search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Honour killing"

    தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. #HonourKilling
    நகரி:

    தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் மாருதிராவ் மகள் அம்ருதாவும் பள்ளியில் ஒன்றாக படித்தபோதே காதலித்து வந்தனர்.

    பிரனய்குமார் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் இந்த காதலுக்கு அம்ருதா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பிரனய்குமாரும், அம்ருதாவும் கடந்த மாதம் ஐதராபாத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மாருதி ராவ் கடும் ஆத்திரத்தில் இருந்தார். இதுதொடர்பாக மகளின் கணவர் குடும்பத்துக்கு அடிக்கடி பிரச்சனையும் கொடுத்து வந்தார். இதனால் பிரனய்குமாரும், அம்ருதாவும் பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர். இருவரும் அங்குள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    இதற்கிடையே அம்ருதா கர்ப்பம் அடைந்ததால் கணவன்-மனைவி இருவரும் சொந்த ஊரான மரியாளகுடாவுக்கு வந்தனர். அம்ருதாவை மருத்துவ பரிசோதனைக்காக அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பிரனய்குமார் அழைத்து சென்றார். அவர்களுடன் பிரனய் குமாரின் தாய் பிரேமலதாவும் சென்றிருந்தார்.

    மருத்துவ பரிசோதனை முடிந்து 3 பேரும் வெளியே வந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் பிரனய் கழுத்தில் வெட்டினர். நிலைகுலைந்து விழுந்த பிரனய் குமாரை 2 பேரும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரனய் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், சித்தப்பா ஸ்ராவன் ஆகியோர் கூலிப்படையை ஏவி இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் நடந்ததும் மாருதிராவும், ஸ்ராவனும் காரில் தப்பி சென்றனர். ஐதராபாத்தில் அவர்கள் இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே தனது கண் முன்பே காதல் கணவர் வெட்டிக் கொல்லப்பட்டதை பார்த்து அதிர்ச்சியில் அம்ருதா மயங்கி விழுந்தார். அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.

    இதற்கிடையே பிரனய் குமாரை கொல்ல கூலிப்படைக்கு மாருதி ராவ் ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்தது. இதுபற்றி அறிந்ததும் பிரனய் குமாரின் தந்தை பாலசாமியும், தாயார் பிரேமலதாவும் தங்கள் மகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பலமுறை போலீசில் புகார் செய்தனர். மேலும் பாதுகாப்புக்காக வீட்டின் 4 புறமும் கண்காணிப்பு கேமரா பொருத்தினார்கள். ஆனாலும் ஆஸ்பத்திரிக்கு சென்ற சந்தர்பத்தை பயன்படுத்தி கூலிப்படையினர் பிரனய் குமாரை கொலை செய்துள்ளனர்.

    கொலை நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் கொலை நடந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அதை வைத்து கூலிப்படையினர் 2 பேரை போலீசார் பிடித்தனர். அவர்கள் பெயர் அப்துல்பாரி, ‌ஷதி ஆகும்.

    கூலிப்படையை சேர்ந்த அப்துல்பாரி - கொலைக்கு உடந்தையாக இருந்த கரீம்

    அதேபோல் பிரனய் குமாரின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதே கூலிப்படையினரின் உருவம் பதிவாகி இருந்தது. அவர்கள் 20 நாட்களாக பிரனய் குமாரின் வீட்டை கண்காணித்ததும் தெரிய வந்தது.

    அவர் எங்கெங்கு செல்கிறார் என்பதை அறிந்து கூலிப்படையினர் கொலை திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். இந்த கொலைக்கு நல்கொண்டா பகுதி காங்கிரஸ் தலைவர் கரீம் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இவர் மாருதி ராவின் நண்பர் ஆவார்.

    பிரனய் குமார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கைதான மாருதிராவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    எனது மகள் வேறு ஜாதி பையனை திருமணம் செய்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை ஜீரணிக்கவும் முடியவில்லை. எனக்கு மானம், மரியாதை முக்கியம். என் மகள் பிரனய் குமாருடன் குடும்பம் நடத்தியதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் மானம், மரியாதையை காப்பாற்ற கூலிப்படையை ஏவி பிரனய் குமாரை கொலை செய்தேன். அவனை கொன்றதை நான் கவுரவமாக நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காதல் கணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அம்ருதா கூறியதாவது:-

    நானும் பிரனய் குமாரும் 10-ம் வகுப்பு படிக்கும் போதே காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டோம். அது பிடிக்காமல் எனது தந்தை கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்துவிட்டார்.

    பிரனய் குமாரை கொலை செய்தால் நான் எனது தாய் வீட்டுக்கு சென்றுவிடுவேன் என்று நினைத்து கொன்று விட்டனர். ஆனால் நான் எனது தாய் வீட்டுக்கு செல்ல மாட்டேன். எனது மாமனார் வீட்டில் இருந்தபடியே எனது குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பேன். எனது கணவரை கொன்ற என் தந்தையையும், கொலையாளிகளையும் தூக்கில்போட வேண்டும். என் கணவரை விட்டு விட்டு என்னை கொலை செய்தால் சந்தோசப்பட்டு இருப்பேன். ஆனால் என் கணவரை கொன்று அவரது பெற்றோரை தவிக்கவிட்டு விட்டனர். என் மாமனார், மாமியார் உயிருக்கும் ஆபத்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அம்ருதா கர்ப்பம் தொடர்பாக பரிசோதனை செய்த டாக்டர் ஜோதி கூறியதாவது:-

    மாருதிராவ் என்னை சந்தித்து அம்ருதாவின் வயிற்றில் வளரும் குழந்தையை கலைக்க வேண்டும் என்றார். அந்த குழந்தை பிறக்கக் கூடாது. கருவிலேயே அழித்துவிட வேண்டும். அதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருகிறேன் என்றார். ஆனால் நான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

    இவ்வாறு டாக்டர் கூறினார்.

    கொலை செய்யப்பட்ட பிரனய்குமாரின் இறுதி ஊர்வலம் மரியாளா குடாவில் நடந்தது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. #HonourKilling
    தெலுங்கானாவில் காதல் திருமணம் செய்த வாலிபரை மாமனார் கூலிப்படையை ஏவி கவுரவ கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #HonourKilling
    நகரி:

    தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடா பகுதியை சேர்ந்த பாலசாமி- பிரேமலதா தம்பதியின் மகன் பிரனய் குமார் (22). இவரும் அப்பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் மாருதிராவ் மகள் அம்ருதாவும் பள்ளியில் ஒன்றாக படித்த போது நண்பர்களாக பழகி வந்தனர். பின்னர் நாளடைவில் இருவரும் காதலித்து வந்தனர்.

    இந்த காதலுக்கு அம்ருதா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரனய்குமார் தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவர் என்பதால் காதல் ஜோடியை பிரிக்க முயன்றனர்.

    இதையடுத்து பிரனய்குமார்- அம்ருதா கடந்த ஜனவரி மாதம் ஐதராபாத்தில் உள்ள ஆரிய சமாஜில் திருமணம் செய்து கொண்டனர்.

    இதனால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் கடும் ஆத்திரத்தில் இருந்தார். இருதரப்பினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

    இதற்கிடையே அம்ருதா கர்ப்பம் அடைந்தார். அவரை மருத்துவ பரிசோதனைக்காக பிரனய் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அவர்களுடன் பிரனய் தாய் பிரேமலதாவும் உடன் சென்றார்.


    பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து 3 பேரும் வெளியே வந்தனர். அப்போது பின்னால் அரிவாளுடன் வந்த மர்ம நபர் பிரனய் கழுத்தில் வெட்டினார். அவர் கீழே விழுந்ததும் மீண்டும் கழுத்தில் வெட்டி விட்டு ஓடினார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அம்ருதா, பிரேமலதா கதறியபடி உதவிக்காக ஆஸ்பத்திரிக்குள் ஓடினார்கள். பிரனய்வை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    பிரனய் வெட்டி கொலை செய்யப்பட்ட காட்சிகள் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. டி.வி.யில் வெளியான அந்த காட்சிகளை பார்த்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அம்ருதாவை தாழ்ந்த ஜாதியை சேர்ந்த பிரனய் திருமணம் செய்ததால் அவரை கூலிப்படையை ஏவி தந்தை மாருதிராவ் கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

    மாருதிராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். #HonourKilling
    குடும்பத்தின் கவுரத்தை குலைப்பதாக பெற்ற மகளையே தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #HonourKilling
    லாகூர்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் இம்ரான் என்பவருடன் பவுசியா என்ற பெண் ரகசிய தொடர்பில் இருந்துள்ளார். இந்த தகவலை அறிந்த பவுசியாவின் தந்தை இக்பால் மிகுந்த ஆத்திரம் அடைந்தார். அதன்பிறகு பவுசியாவின் நடவடிக்கையில் மிகுந்த அதிருப்தி அடைந்த அவரும், பவுசியாவின் மாமா உட்பட சில உறவினர்களும் பவுசியா மற்றும் இம்ரானை தண்டிக்க திட்டமிட்டனர்.

    அதையடுத்து, பவுசியாவை தீவிரமாக கண்காணித்த குடும்பத்தினர், இக்பாலை சந்திக்க பவுசியா சென்றபோது ரகசியாமாக பின்தொடர்ந்து இக்பால் வீட்டில் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். அதுமட்டுமின்றி, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இம்ரானும், பவுசியாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு வந்த போலீசார் தந்தை இக்பால், மாமா உள்ளிட்ட உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    குடும்ப கவுரவத்தை சீரழித்ததாக பெற்ற மகளையே தந்தை உட்பட உறவினர்கள் துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஆண்டுக்கு ஆயிரம் பெண்கள் கவுரவ கொலைகள் செய்யப்படுவதாகவும், பெரும்பாலும் சகோதரர் மற்றும் கணவனாலுமே இந்த கொலைகள் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #Pakistan #HonourKilling
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் 16 வயதே ஆன தன் மகளுக்கு விஷம் அளித்துவிட்டு, அவர் சாவதற்காக அருகிலேயே காத்திருந்த கொடூர மனம் கொண்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒன்று சுக்ரதால். இங்கு அமைந்துள்ள ஒரு சுடுகாட்டின் வெற்றிட பகுதியில் ராணுவத்தில் சேர விரும்புபவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது வழக்கம். அவ்வாறு நேற்று மாலை அந்த குழுவினர் அப்பகுதிக்கு வந்த போது, சுடுகாட்டின் அருகே இருந்த இருக்கையில் ஒரு சிறுமி துடித்துக் கொண்டிருக்க, அருகே ஒரு நபர் நிற்பதை கண்டனர்.

    இவர்களை பார்த்ததும், அந்த சிறுமியும் இவர்களை சைகை மூலம் அழைக்க அப்பகுதிக்கு விரைந்த இளைஞர்களிடம், தனது தந்தை தமக்கு விஷமளித்திருப்பதாகவும், தம்மை காப்பாற்றுமாறும் சிறுமி தனது மரண தருவாயில் கேட்டுள்ளார். இதைக் கேட்டவுடன் அந்த இளைஞர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த சிறுமி அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் அனைவரும் தீவிரம் காட்ட, அங்கிருந்த அவரது தந்தை தப்பியோடிவிட்டார்.

    இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியின் பெயர் தானு என்பதும், அவரது தந்தை பெயர் சுந்தர் சிங் என்பதும் தெரியவந்தது. மேலும், அந்த விசாரணையிலும், தனது தந்தையே தமக்கு விஷம் அளித்ததாக தானு தெரிவித்துள்ளார். அதுவே அவருக்கு மரண வாக்குமூலமாகவும் அமைந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தானு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதையடுத்து, போலீசார் நடத்திய தீவிர சோதனையில் சிறுமி தானுவின் அந்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது மனைவியின் மரணத்துக்கு பிறகு, மகள் தானு மீது பலர் புகார் கூறி வந்ததாகவும், தானுவை சரி செய்ய தனது தங்கையின் வீட்டுக்கு அனுப்பினால் அங்கிருப்பவர்களும் அவர் மீது பல்வேறு புகார்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதனால் வேறுவழியின்றி தனது மகளை கொலை செய்துவிட முடிவு செய்து, அப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், மகள் இறந்தவுடன், அருகில் இருந்த கங்கை நதியில் அவரது உடலை வீசிவிட திட்டமிட்டு, அவள் இறப்பதற்காக காத்திருந்ததாகவும் அந்த தந்தை கூறியுள்ளார். இதையடுத்து, கொலை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட சுந்தர் சிங்குக்கு தற்போது நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

    பெற்ற பிள்ளைகள் செய்யும் தவறுகளை திருத்தும் முழு அதிகாரம் கொண்ட பெற்றோர்களே, சிறு சிறு தவறுகளுக்கு இதுபோன்ற மிகப்பெரிய தண்டனைகளை வழங்குவது சரியான தீர்வாக அமையாது என்பதை அனைவரும் உணரவே வேண்டும்.
    கேரளாவில் வாலிபர் கவுரவ கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெண் உள்பட 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #honourkilling #kerala #lovemarriage
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள தென்மலா பகுதியைச் சேர்ந்த கெவின் ஜோசப் என்பவர் காரில் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    அதே பகுதியைச் சேர்ந்த நீனு என்ற பெண்ணை கெவின்ஜோசப் காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த நீனுவின் தந்தை சாக்கோ, சகோதரர் சானு மற்றும் உறவினர்கள் சேர்ந்து கூலிப்படை உதவியுடன் கெவின்ஜோசப்பை கவுரவ கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக சாக்கோ, சானு உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சாக்கோவின் மனைவி ரஹானா மற்றும் உறவினர்கள் ரமீஸ், ரசல், சானு, சினு ஆகிய 5 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கும் இந்த கொலையில் தொடர்பு உள்ளதால் அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

    சாக்கோவும், சானுவும் கொலை நடந்தவுடன் ரஹானாவை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்து விட்ட தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து ரஹானாவை கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    பெங்களூரு, கோவா போன்ற பகுதிகளுக்கும் ரஹானாவை தேடி போலீஸ் படை சென்று உள்ளது. காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் ரஹானாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அவரது வீட்டுக்கு போலீசார் சென்று சோதனை நடத்தினார்கள். ஆனால் அங்கு அவர் இல்லை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலும் ரஹானாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் அவர் தலைமறைவாக இருக்க உதவி செய்து வருவதாகவும், போலீசார் பற்றிய தகவல்களையும் அவர் உடனுக்குடன் ரஹானாவுக்கு தெரிவிப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அந்த உறவினர் உள்பட சிலரையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் கெவின் ஜோசப் கொலையில் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிஜூ, ஏட்டு அஜய்குமார் ஆகியோர் ஏற்றுமானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #honourkilling #kerala #lovemarriage
    கேரளாவில் கவுரவ கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளுக்கு உதவுவதாக போலீஸ்காரர் ஒருவருடன் செல்போனில் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#honourkilling #kerala #lovemarriage
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள நட்டாசேரி பகுதியை சேர்ந்தவர் கெவின் ஜோசப். இவரும் கொல்லம் அருகே தென்மலை பகுதியை சேர்ந்த நீனு என்பவரும் காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் தெரியவந்ததும் நீனு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கெவின்ஜோசப் தலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அவர்கள் காதலை ஏற்க குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். மேலும் வேறு இடத்தில் மாப்பிள்ளையும் பார்க்க தொடங்கினர்.

    இதனால் கெவின் ஜோசப் - நீனு ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதனால் நீனுவின் தந்தை சாக்கோ ஜாண், அண்ணன் சயானு சாக்கோ ஆகியோர் ஆத்திரம் அடைந்தனர். மேலும் சயானு சாக்கோ தலைமையிலான கும்பல் கெவின் ஜோசப்பை கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்தனர்.

    கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். போலீசாரால் தேடப்பட்ட சாக்கோ ஜாண், சயானு சாக்கோ ஆகியோர் நேற்று கண்ணூர் பகுதியில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

    அவர்களை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த கொலையில் ஆரம்பம் முதலே போலீசார் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. கெவின் ஜோசப் கடத்தப்பட்டவுடன் அவரது மனைவி நீனு காந்திநகர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் ஷிபு, தான் முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பணிக்கு செல்வதால் உடனே அந்த புகாரை விசாரிக்க முடியாது என்று கூறி உள்ளார்.

    அவர் உடனடியாக விசாரணை நடத்தி இருந்தால் கெவின் ஜோசப்பை காப்பாற்றி இருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஷிபு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் கொலையாளி சயானு சாக்கோ கொலை நடந்த அன்று காந்தி நகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருடன் செல்போனில் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    அந்த உரையாடலில் சயானு சாக்கோ அந்த போலீசிடம் கூறுகையில் நாங்கள் கெவின் ஜோசப்பின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தினோம். அங்கிருந்த கெவின் ஜோசப்பை காரில் கடத்திச் சென்றோம். எனக்கு பின்னால் வந்த காரில் கெவின் ஜோசப்பை ஏற்றி வந்தபோது அவர் எங்களிடம் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். அவர் எப்படியும் உங்கள் போலீஸ் நிலையத்திற்குதான் வருவார் என்று கூறுகிறார்.

    அதற்கு பதில் அளிக்கும் போலீஸ்காரர் கெவின் ஜோசப் எப்படி தப்பினார், எந்த இடத்தில் வைத்து தப்பிச் சென்றார் என்று கேட்கிறார். அவரது கேள்விகளுக்கு சயானு சாக்கோ பதில் அளிக்கும்போது இடம் சரியாக தெரியவில்லை என்று கூறுகிறார். அதற்கு அந்த போலீஸ்காரர் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்கிறேன். பயப்படாமல் இருங்கள் என்று அவருக்கு தைரியம் அளிக்கிறார்.

    மேலும் சயானு சாக்கோ தனக்கு திருமணமாகி 6 மாதம் தான் ஆவதாக கூறி தனது மனைவி பற்றியும் போலீஸ்காரரிடம் கவலையை வெளிப்படுத்துகிறார். அவருக்கு போலீஸ்காரர் ஆறுதல் கூறுகிறார். அத்துடன் அந்த உரையாடல் முடிகிறது.

    இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. கொலையாளியுடன் பேசும் அந்த போலீஸ்காரர் யார்? என்பதை கண்டுபிடிக்க விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் கேரளாவில் நடந்த கவுரவ கொலை தொடர்பாக முதல் மந்திரி பினராய் விஜயன் பேட்டி அளித்தார். அப்போது நாட்டில் நடக்கக்கூடாத ஒரு வருத்தமான சம்பவம் கேரளாவில் நடந்து விட்டது. இனி இதுபோல சம்பங்கள் நடக்கக்கூடாது.

    கால மாற்றத்திற்கு ஏற்ப பிள்ளைகள் நலனை கருதி பெற்றோர் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். காதல் திருமணம் செய்துகொண்டவர்களே தங்கள் மகளின் காதலை ஏற்காமல் அவரது வாழ்வை சிதைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் போலீசார் விரைவாக செயல்பட்டு முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #honourkilling #kerala #lovemarriage
    ×