search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கங்குலிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவி வாய்ப்பு மறுப்பு: மம்தா பரபரப்பு குற்றச்சாட்டு
    X

    கங்குலிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவி வாய்ப்பு மறுப்பு: மம்தா பரபரப்பு குற்றச்சாட்டு

    • 2019-ம் ஆண்டு முதல் பிசிசிஐ தலைவர் பதவியை முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வகித்து வந்தார்.
    • பிசிசிஐ புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தலைவர் பதவியை 2019-ம் ஆண்டு முதல் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வகித்து வந்தார். அவரது பதவி பறிக்கப்பட்டது. அவர் ஐ.சி.சி. என்னும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என கூறப்பட்டது.

    அவரை அந்த பதவிக்கு போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குரல் கொடுத்தார்.

    இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் கடந்த வாரம் வலியுறுத்தினார்.

    இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்திருந்த ரோஜர் பின்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஆனாலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம், ஐ.சி.சி. தேர்தல் பற்றி விவாதிக்காமல் முடிந்துள்ளது.

    இதனால் சவுரவ் கங்குலி, ஐ.சி.சி.யின் தலைவர் பதவியில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மத்திய பா.ஜ.க. அரசை கடுமையாக சாடி உள்ளார்.

    இதையொட்டி கொல்கத்தாவில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஐ.சி.சி.க்கு ஏன் சவுரவ் கங்குலி அனுப்பப்படவில்லை? இது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ள யாரோ ஒருவரின் நலனுக்காகத்தான். (இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா உள்ளார்.)

    நான் பா.ஜ.க. தலைவர்கள் பலரோடு பேசி விட்டேன். ஆனால் அவர் அனுமதிக்கப்படவில்லை. அவரது வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

    இது வெட்கக்கேடானது. அரசியல் பழிவாங்கும் செயல் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கங்குலி பா.ஜ.க.வில் சேர மறுத்ததால்தான் அவர் ஐ.சி.சி. தலைவர் பதவியில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×