search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "peoples protest"

    சோளிங்கர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் காலிகுடங்களுடன் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சோளிங்கர்:

    சோளிங்கர் அருகே உள்ள பாண்டியநல்லூரில் காமதேனு நகர், ராஜேஷ் நகர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து மேல்நீர் தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று சோளிங்கர்- பானவரம் செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வட்டாரா வளர்ச்சி அலுவலர் அன்பரசு, கொண்டபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் கூறுகையில்- எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. நாங்கள் கடந்த முறை மறியலில் ஈடுபட்டபோது தற்காலிகமாக குடிநீர் வினியோகம் வழங்கபட்டது. ஆனால் சில நாட்களிலேயே அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே முறையான குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறினர். ஒன்றிரண்டு நாட்களில் நடவடிக்கை எடுத்து முறையாக குடிநீர் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடிகர் சரத்குமார் சென்ற காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #GajaCyclone #Sarathkumar
    ஆலங்குடி:

    தமிழகத்தில் கடந்த 16-ந்தேதி கஜா புயல் தாக்கியது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். பலர் வீடுகளை இழந்து சாலைக்கு தள்ளப்பட்டனர்.

    புயலால் வீடுகளை இழந்த பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், புயலால் சேதமடைந்த மக்களையும் தமிழக முதல்வர் எடப்பாடி, பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் நேரில் சென்று சந்திப்பதோடு, நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

    இதற்கிடையே இன்று காலை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்றார்.

    ஆலங்குடி அரசமரத்தடி பஸ் நிறுத்தம் அருகே சரத்குமார் காரில் சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நடிகர் சரத்குமாரின் காரை முற்றுகையிட்டனர். பின்னர் காரில் இருந்து இறங்கி சரத்குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.


    அப்போது பொதுமக்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகா பகுதியில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் யாரும் தங்கள் பகுதிகளுக்கு வராமல் அலட்சியம் செய்கின்றனர். பொதுமக்களுக்கு உரிய நிவாரணங்களும் கிடைக்கவில்லை.

    புயல் பாதித்த சேதத்தில் இருந்து மீள முடியாமல் தற்போது வரை தவித்து வருகிறோம். இது குறித்து அதிகாரிகளிடம் பேசி தங்கள் பகுதிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் சேதமடைந்தவற்றை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என முறையிட்டனர்.

    பொதுமக்களிடம் பிரச்சனைகளை கேட்டு தெரிந்து கொண்ட பின்னர் நடிகர் சரத்குமார், பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் அங்கிருந்து கட்சி நிர்வாகிகளுடன் புறப்பட்டு சென்றார்.  #GajaCyclone #Sarathkumar
    மன்னார்குடி அருகே இன்று காலை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் காரை மறித்து பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Gajacyclone #PonRadhakrishnan
    மன்னார்குடி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    உணவு, மின்சாரம், குடிநீர் இல்லாமல் கடந்த 8 நாட்களாக கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் சாலை மார்க்கமாக வரும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகளின் காரை வழிமறித்து வாக்குவாதம் செய்தும் வருகின்றனர். கோபத்தில் உச்சத்தில் இருந்து வரும் மக்களை சமாதானப்படுத்த முடியாமல் அதிகாரிகளும் திணறிக் கொண்டு இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி 33-வது வார்டு பகுதிக்கு இன்று வரை மின்சாரம் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் இன்று காலை அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த மின்வாரிய ஊழியர்களிடம் நெடுவாக்கோட்டையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களை கொண்டு வந்து உடனடியாக எடுக்க வேண்டும் என கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரில் சென்றார். புயலால் சேதமான வேதாரண்யம் பகுதிகளை பார்வையிடுவதற்காக அவர் காரில் சென்றார்.

    பொன்.ராதாகிருஷ்ணன் வந்த காரை பொதுமக்கள் திடீரென மறித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


    உடனே பொன்.ராதா கிருஷ்ணன் காரை விட்டு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பொதுமக்கள், ‘‘எங்களுக்கு மின் கம்பங்கள் கொடுக்கும் வரை நாங்கள் யார் காரை விடமாட்டோம் என சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே பொதுமக்களை சமாதானப்படுத்திய பொன். ராதாகிருஷ்ணன் மின்கம்பங்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதை ஏற்று மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பிறகு பொன்.ராதாகிருஷ்ணன் வேதாரண்யத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். #Gajacyclone #BJP #PonRadhakrishnan
    கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் அருகே புயல் நிவாரண பணிகளை பார்வையிட சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaCyclone #OPanneeerSelvam
    கந்தர்வக்கோட்டை:

    கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களாகியும் குடிநீர், மின்சாரம் விநியோகம் செய்யப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வரும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கந்தர்வக்கோட்டை பகுதியிலும் புயல் சேத பாதிப்புகளை பார்வையிட போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையறிந்த பொது மக்கள், அவரிடம் முறையிடுவதற்காக தொடர்ந்து சாலையிலேயே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.வினர் நாங்கள் சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்வோம். அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் வருகிறார்.

    எனவே இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றனர். இருப்பினும் பொது மக்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர்.

    இதைத்தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. செல்வராஜ், கந்தர்வக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. நார்த்தாமலை எம்.எல்.ஏ. ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து பொது மக்கள் மறியலை கைவிட்ட நிலையில், அங்கிருந்து கலைந்து செல்லாமல் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தனர்.

    இந்தநிலையில் அங்கு ஓ.பன்னீர்செல்வம் வரவே, அவரது காரை பொதுமக்கள் அனைவரும் முற்றுகையிட்டனர். பின்னர் காரில் இருந்து இறங்கிய ஓ.பன்னீர்செல்வத்திடம், குடிநீர், மின்சாரம் இல்லாதது குறித்து பொதுமக்கள் முறையிட்டனர். மேலும் எங்கள் பகுதியில் சேதமான பகுதிகளை அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை. தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.


    பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர், மின்சாரம் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க முடியும் என்றார். இதையடுத்து அவர் மற்ற பகுதிகளை பார்வையிட சென்றார்.

    முன்னதாக சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது, போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #GajaCyclone #OPanneeerSelvam
    கும்மிடிப்பூண்டி அருகே சாலை விரிவாக்க பணிக்கு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது பெருவாயல்காலனி. இங்கிருந்து செல்லும் பொன்னேரி சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது.

    இதற்காக பெருவாயல் காலனியில் உள்ள 20 வீடுகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இது சம்பந்தமாக அவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீசு வழங்கினர். ஆனால் அவர்கள் வீடுகளை காலி செய்யாமல் இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அந்த வீடுகளை அகற்ற ஜே.சி.பி. எந்திரங்களுடன் வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்தவர்களை வெளியேறுமாறு கூறினர்.

    ஆனால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்ய மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சில பெண்கள் சென்னை- கொல்கத்தா சாலையில் திடீர் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அதிகாரிகள் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சந்திரா என்ற பெண் தனது உடலில் மண்எண்ணையை ஏற்றி தீக்குளிக்க முயன்றார்.

    பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை மீட்டு அழைத்து சென்றனர். மேலும் மறியலில் ஈடுபட்ட 6 பெண்களை கைது செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பான நிலை நீடித்து வருகிறது.

    டி.எஸ்.பி. ரமேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
    ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமேயானால் மீண்டும் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று திருமாவளவன் எச்சரித்துள்ளார். #Sterlite #Thirumavalavan
    தூத்துக்குடி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு ஏதுவான ஒரு சூழலை தமிழக அரசு ஏற்படுத்தி இருக்கிறது என்பது வேதனைக்கு உரியது. அரசு இந்த ஆலையை மூடுவதற்காக வெளியிட்ட அரசாணை, ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு வலிமை பெற்றதாக இல்லை. அதனை பயன்படுத்தி மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பு இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிக்கை வெளியிட்டோம். இன்று அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது.


    ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பலர் உயிர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் பசுமை தீர்ப்பாயம் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து உள்ளது. அதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம், தமிழக நீதிபதி அதில் இடம் பெறக்கூடாது என்ற எதிர்ப்பையும் தெரிவித்து இருக்கிறது.

    இந்த சூழலில், மத்திய, மாநில அரசுகள் விழிப்பாக இருக்க வேண்டும். மறுபடியும் ஆலையை திறக்க இடம் தரக்கூடாது. ஆலை திறக்கப்படுமேயானால் மீண்டும் வெகுமக்கள் புரட்சி வெடிக்கும். மக்களை சிதறடித்து விட்டோம். அச்சுறுத்தி கலைய வைத்து விட்டோம் என்று கருதாமல், நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    ஒருநபர் விசாரணை ஆணையம் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறது என்பதை இறந்தவருக்கு சம்மன் அனுப்பியதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு கண்துடைப்புக்காக அமைத்து இருக்கிறது. ஆகவே சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும். அதில் பணியில் இருக்கும் ஒரு ஐகோர்ட்டு நீதிபதி மற்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் இடம்பெற வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்தோம்.

    எனவே ஒருநபர் விசாரணை ஆணைய நடவடிக்கையை அரசு நிறுத்தி வைக்க வேண்டும். புதிதாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். அல்லது ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணைக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அந்த விசாரணைக்கு அரசு ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார். #Sterlite #Thirumavalavan
    சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காடையாம்பட்டி:

    சேலம் காமலாபுரத்தில் உள்ள விமான நிலையம் 160 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் தற்போது விமான சேவை தொடங்கி உள்ளது. சிறிய விமான நிலையம் என்பதால் ஒரு விமானம் மட்டுமே தினசரி வந்து செல்கிறது. இதனால் பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது.

    மத்திய, மாநில அரசுகள் ஒப்புதலோடு மாவட்ட நிர்வாகம் விமான நிலையத்தை சுற்றியுள்ள பொட்டியபுரம், காமலாபுரம், சிக்கனம்பட்டி, தும்பிப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 570 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

    முதற்கட்டமாக நிலங்களை அளவீடு செய்யும் பணி தொடங்கியது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி வயல்களிலும், தோட்டங்களிலும் கருப்புக்கொடி நட்டும், அதிகாரிகளை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினார்கள்.

    இந்த நிலையில் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் தலைமையில் வருவாய்துறையினர் 4 கிராமங்களுக்கும் தனித்தனியாக சென்று பொதுமக்களிடம் நிலங்களை அரசுக்கு ஒப்படையுங்கள். உங்களுக்கு மாற்று இடம், அரசு வேலை, இழப்பீடு பணம் போன்றவை வழங்கப்படும் என்று கூறினார்கள்.

    இதற்கு பொதுமக்கள் ஆண்டாண்டு காலமாக இங்கே குடியிருந்து விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலத்தை கொடுத்து விட்டு வேறு இடத்தில் எங்களால் நிம்மதியாக வாழமுடியாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதற்கிடையே சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சேலம் விமான நிலைய விரிவாக்கம் தவிர்க்க இயலாத ஒன்று. அரசு விதிமுறைக்கு உட்பட்டு தான் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது என கூறினார்.

    இதனை தொடர்ந்து தும்பிப்பாடி, சிக்னம்பட்டி, காமலாபுரம், சட்டூர் ஆகிய கிராமங்களில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த போராட்டத்தால் மேலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Tamilnews
    ×