search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை"

    • தோப்பூர் பக்கமே போகாமல் பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு சென்றதை நாடு பார்த்தது.
    • பாராளுமன்ற தேர்தலுக்காக நடத்துகின்ற ஒரு நாடகம் என்பதை நாடு அறியும்.

    மதுரை:

    எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கியது தொடர்பாக மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதா வது:-

    எய்ம்ஸ் கட்டுமான பணியை ரகசிய திட்டத்தை போல மத்திய அரசு தொடங்கி உள்ளது. கடந்த வாரம் பிரதமர் மோடி மதுரைக்கு வந்தார். அப்போது அவரே இதனை தொடங்கி வைத்திருக்கலாம். ஆனால் உண்மை சுடும். எனவே தோப்பூர் பக்கமே போகாமல் பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு சென்றதை நாடு பார்த்தது. ஒரு திட்டத்தினுடைய அடிக்கல் நாட்டப்பட்டு திட்டம் தொடங்குவதற்கு இடையில் 5 ஆண்டுகள் உருண்டோடிய புதிய வரலாற்றை பா.ஜ.க. ஆட்சியில் நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.

    இந்த செயல் வெளிப்படையாக பாராளுமன்ற தேர்தலுக்காக நடத்துகின்ற ஒரு நாடகம் என்பதை நாடு அறியும். பொறியியல் துறையை மட்டும் வைத்து தற்போது பணியை தொடங்கி உள்ளார்கள். 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வந்தது. அந்த ஆண்டு ஜனவரி மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

    இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் வரவுள்ளது. இதற்காக மார்ச் மாதத்தில் திட்டப் பணியை தொடங்கி உள்ளார்கள். இவை அனைத்தும் தேர்தலுக்காக மக்களை திசை திருப்புகிற நாடகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டு 5 ஆண்டுகளாக வேறெந்த கட்டுமான பணிகளும் அங்கு நடைபெறாமல் இருந்தது.
    • 33 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து 2019 ஜனவரியில் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டினார்.

    ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனமான ஜெய்காவுடன் கடனுக்கான ஒப்பந்தம் 2021 மார்ச் மாதம் கையெழுத்தானது. மொத்த நிதி தேவையான ரூ.1,977.8 கோடியில் 82 சதவீத தொகையான ரூ.1,627.70 கோடியை ஜெய்கா நிறுவனம் மூலம் கடனாக பெறப்படும் எனவும், மீதமுள்ள தொகையை இந்திய அரசு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக வேறெந்த கட்டுமான பணிகளும் நடைபெறாமல் இருந்தது. கடந்த 2023 ஆகஸ்டு மாதம் 17-ந் தேதியன்று மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது.

    இதையடுத்து கடந்த ஜனவரியில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பயின்று வரும் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 150 பேருக்கு போதிய இட வசதியும், மருத்துவ பயிற்சியும் கிடைக்காத காரணத்தால், அவர்களில் 100 பேரை மதுரையில் வாடகை கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பையும் எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது.

    அதன்படி திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் அந்த மருத்துவமனையில் இருந்து 10 கி.மீ. சுற்றளவுக்குள் 100 மாணவர்களுக்கான வகுப்புகள், விடுதி வசதிகளுடன் கூடிய கட்டிடத்தை வாடகைக்கு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

    கட்டுமானப் பணிகளுக்கான நிதி தற்போது மத்திய அரசு நிதியுடன் சேர்த்து ரூ.1977.80 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 12 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் 21 கோடி மதிப்பீட் டில் ஆறு கிலோ மீட்டருக்கு சாலை பணிகளும் நிறைவடைந்துள்ளது.

    தோப்பூரில் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்கப்பெற்ற நிலையில், கட்டுமான பணிகள் இன்று சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

    முன்னதாக எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி வாடகை கட்டிடத்திற்கான டெண்டரில் நான்கு கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டு, மத்திய நிதிக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இம்மாதம் நடைபெறவுள்ள நிதிக்குழு கூட்டத்தில் அதற்கான ஒப்புதலும் கிடைத்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

    தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவந்த நிலையில் இன்று கட்டுமான பணிகள் முறையாக தொடங்கியுள்ளது.

    மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் 10 தளங்களாக 870 படுக்கை வசதிகளுடன் 33 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எப்போது வரும்? என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை "எல் அண்ட் டி" நிறுவனம் இன்று தொடங்கி உள்ளது.

    முதல்கட்டமாக கட்டுமான பணிகளுக்கு நீர் எடுப்பதற்கான போர்வெல் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கும் பணிகள் தொடங்கியது.

    • தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது.
    • நாகப்பட்டினத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது. 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 2 லட்சம் பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்குகின்றனர்.

    * நாகப்பட்டினத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    * எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு குழந்தைத்தனமாக காரணங்களை கூறுகிறது.

    * எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசு நில ஆர்ஜிதம் செய்யாத இடத்தில் எப்படி பிரதமரை அழைத்து அடிக்கல் நாட்டினார்.

    * மரங்கள் முழுமையாக அகற்றப்படாததால், எய்ம்ஸ் பணிகள் காலதாமதம் ஆனது எனக்கூறுவதெல்லாம் உண்மைக்கு புறம்பானது என்று அவர் கூறினார்.

    • தோப்பூரில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27-ல் எய்மஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
    • மருத்துவமனை 224.24 ஏக்கர் பரப்பளவில் சுமார் 750 படுக்கைகளுடன் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    சென்னை:

    மதுரை மாவட்டம் தோப்பூரில் கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட தமிழக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

    தோப்பூரில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27-ல் எய்மஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த மருத்துவமனை 224.24 ஏக்கர் பரப்பளவில் சுமார் 750 படுக்கைகளுடன் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.

    தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.

    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்க மொத்தமாக ரூ.1977.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான திட்ட மேலாண்மை இயக்குநரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மதுரை:

    மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி மதுரைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

    ஆனால் தற்போது வரை அடிக்கல் நாட்டி, சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படாமலேயே உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பே, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் படிக்கும் சூழல் இருந்து வருகிறது.

    எனவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மதுரையை சேர்ந்த வல்லரசு என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

    அதற்கு பதில் அளித்து விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு முன்பு செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது. இந்தியா அரசு மற்றும் ஜப்பான் அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்து பணிகள் முடிவடைந்துள்ளது.

    இரு நாட்டு ஒப்பந்தப்படி மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் அக்டோபர் 2026 ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு மொத்தமாக ரூ.1977.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான திட்ட மேலாண்மை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்பட்டுள்ளது. 2021-2022 ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ். வகுப்புகள் தற்காலிகமான இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளது.

    நேற்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை ஆய்வு செய்வதற்காக வந்த மத்திய சுகாதார இணை அமைச்சர் எஸ்.பி.சிங் நிருபர்களிடம் கூறுகையில், ஜனவரி 2-ந் தேதிக்குள் ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்படும். மூன்று மாதத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். 2027 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

    வரும் ஜனவரி மாதத்துடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டு ஐந்து வருடங்கள் ஆக உள்ளது. இந்தநிலையில் கட்டுமான பணிகள் தொடங்காதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தினாலும் விரைவாக எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என்பதே தென் மாவட்ட மக்கள் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
    • எய்ம்ஸ் விவகாரத்தை மனுதாரர் நிர்வாக ரீதியில்தான் அணுகவேண்டும்.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

    அதன்படி தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2018-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் முதன்மையானதாக கருதப்படும் 'எய்ம்ஸ்' மருத்துவமனை தமிழகத்துக்கு வருவதை அறிந்த தமிழக மக்கள் உயர்தர சிகிச்சை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், இடம் தேர்வு செய்வது முதல் நிதி ஒதுக்குவது வரை, கடந்த 8 ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் கிடப்பில் போடப்பட்டது.

    எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன் வைத்து வருகிறார்கள். மேலும் இதுதொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்தநிலையில், கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எஸ்.கே.கவுல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட முடியாது என்றும், இந்த வழக்கில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க இயலாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

    மேலும் எய்ம்ஸ் விவகாரத்தை மனுதாரர் நிர்வாக ரீதியில்தான் அணுகவேண்டும் என்றும் கூறி கே.கே. ரமேஷ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செப்டம்பர் 18-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
    • 33 மாதங்களில் கட்டி முடிக்க திட்டம்

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், மருத்துவமனை கட்டுமானப் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெய்கா நிறுவனத்திடமிருந்து கடன் தொகை பெறப்பட்டு விட்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    33 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 18-ந்தேதிக்குள் கட்டுமான பணியை பெற விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2018-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது 150 படுக்கைகள் அதிகரிப்பு உடன் விரிவாக்கம் செய்யப்பட்டு, திட்ட மதிப்பீடு 1264 கோடி ரூபாயில் இருந்து 1977.8 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஜெய்கா நிறுவனத்திடம் இருந்து 82 சதவீத தொகை கடனாக பெற்று மருத்துவமனை கட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது 1622 கோடி ரூபாய் கடன் ஜெய்கா நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டதை தொடர்ந்து, 33 மாதங்களில் கட்டி முடிக்க எய்ம்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
    • மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்குவதால் தமிழக அரசுக்கு நிதி சுமையும் ஏற்படாது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    தமிழகத்தை பற்றி பேச நிறைய இருக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மதிப்பீடு ரூ.1900 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட தாமதமாவதற்கு தமிழக அரசே காரணம். எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மீண்டும் மீண்டும் தவறான தகவல்களை கொடுக்க வேண்டாம். மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்கள். மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்குவதால் தமிழக அரசுக்கு நிதி சுமையும் ஏற்படாது. மற்ற மாநிலங்களைவிட மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் கல்லூரியில் கூடுதல் படுக்கை வசதி அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நிறுவனத்தின் கடன் மூலம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக கட்டித் தரப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிர்மலா சீதாராமன் பேசிக்கொண்டிருந்த போதே அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்த தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடத்தில் இருந்தது.
    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லை.

    மதுரை:

    மதுரை மருத்துவக் கல்லூரியில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கலெக்டர் சங்கீதா, மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல், எம்.எல். ஏ.க்கள் கோ.தளபதி புதூர் பூமிநாதன் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்த தானம் வழங்கினார்.

    தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மாணவர்களின் சமையல் தேவைக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான பயோ கேஸ் மையத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்த தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடத்தில் இருந்தது. தற்போது மேற்குவங்காளம் முதலிடத்திலும், தமிழ்நாடு 2-வது இடத்திலும் இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அதிகப்படியான ரத்த வங்கிகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். மதுரை அரசு மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைகளில் ரத்தக் கூறுகளை ஆய்வு செய்யும் வகையில் ரூ. 2 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் ரத்த வங்கி அமைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் தமிழகம் ரத்த தானம் செய்வதில் முதல் இடத்திற்கு வரும்.

    மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை பொருத்தவரை தற்போது சுற்றுச்சுவர் மட்டும் தான் கட்டப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள ஜெய்கா நிறுவனத்தின் துணைத் தலைவரை இதுதொடர்பாக சந்தித்து எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி இருக்கிறோம்.

    மற்ற மாநிலங்களில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு உள்ளது. ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான டெண்டர் பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும். 2028-ம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டும் போது அப்போதைய தமிழகத்தை ஆண்ட அரசு மத்திய அரசின் நிதி பங்களிப்பு வேண்டும் என்று வலியுறுத்தி இருக்க வேண்டும். அதனை செய்யவில்லை.

    தமிழகத்தில் 8713 சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் பழுதடைந்துள்ள கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட மதிப்பீடு ரூ.1,977.8 கோடியாகும்.
    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    சென்னை:

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

    இதற்காக 2018-ம் ஆண்டு தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதால் தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் வகுப்புகள் நடக்கின்றன.

    மதுரை எய்ம்ஸ் திட்ட மொத்த மதிப்பீடான ரூ.1,977.8 கோடியில் 82 சதவீதத்தை ஜப்பானை சேர்ந்த ஜெய்க்கா நிறுவனம் வழங்கும். மீதியை மத்திய அரசு வழங்குகிறது.

    இந்தநிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு இதுவரை எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

    அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட மதிப்பீடு ரூ.1,977.8 கோடியாகும். இதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு ரூ.12.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    2026-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது.

    • ஆஸ்பத்திரி வேலை முடிந்துவிட்டது என்று மத்திய அரசு கூறுவது சரியானது இல்லை.
    • ஆண்டுக்கு 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை திவான் பாஷ்யம் தெருவில் உணவு சமைக்கும் கூடத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 5 பேர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர்.சாந்திமலர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். அனிதா ஆகியோர் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து, மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

    சென்னை சைதாப்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் செயற்கையாக நடைபெற்ற சம்பவம். இதில் 2 பேருக்கு 2 சதவீதம், 2 பேருக்கு 40 சதவீதம், ஒருவருக்கு 32 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 5 பேரையும் காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும், 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு நேரடியாக வந்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது, அ.தி.மு.க. அரசு கட்டுமானப் பணிக்கு 200 ஏக்கர் நிலத்தை வழங்கியது. மத்திய அரசு கூடுதலாக 22 ஏக்கர் நிலம் கேட்டார்கள். அந்த நிலமும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் நிலம் வழங்க தாமதம் ஏற்பட்டதால் தான் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படவில்லை என்று மத்திய மந்திரி கூறியுள்ளது ஏற்கக்கூடியது இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை விரைவில் கட்டி முடிக்கவேண்டும் என்று பிரதமரிடம் நேரிலும், கடிதம் மூலமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    இதேபோல, கோயம்புத்தூரிலும் புதிய எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை கட்டவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

    மதுரையை தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க மத்திய அரசு நிதி வழங்கியது. ஆனால், தமிழகத்துக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் நிதி ஆதாரம் வழங்கும் என்று சொன்னார்கள். கடந்த வாரம் நான் ஜப்பான் சென்றபோது ஜைக்கா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அப்போது, மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்றோம். கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 2024-ம் ஆண்டு இறுதியில் தொடங்கி 2028-ம் ஆண்டு இறுதியில் தான் முடியும் என்று கூறியுள்ளார்கள். இது தான் உண்மை நிலவரம். ஆஸ்பத்திரி வேலை முடிந்துவிட்டது என்று மத்திய அரசு கூறுவது சரியானது இல்லை.

    இதேபோல, ஆண்டுக்கு 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். சுற்றுச்சூழலால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சட்டசபை தேர்தலின்போது எய்ம்ஸ் தொடர்பாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
    • எய்ம்ஸ் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க கோரி மதுரையில் இன்று தி.மு.க. கூட்டணி கட்சியினர் செங்கல் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மதுரை:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அங்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    ஜப்பான் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை.

    கடந்த சட்டசபை தேர்தலின்போது எய்ம்ஸ் தொடர்பாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் எய்ம்ஸ் தொடர்பாக பேசும்போது ஒற்றை செங்கலை காட்டி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க கோரி மதுரையில் இன்று தி.மு.க. கூட்டணி கட்சியினர் செங்கல் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பழங்காநத்தம் சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எய்ம்ஸ் எங்கே? எய்ம்ஸ் எங்கே? என்று செங்கலை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில தலைவர் பாலகிருஷ்ணன், எம்.பி.க்கள் வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), நவாஸ் கனி (ராமநாதபுரம்), எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, புதூர் பூமிநாதன், முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் குழந்தை வேலு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேலுச்சாமி, கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொருவரும் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு திரண்டிருந்த நிர்வாகிகளும் எங்கே எய்ம்ஸ்...? எங்கே எய்ம்ஸ்...? என்று எதிர்கோஷம் எழுப்பினர்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் என்னும் அதற்கான கட்டிடப் பணிகள் தொடங்காமல் இருப்பதால் மதுரையில் இன்று நடந்த இந்த நூதன போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×