search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை தாக்குதல் தொடர்பான நவாஸ் ஷெரிப்பின் கருத்துக்கு பாக். தேசிய பாதுகாப்பு கவுன்சில் மறுப்பு
    X

    மும்பை தாக்குதல் தொடர்பான நவாஸ் ஷெரிப்பின் கருத்துக்கு பாக். தேசிய பாதுகாப்பு கவுன்சில் மறுப்பு

    மும்பை தாக்குதல் விவகாரத்தில் நவாஸ் ஷெரிப் கூறிய கருத்து தவறானவை என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இன்று தெரிவித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150-க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

    இதுதொடர்பான விசாரைண நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதாக கூறினார். நவாஸ் ஷெரீப்பின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி, அந்நாட்டு அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    ஷெரிப்பின் கருத்தை தொடர்ந்து, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உயர்மட்டக் குழு கூட்டம் பிரதமர் ஷாகித் கான் அப்பாசி தலைமையில் இன்று அவசரமாக கூடியது. 



    இந்த கூட்டத்தில், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை மந்திரி குர்ராம் தஸ்தகிர், நிதி மந்திரி மிப்தா இஸ்மாயில், வெளியுறவுத் துறை செயலர் தெஹ்மினா ஜன்ஜூவா, தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நசீர் கான் ஜான்வா உள்பட பலர் கலந்துக் கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக ஆலோசித்தனர்.

    இந்த கூட்டத்திற்கு பிறகு, தேசிய பாதுகாப்பு குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விவகாரத்தில் ஆதாரங்களும், உண்மைகளும் மறுக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது ஏற்கக்கூடியது இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக நவாஸ் ஷெரிப் அளித்திருக்கும் கருத்துகள் தவறானவை. 

    இதுபோன்ற, தவறான கருத்துகளுக்கு இந்த குழு சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மும்பை பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் தாமதம் செய்து வருவது இந்தியாதான். பாகிஸ்தான் அல்ல. 

    இந்த விசாரணையின்போது மும்பை தாக்குதல் வழக்கின் முதல் குற்றவாளி அஜ்மல் கசாப்பை சந்திக்க விடாதது, உள்ளிட்ட முக்கிய பல கோரிக்கைகளை இந்தியா மறுத்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. மேலும், கசாப்பை அவசரமாக தூக்கிலிட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும், குல்புஷன் ஜாதவ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா பொறுமை காத்து ஒத்துழைக்க வேண்டும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×