என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரத்த தானம்"

    • கடந்த மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • நன்றி தெரிவித்த நடிகர் கார்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

    அந்த வகையில் கடந்த மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க ரசிகர்கள் பல்வேறு அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்தார்கள். சென்னையில் உள்ள ரசிகர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்தார்கள். இவ்வாறு இரத்த தானம் செய்தவர்களில் 250 ரசிகர்களை நடிகர் கார்த்தி நேரில் சந்தித்தார்.

    சென்னை தியாகராய நகரில் இரத்த தானம் செய்தவர்களுக்கு நடிகர் கார்த்தி சான்றிதழ் வழங்கி, விருந்தளித்தார். மேலும், இரத்த தானம் செய்ததற்கு நன்றி தெரிவித்த நடிகர் கார்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    அதன்பின் நடிகர் கார்த்தி பேசும் போது, " பிறந்த நாளில் உங்களை பார்க்க முடியாமல் போய்விட்டது. நான் ஊரில் இல்லை. ஆனால் இவ்வளவு பேர் இரத்தம் கொடுத்ததை நினைத்து சந்தோஷமாக இருந்தது. என் நண்பர் வைத்திருக்கும் வாட்ஸ்அப் க்ரூப்பில்  இரத்தம் கிடைக்கவில்லை என்று சொல்லி கொண்டே இருப்பார்கள். அதை கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இன்றும் இரத்தம் கிடைப்பது பிரச்சினையாக இருக்கும் நிலையில், நீங்கள் அனைவரும் இரத்தம் கொடுத்து இருப்பது பல அம்மாக்கள், குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சந்தோஷப்படுத்தி இருக்கிறது. இதற்கு உங்கள் அனைவருக்கும் மனதில் இருந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன். இரத்த தானம் கிடைத்த பிறகு அவங்க உயிருக்கு பயம் இல்லை என்ற நிலையில் முகத்தில் தெரியும் சிரிப்பு விலை மதிப்பற்றது.

    உங்களை பார்க்கும் போது மறுபடியும் தோன்றுவது, உடன் பிறந்த அண்ணனோ, தம்பியோ இல்லை ஆனால் நீங்கள் என் மீது காட்டும் அன்பிற்கு காலம் முழுக்க நன்றி சொன்னாலும் போதாது. காலத்திற்கும் உழைத்து கொண்டு இருக்க வேண்டும். நீங்கள் பெருமை கொள்ளும் அளவுக்கு விஷயங்களை செய்து கொண்டிருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். இந்த அன்பு கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்கள் ஒவ்வொருத்தருக்கும் Love You என்று தான் சொல்ல வேண்டும்.

    மார்ஷல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மீண்டும் வேட்டி அணிந்து மீசை முறுக்கி நடிக்க இருக்கிறேன் " என்றார்.

    • தமிழில் தவிர்க்க முடியாத கதாநாயகன்களில் ஒருவரான நடிகர் கார்த்தி
    • நடிகர் கார்த்தி மே 25-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் கார்த்தி அதன்பிறகு பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். தமிழில் தவிர்க்க முடியாத கதாநாயகன்களில் ஒருவரான நடிகர் கார்த்தி, நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.

    நடிகர் கார்த்தி மே 25-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி, நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் கடந்த ஒருவார காலமாக பல்வேறு நற்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர்த்து நடிகர் கார்த்தியின் பிறந்த நாளில் இருந்து தற்போது வரைக்கும் 515 பேர் தமிழ்நாடு முழுவதும் இரத்ததானம் செய்திருக்கிறார்கள். பிறந்த நாள் கொண்டாட்டம் என்றாலே பார்ட்டி செல்வது, கேக் வெட்டி கொண்டாடுவது என்றில்லாமல் பொது மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புகளில் நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் ஈடுபட்டது பொது மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது. மேலும் ரசிகர்களின் இந்த செயலால் நடிகர் கார்த்தி நெகிழ்ந்து ரசிகர்களை பாராட்டி இருக்கிறார்.

    • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்த தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடத்தில் இருந்தது.
    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லை.

    மதுரை:

    மதுரை மருத்துவக் கல்லூரியில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கலெக்டர் சங்கீதா, மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல், எம்.எல். ஏ.க்கள் கோ.தளபதி புதூர் பூமிநாதன் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்த தானம் வழங்கினார்.

    தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மாணவர்களின் சமையல் தேவைக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான பயோ கேஸ் மையத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்த தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடத்தில் இருந்தது. தற்போது மேற்குவங்காளம் முதலிடத்திலும், தமிழ்நாடு 2-வது இடத்திலும் இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அதிகப்படியான ரத்த வங்கிகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். மதுரை அரசு மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைகளில் ரத்தக் கூறுகளை ஆய்வு செய்யும் வகையில் ரூ. 2 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் ரத்த வங்கி அமைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் தமிழகம் ரத்த தானம் செய்வதில் முதல் இடத்திற்கு வரும்.

    மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை பொருத்தவரை தற்போது சுற்றுச்சுவர் மட்டும் தான் கட்டப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள ஜெய்கா நிறுவனத்தின் துணைத் தலைவரை இதுதொடர்பாக சந்தித்து எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி இருக்கிறோம்.

    மற்ற மாநிலங்களில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு உள்ளது. ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான டெண்டர் பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும். 2028-ம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டும் போது அப்போதைய தமிழகத்தை ஆண்ட அரசு மத்திய அரசின் நிதி பங்களிப்பு வேண்டும் என்று வலியுறுத்தி இருக்க வேண்டும். அதனை செய்யவில்லை.

    தமிழகத்தில் 8713 சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் பழுதடைந்துள்ள கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
    • முகாமில் 100 பேர் ரத்ததானம் அளித்தனர்.

    மடத்துக்குளம்

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமிற்கு முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வர சாமி வரவேற்று பேசினார். மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், நாகராஜ், செல்வி ,சேதுபால் ,நடராஜன், செல்லப்பன் ,விஜயகுமார், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ரத்ததான முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் , ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் துவக்கி வைத்தார் . இதில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட பொருளாளர் முபாரக் அலி தலைமை செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம், ராமசாமி பாபு , ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காவிய ஐயப்பன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் லதா பிரியா ஈஸ்வர சாமி, மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் கலைவாணி பாலமுரளி உட் பட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 100 பேர் ரத்ததானம் அளித்தனர்.

    • இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நோக்கம்.
    • இரத்த தானம் செய்வதன் முக்கியத்துவதைக் கூறுவது.

    உலகம் முழுக்க இன்று சர்வதேச இரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பாதுகாப்பான இரத்தம் சேமிக்கப்படுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், கட்டணமின்றி தங்களின் குருதியை தானம் செய்து பலரின் உயிரை காக்கும் பரிசை வழங்குவோருக்கு பாராட்டு தெரிவிக்கவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

    மனிதனின் உயிர்நாடியாக காணப்படுகின்ற இரத்தத்தின் முக்கியத்துவத்தை அறிவதும், இரத்த தானம் செய்வதன் முக்கியத்துவதைக் கூறுவதும் இந்நாளின் நோக்கமாகும்.

    வலிமையான சுகாதார கட்டமைப்பில் போதுமான அளவுக்கு பாதுகாப்பான இரத்தம் மற்றும் அதில் இருந்து பிரிக்கப்படும் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளை சேமித்து வைப்பதே இரத்த சேவை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இரத்த தான நாளுக்கான கருப்பொருள் மாறிக் கொண்டே இருக்கும்.

    கருப்பொருள் எதுவாயினும், மக்களிடம் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்நாளின் பிரதான நோக்கங்களில் ஒன்று ஆகும். இந்த ஆண்டு இரத்த தானம் நாளின் 20 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.

    சர்வதேச இரத்த தான நாளில் கடந்த ஆண்டுகளில் உலகளவில் இரத்தம் தானம் செய்து வருவோருக்கு நன்றி தெரிவிக்கவும், மருத்துவர்கள் மற்றும் தானம் வழங்குவோரை பெருமைப்படுத்தவும் உலக சுகாதார மையம் திட்டமிட்டுள்ளது.

    இதுமட்டுமின்றி இரத்தம் தானம் செய்வதில் உள்ள தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்டு, வரும் காலங்களில் இரத்த தானம் செய்வதை மேலும் துரிதப்படுத்தவும் உலக சுகாதார மையம் உறுதியேற்கிறது.

    • கடந்த ஆண்டு 2000-க்கும் மேற்பட்டோர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் வழங்கினர்.
    • அவர்களை நேரில் அழைத்து விருந்தளித்து நடிகர் சூர்யா பாராட்டினார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், சூர்யா. இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உள்ளது. மேலும் இந்த படம் வெளியாவதற்கு முன்பே சுமார் 500 கோடி வியாபாரம் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தமிழ் படங்களை தொடர்ந்து கூடிய விரைவில், இந்தி படங்களிலும் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், நடிகராக அறிமுகமாவதற்கு முன்பே ஒரு தயாரிப்பாளராகவும் களமிறங்கிவிட்டார். இவர் தயாரிப்பில், அக்ஷய் குமார் நடிப்பில் 'சூரரை போற்று' படத்தின் ரீமேக்காக வெளியான சர்பராஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா, தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். அதாவது ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என, கடந்த ஆண்டு சூர்யா எடுத்துக்கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக, இப்போது இரத்த தானம் செய்துள்ளார்.

    நடிகர் சூர்யாவின் 49-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி மன்றம் சார்பில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், நேற்றைய தினம் 400-க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர்.

    ரசிகர்களின் இந்த சேவையை பாராட்டிய நடிகர் சூர்யா, வீடியோ கால் மூலமாக ரசிகர்களை வெகுவாக பாராட்டினார். கடந்த ஆண்டு 2000-க்கும் மேற்பட்டோர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் வழங்கிய நிலையில் அவர்களை நேரில் அழைத்து விருந்தளித்து பாராட்டிய நடிகர் சூர்யா, இனி ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்த தானம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார். சூர்யாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    ×