search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி - மத்திய மந்திரி சபை விரைவில் ஒப்புதல்
    X

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி - மத்திய மந்திரி சபை விரைவில் ஒப்புதல்

    மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1200 கோடி நிதி ஒப்புதலை மத்திய அமைச்சரவை இன்னும் ஒரு சில நாட்களில் அளிக்க இருக்கிறது. #AIIMS #AIIMSinMadurai #Thoppur
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பதவியில் இருந்தபோது 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி தமிழ்நாட்டில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் தலைமையில் தமிழகம் வந்த உயர்மட்டக் குழுவினர், குறிப்பிட்ட 5 இடங்களுக்கும் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

    ஆனால், அதன்பிறகு தொடர் நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் மத்திய அரசு இருந்துவந்ததால், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக கோர்ட்டில் பொது நல வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி டெல்லியில் மத்திய குழு கூடி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கியது.

    அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது. இந்த நிலையில், கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவின நிதி குழு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு நிதி வழங்க ஒப்புதல் வழங்கியது. அதன் அடிப்படையில், அடுத்த சில நாட்களில் மத்திய அமைச்சரவை கூடி ரூ.1,200 கோடி நிதியளிக்க ஒப்புதல் அளிக்க இருக்கிறது.  #AIIMS #AIIMSinMadurai #Thoppur
    Next Story
    ×