search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரை எய்ம்ஸ் பணிகளை 2026-க்குள் முடிப்பது சாத்தியமா?: மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி
    X

    மதுரை எய்ம்ஸ் பணிகளை 2026-க்குள் முடிப்பது சாத்தியமா?: மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி

    • மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக ரூ.1,978 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு, அவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் தற்காலிகமாக நடக்கிறது.

    மதுரை:

    மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கான நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் கே.கே.ரமேஷ் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணையின்போது, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகள் 36 மாதங்களில் முடிவடையும் என மத்திய அரசு தெரிவித்தது. இதை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தது.

    ஆனால், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை என்றும், கோர்ட்டில் தவறான தகவல் தெரிவித்த மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.கே.ரமேஷ் மற்றொரு வழக்கை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என முடிவு எடுக்க நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி ஆகியோர்முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசின் குடும்பநல அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:-

    மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக ரூ.1,978 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகள் முடிவதற்கு 5 வருடம் 8 மாதம் ஆகும். (அதாவது 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2026-ம் ஆண்டு அக்டோபர் வரை). அதிக செலவு மற்றும் கூடுதல் காலத்துக்கான மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கப்பட்டு செலவினத்துறையின் பரிசீலனையில் உள்ளது.

    இதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு, அவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் தற்காலிகமாக நடக்கிறது. மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் நிர்வாக துணை இயக்குனர் நியமிக்கப்பட்டுவிட்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    பின்னர் அரசு தரப்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், மேற்கண்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் மனுதாரர் நேரில் ஆஜராகி, 2014-ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இதுவரை 8 மாநிலங்களில் மத்திய அரசின் சொந்த நிதியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளை கட்டியுள்ளனர். சமீபத்தில் கூட இமாசலப்பிரதேசத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திறக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தாமதம் ஏன்? என்பது தெரியவில்லை என்றார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எந்த அடிப்படையில் 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மதுரை எய்ம்ஸ் பணிகள் முடியும் என்று தெரிவிக்கிறீர்கள்? அது சாத்தியமா? அதற்கான நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டு உள்ளன? என்ற நிலை அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    Next Story
    ×