search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமறைவாக உள்ள நீனுவின் தாய் ரஹானா, நீனு
    X
    தலைமறைவாக உள்ள நீனுவின் தாய் ரஹானா, நீனு

    கேரளாவில் வாலிபர் கவுரவ கொலை: பெண்  உள்பட  5 பேர் தலைமறைவு

    கேரளாவில் வாலிபர் கவுரவ கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெண் உள்பட 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #honourkilling #kerala #lovemarriage
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள தென்மலா பகுதியைச் சேர்ந்த கெவின் ஜோசப் என்பவர் காரில் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    அதே பகுதியைச் சேர்ந்த நீனு என்ற பெண்ணை கெவின்ஜோசப் காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த நீனுவின் தந்தை சாக்கோ, சகோதரர் சானு மற்றும் உறவினர்கள் சேர்ந்து கூலிப்படை உதவியுடன் கெவின்ஜோசப்பை கவுரவ கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக சாக்கோ, சானு உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சாக்கோவின் மனைவி ரஹானா மற்றும் உறவினர்கள் ரமீஸ், ரசல், சானு, சினு ஆகிய 5 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கும் இந்த கொலையில் தொடர்பு உள்ளதால் அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

    சாக்கோவும், சானுவும் கொலை நடந்தவுடன் ரஹானாவை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்து விட்ட தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து ரஹானாவை கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    பெங்களூரு, கோவா போன்ற பகுதிகளுக்கும் ரஹானாவை தேடி போலீஸ் படை சென்று உள்ளது. காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் ரஹானாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அவரது வீட்டுக்கு போலீசார் சென்று சோதனை நடத்தினார்கள். ஆனால் அங்கு அவர் இல்லை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலும் ரஹானாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் அவர் தலைமறைவாக இருக்க உதவி செய்து வருவதாகவும், போலீசார் பற்றிய தகவல்களையும் அவர் உடனுக்குடன் ரஹானாவுக்கு தெரிவிப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அந்த உறவினர் உள்பட சிலரையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் கெவின் ஜோசப் கொலையில் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிஜூ, ஏட்டு அஜய்குமார் ஆகியோர் ஏற்றுமானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #honourkilling #kerala #lovemarriage
    Next Story
    ×