search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mumbai attack"

    மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் நிறைவை தொடர்ந்து, உயிர்நீத்த போலீசார் நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்களும் புகழஞ்சலி செலுத்தினர். #MumbaiAttack
    மும்பை:

    மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி லஸ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கடல் மார்க்கமாக ஊடுருவினர். சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட், தாஜ் ஓட்டல், காமா மருத்துவமனை, நரிமன்ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    இதில் அப்பாவி மக்கள், வெளிநாட்டினர், போலீசார் என 166 பேர் கொல்லப்பட்டனர். 308 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த கொடூர தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அதன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த போலீசாரின் நினைவிடம் மெரின்டிரைவ் போலீஸ் ஜிம்கானாவில் உள்ளது. அங்கு மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.



    போலீஸ் உயர் அதிகாரிகளும், உயிர்நீத்த போலீசாரின் குடும்பத்தினரும், ஏராளமான மக்களும் திரண்டு வந்து மரியாதை செலுத்தினர். பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை கிர்காவ் கடற்கரையில் வைத்து பிடித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துக்காராம் ஒம்பாலேவும் கொல்லப்பட்டார். கிர்காவ் கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திலும் ஏராளமானவர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதேபோல பயங்கரவாத தாக்குதல் நடந்த காமா மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் உள்ள உயிரிழந்தவர்கள் நினைவிடத்திலும் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.

    பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்பட பல்வேறு தலைவர்கள் புகழ் அஞ்சலி செலுத்தினர்.
    பாகிஸ்தான் கோர்ட்டில் மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடந்து வரும் நிலையில், குற்றவாளிகள் 7 பேரும் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. #MumbaiAttack #Pakistan
    லாகூர்:

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி கடல் வழியாக நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை அரங்கேற்றினர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த அவர்கள் நடத்திய இந்த கொலைவெறி தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    சுமார் 4 நாட்கள் நடந்த இந்த தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதியும் பின்னர் தூக்கிலிடப்பட்டார்.



    இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் நடந்த இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு முற்றிலும் சீர்குலைந்தது. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியது. இதைப்போல பல்வேறு உலக நாடுகளும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தன.

    இதன் விளைவாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி ஜாகியுர் ரஹ்மான் லக்வி உள்பட 7 பேரை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. இதில் லக்வி, கடந்த 2015-ம் ஆண்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மீதமுள்ள 6 பேரும் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் 10-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்த பிறகும் பாகிஸ்தான் கோர்ட்டில் இந்த வழக்கு மிகவும் மந்தமாகவே விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த வழக்கை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என கடந்த 2015-ம் ஆண்டு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகும்கூட எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது பைசலிடம் பி.டி.ஐ. செய்தி நிறுவனம் சார்பில் கேட்கப்பட்ட போது, அது குறித்து பேச மறுத்துவிட்டார்.

    ஆனால் இந்த வழக்கு இழுத்தடிக்கப்படுவதற்கு காரணம் இந்தியாதான் என பாகிஸ்தான் அரசு வக்கீல்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக 24 சாட்சிகளை பாகிஸ்தானுக்கு இந்தியா அனுப்பி வைத்தால் ஒரு வாரத்தில் வழக்கு முடிக்கப்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.

    இது குறித்து தலைமை அரசு தரப்பு வக்கீலான சவுத்ரி அசார் கூறுகையில், ‘பயங்கரவாதிகள் மும்பைக்கு வருவதற்கு பயன்படுத்திய படகை பாகிஸ்தான் அதிகாரிகள் சோதனை செய்யவும், வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக சாட்சிகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டால், மும்பை தாக்குதல் வழக்கை முடிக்க ஒரு வாரம் கூட தேவையில்லை’ என்றார்.

    இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாக கூறிய மற்றொரு அரசு தரப்பு வக்கீலான அபுசார் பீர்சாதா, அடுத்த விசாரணை 28-ந்தேதி (நாளை) நடைபெறுவதாகவும் தெரிவித்தார். இது இரு நாடுகள் தொடர்புடைய வழக்கு என்பதால், இதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

    இதற்கிடையே வழக்கு விசாரணை நீண்டு கொண்டே செல்வதால் லக்வி உள்ளிட்ட குற்றவாளிகள் 7 பேரும் விடுதலையாக பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதை குற்றவாளிகள் தரப்பு வக்கீலான ராஜா ரிஸ்வான் அப்பாசிக்கு நெருக்கமான ஒருவர் உறுதி செய்ததுடன், அதனால்தான் குற்றவாளிகள் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

    இந்தியா-பாகிஸ்தான் உறவில் மிகப்பெரும் விரிசலை ஏற்படுத்திய மும்பை தாக்குதல் குற்றவாளிகள் விடுதலையாகும் வாய்ப்பு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் இந்தியாவுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்து இருக்கிறது.
    மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளிகள் பற்றியோ அல்லது அதற்கு திட்டம் தீட்டிய அல்லது உதவியவர்கள் பற்றிய தகவல் அளித்தால் 5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.35 கோடி) பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. #MumbaiTerrorAttack #USReward
    வாஷிங்டன்:

    மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி கடல் வழியாக ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். 29-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 6 அமெரிக்கர்கள் உள்ளிட்ட 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான். உலகையே உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவத்தின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இந்நிலையில், மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் 5 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 35 கோடி) வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.


    மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள், தாக்குதலுக்கு சதி செய்தவர்கள் மற்றும் உதவியவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் இந்த வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ கூறியுள்ளார். #MumbaiTerrorAttack #USReward
    மும்பை தாக்குதல் சம்பவத்தின் 10ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நினைவிடத்தில் இன்று ஆளுநர் மற்றும் முதல்வர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். #MumbaiTerrorAttack
    மும்பை:

    மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி கடல் வழியாக ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். 29-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான்.


    இந்த தாக்குதல் சம்பவத்தின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மும்பை போலீஸ் ஜிம்கானா பகுதியில் உள்ள நினைவிடத்தில் இன்று அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். #MumbaiTerrorAttack
    மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்று 10-வது ஆண்டு நிறைவுநாள். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #MumbaiTerrorAttack
    மும்பை:

    2008-ம் ஆண்டு நவம்பர், 26-ந் தேதி, இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாள். அந்த நாளில்தான், நிதித்தலைநகரம் என்ற சிறப்புக்குரிய மும்பையை அழித்து, நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்று சதி செய்து பாகிஸ்தானில் இருந்து லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 10 பேர் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவினர்.

    அவர்கள் பல குழுக்களாக பிரிந்து, சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஓட்டல், நரிமன்ஹவுஸ், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் அதிபயங்கர தாக்குதல் நடத்தினர். மும்பை குருஷேத்திர போர்க்களம் போல ஆனது.

    இந்தியாவை மட்டுமின்றி, உலக நாடுகளையெல்லாம் உலுக்கிய இந்த பயங்கர தாக்குதலில், இந்தியர்கள் மட்டுமல்லாது அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, ஜெர்மனி என பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

    பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிரமாக சண்டையிட்ட பயங்கரவாத தடுப்பு போலீஸ் படைத்தலைவர் ஹேமந்த் கர்காரே, கூடுதல் போலீஸ் கமிஷனர் அசோக் காம்தே, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலாஸ்கர், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் வீர மரணம் அடைந்தனர்.

    தாக்குதல் நடத்திய 10 பயங்கரவாதிகளில் 9 பேர், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாயினர்.

    அஜ்மல் கசாப் என்ற இளம் தீவிரவாதி உயிருடன் சிக்கினான். அவன் மீது முறைப்படி வழக்கு தொடரப்பட்டு, விசாரணைக்கு பின்னர் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவன் 2012-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 21-ந் தேதி புனே எரவாடா சிறையில் தூக்கில் போடப்பட்டான்.



    மும்பை தாக்குதல் நடந்து 10-வது ஆண்டு நிறைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த தாக்குதலால் ஏற்பட்ட துயர வடுக்கள், மக்கள் மனங்களில் இருந்து இன்னும் அழியவில்லை. மும்பை தாக்குதலில், பலியானவர்களுக்கு இன்று கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    10-வது ஆண்டு நிறைவையொட்டி பயங்கரவாதிகள் மீண்டும் எந்தவொரு தாக்குதலும் நடத்தி விடாதபடிக்கு மும்பை நகரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    ரெயில்நிலையங்கள், பஸ் நிலையங்கள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், முக்கிய சந்திப்புகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    கடலோரங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடைமைகள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. விமான நிலையத்திலும் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டு உள்ளன.

    மும்பை பயங்கரவாத தாக்குதலின் 10-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று கடற்படை தளபதி சுனில் லன்பாவை நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது, இந்திய கடற்பரப்பின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் குறித்து கேள்வி எழுப்பினர்.

    இதற்கு சுனில் லன்பா பதில் அளிக்கையில், “2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்கு பின் நாடு மிகுந்த தயார் நிலை மற்றும் சிறந்த ஒழுங்கமைப்புகளை கொண்டு இருக்கிறது” என்றார்.

    கடலோர பாதுகாப்புக்காக கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து பல அடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கி இருப்பதாக கூறிய சுனில் லன்பா, அதிநவீன கேமராக்களுடன் இணைந்த ரேடார் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

    இந்திய கடற்படை தற்போது ஆற்றல் மிகுந்த பன்முக பரிணாமங்களை கொண்ட படையாகவும், கடல் பிராந்தியம் சார்ந்த இந்திய நலன்களை பாதுகாக்கும் வல்லமை மிகுந்ததாகவும் இருப்பதாக கூறிய அவர், கடல் வழியாக எழும் எத்தகைய பாதுகாப்பு சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.   #MumbaiTerrorAttack
    மும்பை நகரில் 2008-ம் ஆண்டு 175 உயிர்கள் பலியான பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷரிப், ஷாஹித் காகான் அப்பாசி இன்று விசாரணைக்கு ஆஜராகினர். #Nawaz #Abbasi #LahoreCourt #Mumbaiattack
    லாகூர்:

    பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல் உள்பட 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர்.

    இந்த தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர். 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதல்களில் பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை மற்றும் பயங்கரவாத இயக்கங்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்து பாகிஸ்தான் அரசுக்கு இந்திய அரசு ஆதாரங்களை அளித்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.

    இந்த தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயங்கரவாத இயக்கங்களை பற்றிய ரகசிய தகவல்களை இந்திய அரசுக்கு அளித்த வகையில் தேசத்துரோகம் இழைத்து விட்டதாக  விளைவாக லாகூர் நகரில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.



    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷரிப், ஷாஹித் காகான் அப்பாசி மற்றும் அந்நாட்டின் பிரபல நாளிதழான ‘டான்’ பத்திரிகையின் உதவி ஆசிரியர் சிரில் அல்மைடா ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ‘டான்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது அரசின் ரகசிய காப்புறுதி பிரமாணத்தை மீறிய நவாஸ் ஷரிப்புக்கு ஆதரவாக பேசியதாக முன்னாள் பிரதமர் காகான் அப்பாசி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நவாஸ் ஷரிப் அளித்த பேட்டியில் பாகிஸ்தான் உளவு அமைப்புகள் தொடர்பான ரகசியங்களை வெளியிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆமினா மாலிக் தொடர்ந்துள்ள இந்த தேசத்துரோக வழக்கு தொடர்பாக கடந்த முறை நடைபெற்ற விசாரணையில் சிரில் அல்மைடா வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதி மஸார் அலி நக்வி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னர் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டுள்ள  முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷரிப், ஷாஹித் காகான் அப்பாசி, சிரில் அல்மைடா ஆகிய மூவரும் விசாரணைக்கு ஆஜராகினர்.

    அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்த நீதிபதிகள் மறுவிசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #Nawaz #Abbasi #LahoreCourt #Mumbaiattack

    மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சையது ஏற்பாடு செய்த கூட்டத்தில் பாகிஸ்தான் மந்திரி கலந்துகொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #HafizSaeed #MumbaiAttack
    இஸ்லாமாபாத் :

    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் கொடுத்து வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சட்டி வருகிறது. குறிப்பாக மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர் என்று குற்றம் சாட்டப்படுபவர் பயங்கரவாதி ஹபீஸ் சையத். இவர் 'ஜமாஅத் உத் தவா' என்னும் பெயரில் அமைப்பு நடத்தி வருகிறார்.

    ஒருபுறம் அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு,  மறுபுறம் பயங்கரவாதிகளுடன் கைகோர்ப்பு என பாகிஸ்தான் இரட்டை வேடம் போட்டு வருகிறது.

    இதற்கு  உதாரணமாக  இஸ்லாமாபாத்தில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது  தலைமையில் கூட்டம் ஒன்று நடந்து உள்ளது.  இந்த கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில், பாகிஸ்தான்  பாதுகாப்பு, காஷ்மீர், இந்தியாவின் மிரட்டல்கள் குறித்த ஆலோசனை கூட்டம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    பயங்கரவாதி  தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பாகிஸ்தானின் மத விவகாரங்கள் மற்றும் மத நல்லிணக்க துறை அமைச்சர் நூர் உல் ஹக் குதாரி கலந்து கொண்டார்.

    தற்போது இந்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. அமைதி பேச்சு வார்த்தைக்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்த இம்ரான் கான், பயங்கரவாதி தலைமையில் நடந்த கூட்டத்திற்கு தனது அமைச்சரை அனுப்பி உள்ளதற்கு கண்டனங்களும் எழுந்து வருகின்றன. #HafizSaeed #MumbaiAttack
    மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி டேவிட் ஹெட்லி மீது அமெரிக்க சிறையில் நடந்த தாக்குதலில் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #MumbaiAttack #DavidHeadley
    மும்பை:

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 160க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தாஜ் ஓட்டல், சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 

    இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் வாழ் அமெரிக்கரான டேவிட் ஹெட்லி அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அமெரிக்க நீதிமன்றம் ஹெட்லிக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஹெட்லி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மன்னிப்பு வழங்கினால், அப்ரூவராக மாறத்தயார் எனவும் கூறினார். 

    இந்தநிலையில், சிகாகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேவிட் ஹெட்லியை கடந்த 8-ம் தேதி சக கைதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் அவர் பலத்த காயம் அடைந்ததாக தெரியவந்துள்ளது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹெட்லி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    மும்பை தாக்குதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி ஹபீஸ் சயீத் தொடங்கியுள்ள அரசியல் அமைப்புக்கு அங்கீகாரம் வழங்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. #HafizSaeed
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.

    இதுதவிர, இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத், ஜமாஅத் உத் தாவா என்னும் அமைப்புக்கு தலைமை தாங்குவதுடன் மில்லி முஸ்லிம் லீக் என்ற புதிய அரசியல் அமைப்பை ஆரம்பித்து வரும் 25-ம் தேதி நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானித்தான்.

    அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச தீவிரவாதியாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ள ஹபீஸ் சயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹபீஸ் சயீதின் கட்சியை அங்கீகரிக்க பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது. இந்த முடிவுக்கு எதிராக ஹபீஸ் சயீத் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

    பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மில்லி முஸ்லிம் லீக் கட்சியை அங்கீகரிக்க அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

    எனினும், அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் என்னும் கட்சியை கேடயமாக பயன்படுத்தி தனது ஜமாஅத் உத் தாவா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த வேட்பாளர்களை இந்த தேர்தலில் களமிறக்க ஹபீஸ் சயீத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    எஹ்சான் என்பவர் அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் கட்சியை பதிவு செய்துள்ளார். இந்த கட்சிக்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் நாற்காலியை சின்னமாக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    மும்பை தாக்குதல் விவகாரத்தில் நவாஸ் ஷெரிப் கூறிய கருத்து தவறானவை என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இன்று தெரிவித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150-க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

    இதுதொடர்பான விசாரைண நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதாக கூறினார். நவாஸ் ஷெரீப்பின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி, அந்நாட்டு அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    ஷெரிப்பின் கருத்தை தொடர்ந்து, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உயர்மட்டக் குழு கூட்டம் பிரதமர் ஷாகித் கான் அப்பாசி தலைமையில் இன்று அவசரமாக கூடியது. 



    இந்த கூட்டத்தில், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை மந்திரி குர்ராம் தஸ்தகிர், நிதி மந்திரி மிப்தா இஸ்மாயில், வெளியுறவுத் துறை செயலர் தெஹ்மினா ஜன்ஜூவா, தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நசீர் கான் ஜான்வா உள்பட பலர் கலந்துக் கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக ஆலோசித்தனர்.

    இந்த கூட்டத்திற்கு பிறகு, தேசிய பாதுகாப்பு குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விவகாரத்தில் ஆதாரங்களும், உண்மைகளும் மறுக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது ஏற்கக்கூடியது இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக நவாஸ் ஷெரிப் அளித்திருக்கும் கருத்துகள் தவறானவை. 

    இதுபோன்ற, தவறான கருத்துகளுக்கு இந்த குழு சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மும்பை பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் தாமதம் செய்து வருவது இந்தியாதான். பாகிஸ்தான் அல்ல. 

    இந்த விசாரணையின்போது மும்பை தாக்குதல் வழக்கின் முதல் குற்றவாளி அஜ்மல் கசாப்பை சந்திக்க விடாதது, உள்ளிட்ட முக்கிய பல கோரிக்கைகளை இந்தியா மறுத்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. மேலும், கசாப்பை அவசரமாக தூக்கிலிட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும், குல்புஷன் ஜாதவ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா பொறுமை காத்து ஒத்துழைக்க வேண்டும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×