search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "home robbery"

    தர்மபுரியில் ஜெயில் சூப்பிரண்டு-இன்சூரன்ஸ் அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தர்மபுரி:

    தர்மபுரி அன்னசாகரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவர் சிறை துறை சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கலைச்செல்வி. நேற்று இரவு வீட்டின் ஒரு அறையில் சண்முகம், ஹாலில் அவரது மனைவியும் தூங்கி கொண்டு இருந்தனர்.

    நள்ளிரவு 1 மணி அளவில் கொள்ளை கும்பல் திறந்து இருந்த ஜன்னல் வழியாக கையைவிட்டு கதவின் தாழ்பாளை திறந்து உள்ளே புகுந்தனர். கலைச்செல்வி கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் செயினை வெட்டி எடுத்தனர். அவர் மஞ்சள் கயிற்றில் தாலிச்சரடு அணிந்து இருந்தார். அதை வெட்டி எடுக்க முயன்றபோது அவர் விழித்துக்கொண்டு சத்தம் போட்டார். உடனே கொள்ளைளயர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். பின்னர் கணவன்-மனைவி இருவரும் வந்து பார்த்தபோது வீட்டின் வெளியே யாரும் இல்லை.

    இதே கொள்ளையர்கள் கலைச்செல்வி வீட்டில் கொள்ளையடிப்பதற்கு முன்பு இவர்களது வீட்டிற்கு எதிரே குடியிருந்த செல்வம் என்பவரின் வீட்டு கதவையும், பூட்டையும் உடைக்க முயற்சி செய்தனர் முடியவில்லை.

    தர்மபுரி பாரதிபுரத்தில் நியூ இந்தியா இன்சூரன்ஸ் அதிகாரி அசோகன் வீட்டில் கொள்ளை நடந்து உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    பாரதிபுரம் டி.ஏ.எம்.எஸ். காலனி அருகே வசிப்பவர் அசோகன் (52). இவரது மனைவி கர்லின்ராஜ். இவர் மத்திய கூட்டுறவு வங்கியில் மானேஜராக பணியாற்றி வருகிறார். கணவன்-மனைவி இருவரும் கீழ்வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். மாடியில் நள்ளிரவு 2.30 மணிக்கு கொள்ளையர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ஹோம் தியேட்டர் பிளேயர், 2 கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ. 60 ஆயிரம் ஆகும்.

    இவர்கள் வீட்டில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு 6 பவுன் நகை கொள்ளை போனது. இதேபோல இவர்களது பக்கத்து வீடுகளில் வசித்த 2 பேரின் வீடுகளிலும் கொள்ளை நடந்தது. இந்த கொள்ளையில் இதுவரை கொள்ளையர்கள் சிக்கவில்லை. தற்போது மீண்டும் கொள்ளை நடந்து உள்ளது.

    இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திண்டுக்கல்லில் மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை போனது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் தாலுகா போலீஸ் சரகம் மாலைப்பட்டி ரோடு சுப்புராமன் பேட்டை சக்திநகரை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (வயது 40). மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார்.

    இவர் கடந்த 20-ந் தேதி தனது மனைவி தங்கரேகா, மகன்கள் விமல், சோலை ஆகியோருடன் திருப்பதிக்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு உள்ள பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த நகை மற்றும் பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவானார்கள்.

    இன்று காலை நாராயணமூர்த்தி ஊருக்கு திரும்பினார். கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறிக்கிடந்தது. பீரோதிறந்தபடி காணப்பட்டது.

    பீரோவை பார்த்த போது அதில் இருந்த 25 பவுன் நகை, ரொக்க பணம் ரூ. 8,500 ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த நாராயணமூர்த்தி இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் ஆகியோர் வழக்குபதிவு செய்தனர். கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சாலை ஓரம் நின்று கொண்டது. கை ரேகை நிபுணர் சீனியம்மாள் கொள்ளையர்களின் ரேகையை பதிவு செய்து உள்ளார். கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் தெரிவித்து உள்ளார்.

    போரூர் அருகே என்ஜினீயர் வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    எம்.ஜி.ஆர். நகரை அடுத்த ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாபுசங்கர். சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் கடந்த 16-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஓட்டு போடுவதற்காக குடும்பத்துடன் திருவண்ணாமலை சென்றார்.

    நேற்று அதிகாலை திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 சவரன் நகை மற்றும் வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுக்கரையில் பேராசிரியர் வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    மதுக்கரை வஞ்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சார்லி (வயது 52). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அன்சியா நர்சாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று புனித வெள்ளியையொட்டி சார்லி, தனது மனைவி, மகளுடன் ஆலயத்துக்கு சென்றார். பின்னர் மதியம் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வீட்டை நன்கு நோட்ட மிட்டு, ஆட்கள் வெளியே செல்வதை கண்காணித்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள வானகிரியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30) மீனவர். இவர் கடந்த 18-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு கும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகை ரூ. 3 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.

    நேற்று வீடு திரும்பிய சரவணன் நகை பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் பூம்புகார் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ராகுல்ட்ராவிட், அகத்தியன் என்ற 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள்தான் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. அவர்கள நகையை ஒரு மின்கம்பம் அருகே புதைத்து வைத்திருந்தனர். அதனை போலீசார் பறிமுதல் செய்து சரவணனிடம் ஒப்படைத்தனர்.

    சேலையூர் அருகே வங்கி ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிக்கரணை:

    சேலையூரை அடுத்த ராஜ கீழ்ப்பாக்கம்  பொன்னியம்மன் நகர் 2-வது தெருவில் வசித்துவருபவர் ராம்குமார். குரோம்பேட்டையில் உள்ள வங்கியில்  ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி சுபா, இவரும் தாம்பரத்தில் உள்ள வங்கியில் ஊழியராக உள்ளார்.

    நேற்று காலை கணவன் - மனைவி  இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். மாலையில் திரும்பி வந்த போது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகை-பணத்தை சுருட்டி சென்று விட்டனர். இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வளசரவாக்கத்தில் என்ஜினீயர் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் லட்சுமி நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் அனந்தபத்மநாபன் (வயது58). சாப்ட்வேர் என்ஜினீயர்.

    இவர் கடந்த 15-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அரக்கோணத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் 16-ந் தேதி மாலை சென்னை திரும்பினார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுபற்றி வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    தியாகராய நகர் துணை கமி‌ஷனர் அசோக்குமார் உத்தரவின் பேரில் உதவி கமி‌ஷனர் மகிமைவீரன், இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணண் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை தேடி வந்த நிலையில் மதுரவாயல் அருகே நேற்று இரவு இலங்கையைச் சேர்ந்த சிவராஜன் (43), அவனது கூட்டாளி தருண் (31) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 87 பவுன் தங்க நகைகள், கொள்ளையடிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சிவராஜன் கடந்த 1989ம் ஆண்டு இலங்கையில் இருந்து வந்து மதுரை ஆனையூரில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி அங்கு பல்வேறு கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரவாயல் சக்கரபாணி நகரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி மீன் கடை நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் மீண்டும் மதுரவாயல், வளசரவாக்கம் மற்றும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    சிவராஜன் மீது ஏற்கனவே மதுரை கூடல்நகர் பகுதியில் 6 கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற போது கடலோர காவல்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    கொல்லங்கோடு அருகே வீட்டின் மாடி வழியாக புகுந்து பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு மிக்கேல் புரம் சுனாமி காலணியை சேர்ந்தவர் ஆன்றோ. இவரது மனைவி புனிதா மேரி (வயது 41) சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தாருடன் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்றிருந்தனர். பின்னர் ஆலயத்தில் இருந்து அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டினுள் சென்றபோது, வீட்டில் அலமாரி உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் சோனியா, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தனிஸ் லாஸ் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற் கொண்டனர். அதில் கொள்ளையர்கள் வீட்டின் மேல்மாடியில் உள்ள ஜன்னல் வழியாக வீட்டினுள் வந்தது தெரிய வந்தது.

    கொள்ளையர்கள் அங்கிருந்த அலமாரியை உடைத்து அதில் இருந்த ரூ.37 ஆயிரம் பணம், மற்றும் மேஜையில் இருந்த செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஜன்னல் மற்றும் அலமாரி பகுதியில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை கூடல்புதூரில் வீட்டுக்குள் புகுந்து நகை -பணம்,பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை கூடல்புதூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட மகாத்மாகாந்தி நகர், நர்மதா நதி குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் குட்டிராஜன். இவரது மனைவி இடாஜெயக்குமாரி.

    சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு மாடியில் தூங்க சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் நகை, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு, ரூ.70 ஆயிரம் ரொக்கம், ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர். காலையில் கீழே இறங்கி வந்த இடாஜெயக்குமாரி கதவு உடைக்கப்பட்டு நகை-பணம், பொருட்கள் கொள்ளைபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    ஆவடியில் மத்திய அரசு ஊழியர் வீட்டில் ரூ.3 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருநின்றவூர்:

    ஆவடி, மாடர்ன்சிட்டி 3-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் லோகேஷ். ஆவடியில் உள்ள மத்திய அரசின் கனரக தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று காலை இவரது மனைவியும், மகளும் திருத்தணியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று மாலை லோகேஷ் இரவு பணிக்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

    இன்று காலை அவர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், ஒரு பவுன் நகை கொள்ளை போய் இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதேபோல் அருகில் பூட்டி இருந்த கோபி என்பவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் 3 கிலோ வெள்ளிப் பொருட்களை சுருட்டி சென்றனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். கோபி மகளை பார்ப்பதற்காக அமெரிக்கா சென்று உள்ளார்.

    மேலும் அதே பகுதி 5-வது தெரு, 6-வது தெருவில் உள்ள மொத்தம் 4 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்து உள்ளது. அந்த வீடுகளில் ஆட்கள் இருந்ததால் மர்ம கும்பலின் கொள்ளை திட்டம் நிறைவேறவில்லை.

    இதுகுறித்து பட்டாபிராம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்பத்தூர் துணை கமி‌ஷனர் ஈஸ்வரன், உதவி கமி‌ஷனர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கொள்ளை நடந்த லோகேஷ் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா பழுதாகி உள்ளது. இதனால் கொள்ளையர்களின் உருவம் அதில் பதிவாகவில்லை.


    பழனி அருகே வியாபாரி வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    பழனி:

    பழனி அருகில் உள்ள கோதைமங்கலத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது49). இவர் பழனி மார்க்கெட்டில் கடை வைத்துள்ளார். மேலும் தனது வீட்டிற்கு பின்புறம் பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கு பயன்படும் டப்பாக்கள் குடோன் வைத்துள்ளார்.

    நேற்று அடிவாரம் பகுதியில் தனது உறவினர் இறந்து விட்டதால் அதில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மெயின்கேட்டை கடந்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலையில் வீட்டிற்கு வந்த ஜெயக்குமார் கொள்ளை நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.

    திருப்பூரில் பனியன் வியாபாரி வீட்டில் நகை-பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் முத்தண்ணம் பாளையம் சபரி பிரியா நகரை சேர்ந்தவர் ஸ்ரீநாத். பனியன் வியாபாரி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

    இந்நிலையில் இன்று காலை அவரது வீடு திறக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்கள் நல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது வீடுகளில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன.

    இது குறித்து கேரளாவில் உள்ள ஸ்ரீநாத்துக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு விபரம் தெரிவிக்கப்பட்டது. நகை- பணம் வைக்கப்பட்டிருந்ததா? என்று போலீசார் கேட்டபோது நகை- பணம் இருந்தது என்று கூறினார். ஸ்ரீநாத் திருப்பூர் விரைந்துள்ளார். அவர் வந்த பின்னரே திருட்டுபோன நகை- பணம் குறித்து விபரம் தெரியவரும்.

    ×