search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுரவ கொலை: கொலையாளிக்கு உதவுவதாக உறுதி அளித்த போலீஸ்காரர் ஆடியோ வெளியானதால் பரபரப்பு
    X

    கவுரவ கொலை: கொலையாளிக்கு உதவுவதாக உறுதி அளித்த போலீஸ்காரர் ஆடியோ வெளியானதால் பரபரப்பு

    கேரளாவில் கவுரவ கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளுக்கு உதவுவதாக போலீஸ்காரர் ஒருவருடன் செல்போனில் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#honourkilling #kerala #lovemarriage
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள நட்டாசேரி பகுதியை சேர்ந்தவர் கெவின் ஜோசப். இவரும் கொல்லம் அருகே தென்மலை பகுதியை சேர்ந்த நீனு என்பவரும் காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் தெரியவந்ததும் நீனு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கெவின்ஜோசப் தலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அவர்கள் காதலை ஏற்க குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். மேலும் வேறு இடத்தில் மாப்பிள்ளையும் பார்க்க தொடங்கினர்.

    இதனால் கெவின் ஜோசப் - நீனு ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதனால் நீனுவின் தந்தை சாக்கோ ஜாண், அண்ணன் சயானு சாக்கோ ஆகியோர் ஆத்திரம் அடைந்தனர். மேலும் சயானு சாக்கோ தலைமையிலான கும்பல் கெவின் ஜோசப்பை கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்தனர்.

    கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். போலீசாரால் தேடப்பட்ட சாக்கோ ஜாண், சயானு சாக்கோ ஆகியோர் நேற்று கண்ணூர் பகுதியில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

    அவர்களை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த கொலையில் ஆரம்பம் முதலே போலீசார் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. கெவின் ஜோசப் கடத்தப்பட்டவுடன் அவரது மனைவி நீனு காந்திநகர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் ஷிபு, தான் முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பணிக்கு செல்வதால் உடனே அந்த புகாரை விசாரிக்க முடியாது என்று கூறி உள்ளார்.

    அவர் உடனடியாக விசாரணை நடத்தி இருந்தால் கெவின் ஜோசப்பை காப்பாற்றி இருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஷிபு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் கொலையாளி சயானு சாக்கோ கொலை நடந்த அன்று காந்தி நகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருடன் செல்போனில் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    அந்த உரையாடலில் சயானு சாக்கோ அந்த போலீசிடம் கூறுகையில் நாங்கள் கெவின் ஜோசப்பின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தினோம். அங்கிருந்த கெவின் ஜோசப்பை காரில் கடத்திச் சென்றோம். எனக்கு பின்னால் வந்த காரில் கெவின் ஜோசப்பை ஏற்றி வந்தபோது அவர் எங்களிடம் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். அவர் எப்படியும் உங்கள் போலீஸ் நிலையத்திற்குதான் வருவார் என்று கூறுகிறார்.

    அதற்கு பதில் அளிக்கும் போலீஸ்காரர் கெவின் ஜோசப் எப்படி தப்பினார், எந்த இடத்தில் வைத்து தப்பிச் சென்றார் என்று கேட்கிறார். அவரது கேள்விகளுக்கு சயானு சாக்கோ பதில் அளிக்கும்போது இடம் சரியாக தெரியவில்லை என்று கூறுகிறார். அதற்கு அந்த போலீஸ்காரர் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்கிறேன். பயப்படாமல் இருங்கள் என்று அவருக்கு தைரியம் அளிக்கிறார்.

    மேலும் சயானு சாக்கோ தனக்கு திருமணமாகி 6 மாதம் தான் ஆவதாக கூறி தனது மனைவி பற்றியும் போலீஸ்காரரிடம் கவலையை வெளிப்படுத்துகிறார். அவருக்கு போலீஸ்காரர் ஆறுதல் கூறுகிறார். அத்துடன் அந்த உரையாடல் முடிகிறது.

    இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. கொலையாளியுடன் பேசும் அந்த போலீஸ்காரர் யார்? என்பதை கண்டுபிடிக்க விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் கேரளாவில் நடந்த கவுரவ கொலை தொடர்பாக முதல் மந்திரி பினராய் விஜயன் பேட்டி அளித்தார். அப்போது நாட்டில் நடக்கக்கூடாத ஒரு வருத்தமான சம்பவம் கேரளாவில் நடந்து விட்டது. இனி இதுபோல சம்பங்கள் நடக்கக்கூடாது.

    கால மாற்றத்திற்கு ஏற்ப பிள்ளைகள் நலனை கருதி பெற்றோர் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். காதல் திருமணம் செய்துகொண்டவர்களே தங்கள் மகளின் காதலை ஏற்காமல் அவரது வாழ்வை சிதைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் போலீசார் விரைவாக செயல்பட்டு முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #honourkilling #kerala #lovemarriage
    Next Story
    ×