search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எங்கே எய்ம்ஸ்...?- தி.மு.க. கூட்டணி கட்சியினர் செங்கல் ஏந்தி போராட்டம்

    • கடந்த சட்டசபை தேர்தலின்போது எய்ம்ஸ் தொடர்பாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
    • எய்ம்ஸ் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க கோரி மதுரையில் இன்று தி.மு.க. கூட்டணி கட்சியினர் செங்கல் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மதுரை:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அங்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    ஜப்பான் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை.

    கடந்த சட்டசபை தேர்தலின்போது எய்ம்ஸ் தொடர்பாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் எய்ம்ஸ் தொடர்பாக பேசும்போது ஒற்றை செங்கலை காட்டி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க கோரி மதுரையில் இன்று தி.மு.க. கூட்டணி கட்சியினர் செங்கல் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பழங்காநத்தம் சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எய்ம்ஸ் எங்கே? எய்ம்ஸ் எங்கே? என்று செங்கலை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில தலைவர் பாலகிருஷ்ணன், எம்.பி.க்கள் வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), நவாஸ் கனி (ராமநாதபுரம்), எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, புதூர் பூமிநாதன், முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் குழந்தை வேலு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேலுச்சாமி, கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொருவரும் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு திரண்டிருந்த நிர்வாகிகளும் எங்கே எய்ம்ஸ்...? எங்கே எய்ம்ஸ்...? என்று எதிர்கோஷம் எழுப்பினர்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் என்னும் அதற்கான கட்டிடப் பணிகள் தொடங்காமல் இருப்பதால் மதுரையில் இன்று நடந்த இந்த நூதன போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×