search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எய்ம்ஸ் கட்டுமான மாஸ்டர் பிளானுக்கு அனுமதி... ஆர்டிஐ-யில் தகவல்
    X

    எய்ம்ஸ் கட்டுமான மாஸ்டர் பிளானுக்கு அனுமதி... ஆர்டிஐ-யில் தகவல்

    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்க மொத்தமாக ரூ.1977.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான திட்ட மேலாண்மை இயக்குநரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மதுரை:

    மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி மதுரைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

    ஆனால் தற்போது வரை அடிக்கல் நாட்டி, சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படாமலேயே உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பே, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் படிக்கும் சூழல் இருந்து வருகிறது.

    எனவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மதுரையை சேர்ந்த வல்லரசு என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

    அதற்கு பதில் அளித்து விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு முன்பு செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது. இந்தியா அரசு மற்றும் ஜப்பான் அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்து பணிகள் முடிவடைந்துள்ளது.

    இரு நாட்டு ஒப்பந்தப்படி மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் அக்டோபர் 2026 ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு மொத்தமாக ரூ.1977.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான திட்ட மேலாண்மை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்பட்டுள்ளது. 2021-2022 ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ். வகுப்புகள் தற்காலிகமான இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளது.

    நேற்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை ஆய்வு செய்வதற்காக வந்த மத்திய சுகாதார இணை அமைச்சர் எஸ்.பி.சிங் நிருபர்களிடம் கூறுகையில், ஜனவரி 2-ந் தேதிக்குள் ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்படும். மூன்று மாதத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். 2027 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

    வரும் ஜனவரி மாதத்துடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டு ஐந்து வருடங்கள் ஆக உள்ளது. இந்தநிலையில் கட்டுமான பணிகள் தொடங்காதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தினாலும் விரைவாக எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என்பதே தென் மாவட்ட மக்கள் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×