search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sewage"

    • சீர்காழியில் 2.8 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது.
    • கழிவுநீர் வடிகால் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சீர்காழி:

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இரண்டு நாட்கள் லேசான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் சட்டநாதபுரம் கொள்ளிடம் திருமுல்லைவாசல் திருவெண்காடு பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சீர்காழியில் 2.8 சென்டிமீட்டர் மழையும் கொள்ளிடத்தில் 2.46 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் பகுதி சாலைகளில் குளம்போல் தேங்கி கிடக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாகவே இயக்கி வருகின்றனர்.

    மேலும் வைத்தீஸ்வரன் கோவில் நகர் பகுதிகளில் கழிவுநீருடன் மழை நீர் கலந்து சாலைகளில் தேங்கிக் கிடப்பதால் நோய் தொற்று ஏற்படும் எனவும் முறையான கழிவுநீர் வடிகால் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மிஷின் பள்ளிக்கூட தெருவில் சாக்கடை நீர் செல்ல வாறுகால் அமைக்கப்படவில்லை.
    • மழைக்காலங்களில் தெருவே சகதிமயமாகி விடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு நகராட்சி 15-வது வார்டுக்குள்பட்ட மிஷின் பள்ளிக்கூட தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இத்தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு மற்றும் சாக்கடை நீர் செல்ல வாறுகால் வசதி அமைக்கப்படவில்லை. இதனைதொடர்ந்து கழிவு நீர் மற்றும் சாக்கடை நீர் தெருவிலேயே ஆறு போல் ஓடுகிறது. சாக்கடை நீருக்குள் இறங்கி தான் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டியதுள்ளது. மேலும் அதில் கொசுக்கள் மற்றும் பூச்சிகளும் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய்களை பரப்பி வருவதாகவும் புகார் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். சாக்கடைக்குள் குடிநீர் குழாயும் அமைக்கப்பட்டுள்ளது.

    மழைக்காலங்களில் சாக்கடை நீருடன், மழைநீரும் கலந்து விடுவதால் தெருவே சகதிமயமாகி விடுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். அத்துடன் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தெருவில் சாக்கடை நீர் தேங்குவது பற்றி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லை. எனவே இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

    • கழிவுநீர் வெளியேற போதுமான வசதிகள் செய்யப்படாமல் உள்ளது.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டி பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலமாக 1300 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் மற்றும் சொந்த வீடில்லாதவர்கள் விண்ணப்பித்து வீடுகளை பெற்றுள்ளனர்.

    கடந்த ஓராண்டாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமானம் சரியில்லை எனவும் கழிவுநீர் வெளியேற போதுமான வசதிகள் செய்யப்படாமல் உள்ளதால் டிரைனேஜ் கழிவுநீர் பொதுமக்கள் செல்லும் பாதையிலேயே வழிந்து ஓடுவதாகவும் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்தனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் வீடுகளில் நீர்க்கசிவு அதிக அளவில் இருப்பதால் சுவர்கள் சேதம் அடைவதாகவும் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருவதால் வாடகை வீட்டில் இருந்தபோது ஏற்பட்ட பாதுகாப்பான உணர்வு கூட தற்போது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • செப்டிக் டேங்க் கழிவுநீரினை திறந்த வெளியிலோ, நீர்நிலைகளிலோ, இதர பகுதிகளிலோ சுத்திகரிக்கப்படாமல் விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
    • பணியாளர்களை உள்ளே இறக்கி பணி மேற்கொள்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சிக்கான கழிவுநீர் மேலாண்மை முறைபடுத்துதல் சட்டம் 2022-ஐ நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி செப்டிக் டேங்க் கழிவுநீரினை திறந்த வெளியிலோ, நீர்நிலைகளிலோ, இதர பகுதிகளிலோ சுத்திகரிக்கப்படாமல் விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை அடுத்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கண்ட துறையின் அரசாணை வெளியிடப்பட்டதில் திருப்பூர் மாநகர பகுதிகளில் இயக்கப்பட்டு வரும் கழிவுநீர் வாகனங்கள் திருப்பூர் மாநகராட்சியில் பதிவு செய்து, உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். வாகனங்களின் தினசரி செயல்பாட்டினை ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தில் மேற்கண்ட கருவியினை பொருத்திக்கொள்வது கட்டாயமாகும். மேலும் மாநகராட்சி அனுமதி பெறாத வாகனங்கள் 30.6.2023 முதல் மாநகராட்சி எல்லைக்குள் இயக்க அனுமதிக்கப்படமாட்டாது. தவறும் பட்சத்தில் மேற்படி அனுமதி பெறாத வாகனங்கள் மாநகராட்சிகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருப்பூர் மாநகராட்சி, பல்லடம் மற்றும் திருமுருகன்பூண்டி நகராட்சி எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் செப்டிக் டேங்க் கழிவுநீரினை திருப்பூர் தெற்கு ரோட்டரி மின் மயானம் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான பாதாள சாக்கடை திட்ட கழிவுநீரேற்று நிலையத்தில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பில் மட்டுமே கழிவுநீரினை விட வேண்டும். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். செப்டிக் டேங்க் மற்றும் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை இயந்திரங்களின் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

    பணியாளர்களை உள்ளே இறக்கி பணி மேற்கொள்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.மேலும், மாநகராட்சி மைய அலுவலகத்தில் கழிவுநீர் மேலாண்மை திட்டம் மற்றும் பாதாளசாக்கடை திட்டங்களுக்கென்று "14420" என்ற கட்டணமில்லா தொலைபேசி அழைப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் ஏற்படும் கழிவுநீர் கால்வாய்களில் எற்படும் அடைப்புகள் மற்றும் பாதாள சாக்கடை அடைப்புகள் தொடர்பான புகார்கள் இவ்வழைப்பு மையத்தை தொடர்பு கொண்டு தங்கள் பதிவுகள் மற்றும் புகார்களை பதிவு செய்து கொள்ளவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கசடு கழிவுநீர் சுத்தம் செய்ய பெறப்படும் அழைப்புகள் இம்மாநகராட்சியில் பதிவு பெற்ற கழிவுநீர் வாகன உரிமையாளர்களுக்கு உடனடியாக தெரிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இப்பணிகளில் ஈடுபடும் கள பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி அவர்களுக்கு காப்பீட்டு வசதியும் செய்து தருவது சம்மந்தப்பட்ட வாகன உரிமையாளர்களின் பொறுப்பாகும். வாகனங்கள் கழிவுநீரேற்று நிலைய வளாகத்திற்குள் தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் பொது மக்கள் தங்கள் சந்தேகங்களை இம்மாநகராட்சி மைய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 14420 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெளிவுபடுத்தி க்கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பணியை தொடங்கி வைத்தார்
    • முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஞானசேகரன் செல்வி, மணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதி தவளக்குப்பம் சடா நகர் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் சாலை மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20.16 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் கூடிய தார் சாலை அமைப்படுகிறது. இப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இந்தநிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலைப் பொறியாளர் சரஸ்வதி, தவளக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல், பா.ஜனதா தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், விவசாய அணி சக்திபாலன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஞானசேகரன் செல்வி, மணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    7ஆண்டுகளாக கரடு முரடான நிலையில் இருந்த சாலையை புதிய தார் சாலை அமைக்க ஏற்பாடு செய்து கொடுத்த சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திற்கு சடாநகர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


    • கழிவுநீரை மனிதர்களை வைத்து அகற்றும் முறையை முற்றிலும் ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சாக்கடை இறப்புகள் தொடர்பான வழக்குகளை ஐகோர்ட்டுகள் கண்காணிப்பதில் தடை இல்லை.

    புதுடெல்லி:

    கழிவுநீரை மனிதர்கள் அகற்றுவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடந்தது. இன்று வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் உத்தரவுகளை பிறப்பித்து தீர்ப்பு வழங்கினர்.

    சாக்கடைகளில் கழிவுநீரை அகற்றும் போது தொழிலாளி உயிரிழந்தால் அவரது குடும்பங்களுக்கு குறைந்தது ரூ.30 லட்சம் நிவாரணம் மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்க வேண்டும்.

    கழிவுநீர் அகற்றும் போது தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்து நிரந்தரமாக உடல் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடாக குறைந்தது ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். தொழி லாளிக்கு மற்ற குறைபாடுகள் ஏற்பட்டால் ரூ.10 லட்சம் வரை வழங்க வேண்டும்.

    இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு அமைப்புகள் ஒருங்கிணைக்க வேண்டும். கழிவுநீரை மனிதர்களை வைத்து அகற்றும் முறையை முற்றிலும் ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கடை இறப்புகள் தொடர்பான வழக்குகளை ஐகோர்ட்டுகள் கண்காணிப்பதில் தடை இல்லை.

    இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் சாக்கடை மற்றும் செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் போது 347 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தெருவில் தேங்கிய கழிவுநீர் வேறு எந்த பகுதிக்கும் வடிந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
    • மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் புகார்கள் தெரிவித்தும் பயனில்லாத நிலைதான் காணப்படுகிறது.

    சென்னை:

    சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் சமீபத்தில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடத்தப்பட்டது. பெரும்பாலான தெருக்களில் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்ட நிலையில் சில இடங்களில் இன்னமும் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது.

    இந்த பணிகள் காரணமாக சில தெருக்களில் கழிவுநீர் தேங்கும் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக கடந்த சில தினங்களாக முகப்பேர் கிழக்கில் உள்ள நக்கீரன் சாலை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அந்த தெருவில் சுமார் 3 ஆயிரம் வீடுகள் அமைந்துள்ளன. அந்த தெரு மக்கள் கழிவுநீர் மீதுதான் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த தெருவில் தேங்கிய கழிவுநீர் வேறு எந்த பகுதிக்கும் வடிந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

    2 மாதங்களுக்கு முன்பு மழைநீர் வடிகால் அமைப்பு பணிகள் தொடங்கப்பட்ட போது பல தெருக்களில் இதே பிரச்சினை ஏற்பட்டது. கழிவுநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் பல இடங்களில் கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டன.

    என்றாலும் நக்கீரன் சாலையில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்கள் சேதமடைந்தது இன்னமும் சரி செய்யப்படவில்லை. மேலும் அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மழைநீர் கால்வாயில் விடப்படுவதால் பிரச்சினை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து முகப்பேர் கிழக்கு பகுதியில் பல தெருக்களில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கும் நிலை நீடிக்கிறது. இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் புகார்கள் தெரிவித்தும் பயனில்லாத நிலைதான் காணப்படுகிறது.

    புகார்கள் தெரிவிக்கப்படும் தெருக்களுக்கு அதிகாரிகள் வராமலேயே புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக ஆன்லைனில் தெரிவிக்கப்படுவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

    குடிநீர் வாரிய அதிகாரிகள் பெரும்பாலான தெருக்களில் தேங்கி உள்ள நீரை அகற்றுகிறார்கள். என்றாலும் அவர்களால் முழுமையாக பணி செய்ய முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக கழிவு நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    முகப்பேர் கிழக்கில் 92, 93-வது வார்டுகளில் இந்த பிரச்சினை அதிகமாக இருக்கிறது. பழுதடைந்த கழிவுநீர் குழாய்கள் இன்னும் 3 நாள் முதல் ஒரு வாரத்திற்குள் சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு கிராமத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் கலெக்டர் டாக்டர்.உமா தலைமையில் நடைபெற்றது.
    • குமாரபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் வாய்க்காலில் பேரூராட்சி மற்றும் இந்த பகுதியில் உள்ள ஊராட்சி பகுதியில் இருந்து சாக்கடை கழிவு நீர் கலக்கிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு கிராமத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் கலெக்டர் டாக்டர்.உமா தலைமையில் நடைபெற்றது.

    இந்த குறை தீர்ப்பு முகாமில் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில துணை செயலாளர் பொன். ரமேஷ் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    குமாரபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் வாய்க்காலில் பேரூராட்சி மற்றும் இந்த பகுதியில் உள்ள ஊராட்சி பகுதியில் இருந்து சாக்கடை கழிவு நீர் கலக்கிறது. அதேபோல் தனியார் மற்றும் பொது கழிப்பறையில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீரும் வாய்க்கால்களில் கலக்கிறது. சாக்கடை கழிவு நீர் வாய்க்காலில் கலப்பதை தடை செய்ய வேண்டும். வாய்க்கால்களில் அதிக அளவு செடி, கொடிகள் முளைத்துள்ளதால் கடைமடை வரை தண்ணீர் செல்ல முடியாமல் பணப்பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதேபோல் நச்சுத்தன்மை உள்ள சாக்கடை கழிவு நீர் கலந்து செல்வதால் மகசூல் பாதிக்கிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    இதில் நஞ்சை இடையாறு மோகனூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பிரதாப், நஞ்சை இடையாறு சுமதி விசுவநாதன், உழவர் பேரியக்கத்தின் மாவட்ட செயலாளர், பொன்மலர்பாளையம் பா.ம.க., மோகனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், நஞ்சை குமார், வினோத், கபிலன், கிருஷ்ணமூர்த்தி, மோகன்ராஜ், சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கழிவறை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அந்த நீர் சிகிச்சை பெறுவோர் வார்டில் புகுந்ததது
    • பிறகு ஊழியர்கள் வரவழைத்து அதை சரிசெய்துவிட்டோம் என்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு நோயாளிகள் வார்டுகள் உள்ளது. நேற்று நள்ளிரவு பெண் நோயாளி கள் தங்கி இருந்த வார்டு ஒன்றில், கழிவறை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அந்த நீர் சிகிச்சை பெறுவோர் வார்டில் புகுந்ததது. இதனால் அவதியடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் வார்டில் புகுந்த கழிவுநீரை சுத்தம் செய்தனர். முழு மையாக வெளியேற்றாத கழிவுநீர் துர்நாற்றத்தில் நோயாளிகள் இரவு முழுவதும் அவதி யடைந்தனர். விடிந்தபிறகு, ஆஸ்பத்திரி துப்புரவு ஊழியர்கள் வந்து முழுமையாக சுத்தம் செய்தனர். இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறும் போது, நோயாளிகள் போட்ட குப்பைகள், கழிவு நீர் செல்லும் குழாயில் அடைத்து கொண்டதால், நீர் வார்டில் புகுந்துவிட்டது. அதிகாலை என்பதால், ஊழியர்கள் இல்லை. பிறகு ஊழியர்கள் வரவழைத்து அதை சரிசெய்துவிட்டோம் என்றனர்.

    • கழிவுநீர் அகற்றும் பணி பயிற்சி முகாம் நடந்தது.
    • முடிவில் சுகாதாரபணிமேற்பார்வையாளர் முத்தழகு நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டியில் கழிவுநீர் அகற்றுவதற்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில் கழிவுநீர் சேகரிப்பு, தொட்டிகளிலிருந்து கழிவுநீரை எந்திரங்கள் மூலம் பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யும் பணிகள் பற்றி கழிவுநீர்ஊர்தி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி தொடக்கிவைத்தார். துணைத்தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல்அலுவலர் ஜெயலட்சுமி வரவேற்றார். இந்த முகாமில் நவீன முறையில் பாதுகாப்பாக கழிவுநீர்களை சுத்தம் செய்யும் முறை பற்றி தூய்மை இந்தியா திட்ட முதன்மை பயிற்றுநர் ராம்குமார், சுகாதாரபணிஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் பயிற்சியளித்தனர். மதுரை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 18 பேரூராட்சி செயல்அலுவலர்கள், 18 சுகாதார பணி மேற்பார்வையாளர்கள், கழிவுநீர் ஊர்தி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் சுகாதாரபணிமேற்பார்வையாளர் முத்தழகு நன்றி கூறினார்.

    • துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது
    • சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதி மக்களுக்கும் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்ப டுகிறது.

    இதில் 4-வது வார்டு மற்றும் 9-வது வார்டு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    அந்த இடத்தில் கழிவுநீர் எப்போதும் அதிக அளவு தேங்கியிருப்பதால், உடைப்பு ஏற்பட்ட பைக் வழியாக கழிவுநீர், குடிநீரோடு கலக்கிறது.

    இதனை சற்றும் கவனிக்காத பொதுமக்கள், கடந்த ஒரு வாரமாக கழிவு நீர் கலந்த குடிநீரையே குடிப்பதுடன், சமையல் செய்வது உள்ளிட்ட அனைத்து பயன்பா டுகளுக்கும் உபயோகித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி, மணிமாறன், ஜெயபால், விக்கி, சாமு, மாதேஸ்வரன், விமல், கலையரசன், மாதேஸ்வரி உள்ளி ட்டோருக்கு திடீரென மயக்கம், வாந்தி உள்ளிட்ட உடல் உபா தைகள் ஏற்பட்டது.

    அனைவரும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். கிராமத்தில் உள்ளவர்க ளுக்கு திடீரென உடல் உபாதைகள் ஏற்பட என்ன காரணம்? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டு, அந்த வழியாக குடிநீரோடு, கழிவுநீர் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கவனிக்காமல் பொது மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால் திடீரென உடல் பாதிப்புகள் ஏற்பட காரணம் என தெரிய வந்தது.

    இதனை அடுத்து வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமை யில் சுகாதாரத் துறையினர் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் உடல் பரி சோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினார்.

    மேலும் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.

    அந்தப் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயமும் உள்ளது. அதனை அப்புறப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீடுகளுக்கு கழிவுநீர் கால்வாயின் வழியாக குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
    • கழிவுநீர் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அம்மன் நகரில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்குள்ள வீடுகளுக்கு கழிவுநீர் கால்வாயின் வழியாக குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் குடிநீர் குழாய் இணைப்பு மாற்றப்படவில்லை.

    இந்த நிலையில் குடிநீர் குழாயில் ஏதேனும் உடைப்பு ஏற்பட்டால் குடிநீருடன் கழிவு நீரும் கலந்து செல்லக்கூடிய அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×