நாட்வெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிஆட்டத்தில் இந்தியா 326 ரன்கள் இலக்கை 'சேசிங்' செய்ததையும், அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி லார்ட்ஸ் பால்கனியில் நின்றபடி பனியனை கழற்றி சுழற்றியதும் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாகும்.

    தற்போது கங்குலியின் சொந்த ஊரான கொல்கத்தாவில் துர்கா பூஜையையொட்டி அங்குள்ள மண்டபத்தில் லார்ட்ஸ் மைதான பெவிலியன் மாதிரியை வடிவமைத்துள்ளனர்.

    அதை கங்குலி நேற்று திறந்து உற்சாகமாக கொடியசைத்த காட்சியைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்.

    ×