search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saudi arabia"

    • பாகிஸ்தானில் உள்ள சவுதி மக்கள், அதிகாரிகள் வெளியே செல்வதை தவிர்க்க வலியுறுத்தல்.
    • ஆஸ்திரேலிய அதிகாரிகள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தல்.

    பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இஸ்லாமாபாத்தின் மேரியட் ஹோட்டலில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் அங்கு அமெரிக்கர்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாகிஸ்தானில் உள்ள சவுதி அரேபிய குடிமக்கள், அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் தேவையை தவிர வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.


    இதேபோல் ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானில் உள்ள தனது குடிமக்களுக்கு பயண ஆலோசனையை வெளியிட்டது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஆஸ்திரேலிய அதிகாரிகள் விழிப்புணர்வுடன் இருக்கவும், தேவையற்ற பயணத்தை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக விழிப்புடன் செயல்படவும், ஊடகங்களை தொடர்ந்து கண்காணிக்குமாறும் அந்த அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
    • அர்ஜென்டினாவுக்காக 4 உலக கோப்பை தொடரிலும் கோல் அடித்து மெஸ்ஸி சாதனை.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணிக்கு  10 வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி அந்த அணி கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.

    எனினும் 2வது பாதியில் சவுதி அரேபிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 48 வது நிமிடத்தில் அந்த அணி வீரர் சலே அல் ஷெஹ்ரியும், 53 நிமிடத்தில் சலம் அல் தவ்சாரியும் அடுத்தடுத்து தங்கள் அணிக்காக கோல் அடித்தனர். இதை முறியடிக்க முயன்ற அர்ஜென்டினா வீரர்களின் முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து 2-1 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த உலக கோப்பையில் முதலாவது கோலை பதிவு செய்ததன் மூலம் அந்த அர்ஜென்டினா அணிக்காக 4 உலக கோப்பை தொடர்களில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.

    • முகமது பின் சல்மான் நாட்டில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
    • பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தினார்.

    ரியாத் :

    உலகில் இப்போதும் மன்னராட்சி நடந்து வரும் சில நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. அங்கு 86 வயதான சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் மன்னராக உள்ளார்.

    அவருக்கு அடுத்து அதிகாரமிக்க தலைவராக அந்த நாட்டின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் உள்ளார். இவர் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பிறகு நாட்டில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

    குறிப்பாக பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தி பாலின சமுத்துவத்தை ஏற்படுத்தியதன் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றார். இந்த நிலையில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சவுதி அரேபியாவின் பிரதமராக மன்னர் சல்மான் நியமித்துள்ளார். அதோடு நாட்டின் மந்திரிசபையையும் மன்னர் மாற்றியமைத்துள்ளார்.

    அதன்படி முகமது பின் சல்மானின் இளைய சகோதரரும், இளவரசருமான காலித் பின் சல்மான், ராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் அவர் துணை ராணுவ மந்திரியாக இருந்து வந்தார்.

    இதனிடையே பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தாலும், மந்திரிசபை கூட்டங்களுக்கு மன்னர் சல்மான்தான் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சவுதி அரேபியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக 3 பிரபல அறிஞர்களுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது மரண தண்டனை புனித ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ரியாத்:

    சவுதி அரேபியாவில் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அங்கு பெரும் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கடந்த மாதம் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    2 பேர் பொதுமக்கள் முன்னிலையில் தண்டிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்தநிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. ஷேக் சல்மான் அல்-அவ்தாக், அவாத் அல்-குயார்னி மற்றும் அலி அல்-ஒமாரி ஆகிய 3 பேரும் பிரபல அறிஞர்கள் ஆவர். இவர்கள் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவர்களது மரண தண்டனை புனித ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் 148 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு ஐ.நா சபையும் மனித உரிமைகள் ஆணையமும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருந்தும் அங்கு இத்தகைய தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
    புஜைரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 வெளிநாட்டு கப்பல்கள் மீது நாசவேலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்தது
    அபுதாபி:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓமன் வளைகுடா பகுதியில் புஜைரா துறைமுகம் அமைந்துள்ளது. அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுகமான இங்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த சரக்கு கப்பல்கள் வந்து செல்கின்றன. இந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 வெளிநாட்டு கப்பல்கள் மீது நேற்று முன்தினம் காலையில் நாசவேலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்தது. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட விதம், தாக்குதலுக்குள்ளான கப்பல்கள் எந்த நாடுகளை சேர்ந்தவை போன்ற கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை. அதே சமயம் இந்த தாக்குதலில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புஜைரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் நாட்டின் 2 சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் கப்பல்கள் சேதம் அடைந்ததாகவும் சவுதி அரேபியா நேற்று தெரிவித்தது.

    இதுகுறித்து அந்நாட்டின் எரிசக்தித்துறை மந்திரி காலித் அல் பாலிக் கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரத்யேக பொருளாதார மண்டலமான புஜைரா துறைமுகத்தில் சவுதி அரேபியாவின் 2 எண்ணெய் கப்பல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு எடுத்து செல்லும் வழியில் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது” என்றார்.

    ஈரானை எச்சரிக்கும் விதமாக அமெரிக்கா போர் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி இருக்கும் சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துறைமுகத்தில் சவுதி அரேபியா உள்பட அயல்நாடுகளின் சரக்கு கப்பல்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சவுதிஅரேபியாவில் தெலுங்கானாவை சேர்ந்த தொழிலாளி சித்ரவதையால் அவதிப்படுவதாக வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் மக்தபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வீரய்யா. 2017-ம் ஆண்டு வேலைக்காக சவுதிஅரேபியாவுக்கு சென்றார்.

    தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இந்நிலையில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    நான் இங்கிருந்து தப்பிக்கவே முடியாது. இரவும் பகலும் என்னை சுற்றி ஏராளமான விலங்குகள் உள்ளன. ஒரு ஒட்டகம் இறந்துவிட்டது. இதனால் கோபம் அடைந்த பணியாளர் ஒருவர் என்னை சரமாரியாக அடித்து தாக்கினார். எனக்கு உணவு கூட கொடுக்காமல் பட்டினி போட்டு சித்ரவதை செய்கின்றனர். என்னை காப்பாற்றுங்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ், மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கான இந்திய தூதர் நவ்தீப் சூரி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது வீரய்யாவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். ரியாத்தில் உள்ள தூதரகம் மூலம் வீரய்யாவை மீட்கும் பணி நடந்து வருவதாக நவ்தீப் சூரி பதில் அளித்தார்.

    வீரய்யாவை போனில் தொடர்பு கொண்ட போது அவர் பதில் அளிக்கவில்லை என்றும் இதையடுத்து வீரய்யாவின் பாஸ்போர்ட் ஜெராக்ஸ், விசா ஆவணங்களை தூதரக அதிகாரிகள் கேட்டு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் நவ்தீப் சூரி தெரிவித்தார்.

    வீரய்யா வெளிட்ட வீடியோ சவுதியில் உள்ள ஒரு பாலைவன பகுதியில் தான் எடுக்கப்பட்டுள்ளது. அதில் வீரய்யாவின் பின்னால் 100-க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் செல்கிறது. இந்த பகுதி ஜோர்தான் எல்லையில் எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

    வளைகுடா- தெலுங்கானா பொது நல மற்றும் கலாசார கூட்டமைப்பின் தலைவர் பட்குரி பசந்த் ரெட்டி, சவுதி அரேபியாவில் உள்ள தெலுங்கு மக்கள் மூலம் வீரய்யாவின் இருப்பிடத்தை கண்டு பிடிக்கும் பணிகள் நடந்து வருவதாக கூறி உள்ளார்.

    தூதரக அதிகாரிகள் குழுவை அனுப்பி வீரய்யாவை கண்டு பிடித்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பசந்த் ரெட்டி கூறினார்.

    வீரய்யாவின் தாயார் கடந்த மார்ச் 30-ந்தேதி இறந்துபோனார். அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு கூட வீரய்யாவை சொந்த ஊருக்கு அனுப்ப மறுத்து விட்டார்கள்.

    தற்போது அவரது இருப்பிடத்தை கண்டு பிடித்து மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
    சவுதி அரேபியா நாட்டில் பயங்கரவாத வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 37 பேருக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டது. #Saudiexecutes
    ரியாத்:

    சவுதி அரேபியா நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பயங்கரவாத சித்தாந்தத்தை பரப்பியும், பயங்கரவாதிகளாக செயல்பட்டும் வந்த உள்நாட்டினர் 37 பேருக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி இன்று தலைகளை வெட்டி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. #Saudiexecutes #37executed #37terroristsexecuted 
    ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவின் பெட்ரோல் தட்டுப்பாட்டை சவுதிஅரேபியா ஈடுகட்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump #SaudiArabia

    வாஷிங்டன்:

    ஈரானின் அணு ஆயுத உற்பத்தி பிரச்சினையால் 2015-ம் ஆண்டு ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகியது.

    அத்துடன் ஈரானின் எண்ணெய் வருவாயை முடக்கும் வகையில் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தது. எனினும் இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளித்தது.

    இருப்பினும் 6 மாதங்களுக்குள் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை படிப்படியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறி நிபந்தனை விதித்தது. இக்கெடு மே 2-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    இதற்கிடையே இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அளிக்கப்பட்ட பொருளாதார தடை விலக்கு சலுகையை மேலும் நீடிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.


    அமெரிக்காவின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும். பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் கணிசமாக உயரும் அபாயம் உள்ளது.

    ஈரானிடம் இருந்து இறக்குமதி நிறுத்தப்படும் பட்சத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 3 சதவீதம் அதிகரிக்கும். தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 65 டாலராக உள்ளது. அது 74 டாலராக விலை உயரும் அபாயம் உள்ளது.

    இது இந்தியாவின் அனைத்து பொருளாதார நிலைகளையும் பாதிக்கும். கச்சா எண்ணெயின் விலை உயரும் பட்சத்தில் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறையும். அதன் தாக்கம் தற்போதே தொடங்கிவிட்டது. நேற்று இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 495 புள்ளிகள் குறைந்துவிட்டது.

    இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு முழு தடை விதிக்கப்பட்டநிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை ‘ஒபெக்’ அமைப்பில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈடுகட்டும்.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #DonaldTrump #SaudiArabia

    சவுதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு 'ஹஜ்' புனித யாத்திரை செய்ய செல்லும் இந்தியர்களுக்கான எண்ணிக்கையை 2 லட்சமாக அதிகரித்து சவுதி இளவரசர் இன்று ஒப்புதல் அளித்தார். #SaudiArabia #IndiaHajquota
    புதுடெல்லி:

    10 லட்சம்  மக்கள் தொகையின் அடிப்படையில் ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரசாங்கம் முன்னர் அனுமதி அளித்து வந்தது. ஒரு கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் இருந்து 10 ஆயிரம் பேர் ஆண்டிற்கு ஒரு முறை ஹஜ் பயணம் செய்ய முடியும். இதன் அடிப்படையில், கடந்த 2012 ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரை செய்தனர்.

    பின்னர், வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதமும் குறைக்கப்படுவதாக கடந்த 2013 ஆண்டில் சவுதி அரசு அறிவித்தது.

    இதன் அடிப்படையில் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரை செய்ய அனுமதியளிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை கூடுதலாக 35 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு, கடந்த (2018) ஆண்டு மேலும் 5 ஆயிரம் பேர் ஹஜ் செய்ய சவுதி அரசு அனுமதி அளித்தது.

    இதனால், கடந்த ஆண்டு 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 பேர் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் சென்று வந்தனர்.

    இந்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்கும் ஹஜ் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என பல மாநில அரசுகளின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழக அரசும் இந்த கோரிக்கையை முன்வைத்து பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தது.

    இந்நிலையில், அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள சவுதி அரேபியா நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தியபோது இவ்விவகாரம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அவர் ஏற்றார்.

    இந்த ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து மேலும் 25 ஆயிரம் பேர் ஹஜ் செய்ய இளவரசர் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, இங்கிருந்து 2 லட்சம் முஸ்லிம்கள் இனி ஹஜ் யாத்திரை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #SaudiArabia #IndiaHajquota 
    இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை, டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றார். #SaudiArabiaCrown #MohammedBinSalman #India
    புதுடெல்லி:

    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசுமுறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் இரண்டு நாட்கள் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    பாகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்து தனி விமானம் மூலம் இன்று இரவு சுமார் 9 ம்ணியளவில் டெல்லி வந்து சேர்ந்த சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக வரவேற்றார். மேலும், வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் மலர்ச்செண்டு அளித்து வரவேற்றார்.
     
    பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சவுதி இளவரசர் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடக்கிறது.

    இளவரசரின் இந்திய வருகையால், இந்தியா-சவுதி இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக இந்தியாவுக்கான சவுதி தூதர் சவுத் முகமது அல் சவுதி கூறினார். வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான எங்கள் பொதுவான நாட்டத்தின் அடிப்படையில் மிகவும் முக்கியமான கூட்டாளியாகவும், மதிப்பு மிக்க நண்பராகவுமே இந்தியாவை சவுதி அரேபியா பார்ப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். #SaudiArabiaCrown #MohammedBinSalman #India 
    பாகிஸ்தான் வந்துள்ள சவுதி அரேபியா முஹம்மது பின் சல்மான் அல் சவுத் முன்னிலையில் இன்று இரு நாடுகளுக்கு இடையில் 2 ஆயிரம் கோடி டாலர் அளவிலான 8 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. #SaudiPakistandeals #20billionUSDdeals
    இஸ்லமாபாத்:

    சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத் இருநாள் அரசுமுறைப் பயணமாக நேற்று பாகிஸ்தான் வந்தார்.

    கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் சவுதி அரேபியா சென்றிருந்தார். அவரது அழைப்பின் பேரில் இஸ்லாமாபாத் வந்துள்ள சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத் முன்னிலையில் சுற்றுலா மேம்பாடு உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பாக இருநாடுகளுக்கு இடையில் இன்று 8  புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

    பாகிஸ்தானில் குவாடர் துறைமுகத்தில் இயங்கிவரும் சவுதி அரேபியாவுக்கு சொந்தமான பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிற்சாலையை ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில் மேம்படுத்துவது உள்பட 2 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமாகின.

    பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சவுதி இளவரசர் எங்கள் நாட்டு மக்களுக்கு பாகிஸ்தான் மிகவும் பிரியமான நாடாகும். எப்போதும்போல் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவு தொடர்ந்து நீடிக்கும் என குறிப்பிட்டார். #SaudiPakistandeals #20billionUSDdeals 
    சவுதி அரேபியாவில் இஸ்லாம் மதத்தை துறந்து வீட்டை விட்டு வெளியேறி, தாய்லாந்தில் தவித்து வந்த இளம்பெண்ணுக்கு கனடா பிரதமர் அடைக்கலம் அளித்துள்ளார். #RahafMohammedalQunun #Saudiasylumseeker #Canadaasylum
    ஒட்டாவா:

    சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணான ரஹாஃப் முஹம்மது அல்-குனுன் சமீபத்தில் இஸ்லாம் மதத்தை துறந்ததுடன் பெற்றோருக்கு தெரியாமல் துபாயில் இருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக பல வெளிநாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது.

    அவரது இந்த நடத்தைக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்படும் என்பதால் இவ்விவகாரம் பலரின் கவனத்தை கவர்ந்தது. ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் தனது தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்று அஞ்சிய ரஹாஃப், வழியில் தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் வந்து சேர்ந்தார்.

    பாங்காக் விமான நிலையத்தில் உள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகளிடம் தஞ்சம் கேட்டு மனு அளித்தார். அங்கு ஒரு அறை எடுத்து தங்கிய அவர், தனது கைபேசி மூலம் அவசரமாக டுவிட்டரில் கணக்கு தொடங்கினார். டுவிட்டர் பக்கத்தின் மூலம் தன்னுடைய நிலையை உலக மக்களுக்கு தெரியப்படுத்தினார். ஒரு வாரத்தில் அவருக்கு டுவிட்டரில் சுமார் ஒரு லட்சம் அபிமானிகள் குவிந்தனர். 

    அகதியாக வந்த தன்னை தாய்லாந்து குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்து அகதிகள் முகாமில் அடைக்கலாம். சிறைக்கும் அனுப்பலாம் என்று கருதிய அந்த இளம்பெண், அவர் தங்கியிருந்த அறையின் கதவை உள்பக்கம் தாளிட்டுக் கொண்டு தனது டுவிட்டர் பிரசாரத்தை நடத்தி வந்தார்.

    அதேவேளையில், அவருக்கு டுவிட்டர் மூலம் ஏகப்பட்ட கொலை மிரட்டல்களும் வந்ததால் திடீரென்று தனது டுவிட்டர் பக்கத்தை அவர் முடக்கினார். எனினும், #SaveRahaf என்ற ஹேஷ்டாக் மூலம் அவருக்கு ஆதரவான பிரசார இயக்கத்தை பலர் நடத்தி வந்தனர். சமூக வலைத்தளங்களில் #SaveRahaf வைரலானது. 

    இதற்கிடையில், அவருக்கு தாய்லாந்து அரசு குடியுரிமை அளிக்கக் கூடாது என்று அந்தப் பெண்ணின் குடும்பத்தாரும் பாங்காக்கில் உள்ள சவுதி தூதரக அதிகாரிகளும் வலியுறுத்தினர். இந்த பிரச்சனை சர்வதேச மனித உரிமை அமைப்பின் கவனத்துக்கு சென்றது.

    உயிர் பயத்தில் நடுங்கி கொண்டிருக்கும் ரஹாஃப் முஹம்மது அல்-குனுன்-க்கு எந்த நாடாவது அடைக்கலம் அளிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்பின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதேவேளையில், அந்தப் பெண்ணின் தந்தையும் சகோதரரும் தாய்லாந்துக்கு புறப்பட்டனர்.



    இந்நிலையில், அவரது நிலைமையை கண்டு மனமிரங்கிய கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடேயு,  ரஹாஃப் முஹம்மது அல்-குனுன்-க்கு அடைக்கலம் அளிக்க முன்வந்தார். இதையடுத்து, மனித உரிமை அமைப்பு அதிகாரிகள் மற்றும் தாய்லாந்து போலீசார், குடியுரிமைத்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் ரஹாஃப் டொரான்ட்டோ நகருக்கு விமானம் மூலம் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார். 

    சர்வதேச மனித உரிமை அமைப்பின் கோரிக்கையை ஏற்று கனடா அரசு இந்த முடிவுக்கு வந்ததாக டுருடேயு குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த நடவடிக்கை ஏற்கனவே பூசலில் இருக்கும் சவுதி-கனடா உறவில் மேலும் விரிசலையும், பகையையும் உருவாக்கும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இஸ்லாமிய சட்டதிட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நடத்திவரும் சவுதி அரேபியாவில் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக கனடா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. சமீபத்தில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கி நாட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் கனடா அரசு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தது.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கனடாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் சவுதி துண்டித்து விட்டது. ரியாத்தில் இருந்த கனடா தலைமை தூதரும் திருப்பி அனுப்பப்பட்டார். 

    சவுதி அரசுக்கு எதிராக வலைத்தளங்களில் (பிளாக்) கருத்து வெளியிட்ட பலரை அந்நாட்டு அரசு கைதுசெய்து சிறையில் அடைத்து வைத்துள்ளது. அவர்களில் கனடா நாட்டின் கியூபெக் நகரில் வசிக்கும் ரைஃப் படாவி என்ற பெண்ணின் சகோதரரான சமர் படாவி என்பவரும் ஒருவராவார். 

    சமர் படாவி உள்பட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தற்போது கனடா அரசு மிக தீவிரமாக வலியுறுத்தி வருகிறது.

    இத்தனை விவகாரங்களுக்கு இடையில் சவுதி பெண்ணுக்கு கனடா தஞ்சமளித்துள்ள சம்பவம் அந்நாட்டின் ஆட்சியாளர்களின் ஆத்திரத்தை மேலும் பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும் என கருதப்படுகிறது. #RahafMohammedalQunun  #Saudiasylumseeker #Canadaasylum #JustinTrudeau #SaveRahaf
    ×