search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kollidam river"

    உடைந்த முக்கொம்பு அணை மதகுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 2 பேர் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். #kollidam #kollidambridge #mukkombudam
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு மேலணையில் உடைந்த மதகுகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் அதிகம் செல்வதால் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அங்கு தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ் குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் இன்று காலை கட்டுமான பொருட்கள் படகில் ஏற்றி செல்லப்பட்டு, பணிகள் நடந்து வரும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆற்றின் நடுவே செல்லும் போது திடீரென படகு ஆற்றில் கவிழ்ந்தது. அதில் இருந்த 2பேர் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் 2 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  #kollidam #kollidambridge #mukkombudam
    முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் மேலும் சில மதகுகளில் விரிசல் மற்றும் அணையின் அடித்தளம் பிளாட்பாரத்தில் விரிசல் இருப்பதாக நீரில் மூழ்கி ஆய்வு செய்த நீச்சல் வீரர்கள் தெரிவித்துள்ளனர். #kollidam #kollidambridge #mukkombudam
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கடந்த 22-ந்தேதி இரவு 9 மதகுகள் உடைந்தன. அதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மதகுகளை அடைக்க 2½ லட்சம் மணல் நிரப்பிய சாக்கு மூட்டைகள் தயார் செய்யப்பட்டன. அணையின் முதலாவது மதகு முதல் 17-வது மதகு வரை, 220 மீட்டர் தூரத்துக்கு மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது இதுவரை 1.25 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளது. இப்பணியில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தநிலையில் அணையில் இடிந்த 9 மதகுகள் மட்டுமின்றி மீதமுள்ள 36 மதகுகளும் நல்ல நிலையில் உள்ளதா? என்றும், கொள்ளிடம் அணையின் உறுதி தன்மை குறித்தும் ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

    இதற்காக, தண்ணீருக்கு அடியில் சென்று அணையின் மதகுகளில் விரிசல் உள்ளதா? அணையின் பிளாட்பாரம் விரிசல் விடாமல் இருக்கிறதா? என கண்டறிவதற்காக ஆழ்கடலில் மூழ்கி நீச்சல் பயிற்சி அனுபவம் உள்ள ‘ஹைடெக்’ சிவில் என்ஜினீயர்ஸ் ஏஜென்சியினர் தூத்துக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

    அவர்களில், ஆழ்கடலில் மூழ்கி முத்து மற்றும் சிப்பிகளை சேகரிக்கும் அனுபவம் உள்ள நீச்சல் பயிற்சியாளர்கள் பாலு (வயது56), சிவா (40), சந்தனகுமார் (40) ஆகிய 3 பேரும் முக்கொம்பு கொள்ளிடம் அணைக்கு வந்தனர்.

    அவர்கள் தண்ணீரில் மூழ்கி அணையின் ஒவ்வொரு மதகையும் ஆய்வு செய்தனர். தூண்கள், மதகுகள் மற்றும் அணையின் உறுதித்தன்மை குறித்து உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தண்ணீரில் மூழ்கி ஆய்வு நடத்தினர். அப்போது, கொள்ளிடம் அணையில் உள்ள எஞ்சிய மதகுகள் சிலவற்றில் விரிசல் ஏற்பட்டு இருப்பதும், அணையின் அடித்தள பிளாட்பாரத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது.


    இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனை சீரமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் சில மதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் எஞ்சிய அணைப் பகுதியும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.

    இதனிடையே காவிரி ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரிப்பு, திருச்சியில் பெய்த மழை ஆகியவற்றால் கொள்ளிடம் அணையில் தற்காலிக சீரமைப்பு பணி பாதிக்கப்பட்டது. இதையறிந்த பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி வந்தார்.

    கொள்ளிடம் அணைப்பகுதிக்கு சென்று சீரமைப்பு பணியை பார்வையிட்ட அவர், அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்படாமல் விரைவாக முடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதையும் அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார். தற்காலிக சீரமைப்பு பணியை விரைந்து முடிப்பது தொடர்பாகவும், மேலும் சில மதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அதனை சீரமைப்பது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

    தற்காலிக பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் ராசாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சேதமடைந்த பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்ததாக பாறாங்கற்கள் அடுக்கும் பணி நடைபெற இருக்கிறது. பொதுப்பணித்துறை மூலம் 260 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் சுவர் அமைக்கப்படும். தற்போது முதல் கட்டமாக 60 சதவீத சீரமைப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. கொள்ளிடத்துக்கு வரும் தண்ணீரை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னும் 4 நாட்களில் நிறைவுபெறும். அதன் பின்னர் 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தாலும் கொள்ளிடம் அணைக்கு பாதிப்பு ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்தால் வெள்ள பாதிப்பை தடுப்பதற்காக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    கடந்த மாதம் அதிக அளவு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் காரணமாக அணையின் மதகுகள் உடைந்தன. தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் மேலும் சில மதகுகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்கள், விவசாயிகளிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கர்நாடகாவில் மழை குறைந்ததன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது குறைக்கப்பட்டுள்ளது.

    அங்கு கூடுதலாக மழை பெய்து தண்ணீர் திறந்துவிடப்பட்டால் திருச்சி கொள்ளிடம் மேலணையில் மேலும் சில மதகுகள் உடைந்து, அணையின் எஞ்சிய பகுதியும் உடைய விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அப்படியொரு நிலை ஏற்பட்டால் அதனை தடுப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து அங்கு புதிய அணை கட்டுவதற்கான பணியை விரைவில் தொடங்க உள்ளனர். அதற்கான ஆய்வில் நிபுணர்கள் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நில அளவீடு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. #kollidam #kollidambridge #mukkombudam
    தண்ணீரின் வேகம் மற்றும் மழையால் திருச்சி முக்கொம்பு அணை சீரமைப்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் கடந்த 22-ந்தேதி இரவு 9 மதகுகள் உடைந்தன. அதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. உடைந்த பகுதி மட்டுமல்லாமல் அதோடு கூடுதலாக 220 மீட்டர் தூரம் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    அணையில் தென்கரை பகுதியில் முதலாவது மதகில் இருந்து 5-வது மதகு வரை தற்போது மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மணல் மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூலம் 1 லட்சம் மணல் மூட்டைகளை கொண்டு மதகுகளில் அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் சீரமைப்பு பணியில் ஈடுபட்டி ருந்த தொழிலாளர்கள் அனைவரும் கரைக்கு திரும்பினர். தொடர்ந்து மழை தூறியபடி இருந்ததால் பணி மேற்கொள்ளப்படவில்லை. இதையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் தங்களது உடைமைகளுடன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.


    இன்று காலை முதல் சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . அணையில் கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்காக நாட்டு படகு ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இருந்து கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் ஆற்றின் நடுவே நடைபெற்று வரும் பணிகளுக்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டியுள்ளதால் மேலும் ஒரு படகும் கொண்டு வரப்பட உள்ளது.

    இதனிடையே புதிய அணை கட்டுவதற்கான பணிகளில் நிபுணர் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொள்ளிடம் அணைப்பகுதிக்கு வரக்கூடிய தண்ணீரை காவிரி ஆற்றில் திருப்பிவிடும் பணி மிதவை பொக்லைன் எந்திரம் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ளதால் அதனை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    முக்கொம்பு அணையில் உடைந்த பகுதியை பார்வையிட்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4 நாட்களுக்குள் தற்காலிக சீரமைப்பு பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் தண்ணீரின் வேகம் மற்றும் மழை ஆகியவற்றால் முக்கொம்பு அணையில் சேதமடைந்த மதகுகளை சீரமைக்கும் பணி இரு வாரங்களுக்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி முக்கொம்பு அணைக்கு 29,000 கனஅடி தண்ணீர் வந்தது. இதில் காவிரி ஆற்றில் 13,000 கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் 16,000 கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு 26,000 கனஅடி தண்ணீர் வந்தது. அங்கிருந்து 24,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
    அளக்குடியில் ஏற்பட்ட கரை உடைப்பை இன்று 2-வது நாளாகவும் பொதுப் பணித்துறையினர் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள் உதவியுடன் சீரமைத்து வருகின்றனர். #kollidamriver
    சீர்காழி:

    கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் தமிழகத்துக்கு உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் மேட்டூர் அணைக்கு 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. இதையொட்டி மேட்டூர் 2 முறை நிரம்பியது. உபரி தண்ணீர் அனைத்தும் பாசனத்துக்காக திருப்பி விடப்பட்டது.

    காவிரி தண்ணீர் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் வழியாக திருச்சி முக்கொம்பை வந்தடைந்தது. இங்கிருந்து காவிரி மற்றும் கொள்ளிடத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. குறிப்பாக கொள்ளிடத்தில் 2 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் வந்தது.

    இதையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதில் குறிப்பாக கொள்ளிடத்தில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொள்ளிட கரையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி பகுதியில் நேற்று முன்தினம் தடுப்பு சுவர் உடைப்பு ஏற்பட்டது.

    இந்த பகுதியில் கொள்ளிடம் ஆற்று வெள்ளம் கரையில் மோதி ‘எல்’ வடிவ திருப்பத்தில் சென்று திரும்பும். இதனால் ரூ.64 கோடி செலவில் ஆற்றுக்குள் 20 அடி ஆழம் முதல் 60 அடி ஆழம் வரை சிமெண்ட் கான்கிரீட் முனைகள் அமைத்து அதன்மேல் சுமர் 1200 மீட்டர் தூரத்துக்கு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் கடந்த 2013-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.

    இந்நிலையில் அளக்குடி கிராமத்தில் கொள்ளிட கரையில் ஏற்பட்ட உடைப்பால் சுற்றியுள்ள கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. முதலைமேடு, முதலைமேடுதிட்டு, நாதல்படுகை, வெள்ள மணல், மேலவாடி ஆகிய 5 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

    கொள்ளிடம் ஆற்றில் தற்போது 1 லட்சம் கனஅடி வரை தண்ணீர் ஆக்ரோ‌ஷமாக பாய்ந்து செல்கிறது. இதனால் கரையில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வேகமாக ஊருக்குள் சென்றது.

    இதற்கிடையே இதுபற்றி தகவல் கிடைத்ததும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை அடுக்கி கரை உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஆற்றின் தண்ணீர் வேகத்துக்கு, சீரமைப்பு பணிகள் கைகொடுக்கவில்லை.

    இதையடுத்து பெரம்பலூர் மாவட்டததில் ராட்சத பாறாங்கற்கள் கொண்டு வரப்பப்பட்டு கரையோரம் அடுக்கி வைக்கப்பட்டன. அதன் மேல் மணல்மூட்டைகள் கொண்டு ராட்சத தடுப்பு போன்று அமைக்கப்பட்டது. இந்த முயற்சி ஓரளவு பலன் அளித்து வருகிறது.

    இதற்கிடையே அளக்குடியில் ஏற்பட்ட கரை உடைப்பை இன்று 2-வது நாளாகவும் பொதுப் பணித்துறையினர் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள் உதவியுடன் சீரமைத்து வருகின்றனர்.

    இதற்கிடையே கரை உடைப்பு காரணமாக முதலைமேடு, முதலைமேடு திட்டு, நாதல்படுகை, வெள்ள மணல், மேல வாடி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த 1000 பேர் தவித்து வருகின்றனர். அவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, துணிகள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இந்த 5 கிராமங்களிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இவைகளை உடனடியாக மீட்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றின் அளக்குடி கிராமத்தில் மற்றொரு இடத்திலும் கரை உடைப்பு ஏற்பட்டது. சுமார் 7 மீட்டர் அளவுக்கு ஏற்பட்ட உடைப்பை பொதுப் பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் ஆசைத்தம்பி, நாகை சிறப்பு திட்ட செயற்பொறியாளர் ஞானசேகரன் ஆகியோர் பார்வையிட்டு அங்கேயே முகாமிட்டு உடைந்து விழும் பகுதிகளிலும் கரையின் மறுபுறம் சிதைந்துள்ள பகுதிகளிலும் பாறை கற்களை போட்டு அமைக்கும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே கரை உடைப்பு காரணமாக அளக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 200 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு, கத்தரி, நெல் பயிர்கள் சேதமாகி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.  #kollidamriver
     
    கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால் செங்கல் சூளை ஒன்று மூழ்கி உள்ளது. #kollidamriver

    அய்யம்பேட்டை:

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால் தஞ்சை மாவட்டம் வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு, கருப்பூர் ஆகிய கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. பட்டுக்குடி கிராமம் வடக்கு தெருவிலும், கூடலூர் கிராமம் வடக்கு தெருவிலும் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. வெள்ள சூழ்ந்த வீடுகளிலிருந்து பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுடன் வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கி உள்ளனர். கால்நடைகளை மேடான பகுதிகளில் கட்டி வைத்துள்ளனர்.

    அதுபோல அய்யம்பேட்டை பேரூராட்சி பகுதிக்கு கொள்ளிடத்திலிருந்து குடிநீர் கொண்டு செல்லும் நீரேற்று நிலையத்தையும் வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும் இந்த கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு, முருங்கை, சவுக்கு தோட்டங்களிலும் வெள்ள நீர் புகுந்தது. மேலும் கூடலூர் காளியம்மன்கோவில் கும்பாபிக்ஷேகம் இந்த மாதம் 23-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த கோவிலையும் வெள்ள நீர் சூழ்ந்தது. கொள்ளிடம் ஆற்றின் வெள்ளத்தில் செங்கல் சூளை ஒன்று மூழ்கி உள்ளது.

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது முதல் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொள்ளிடக்கரைக்கு வந்து வெள்ளநீரை வேடிக்கை பார்த்து செல்கின்றனர். அவர்களை அதிகாரிகள் பாதுகாப்பாக செல்லும்படி அறிவுறுத்தி வருகின்றனர். பொதுமக்களின் வருகை அதிகமாக இருப்பதால் கொள்ளிட ஆற்றுக்கரை ஒரு சுற்றுலாதலம்போல் காட்சியளிக்கிறது. #kollidamriver

    கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 50ஆயிரம் கனஅடி நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ரெயில்வே பாலத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    திருச்சி:

    கர்நாடகத்தில் இருந்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு சுமார் 2 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.

    முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் சுமார் 65 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கொள்ளிடத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை சமாளிக்க முடியாமல் பழைய இரும்பு பாலத்தை தாங்கி நின்ற 2 தூண்களில் விரிசல் ஏற்பட்டது. அந்த தூண்கள் ஆற்றுக்குள் இறங்கியதால் பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தின் இடிந்த பகுதிகளை தண்ணீர் அடித்து சென்றுவிட்டது.

    இடிந்து விழுந்த பாலத்தின் அருகிலேயே கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே கட்டப்பட்ட புதிய பாலம் பயன்பாட்டில் இருப்பதால் வாகன போக்குவரத்துக்கோ, பொது மக்களுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை.

    திருச்சியை பொறுத்தவரை காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அமைக்கப்பட்டுள்ள ரெயில்வே பாலங்களின் வழியாகத்தான் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    திருச்சி-சென்னை ரெயில் மார்க்கத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே இரண்டு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஒரு பாலம் மிகவும் பழமையானதாகும். இன்னொரு பாலம் இரு வழிப்பாதை அமைக்கும் பணியின்போது கட்டப்பட்ட புதிய பாலமாகும்.

    கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதாலும், ஏற்கனவே வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு பாலத்தின் தூண்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்து இருப்பதாலும் ரெயில்வே அதிகாரிகள் உஷார் அடைந்துள்ளனர். இதற்காக கொள்ளிடம் ரெயில்வே பாலங்களின் இரு பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் பணியாளர்களை நியமித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் இந்த பாலங்களின் வழியாக செல்லும் ரெயில்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க தண்டவாளம் தகுதியாக உள்ளதா? என்பதை அறிவதற்காக நேற்று ஆய்வு பணிகள் நடைபெற்றது. இதற்காக கொண்டு வரப்பட்ட ராட்சத எந்திரத்தின் உதவியுடன் நேற்று மாலை கொள்ளிடத்தின் இரண்டு ரெயில்வே பாலங்களிலும் பொறியியல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    வெள்ளப்பெருக்கினால் ரெயில்வே பாலத்திற்கு எந்தவித ஆபத்தும் இல்லை. தொடர்ந்து இதுபோன்ற ஆய்வு காவிரி பாலத்திலும் நடைபெறும் என ரெயில்வே அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
    கொள்ளிடம் ஆற்று உபரி நீர் கடலில் கலக்கும் இடத்தில் நேரில் சென்று பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். #PMK #AnbumaniRamadoss #KollidamRiver
    சீர்காழி:

    கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட அதிகளவு உபரி வெள்ளநீர் நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆறு வழியாக சென்று கடலில் கலக்கிறது.

    இந்தநிலையில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பழையார் முகத்துவாரம் பகுதியில் கடலில் கலக்கும் இடத்தில் நேரில் சென்று பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரம் லட்சக்கணக்கான கனஅடி நீர் கடலில் கலந்து வீணாகிறது. ஒருபக்கம் வெள்ளம். மறுபக்கம் கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை பகுதிகளில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை.

    இந்த 5 வாரங்களில் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 242 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. இதில் 93 டி.எம்.சி மேட்டூர் அணையில் தேக்கி வைத்துள்ளனர். மேட்டூரிலிருந்து கிட்டதட்ட 149டி.எம்.சி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து 15 டி.எம்.சி காவிரியில் கலந்திருக்கிறது. அமராவதியிலிருந்து 6டி.எம்.சி தண்ணீர் காவிரியில் கலந்திருக்கிறது. கிட்டத்தட்ட 170டி.எம்.சி காவிரியில் வந்துள்ளது.இதில் 60 டி.எம்.சி மட்டுமே விவசாயத்திற்கு ஆங்காங்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

    தண்ணீருக்காக கர்நாடகா மாநிலத்தில் சண்டையிட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் இவ்வளவு டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. கடலூர், சிதம்பரம் வரும் வரை எந்த வாய்க்காலிலும் தண்ணீர் இல்லை. கொள்ளிடம் பகுதியிலும் எந்த வாய்க்காலிலும் தண்ணீர் சரியாக செல்லவில்லை. ஆனால் 2 லட்சம் கன அடி தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது. இது மிகப்பெரிய மோசடி.


    இதற்கு முதல் காரணம் அ.தி.மு.க. வினர்கள் வாய்க்கால்களை தூர் வாருவது , கரை கட்டுவது ஆகிய கான்ட்ராக்ட் பணி செய்து வருகின்றனர். இதனால் காண்ட்ராக்டில் பணம் சம்பாதிக்க சட்ரஸ் போட்டு வாய்க்கால்களில் தண்ணீர் செல்லாமல் தடை செய்துள்ளனர். வீராணம் ஏரியிலிருந்தும் விவசாயத்திற்கு தண்ணீர் செல்லாமல் வாய்க்காலில் தடைபோட்டுள்ளனர். 2- வது காரணம் கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதி முப்போகம் விளைந்த பூமி. இங்கு விவசாயம் செய்தால் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க முடியாது மக்கள் போராடுவார்கள் என்ற காரணம். அதேபோல் 3-வது காரணம் ஓ.என்.ஜி.சி ஆங்காங்கே ஆழ்துளை கிணறு அமைத்து வருகின்றனர். தண்ணீர் விட்டால் ஓஎன்ஜிசிக்கும் பாதிப்பு ஏற்படும்.

    நீர்மேலாண்மைக்கு அரசு முக்கியத்துவம் தரவேண்டும். கால நிலை மாற்றத்தால் வெள்ளம், வறட்சி மாறி,மாறி வரும். இது மிகப்பெரிய பிரச்சனையாக வருங்காலத்தில் வரும். அதற்கு முன் எச்சரிக்கையாக அரசு செயல்படவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #AnbumaniRamadoss #KollidamRiver
    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இன்று 3-வது நாளாக 7 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். #kollidamriver

    ஸ்ரீமுஷ்ணம்:

    கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிகதண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து அணையில் இருந்து 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கீழணையை காவிரி நீர் வந்தடைந்தது. அங்கிருந்து வினாடிக்கு 85 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் சிதம்பரம் அருகே வல்லம்படுகை கொள்ளிடம் ஆறு வழியாக கொடியம் பாளையத்தில் வங்க கடலில் கலக்கிறது.

    இந்த நிலையில், கடலுக்குள் நீர் உள் வாங்காததால், வெள்ள நீர் எதிர்த்து பழைய கொள்ளிடம் ஆற்றில் உட்புகுந்துள்ளது. அந்த நீர் கரையோரம் உள்ள கீழகுண்டலபாடி, திட்டுக் காட்டூர், ஜெயங்கொண்டபட்டினம் உள்ளிட்ட 7 கிராமங்களை நேற்று முன்தினம் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள்.

    இன்று 3-வது நாளாக 7 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு இன்னும் தண்ணீர் வடிய வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியடைந்து வருகிறார்கள். இதனால் பெராம்பட்டு, திட்டுகாட்டிற்கும், இடையே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அங்கு போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம மக்கள் தங்களது அவசர தேவைக்காக படகு மூலம் திட்டுக்காட்டூருக்கு சென்று வருகிறார்கள். படகில் அதிகபேர் செல்வதால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சிதம்பரத்தை அடுத்துள்ள வல்லம்படுகை அருகே எருக்கன்காட்டு படுகையில் ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக இன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கொள்ளிட கரையோர கிராமங்களில் உள்ள படுகை பகுதியில் பயிர் செய்யப்பட்ட மரவள்ளி கிழங்கு, வாழை, நெல், கத்திரி, வெண்டை, மிளகாய் உள்ளிட்ட பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. சுமார் 1000 ஏக்கர் பரப்பில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    இதற்கிடையே கர்நாடகா அணையில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஆற்றுப்பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என்றும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கொள்ளிட கரையோர மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் வெள்ளம் பாதித்த கிராமங்களை பாண்டியன் எம்.எல்.ஏ., சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், தாசில்தார் அமுதா ஆகியோர் படகு மூலம் சென்று பார்வையிட்டனர். அப்போது அவர்கள் உங்களுக்கு தேவையான குடிநீர், உணவு வசதிகள் செய்து தருகிறோம் எதற்கும் கவலைப்படவேண்டாம். 24 மணி நேரமும் தீயணைப் புதுறையினர் மீட்பு பணி யில் ஈடுபட தயாராக இருப்பதாக கூறினர்.

    கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் ஒருவாரத்துக்கு பொதுமக்கள் இறங்க வேண்டாம் என்று கலெக்டர் அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார். #kollidamriver
    தஞ்சாவூர்:

    கர்நாடக, கேரளாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து அதிகளவு நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பை மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த நிலையில் மேட்டூருக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் திருச்சி முக்கொம்பில் இருந்தும், காவிரியில் இருந்தும் தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட உள்ளது. முக்கொம் பில் இருந்து கொள்ளிடத்துக்கு 28 ஆயிரத்து 26 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கல்லணைக்கு 10-ந்தேதி விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் வந்த தண்ணீர், நேற்று 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் கூடுதல் நீர் கல்லணைக்கு இன்று இரவு அல்லது நாளை காலை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கொள்ளிடத்தில் வினாடிக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளது. ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பு இருக்காது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது கல்லணை கால்வாயில் இருந்து 28788 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 2,650 கன அடி தண்ணீ விடப்படுவதால் ராஜமடம் வாய்க்காலில் அதிக அளவில் விநாடிக்கு 350 கன அடி தண்ணீர் விடப்படுகிறது. இந்த வாய்க்காலில் இன்னும் சில நாட்களில் கடைமடைக்கு தண்ணீர் சென்றுவிடும்.

    காவிரியில் இந்த முறை வரும் கூடுதல் நீர் மூலம் கல்லணைக் கால்வாய் பாசனப் பகுதிக்கு ட்பட்ட 540-க்கும் அதிகமான ஏரி, குளங்கள் நிரப்ப வாய்ப்பு உள்ளது.

    இப்போதே கள்ளப் பெரம்பூர் ஏரி, சமுத்திரம் ஏரி நிரம்பிவிட்டன.

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கல்லணைக்கு இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் தண்ணீர் வந்து விடும். இதனால் காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆறு அகலமானது என்பதால் அதைக்கடக்கும் போது கூடுதலாகத் தண்ணீர் வந்தால் தப்பிச் செல்வது சிரமம். எனவே ஒரு வாரத்துக்கு யாரும் கொள்ளிடம் ஆற்றைக் கடப்பதற்காக இறங்கி நடந்து செல்ல வேண்டாம். பள்ளமான பகுதியில் குளிக்க வேண்டாம். கால் நடைகளை ஆற்றுக்குள் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    விவசாயிகள் வயல்களைத் தயார்படுத்துதல், நாற்றங்கால் தயாரித்தல் போன்ற ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வேளாண் விரிவாக்க மையங்கிலும் நீண்டகால ரக விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார். #kollidamriver
    காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். #kollidamriver
    திருச்சி:

    காவிரியில் வெள்ள அபாயத்தை தடுக்க திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் நேற்று 2-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து காவிரி ஆற்றில் 1.30 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை உள்பட 12 மாவட்டங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டது. திருச்சியில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் முன்னெச்சரிக்கையாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். கலெக்டர் ராசாமணி நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேட்டூர் அணையில் இருந்து ஏற்கனவே திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் திருச்சி காவிரி ஆற்றில் இருபுறமும் கரையை தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. தற்போது 1.30 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ள அபாயத்தை தடுக்கும் வகையில் முக்கொம்பு மேலணையில் இருந்து உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதையடுத்து முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 30,067 கனஅடி தண்ணீரும், கொள்ளிடம் ஆற்றில் 29,952 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் (ஜூலை) 24-ந்தேதி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பின் காவிரியில் தண்ணீர் குறைவாக வந்ததால் மேலணையில் இருந்து கொள்ளிடத்திற்கு உபரிநீர் திறப்பு கடந்த 31-ந்தேதி நிறுத்தப்பட்டது. இதனால் கொள்ளிடத்தில் தண்ணீர் ஓடை போல ஓடியது. மணல் திட்டுக்களும் தெரிய ஆரம்பித்தன. தற்போது மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் இருபுறமும் கரையை தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள 1.30 லட்சம் கன அடி தண்ணீர் இன்று இரவு திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடையும். இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இரவு முதல் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் காரணமாக காவிரி, கொள்ளிடம் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    எனவே காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாகவும், கிராம ஊராட்சி செயலர் மூலமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    திருச்சி முக்கொம்பு, கம்பரசம்பேட்டை தடுப்பணை மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொட்டியம், முசிறி காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள கூடுதல் தண்ணீரால் காவிரியில் வரும் தண்ணீர் கிளை வாய்க்கால்களில் திறந்து விடப்படுகிறது. அதன்படி வாய்க்கால் மூலம் 75 ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்புவதற்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதுவரை 35 ஏரி, குளங்களில் 100 சதவீதம் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 ஏரி, குளங்களில் இன்னும் இரண்டு நாட்களில் முழுமையாக தண்ணீர் நிரப்பப்படும். ஏரி, குளங்களில் முழுமையாக தண்ணீர் நிரப்பப்படுவதால் 2 டி.எம்.சி. அளவிற்கு தண்ணீர் சேமித்து வைக்கப்படும். கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் ணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் இன்று காலை நிலவரப்படி கரூர் மாவட்ட எல்லையான மாயனூர் கதவணைக்கு 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இன்று மதியம் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும். இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக மாயனூர், லாலாப்பேட்டை காவிரி கரையோர பகுதி மக்கள் வெளியேறுமாறு தண்டோரா மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். #kollidamriver
    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததால் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதை நிறுத்தப்பட்டது.
    திருச்சி:

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. ஒரு கட்டத்தில் வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் வந்தது.

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 24-ந்தேதி திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் சுமார் 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக 5 ஆண்டுகளுக்கு பின்னர் கொள்ளிடத்தில் இருகரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீர் ஓடியது. கடந்த 27-ந்தேதி ஒரு நாள் மட்டும் மேட்டூரில் இருந்து வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால் கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தற்போது 26 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. (நேற்று முன்தினம் 58 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது). அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 25 ஆயிரத்து 638 கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

    மேட்டூரில் இருந்து வரும் உபரி தண்ணீரின் அளவு குறைந்ததால் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது இன்று காலை 5 மணிக்கு நிறுத்தப்பட்டது. மேலும் அய்யன் வாய்க்கால், பெருவளை வாய்க்காலில் வினாடிக்கு 450 கனஅடியும், கட்டளை வாய்க்காலில் 400 கனஅடியும், உய்யக்கொண்டான் வாய்க்காலில் 750 கனஅடி தண்ணீரும் தொடர்ந்து திறந்துவிடப்படுகிறது.

    கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் அங்குள்ள மணல் திட்டுகள் வெளியே தெரிகின்றன. இதே போல் முக்கொம்பு அணையிலும் ஆங்காங்கே மணற்பரப்பு தெரிகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலைவனம் போல் காட்சி அளித்த காவிரி ஆறு தற்போது மீண்டும் அதே நிலைக்கு திரும்புவது போல் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    கடைமடை பகுதி வரை காவிரி தண்ணீர் செல்வது கேள்விக்குறியாகி உள்ளது. எனவே வரும் தண்ணீரையாவது சேமித்து வைக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாதென அரசுக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்த இருக்கிறோம் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
    திருமானூர்:

    அரியலூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் திருமானூர் கொள்ளிடம் பாலத்தில், கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினரை சந்தித்தார். 

    அப்போது, திருமானூர் பகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் செய்து வரும் போராட்டங்களை கேட்டறிந்த அவர், கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாதென காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்துவோம் என்றார். தொடர்ந்து, 

    கொள்ளிடம் நீராதாரக்குழு மற்றும் காங்கிரஸ் சார்பில் திருமானூர் பஸ் நிலையம் அருகே திருநாவுகரசருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    ×