search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai AIIMS"

    • முதலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தில் நேரில் ஆய்வு செய்ய முடிவு.
    • அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து எய்ம்ஸ் மருத்துவமனையை சிறப்பாக செயல்படுத்துவோம்

    கடந்த 2019- ஆண்டு பிரதமர் மோடியால் மதுரை அருகே தொப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    மதுரையில் உள்ள வி.என்.நரம்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தலைவராக அறிவிக்கப்பட்டிருப்பது, குறித்த உத்தரவு தற்போதுதான் கிடைத்திருக்கிறது. முதலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தில் நேரில் ஆய்வு செய்ய இருக்கிறேன்.

    இதுவரை நடந்தது குறித்த முழு விவரங்களை சேகரிக்க வேண்டி இருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறேன். அதன்படி அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும். எல்லா தரப்பினரையும் ஒருங்கிணைத்து எய்ம்ஸ் மருத்துவமனையை சிறப்பாக செயல்படுத்த பாடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதிக்கு சென்று மாணிக்கம் தாகூர் எம்.பி. பார்வையிட்டார்.
    • மருத்துவமனைக்கான பணிகள் ஒரு சதவீதம் கூட நிறைவடையவில்லை என குற்றச்சாட்டு

    மதுரை:

    பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் கூற்றுப்படி, 95 சதவீத பணிகள் நிறைவுபெற்ற மதுரை எய்ம்ஸ் கட்டிடம் எங்கே? என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துமவனையின் கட்டுமானத்திற்கான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன என்றார். இது தமிழக அரசியலில் பேசுபொருளாகி உள்ளது.

    நட்டாவின் பேச்சைத் தொடர்ந்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நேற்றே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுடன் சென்று, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிறைவடைந்த பணிகளை பார்க்கப் போவதாகவும், அதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட உள்ளதாகவும் கூறியிருந்தார்.

    அதன்படி, மதுரை எம்பி சு.வெங்கடேசனுடன் இன்று எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூர் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அங்கு மருத்துவமனைக்கான எந்த கட்டுமான பணியும் நடக்கவில்லை. சுற்றிலும் சுவர்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்தது. காலியாக உள்ள அந்த இடத்தில் இருவரும் நடந்து செல்லும் புகைப்படங்களை மாணிக்கம் தாகூர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

    அதில், 'அன்பிற்குரிய நட்டா அவர்களுக்கு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 95 சதவீத பணிகளை முடித்தமைக்கு நன்றி. நானும் மதுரை எம்.பி சு.வெங்கடேசனும் தோப்பூர் வளாகத்தில் ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை. கட்டிடத்தை யாரோ திருடிவிட்டார்கள்' என கூறி நட்டாவை டேக் செய்துள்ளார். அத்துடன் 95 சதவீதம் வேலை முடிந்த எய்ம்ஸ் எங்கே? என்ற கேள்வியுடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    'பாஜக ஆட்சி புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிதத்தை தேடி நானும் மாணிக்கம் தாகூர் எம்.பி.யும் போனோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிபோட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்' என சு.வெங்கடேசன் ட்வீட் செய்துள்ளார்.

    உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடியவில்லை. ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை. அப்படியிருக்க பணி முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

    இங்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் ஒரு சதவீதம் கூட நிறைவடையவில்லை. நிதி ஒதுக்கீட்டிலும் குளறுபடிகள் உள்ளன என எம்.பி.க்கள் இருவரும் குற்றம்சாட்டினர்.

    மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1200 கோடி நிதி ஒப்புதலை மத்திய அமைச்சரவை இன்னும் ஒரு சில நாட்களில் அளிக்க இருக்கிறது. #AIIMS #AIIMSinMadurai #Thoppur
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பதவியில் இருந்தபோது 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி தமிழ்நாட்டில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் தலைமையில் தமிழகம் வந்த உயர்மட்டக் குழுவினர், குறிப்பிட்ட 5 இடங்களுக்கும் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

    ஆனால், அதன்பிறகு தொடர் நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் மத்திய அரசு இருந்துவந்ததால், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக கோர்ட்டில் பொது நல வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி டெல்லியில் மத்திய குழு கூடி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கியது.

    அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது. இந்த நிலையில், கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவின நிதி குழு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு நிதி வழங்க ஒப்புதல் வழங்கியது. அதன் அடிப்படையில், அடுத்த சில நாட்களில் மத்திய அமைச்சரவை கூடி ரூ.1,200 கோடி நிதியளிக்க ஒப்புதல் அளிக்க இருக்கிறது.  #AIIMS #AIIMSinMadurai #Thoppur
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த பின்னர் 45 மாதங்களில் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. #MaduraiAIIMS #MaduraiHC
    மதுரை:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து, அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், எய்ம்ஸ் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், எய்ம்ஸ் அமைவதற்கான அனுமதியை அரசிதழில் வெளியிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு  விளக்கம் அளிக்கும்படி கூறியிருந்தது.

    இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய சுகாதாரத்துறை சார்பில் எய்ம்ஸ் பணிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதிக்குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.


    நிதிக்குழு ஒப்புதல் அளித்ததும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கோரப்படும் என்றும், அமைச்சரவை ஒப்புதல் அளித்தபின்னர் 45 மாதங்களில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கும் என்றும் மத்திய சுகாதாரத்துறை கூறியது. இதையடுத்து கே.கே.ரமேஷ் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. #MaduraiAIIMS #MaduraiHC
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #MaduraiAIIMS
    மதுரை:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    தோப்பூரில் மத்திய மருத்துவ கட்டுமான குழு ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது எடுத்த படம்


    ‘பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. ஆனால், மதுரை தோப்பூரில் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே தமிழகத்தில் மதுரை மாவட்டம், தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்று அரசிதழில் மத்திய அரசு வெளியிட வேண்டும்.

    மேலும் அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்தவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, இந்த பிரச்சனை குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரையில் தோப்பூரில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று உறுதி அளித்தார்.

    இதையடுத்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 6-ம் தேதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும்? எப்போது நிறைவடையும்? என்பதையும் அறிக்கையில் குறிப்பிடும்படி உத்தரவு பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.  #MaduraiAIIMS
    டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து, எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். #EdappadiPalaniswami #Modi #MaduraiAIIMS
    புதுடெல்லி:

    பிரதமரை சந்திப்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் சென்றனர். டெல்லி சென்றடைந்த முதல்வருக்கு, விமான நிலையத்தில், தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் அதிமுக எம்.பி.க்கள். வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் தமிழ்நாடு இல்லத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு அதிமுக எம்.பி.க்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
     
    இந்நிலையில் இன்று காலை தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அதிமுக அலுவலகம் சென்று எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார்.



    பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழக திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, அரசியல் நிலவரம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.  தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமரிடம் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின்போது  அமைச்சர் ஜெயக்குமார் உடனிருந்தார்.  #EdappadiPalaniswami #Modi #MaduraiAIIMS
     
    எய்ம்ஸ் மருத்துவமனையை யார் கொண்டு வந்தாலும் மதுரைக்கு வந்தது சந்தோ‌ஷம் தான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #maduraiaiims

    திருப்பரங்குன்றம்:

    திருநகர் அருகே விளாச்சேரியில் இன்று நடந்த பரிதிமாற் கலைஞரின் 148-வது பிறந்த நாள் விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எய்ம்ஸ் மருத்துவமனையை யார் கொண்டு வந்தாலும் மதுரைக்கு வந்தது சந்தோ‌ஷம் தான். ஊர் கூடி தேர் இழுத்ததால் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளது.

    இந்தியா முழுவதும் பா.ஜ.க. ஆட்சி செய்வதால் தமிழிசை சவுந்தரராஜன் எய்ம்ஸை கொண்டு வந்தது பா.ஜ.க.தான் என்று சொல்வதில் தவறில்லை. அதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எய்ம்ஸை கொண்டு வந்ததில் தமிழக முதல்வருக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும் பங்கு உண்டு. பா.ஜ.க. மட்டும் கொண்டு வந்தது என்றால் 2003-ம் ஆண்டே கொண்டு வந்திருக்கலாமே? எய்ம்ஸ் தற்போது வந்ததற்கு தமிழக அரசின் முயற்சியே காரணம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #maduraiaiims

    எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு வந்தது ஒரு வெற்றி வரலாறு என்று ராஜன் செல்லப்பா எம். எல்.ஏ. கூறினார்.

    திருப்பரங்குன்றம்:

    காவிரி நதிநீர் பிரச் சினையில் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதையொட்டி திருப்பரங்குன்றத்தில் நடந்த காவிரி வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியதாவது:-

    காவிரி பிரச்சனை என்பது பல ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் பிரச்சினை ஆகும். 1974ல் காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் அப்போதிருந்த கருணாநிதி தன் மீது உள்ள ஊழல் வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கமறுத்து விட்டதோடு காவிரி வழக்கில் தமிழக அரசின் சார்பில் போடப்பட்ட வழக்கையும் வாபஸ் பெற்றார்.

    காவிரி பிரச்சனையில் புரட்சித்தலைவர் முதன் முதலாக உச்சநீதிமன்றம் சென்றார். அதனை யொட்டி புரட்சித்தலைவி அம்மா பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

    அதில் சென்னை கடற்கரையில் 80 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்து காவிரிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தார்.

    மேலும் 2013ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பைமத்திய அரசிதழில் அம்மா வெளியிடச் செய்து தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தையும் அமைக்க உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

    அம்மாவின் மறைவிற்குப் பின் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் பங்கீட்டுக் குழு ஆகியவற்றை உடனடியாக மத்திய அரசுஅமைக்க வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றது மட்டுமல்லாது காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசிதழில் வெளியிடச்செய்துகாவிரி நீர் பிரச்சினையில் ஒரு நிரந்தரதீர்வை பெற்று மாபெரும் வரலாற்றை அம்மாவின் அரசு படைத்துள்ளது

    டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்று அம்மா கடுமையாக போராடினார் தொடர்ந்து மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அம்மாவின் இந்த கனவை நனவாக்கும் வண்ணம் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மத்திய அரசிடம் கடுமையாக போராடி எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு கொண்டு வந்து மாபெரும் ஒரு வெற்றி வரலாற்றை படைத்துள்ளனர்.

    இந்த எய்ம்ஸ் மருத்துவ மனை மூலம் தென் மாவட்டத்திலுள்ள 19 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவது மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளா மாநிலத்து மக்களும் பயன் பெறுவார்கள்.

    எய்ம்ஸ் மருத்துவ மனைரூ.1500 கோடியில் உருவாகிறது. இதில் மிகச் சிறப்பு என்றால் இந்த மருத்துவமனை மதுரை புறநகர் பகுதியைச் சேர்ந்த தோப்பூரில் அமைய உள்ளது.

    மதுரை புறநகர் பகுதிக்கு இதை உருவாக்கிகொடுத்த முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடியை அழைக்க உள்ளதாக மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #AIIMS #AIIMSInMadurai
    மதுரை:

    மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. தோப்பூரில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை இடம் தெரிவு செய்யப்பட்டதற்கான மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கடிதத்தை, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரிடம் இன்று காண்பித்து வாழ்த்து பெற்றார்.  

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 750 படுக்கைகளை கொண்ட இந்த எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட இருப்பதாகவும், 100 எம்.பி.பி.எஸ். இடங்கள், 60 செவிலியர் படிப்புக்கான இடங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்ற முயற்சி வெற்றி பெற்றுள்ளது என்றும், இந்த மருத்துவமனையால் 13 மாவட்ட மக்கள் பயன் பெறுவார்கள் என்றும் மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



    எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்றும், அடிக்கல்  நாட்டு விழாவுக்கு பிரதமரை அழைக்க உள்ளதாகவும்  பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

    இதற்கிடையே தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் வீரராகவ ராவ்  மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் உடன் சென்று ஆய்வு செய்தனர்.

    பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை அரசின் முயற்சியால் மதுரையில் அமைய உள்ளதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடம் முழுவதும் அரசுக்கு சொந்தமான இடம் என்றும் கூறினார். எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்துக்கு அருகிலேயே தேசிய நெடுஞ்சாலை, விமான நிலையம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். #AIIMS #AIIMSInMadurai
    ×