search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் 10-வது ஆண்டு நிறைவு
  X

  மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் 10-வது ஆண்டு நிறைவு

  மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்று 10-வது ஆண்டு நிறைவுநாள். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #MumbaiTerrorAttack
  மும்பை:

  2008-ம் ஆண்டு நவம்பர், 26-ந் தேதி, இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாள். அந்த நாளில்தான், நிதித்தலைநகரம் என்ற சிறப்புக்குரிய மும்பையை அழித்து, நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்று சதி செய்து பாகிஸ்தானில் இருந்து லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 10 பேர் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவினர்.

  அவர்கள் பல குழுக்களாக பிரிந்து, சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஓட்டல், நரிமன்ஹவுஸ், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் அதிபயங்கர தாக்குதல் நடத்தினர். மும்பை குருஷேத்திர போர்க்களம் போல ஆனது.

  இந்தியாவை மட்டுமின்றி, உலக நாடுகளையெல்லாம் உலுக்கிய இந்த பயங்கர தாக்குதலில், இந்தியர்கள் மட்டுமல்லாது அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, ஜெர்மனி என பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

  பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிரமாக சண்டையிட்ட பயங்கரவாத தடுப்பு போலீஸ் படைத்தலைவர் ஹேமந்த் கர்காரே, கூடுதல் போலீஸ் கமிஷனர் அசோக் காம்தே, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலாஸ்கர், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் வீர மரணம் அடைந்தனர்.

  தாக்குதல் நடத்திய 10 பயங்கரவாதிகளில் 9 பேர், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாயினர்.

  அஜ்மல் கசாப் என்ற இளம் தீவிரவாதி உயிருடன் சிக்கினான். அவன் மீது முறைப்படி வழக்கு தொடரப்பட்டு, விசாரணைக்கு பின்னர் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவன் 2012-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 21-ந் தேதி புனே எரவாடா சிறையில் தூக்கில் போடப்பட்டான்.  மும்பை தாக்குதல் நடந்து 10-வது ஆண்டு நிறைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த தாக்குதலால் ஏற்பட்ட துயர வடுக்கள், மக்கள் மனங்களில் இருந்து இன்னும் அழியவில்லை. மும்பை தாக்குதலில், பலியானவர்களுக்கு இன்று கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

  10-வது ஆண்டு நிறைவையொட்டி பயங்கரவாதிகள் மீண்டும் எந்தவொரு தாக்குதலும் நடத்தி விடாதபடிக்கு மும்பை நகரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

  ரெயில்நிலையங்கள், பஸ் நிலையங்கள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், முக்கிய சந்திப்புகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

  கடலோரங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடைமைகள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. விமான நிலையத்திலும் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டு உள்ளன.

  மும்பை பயங்கரவாத தாக்குதலின் 10-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று கடற்படை தளபதி சுனில் லன்பாவை நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது, இந்திய கடற்பரப்பின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் குறித்து கேள்வி எழுப்பினர்.

  இதற்கு சுனில் லன்பா பதில் அளிக்கையில், “2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்கு பின் நாடு மிகுந்த தயார் நிலை மற்றும் சிறந்த ஒழுங்கமைப்புகளை கொண்டு இருக்கிறது” என்றார்.

  கடலோர பாதுகாப்புக்காக கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து பல அடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கி இருப்பதாக கூறிய சுனில் லன்பா, அதிநவீன கேமராக்களுடன் இணைந்த ரேடார் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

  இந்திய கடற்படை தற்போது ஆற்றல் மிகுந்த பன்முக பரிணாமங்களை கொண்ட படையாகவும், கடல் பிராந்தியம் சார்ந்த இந்திய நலன்களை பாதுகாக்கும் வல்லமை மிகுந்ததாகவும் இருப்பதாக கூறிய அவர், கடல் வழியாக எழும் எத்தகைய பாதுகாப்பு சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.   #MumbaiTerrorAttack
  Next Story
  ×