search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "litigations"

    கள்ளத் தொடர்பை கண்டித்ததால் பெண்ணை வீடு புகுந்து தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    தேனி:

    ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனூர் அருகே உள்ள எரதிமக்கால்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சற்குரு இவருக்கு திருமணமாகி அம்மா பிள்ளை என்ற மனைவியும், விஜயபாண்டி (24), செல்வம் (22) ஆகிய மகன்களும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் அன்னமயில் (35), இவரது கணவர் இறந்து விட்டார்.

    இதனால் அவர் தனியாக வசித்து வந்தார். சற்குருவுக்கும் அன்னமயிலுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை அம்மாபிள்ளை மற்றும் அவரது மகன்கள் கண்டித்து வந்தனர். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று அன்னமயில் மற்றும் அவரது உறவினர் லெட்சுமி (வயது 60) ஆகிய 2 பேரும் அம்மா பிள்ளை வீட்டுக்கு சென்று அவரை தரக்குறைவாக பேசி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் 2 தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

    படுகாயமடைந்த அன்னமயில் க.விலக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயபாண்டி மற்றும் அவரது தம்பி செல்வத்தை கைது செய்தனர். மேலும் அம்மா பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் அன்னமயில் மற்றும் லெட்சுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    பாகூர் அருகே 2 கிராமத்தினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
    பாகூர்:

    பாகூர் அருகே மணப்பட்டு கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும், வார்க்கால் ஓடை புதுநகரை சேர்ந்த இளைஞர்களுக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்தது.

    கடந்த 10-ந்தேதி கன்னியக்கோவிலில் நடந்த தீமிதி விழாவிலும் இந்த தகராறு காரணமாக 2 கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும் மோதலில் ஈடுபட்டனர்.

    இந்த மோதல் தொடர்பாக 2 கிராமத்தை சேர்ந்த 25 பேர் மீது கிருமாம்பாக்கம் போலீசர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேரையும் கைது செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை வார்க்கால் ஓடை புதுநகரை சேர்ந்த கனகேஸ்வரன் (28), தனது நண்பர் சதீஷ்குமாருடன் (18) மணப்பட்டு ரோடு- கன்னியக்கோவிலில் உள்ள ஒரு தனியார் கம்பெனிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அப்போது மணப்பட்டை சேர்ந்த சிவசங்கர், முத்தமிழ், கன்னியக்கோவில் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்ற மணிகண்டன் (23) ஆகியோர் சேர்ந்து கனகேஸ்வரனையும், சதீஷ்குமாரையும் தடியாலும், கல்லாலும் சரமாரியாக தாக்கினர். இதில் கனகேஸ்வரன், சதீஷ்குமார் காயம் அடைந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் லாஸ்பேட்டை புதுநகரை சேர்ந்த பிரதிபராஜ் உள்ளிட்ட சிலர் திரண்டு வந்து எதிர்தரப்பினரை தாக்கினர். இதில் மணி கண்டன் காயம் அடைந்தார். காயம் அடைந்த 3 பேரும் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த மோதல் தொடர்பாக கிருமாம்பாக்கம் போலீசார் 2 கிராமத்தை சேர்ந்த 40 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து 2 கிராமத்தினரிடையே அடிதடி மோதல் ஏற்பட்டு வருவதால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. #tamilnews
    போடி அருகே ரூ.20 லட்சம் மோசடி செய்த 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி வெள்ளிமலை தெருவை சேர்ந்தவர் சின்னமுத்து (வயது25). இவரிடம் ஆட்டுபண்ணை மற்றும் கோழிபண்ணை வைத்து தருவதாக போடி நந்தவனம் வடக்கு தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் குடும்பத்தினர் கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு தவணையாக வங்கி கணக்கு மூலமும் ரொக்கமாகவும் ரூ.20 லட்சம் வரை வாங்கினர்.

    ஆனால் பண்ணை வைத்து தராமல் இவரை ஏமாற்றி வந்தனர். இதனால் விரக்தி அடைந்த சின்னமுத்து தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் பணம் தர மறுத்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இது குறித்து போடி டவுன் போலீசில் சின்னமுத்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மோசடியில் ஈடுபட்ட ரஞ்சித்குமார், அவரது மனைவி தீபிகா உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவையாறு அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவையாறு:

    திருவையாறு அடுத்த அரசகுடியை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் அந்த ஊரில் உள்ள குடிநீர் குழாயை உடைத்துவிட்டதாக அதே ஊரைசேர்ந்த தமிழ்செல்வன், கருப்புசாமி, மற்றும் பலர் தட்டிகேட்டுள்ளனர். இதனால் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று பால் ராஜ் தரப்பினரும், தமிழ்ச் செல்வன் தரப்பினரும் இதுதொடர்பாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் கருப்புசாமிக்கும், மணிகண்டனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது சம்மந்தமாக பால்ராஜ் மருமகன் மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி போலீசார் தமிழ்ச்செல்வன் சுந்தர பாண்டியன், கரிகாலன், முத்தமிழ் செல்வன், கருப்புசாமி ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தும், கருப்புசாமி(57) கொடுத்த புகாரின்பேரில் ஆவிக்கரையை சேர்ந்த மணிகண்டன், அரசகுடியை சேர்ந்த அஜித்குமார் பால்ராஜ், தேவேந்திரன், சவுந்தர்ராஜன் ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடிவருகின்றனர்.

    எஸ்.வி.சேகர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.#SVeShekher
    சென்னை:

    பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி அவதூறு கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகருக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள், அவரது வீட்டின் மீது கல்வீசி தாக்கினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக 30 பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வழக்கை சி.பி.ஐ. அல்லது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற கோரி வழக்கறிஞர் பிரேமானந்த் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், நீதிபதி எம். தண்டபாணி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பாதிக்கப்பட்ட எஸ்.வி.சேகர் நீதி மன்றத்தை நாடாத போது,என்ன நோக்குடன் பொது நல வழக்கு தாக்கல் செயயப்பட்டுள்ளது? அவர் நீதி மன்றத்தை நாட முடியாத அளவுக்கு ஒடுக்கப்பட்டவரா? மூன்றாவது நபருக்காக பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனக்கூறி, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். #SVeShekher
    கன்னியாகுமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட காங்கிரசார் சார்பில் செயல் வீரர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குமரி மாவட்டம் வருகை தந்தார்.

    குமரி மேற்கு மாவட்டத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் நாகர்கோவிலுக்கு காரில் வந்துகொண்டிருந்தார். அவருக்கு தொண்டர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் ஒரு பகுதியாக திங்கள்நகர் ரவுண்டானாவில் இருந்து கட்சி தொண்டர் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினார்கள்.

    இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. மேலும் போலீசார் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக செல்லக்கூடாது எனவும் கூறியிருந்தனர். ஆனால் தடையை மீறி கட்சி நிர்வாகிகள் திங்கள்நகர் ரவுண்டானாவில் இருந்து மோட்டார் சைக்கிளில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசரின் வாகனத்திற்கு பின்னால் பேரணியாக வந்தனர்.

    இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் ஞான சிகாமணி ஆகியோர் குருந்தன்கோடு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெரால்டு கென்னடி, முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ் உள்பட 50 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
    ×